கூகிளின் நியாயங்கள்: செல்வராஜின் பதிவை முன்வைத்து

கூகிளின் சில சேவைக் குறைபாடுகள் குறித்து செல்வா சொல்லும் விஷயங்களை என்னால் ஒத்துக்கொள்ள முடிவதில்லை. அவருக்குப் பதிலெழுதி நீண்டு போனதால் இங்கே தனிப்பதிவாக. (அதைத் தவிர நம் தமிழ் வலைப்பதிவுகளில் யாரும் ‘பின் தொடர்தலைப் ‘ பயன்படுத்துவதேயில்லை. வலைப்பதிவுகளின் முக்கிய வசதியான இதை நாம் பெரிதும் கண்டுகொள்வதில்லை).

1. சீனா விவகாரம் - இதைத் தனிப் பதிவாகவே எழுதலாம். பொதுவில் தனிநபர் உரிமைகள், அரசுக்கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு போன்ற எழுவரல் (liberal) சிந்தனைகளைக் கொண்டவன் நான் என்றபோதிலும் கூகிள் இந்த விவகாரத்தில் அளவுக்கு மேலாகவே எதிர்க்கப்பட்டிருக்கிறது. இதற்கு கூகிள் மேல் இருக்கும் அளவுகடந்த எதிர்பார்ப்புகள் ஒரு காரணம் என்றாலும் அதன்மீது இருக்கும் சந்தைப் பொறாமையும் இதற்குத் தூபமிட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.

மைக்ரோஸாஃப்ட் செய்தபோது சும்மா இருந்தார்கள், யாகூ செய்தபோது ம் என்று சொல்லிவிட்டுப்போனார்கள் எல்லோரும் கூகிள் என்று வநதவுடன் பொங்கி எழுவது ஆச்சரியமாக இல்லையோ? சொல்லப்போனால் சிவில் உரிமைகளைப் பேணுவதாகவும், பேச்சுச் சுதந்திரம் எமது அடிநாதம் என்றும் சொல்லும் அமெரிக்க அராசங்கத்தின் கையில்தான் இது இருக்கிறது. அமெரிக்க அரசே சீனாவின் கட்டுப்பாடுகளை மறைமுகமாக ஆதரிக்கும்பொழுது கூகிள் போன்ற நிறுவனத்தால் ஒன்றும் செய்துவிட முடியாது. இந்த விஷயத்தில் மேற்கொண்டு யாருக்காவது ஆர்வம் இருந்தால் என் தரப்பு வாதத்தை (கூகிள் ஆதரவு) முன் வைக்கிறேன்.

சுருக்கமாக, சீனா சமாச்சாரத்தில் மைக்ரோஸாஃப்ட், யாகூ, கூகிள் இப்படி யார்மீது குறையில்லை. இதை அரசு ரீதியாக அமெரிக்காவின் நடவடிக்கை ஆதரிப்பதால் இந்த வியாதியின் ஊற்று அமெரிக்க அரசில்தான் இருக்கிறது.

2. கூகிளின் மேசைத் தேடல் மூன்றாவது வடிவத்தை நான் இன்னும் நிறுவவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்தவரை கூகிளின் ஒவ்வொரு தேடல் இலக்கையும் உங்களால் தனிப்பட்ட முறையில் தெரிந்தெடுக்க முடியும். உதாரணமாக உங்கள் அலுவலில் பவர்பாயிண்ட் கோப்புகள் முக்கியமானவை என்றால் அவற்றை அட்டவணையிடாமல் இருக்கச் சொல்லமுடியும். இந்த அளவு பயனர் கட்டுப்பாடுகள் பிற தேடல் கருவிகளில் இல்லை.

இதேபோல உங்கள் வ்லையன்மையில் (Network Neighborhood) தேடும் மேசைகடந்த மேசை தேடலும் முழுதாக உங்கள் தெரிவுதான். என்னைப் போன்ற பல்கலைகழக அமைப்பில் இருப்பவர்களுக்கு இது வரப்பிரசாதம். என் மடிக்கணினி, மேசைக்கணினி, ஆய்வகத்தில் கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும் கணினி (இந்த வகையில் 10-12 அடக்கம்), என்று மூலை மூலையாக தரவுகளைச் சிதறவிடும் எங்களுக்கு இது வரப்பிரசாதம். கட்டாயமாக அலுவல்களில் இதுபோன்ற திறந்த அமைப்புக்கு எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் வலையன்மையில் தேடாமல் உங்கள் மடிக்கணியுடன் மாத்திரமே நிறுத்திக்கொள்ளும் வசதியை உங்களுக்குத் தந்திருக்கிறது கூகிள்.

இப்படி உங்கள் தெரிவாக நீங்களே மனமுவந்து அதைப் பயன்படுத்தும்பொழுது “ஐயோ, கூகிள் எங்க வூட்டால வந்து பாக்குதே” என்று புலம்புவது நியாயமா?

3. இடம்பெயர்ந்த கோப்புகளைத் தேடலில் சரிசெய்வது மைக்ரோஸாஃப்ட்டுக்குச் சாத்தியம், ஏனென்றால் அவர்கள் தேடல் கருவி அவர்கள் தயாரிப்பான இயக்குதளத்துடன் இணைந்தது. எனவே இயக்குதள அளவில் நடக்கும் சமாச்சாரங்களை மைக்ரோஸாஃப்ட் தேடல் அறிவது சாத்தியம். இது கூகிளுக்கு இயலாத காரியம். இந்த வசதிக்காக நாம் கணினி வாங்கும் பொழுதே மைக்ரோஸாஃப்ட் வரி கட்டியதை நினைவில் கொள்ளவும்.

அது கிடக்க, கூகிளின் தரவு சேமிப்புகள் இன்றுவரை நேரடியாகத்தான் நடக்கின்றன. மைக்ரோஸாஃப்ட் எவ்வளவு தனிநபர் நிறுவனத் தரவுகளைச் சேர்ந்த்திருக்கிறது தெரியுமா? இந்த ஒரே காரணத்துக்காக நான் மைக்ரோஸாஃப்ட் எக்ஸ்ப்ளோரர், விண்டோஸ் மீடியா பிளேயர் போன்றவற்றைப் பயன்படுத்துவதில்லை. மீடியா பிளேயரைய்ப் பயன்படுத்தும்பொழுது உங்கள் கணினியில் இருக்கும் அத்தனை எம்பி3 கோப்புகளைப் பற்றிய தகவலும் மைக்ரோஸாஃப்ட்டால் சேமிக்கப்படுகிறது.

4. நான் ஜிமெயிலை அதிகம் பயன்படுத்துபவன் அல்லன். ஆனால் குழுக்களுக்காக அதை வைத்திருக்கிறேன். சொல்லப்போனால் நான் ஒருக்காலத்திலும் இலவச அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை. ஜிமெயிலின் சமாச்சாரங்களை கூகிள் (கணினிகள்) படிக்கிறது என்று சொல்பவர்களுக்கு: ஹாட்மெயிலை மைக்ரோஸாஃப்ட் அட்டவணையிடுவதில்லை என்பதும் யாகூ மெயில் நோண்டப்படுவதில்லை என்பதும் என்ன உத்தரவாதம்? குறைந்தபட்சம் ஜிமெயிலில் இதை நேரடியாகச் சொல்லி அதன் மூலம் உங்கள் அஞ்சலில் தேடும் வசதியை உங்களுக்குத் தந்து உதவுகிறார்கள். ஆனால் ஹாட்மெயிலிலோ யாகூவிலோ இரகசியமாக நோண்டப்பட்டாலும் நமக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. (சீன அரசுக்கு வலைப்பதிவரைக் காட்டிக் கொடுத்ததைப் போல யாகூ நாளை அமெரிக்க அரசாங்கம் கேட்டால் கட்டாயம் தரும். என்ன இருந்தாலும் ‘அவுங்க கெவருமெண்டு’ இல்லையா? அதுவும் நாட்டுப்பற்றுதான் இப்பொழுது அமெரிக்காவில் பெருகியோடுகிறதே! அதற்காக என்ன செய்தாலும் அமெரிக்காவில் பாவமில்லையே. காட்டிக் கொடுக்கப்படுபவர் அமெரிக்கராக இருக்கும் பட்சத்தில் நியூ யார்க் டைம்ஸில் ஒரு நாளும் டைம்ஸ் சஞ்சிகையில் இரண்டு பக்கத்திலும் கட்டுரை ஒன்று வெளிவரும். பிறகு அதே டைம்ஸில் கடைசி பக்கத்தில் ஒரு நியோகான் பொங்கி எழுந்து நாட்டுப்பற்றின் அவசியத்தை அமெரிக்கர்களுக்கு மீண்டும் வலியுறுத்துவார். சுபம்).

5. தொலைந்துபோன ஜிமெயில் கணக்கு பற்றி ; இன்றுவரை ஜிமெயில் சோதனை நிலையில்தான் இருக்கிறது. இது நிச்சயமான கருவியாக இன்னும் கூகிளால் அறிமுகப்படுத்தப்படவில்லை. இலவசமாகக் கிடைக்கும் சோதனைக் கருவி என்ற ரீதியில் இதைப் பயன்படுத்தாமல் இதுதான் சாஸ்வதம் என்ற நினைப்பில் இருப்பது தவறு. நீங்களே சொன்னதுபோல பாப் மெயில் வசதியும் கூகிளில் இருக்கிறதல்லவா?

அதுகிடக்க; இருபது வருட சமாசாரங்களான அவுட்லுக், லேட்டஸ் மெயில் போன்றவற்றில் பழுதுபட்டுப் போன அஞ்சல்கள் இன்றுவரை மிகச் சர்வசாதாரணம். இவற்றுடன் ஒப்பிடும்பொழுது ஜிமெயிலின் பிழைத்தல்வீதம் மிகக் குறைவு.

எல்லோரும் பிழையான நிரலிகளைத்தான் தருகிறார்கள் எனவே கூகிளும் செய்யலாம் என்ற ரீதியில் நான் வாதாடவில்லை. பீட்டா நிலையில் இருக்கும் சோதனை நிரலி என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

6. கடைசியாக, ‘டிராஃப்ட்’ அழிந்தால் திரும்பவதில்லை என்று சொல்வது. என்னைப் பொருத்தவரை இதில் கூகிளின் நிலைதான். டிராஃப்ட் என்பது ஒரு நிரந்தரமல்ல என்று கட்டாயம் தெரியும். வேண்டாமென்றால் அழித்துவிட்டு பிறகு ‘யானையைப் புடிச்சு பானைக்குள்ள போடு’ என்று அழுவது வடிவேலு சொல்வதைப் பொல சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு. சிலேட்டு என்று தெரிந்து எழுதி எச்சி தொட்டு அழித்துவிட்டு, பின் திரும்ப வேண்டும் என்று கேட்பது நியாயமா? டிராஃப்ட் என்பதே எதற்கு இருக்கிறது? வேண்டுமென்றால் தொடரவும் இல்லையென்றால் தூக்கியெறியவும்தானே. இப்படி இதற்கும் மீட்டெடுக்கும் வசதி கொடுத்தால் அதற்கும் சேமிக்கப்பட்டவைக்கும் என்ன வித்தியாசம்.

ஹாட்மெயிலில் இந்த வசதி கொடுத்திருப்பது மடத்தனம். இப்படி மீச்சிறுவகுத்தி அறிவுள்ளவர்களாக தங்கள் வாடிக்கையாளர்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் மைக்ரோஸாஃப்ட்க்கு இருக்கிறது. (Microsoft always caters to lowest common denominator). பயன் எளிமை என்று சொல்லிச் சொல்லியே இன்றைய பல கணினி பாதுகாப்புச் சிக்கல்களுக்கு வித்திட்டவர்கள் அவர்கள். இதே பாதையில் கூகிளும் போனால் உருப்பட்டால் மாதிரிதான்.

கூகிளின் பல செயல்பாடுகளில் பயன் எளிமை என்பது மேலே இருந்தாலும், பயனர்களைத் தொடர்ச்சியாக சுயநிறைவுக்கு இட்டுச் செல்வதைப் பார்க்க முடிகிறது. உதாரணமாக தேடல் தெரிவுகள், உங்கள் ஜிமெயிலை உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளும் பாப் வசதி, இத்யாதி. ஆனால் துரதிருஷ்டவசமாக மக்கள் எல்லோரும் தங்களே எச்சி தொட்டு அழித்துவிட்டு தவறுக்கு கூகிளே பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். இது ஒருவகையில் கூகிளின் சாபம் என்றுதான் தோன்றுகிறது.

* * *

இப்படியெல்லாம் நான் எழுதுவதால் நான் அவர்களுக்கு முற்றுமுழுதாக வக்காலத்து வாங்குவதாக அர்த்தமில்லை. அவர்களின் சில நடவடிக்கைகளில் எனக்கும் அதிருப்தி உண்டு. ஆனால் அவை பெரும்பாலும் இலாபம் ஈட்டவேண்டும் என்ற நிலையில் வர்த்தக ரீதியாக அவர்கள் மனமின்றி எடுக்கப்பட்ட முடிவுகளாகத்தான் தெரிகின்றன. இதை நான் நன்றாகப் புரிந்துகொள்ளும்பொழுது அவர்களை நான் குறைசொல்வது தவறு.

நான் சுயமாக முடிவெடுத்து கூகிளின் சில சேவைகளைப் பயன்படுத்துவதில்லை. (உதாரணம் ஜிமெயில்). இப்படிப்பட்ட தெரிவுகள் எனக்குத் தரப்படும்வரை எந்தச் சிக்கலுமில்லை. இந்த நிலைதான் எல்லோருக்கும் இருக்க வேண்டும். இன்றுவரை நான் கூகிளுக்காக ஒரு பைசா செலவழிக்கவில்லை. நாளை கூகிளை நம்பாமல் வெளியே செல்ல வேண்டுமானால் அதையும் எளிதில் சாத்தியப்படுத்திக் கொள்ளும் வசதியை எனக்கு கூகிள் தந்திருக்கிறது. அந்த ஒரே காரணத்துக்காக அவர்களைப் பாராட்டலாம்.

சமீபகாலமாக கூகிளின் மீது பல நியாயமற்ற குற்றச்சாற்றுகள் குவிந்துகொண்டிருக்கிறன. எனக்குப் பட்டவரை தன்னெஞ்சறிவது பொய்யற்க ரீதியில்தான் இன்றுவரை கூகிள் செயல்பட்டு வருகிறது. இதற்கு அவர்கள் நாளையும் இப்படி இருப்பார்கள் என்ற அர்த்தமில்லை. அவர்கள் மாறிப்போனால் கட்டாயம் அவற்றைப் பற்றி எழுதுவேன். Google is yet to become evil.

தமிழ்ப்பதிவுகள், Google, Microsoft, Yahoo

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

Sir,

a wonderful informative site.

வெங்கட்,

I could not comprehend your politics of supporting GOOG and bashing MS. As far as I am concerned ‘G’s cunningness is in no way a lesser evil than that of MS.

1.
>>>>கூகிள் என்று வநதவுடன் பொங்கி எழுவது ஆச்சரியமாக இல்லையோ?

காரணம்… USDOJ இரண்டு மாதங்களுக்கான தேடு சொல்லை தரச்சொன்ன போது தனது வாடிக்கையாளரின் சுதந்திரம், எழுவரல் என்று குரலெழுப்பிய கூகள் சீன அரசாங்கதிற்காக கூகள்.சீன (google.cn) என்ற புதிய தணிக்கை/மட்டறுத்தப்பட்ட தளத்தை வெளியிட்டதால்தான்! அமெரிக்காவிற்கு ‘அடங்க மறு! அத்து மீறு!!’ (நன்றி: திருமா/நண்பன்) சீனாவிற்கு ‘சரணடைந்தேன்! வரம்பெற்றேன்!!’ என்ற இரட்டை வேடம் போட்டதால்தான். யாஹ¥, msnக்கு இந்த பிரச்சனை இல்லையா என்று கேட்காதீர்கள்… அவர்கள் ‘Do No Evil’ என்றெல்லாம் படம் காட்டுவதில்லை. சீனா கேட்டாலும் வச்சுக்கோ, ‘மரம்வெட்டி நாடு’ கேட்டாலும் வச்சுக்கோதான்

>>>>இதை அரசு ரீதியாக அமெரிக்காவின் நடவடிக்கை ஆதரிப்பதால்

புரியவில்லை??? அமெரிக்கா இதில் தலையிட வேண்டுமா? நீங்களா இதை எழுதுகிறீர்கள் அல்லது???
அமெரிக்கா தலையிட்டிருந்தால் ‘பெரியண்ணனின் பேத்தல்’ என்ற ரேஞ்சுக்கு ஒரு பதிவ தட்டியுட்டிருப்பீங்களே! அமெரிக்கா என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

Google has a choice, either to do or not do business in China? Why should the government’s polarity be an issue here?

2.
>>>>என்னைப் போன்ற பல்கலைகழக அமைப்பில் இருப்பவர்களுக்கு இது வரப்பிரசாதம்.

ஓப்பன் சோர்ஸ் பற்றி பத்திபத்தியாக எழுதிவிட்டு, இப்படி கூகளுக்கு கூஜா தூக்குவது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் முன்பே அறிந்திருந்தாலும் ht://Dig, Apache Lucene எல்லாம் இருக்கும் போது கூகளின் புதைக்குழிக்கு வக்காலத்து ஏன்?

>>>>ஆனால் வலையன்மையில் தேடாமல் உங்கள் மடிக்கணியுடன் மாத்திரமே நிறுத்திக்கொள்ளும் வசதியை உங்களுக்குத் தந்திருக்கிறது கூகிள்

இதற்கும் விண்டோஸ் Searchக்கும் எந்த வித்தியாசமுமில்லை என்பதை உங்களுடைய முந்தைய பதிவில் பின்னூட்டமிட்ட நினைவு!

3.
>>>>மீடியா பிளேயரைய்ப் பயன்படுத்தும்பொழுது

Again that is configurable in WMP too? Why / how is this different from google’s configuration?

4.
>>>>நான் ஜிமெயிலை அதிகம் பயன்படுத்துபவன் அல்லன். ஆனால் குழுக்களுக்காக அதை வைத்திருக்கிறேன்.

>>>>நான் சுயமாக முடிவெடுத்து கூகிளின் சில சேவைகளைப் பயன்படுத்துவதில்லை. (உதாரணம் ஜிமெயில்).

என்னா தல? ‘மரம்வெட்டி நாட்டு’ல
குளிரு இன்னும் போகலையா? மேல அதிகமா பயன்படுத்தரதில்லை, கிழ பயன்படுத்தரதேயில்லை? இன்ன தல சொல்ல வர?

>>>>சீன அரசுக்கு வலைப்பதிவரைக் காட்டிக் கொடுத்ததைப் போல யாகூ நாளை அமெரிக்க அரசாங்கம் கேட்டால் கட்டாயம் தரும்

நல்லதுதானே… ஒரு கண்ணுல சுண்ணாம்பு இன்னொன்னுல வெண்ணை வைக்கலயே? கொடுத்தா இரண்டு பேருக்கும் கொடுக்கணும் இலலைன்னா கொடுக்கக்கூடாது.

5.
>>>>இன்றுவரை ஜிமெயில் சோதனை நிலையில்தான் இருக்கிறது.

இது கொஞ்சம் ஓவர். பீட்டா ஆல்·பா பத்தி எத்தனை சாதரண பயனருக்கு தெரிந்திருக்கும்? அப்படியே ஆனாலும் கூகளின் எந்த லீகல் கோப்புகளிலும் கணக்கே காணாமபூடும்னு சொன்னதாத் தெரியல!

6.
>>>>(Microsoft always caters to lowest common denominator).

Isn’t this what all technology companies are supposed to do? What is the use if the product is for a slected few ‘elites’? கூகள் பயன்படுத்துபவர்கள் எல்லாம் ஒளிவட்டதுடன் அலைகிறார்கள் என்ற உங்கள் கூற்றுக்கு/நினைப்பிற்கும் ஒரு ‘ஹா ஹா’!

>>>>தங்களே எச்சி தொட்டு அழித்துவிட்டு
தல, இன்னும் பல்பம் புடிச்ச காலத்துலயே இருக்கீறே? Welcome to the future (rather present for you)!

****

>>>>இப்படியெல்லாம் நான் எழுதுவதால் நான் அவர்களுக்கு….. Google is yet to become evil.

இது என்னா அந்தர்பல்டி ஆகாச டிஸ்கெளைமர்? எழுதனத திரும்ப படிக்கயில உமக்கே சிரிப்பு வந்திருக்கும் என்று நினக்கிறேன், அதுதான் இந்த பல்டி குட்டிகரணமெல்லம்!

>>>>எனக்குப் பட்டவரை தன்னெஞ்சறிவது பொய்யற்க ரீதியில்தான் இன்றுவரை கூகிள் செயல்பட்டு வருகிறது.

Unbelievable! Laugh Riot!!!

******

Again, as I mentioned in the beginning, Google / MS are evil twins and it is pitiable that people consider one better and the other evil.

Cheers
.:dYNo:.

டைனோ,

உங்கள் பின்னூட்டத்தில் சில விஷயங்கள் ஆழமானவையாக இருந்தாலும் அதன் தொனியில் தெறிக்கும் எள்ளலுக்கு ஈடு கொடுக்க எனக்குத் தெம்பில்லை. நானும் ஒரு காலத்துல இப்படியெல்லாம் வூடு கட்டி ஆடினவன் தான். இப்பல்லாம் அந்த ஆட்டத்தக் கொறச்சுட்டேன், ஏன்னா ஒத்தரு ஒத்தரையா பேசிச் ஜெயிச்சு நெறய நண்பர்களை இழந்துட்டேன். இனிமேயும் வேண்டாமே!

நீங்க மரம்வெட்டி, தல ரீதில ஒரு கெத்தோட ஆட்டத்துல எறங்கிருக்கீங்க. அதுனால எப்படியும் நீங்கதான் கெலிக்கப்போறீங்கங்கறதால இந்த வெளயாட்ட நாம ஏன் ஆடனும்னு நான் வெலகிக்கிறேன். மார்ச்சு மாதம் வேலைக்கு மானியம் கேட்டு நெறயா விண்ணப்பம் எளுத வேண்டியிருக்கு. உட்றுங்க.

Venkat,

My above parody was intended to provoke / tease / mock you as I was annoyed about your post.

As you might recall we did have a lot of differences, but I thought we both had/have one common characteristics which was our support for Open Source. So naturally I was really aggravated that you were supportive of ‘Google’ which I consider is no different from its rival(s).

Google sure enjoys being the darling of the media and rallied for by the Wall Street insiders. But my expectations were shattered when I saw a fellow proponent of OpenSoource falling a prey to the (flase) media advocacy. Thanks for your understanding.

Best wishes for your grants.

Cheers,
.:dYNo:.

Dyno,

Thanks for your mail. A hardened FLOSS proponent I am, I still appreciate Google - now a huge corporate with millions of shareholders to satisfy, in transparent ways they operate.

Yes, I will be glad if they are a OSS company. But, I am now trying to answer here to the media hype, expectations and now accusations.

Unfortunately, I do not have much time now to elaborate on this. Hope one of these days I write about it. Thanks.

BTW: I thought we agreed to disagree on certain issues. I also believe provoking is unwarranted if we want a honest discussion.

எனது பதிவில் இட்ட மறுமொழியின் நகல்.
===
வெங்கட், நான் இங்கு பதிந்திருப்பது கூகுளை முன்னிருத்தியே. மைக்ரோசாஃப்ட் (எதிர்) கூகுள் என்று ஒப்பீட்டளவில் இல்லை. தேடல்நிரலி அஞ்சல் இரண்டிற்கும் இணையென்று தான் மைக்ரோசாஃப்டை மூன்று இடங்களில் சில கருத்துக்களுக்காக எடுத்து வைத்தேன். அதிலும் ஒன்றில் கூகுளின் நிறை, MS இன் குறை என்றே இருக்கிறது.

வெளிப்படையாகச் சொன்னால், நீங்கள் தான் கூகுள் சார்பும் மைக்ரோசாஃப்ட் எதிர்நிலையும் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதனால் தான் அவற்றோடு ஒப்பிட்டு அவர்கள் செய்யாததையா கூகுள் செய்துவிட்டது என்று வாதிடுகிறீர்கள்.

வலையண்மைத் தேடல் பயனுள்ளது என்று தான் நானும் குறித்துள்ளேன். ஆனால் அதில் கோப்புக்கள் உங்கள் வலையை விட்டு வெளியேறும் நிலை இருப்பதால் அதில் ஒரு இக்கு (risk) இருக்கிறது என்று பொதுவாக உள்ள கருத்தைச் சொல்கிறேன். கூகுளே அதனை ஏற்றுக் கொள்கிறார்களே. நீங்கள் ஏன்…?

இடம்பெயர் கோப்புத் தேடல் அட்டவணை சரியில்லை என்பதால் ஒரு பயனரின் எதிர்பார்ப்பு என்னும் அளவில் என் கருத்தைச் சொல்கிறேன். அது மைக்ரோசாஃப்டால் ஏன் சாத்தியமாகிறது, கூகுளால் ஏன் முடியவில்லை என்று நீங்கள் வாதிட வருகிறீர்கள். நான் ஒரு பயனர் விழைப்புள்ளியை மட்டுமே சொல்கிறேன்.

ஜிமெயில் கணக்கு தொலைந்து போவதை beta சேவை என்பது நியாயப் படுத்தலாம். அதில் எனக்குப் பிரச்சினை இல்லை. அப்படி ஒரு சாத்தியமிருப்பதால் உங்கள் மடல்களை வேறு வகைகளில் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். (அதற்காகப் பாப் வசதி இருக்கிறது. இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் இருந்த நான் முதல்வேலையாய அதைச் செய்து பத்திரப் படுத்திக் கொண்டேன் என்று சொல்கிறேன்). பிறவற்றிலும் தொலைந்து போகும் சாத்தியம் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால், ஜிமெயிலில் ஒரு பத்திர உணர்வை எனக்கு எப்படிக் கொடுக்கும்?

டிராஃப்ட் அழிந்து போனதிலும் கூகுள் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அழித்த (Deleted mail) மடல்கள் முப்பது நாட்களுக்கு இருக்கும், அதன்பிறகு முற்றாக ஒழிக்கப் படும் என்று சொன்னாலும் அதன்பிறகும் பல நாட்கள் வைத்திருக்கும் ஜிமெயில் டிராஃப்ட் மடல்களை மீட்க வழியின்றியே இருக்கிறதே. அதுவும் ‘அழிக்கப்பட்டவையில்’ சென்று அதே முப்பது நாட்களுக்கு இருக்கும்படி செய்தால் பயனுள்ளதாய் இருக்குமே என்று மீண்டும் ஒரு பயனர் விழைவைச் சொல்கிறேன். உங்களுக்கு அது அவசியமற்றது என்று தோன்றலாம். நுட்ப அளவில் 2GB வரை இடம் கொடுக்கும் ஜிமெயில் சில டிராஃப்ட்களைச் சேமிக்க என்ன சிக்கல் இருக்க முடியும் என்று உரக்கச் சிந்திக்கிறேன்.

எங்க ஊருல ஒரு பழமொழி சொல்வாய்ங்கெ.

“பிரியா குடுத்த மாட்ட பல்லை புடிச்சு பதம் பாத்தானாம்!”னு.

இது எனக்கு இப்ப ஞாபகம் வருது. ஏதோ இலவசமா குடுத்தாங்களா? இருக்குற வரைக்கும் அனுபவிச்சிட்டு நல்ல புள்ளையா போக வேண்டியதுதான்.

அன்னைக்கு தமிழ்மணத்துக்கு பிரச்னை என்றதும் டேர்ம்ஸ், கண்டிசன் எல்லாம் சொல்லி நான் மேலே சொன்ன இதே நியாயத்ததான் அண்ணாச்சி செல்வராசு சொன்னாக. இன்னிக்கு அத மறந்துட்டு வேற என்னென்னவோ சொல்லி ஜெயகாந்தன் மாதிரி தம்மைத்தாமே நக்கிக்கறாங்க.

ஒரே சிரிப்பு சிரிப்பா வருது எனக்கு.

Leave a comment

(required)

(required)