தமிழ்மணம் – விற்பனைக்கு : ஒரு விளக்கம்
by வெங்கட் • June 25, 2006 • அறிவியல்/நுட்பம், பொது • 1 Comment
நண்பர் காசி தமிழ்மணம் தளம் விற்பனைக்குத் தயாராக இருப்பதாகத் திறந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தமிழ் வலைப்பதிவு உலகில் இது மிகவும் முக்கியமான அறிவிப்பு. கிட்டத்தட்ட 90% தமிழ் வலைப்பதிவு வாசகர்கள் தமிழ்மணம் வழியாகவே பதிவுகளைச் சென்றடைகிறார்கள் என்பது என் கணிப்பு. சென்ற வாரத்தில் ஸ்ட்ரெப் த்ரோட் என்ற பாக்டீரியா தொற்றால் அவதியுற்றுக்கொண்டிருந்ததாலும், இந்த அவதிக்கு இடையிலும் அலுவலக வேலைகள் திமிறி நின்றதாலும் இதெல்லாம் என் கண்ணில் படவேயில்லை. இதைக் குறித்து மு.மயூரன் எழுதியிருக்கும் பதிவில் தமிழ்மணத்திற்கு நான் பங்காற்றியிந்ததாக எழுதியிருப்பது எனக்குச் சுட்டிக் காட்ட்ப்பட்டது. இது குறித்த என்னுடைய சில விளக்கங்களைத் தெரிவிப்பது என் கடமை;
தமிழ்மணத்திற்கு நான் எந்தவகையிலும் எந்த பங்களிப்பையும் செலுத்தியதில்லை. தமிழ்மணத்துடன் நான் நெருங்கிவந்தது ஒரே ஒரு தருணத்தில்தான் – தமிழ் வலைப்பதிவுக்கான விக்கியை உருவாக்கியது (என்னால் இயக்கப்பட்டுவந்த தமிழ்லினக்ஸ்.ஆர்க் தளத்தில்). அதை அமைக்கும்பொழுது காசி அதையும் தமிழ்மணம் தளத்திலேயே இருத்துவது நல்லது என்று கருத்து தெரிவித்தார். ஆனால் அவர் கருத்துக்கு முன்பாகவே நான் விக்கியை சோதித்து, செயல்வடிவில் அமைத்திருப்பதாக் எழுத காசி அதுபோன்ற விக்கியொன்றை தமிழ்மணம் தளத்தில் நிறுவாது விட்டார். (ஆனால் தமிழ்மணத்தில் பயனர்களுக்கு உதவுவதற்காக மன்றம் (Discussion Forum) அமைக்கப்பட்டுவிட்டதால் ஊர்கூடி தேர் இழுக்க வேண்டிய விக்கி தமிழ்லினக்ஸ் தளத்தில் வளராது நின்றுவிட்டது. இன்னும் எப்படி தமிழை வாசிப்பது, எழுதுவது என்ற இத்யாதி கேள்விகளுக்கு நாமும் யாகூ குழு, மன்றம், கூகிள் குழு என்று அதே கேள்விகளுக்கு மீண்டும் மீண்டும் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம்). எனவே தமிழ்மணம் விற்கப்படும்பொழுது அதில் என்னுடைய உழைப்பு இம்மியளவுகூட இல்லை என்பதை தெரிவிக்க வேண்டியது என் கடமையாகிறது. தமிழ்மணம் அமைக்கப்படும் காலத்தில் என்னுடைய மேம்போக்கான கருத்துக்களைச் சொன்னதையும், ஒரு சில தடவைகள் தமிழ்மணத்தின் சில மாற்றங்களைச் சோதிக்க அழைக்கப்பட்டபொழுது கருத்துக்களைச் சொன்னதையும்தவிர தமிழ்மணத்திற்காக நான் ஒரு துரும்பையும் கிள்ளிப்போட்டதில்லை. தமிழ்மணம் தளத்தின் அமைப்பைப் பொருத்தவரை காசி தன்னுடைய விருப்பபடியே முடிவுகளை எடுத்து வந்திருக்கிறார். உதாரணமாக, வலைப்பதிவுகளில் இயங்கு எழுத்துருக்கள் கூடாது என்று எதிர்த்தபொழுது காசி என் வாதங்களைப் பொருட்படுத்தவில்லை. (இயங்கு எழுத்துருக்களைத் தருவதன்மூலம் விரைவில் எல்லோரும் ஒரே குறியீட்டுக்கு மாற வேண்டிய அவசியம் தள்ளிப்போடப்படும் என்பது என் கருத்து. விகடனும், குமுதமும், தமிழ்மணமும் தங்களுக்கான தனிப்பட்ட குறியீடுகளையும் கூடவே இயங்கு எழுத்துருக்களையும் பாவித்துக் கொண்டிருக்கும்வரை ஒட்டுமொத்தமாக ஒரே குறியீட்டுக்கு மாறவேண்டிய அவசியம் தெரியாமலேயே போய் தமிழில் தகவல்கள் பல்வேறு அமைப்புகளில் சிதறித்தான் கிடக்கப்போகிறது). இப்படியிருக்க, என் பங்களிப்புகளை அவர் காசாக்க முயல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தச் செய்தி அவரை வருத்தமடையச் செய்யும் என்பது உண்மை, அது அவருக்கு நியாயமிழைக்காது.
மாறாக என்னுடைய தனிப்பட்ட தளத்திற்கு காசி சில உதவிகளைச் செய்திருக்கிறார். இதுபோன்ற பல உதவிகளை நாம் பலருக்கும் பல இடங்களிலும் தனிப்பட்டு செய்கிறோம் என்றிருந்தாலும் என்னுடைய தளத்தை மூவபிள்டைப் பொதியிலிருந்து நியூக்ளியஸ் சி எம் எஸ் பொதிக்கு மாற்ற காசி செய்தவுதவிக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன். இதற்கான என்னுடைய நன்றிகளை என் வலைப்பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.
பாஸ்டன் பாலா எழுதியதைப்போல இதை முழுக்க முழுக்க வியாபாரக் கண்ணோட்டத்தில் பார்ப்பது எனக்கு இயலாத காரியம். நண்பர் மயூரன் சொன்னதுபோல முழுக்க முழுக்க என்றில்லாவிட்டாலும் தமிழ்மணத்தின் வெற்றியில் சராசரி வலைப்பதிவருக்கும் கொஞ்சம் பங்கிருக்கிறது. (ஒவ்வொரு சராசரி வலைப்பதிவரும் அவருடைய ஒவ்வொரு வலைப்பதிவின் மீயுரைக்கோப்பு மூலத்தில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து இடத்திலாவது தமிழ்மணத்தின் பெயரை விளம்பரிக்கிறார். ஒவ்வொரு நட்சத்திரத் தெரிவுப்பட்டியிலும் வெளிப்படையாக ஒருமுறையாவது தமிழ்மணத்திற்கு இணைப்பிருக்கிறது. ஆனால் முற்றாக வர்த்தரீதியில் இயங்கும் டெக்னோராட்டி போன்றவற்றுக்கூட நாம் இப்படி இணைப்புகளைத் தருகிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்).
திறமூலங்களைப் பயன்படுத்தி வர்த்தக ஆதாயம் பெறக்கூடாது என்று யாராவது வாதிட்டால் அது தவறு. பல திறமூல உரிமங்களில் இதற்கான நேரடி அனுமதியிருக்கிறது. தமிழ்மணம் பெரும்பாலும் திறமூலங்களைக் கொண்டு கட்டப்பட்டது என்றாலும் தமிழ்மணத்திற்கான தனிப்பட்ட பலவேலைகளைக் காசி செய்திருக்கிறார். திறமூலங்களைப் பற்றி காசிக்கு தெரியும் எனவே இப்பொழுது அவரிடம் இதுகுறித்த கருத்துக்களைச் சொல்வதற்குக் காலம் கடந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன்.
இந்த நிலையில் தமிழ்மணத்தை வாங்குபவர் வலைப்பதிவர்களின்/வாசகர்களின் பொதுநலன்களைக் கருத்தில் கொள்வார் என்று நம்புவோமாக.
எவ்வளவு சொன்னாலும் காசி அவர்களுக்கு நாம் தமிழ் வலைப்பதிவராக நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம். அவரின் முயற்சிகள் வெற்றியடையட்டும்.
சரி அதெல்லாம் விடுங்க, நம்ம விஷயம் என்னாச்சு?