• அஞ்சலி : ஸ்டானிஸ்லா லெம்

    by  • March 28, 2006 • இலக்கியம், கலைகள் • 16 Comments

    stanislaw_lem.jpgஅறிவியல் புனைகதைகள் என்றால் உஷ்… உஷ் என்று க்ராஃப்ட்வெர்க்கைப் பார்த்து சூடுபோட்டுக்கொண்ட அமானுஷ்ய சத்தங்களுடன் தலையின் கொம்பு அல்லது கவிழ்த்து வைக்கப்பட்ட சொம்பு போன்று விசித்திரமான உடையலங்காரங்களுடன் வௌவால்களைத் தொடும் கீச்சுக்குரலில் பேசுவது, மரமுருகி மனிதனாவது அல்லது மயிர்வளர்ந்து பாம்பாவது போன்ற அதிநுட்ப விட்டலாச்சார்யாவின் மறுவடிவம் என்றுதான் நம்மில் பலருக்கும் தெரியும்.

    உண்மையான அறிவியல் புனைகதைகள் மானிடத்தின் இருப்பையும் சிந்தனை எல்லைகளையும் குறித்த கேள்விகளைக் கேட்பன. பிரபஞ்சத்தில் நம்மிடத்தையும் நாமும் பிரபஞ்சமும் நிகழ்த்தும் பரஸ்பர பாதிப்புகளையும் உரத்துச் சிந்தப்பன. இந்த வகை அறிவியல் புதினங்களில் வல்லவரான ஸ்டானிஸ்லா லெம் நேற்று மரித்துப்போனார். தற்பொழுதைய உக்ரேனிய நாட்டின் பகுதியாக இருக்கும் (பழைய போலந்து) ஒரு சிறிய ஊரில் பிறந்த யூதரான லெம் கத்தேலிக்கராக வளர்க்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் பொழுது ஹிட்லரின் சேனைகளிடமிருந்து போலி ஆவணங்களைத் தயாரித்ததன் மூலம் தன்னைத் தற்காத்துக்கொண்டார். 1961ல் இவர் எழுதிய Solaris என்ற நாவல் பத்து வருடங்களுக்குப் பின்னர் சோவியத் நாட்டின் இயக்குநர் மேதையான ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கியால் திரைப்படமாக்கப்பட்டது. இதன் மூலம் லெம் உலகப் புகழ் பெற்றார். உலகிலேயே மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டது லெம்மின் ஸோலாரிஸ் என்று சொல்வார்கள். இதைத் தவிர இவரது படைப்புகள் தொலைக்காட்சி நாடகங்களாகவும், இசைக் கோர்வைகளாகவும் வடிவமாற்றம் பெற்றிருக்கின்றன.

    கம்யூனிஸ அடக்குமுறைகள் தலைவிரித்தாடிய நாட்களில் லெம் அரசாங்கத்தை மறைமுகமாக விமர்சிக்க அறிவியல் புனைகதை வடிவத்தை மிகத் திறமையாகக் கையாண்டார். படைப்புகளுக்குப் பெரும் கட்டுபாடுகளையும் தணிக்கைகளையும் கொண்டிருந்த கம்யூனிஸ் நாடுகளில் இப்படிச் சிக்கலான அறிவியல் புனைவுகளுக்குள்ளே தம்மைக் குறித்த விமர்சனம் பொதிந்து கிடப்பது தெரியாமலேயே தணிக்கை அதிகாரிகள் லெம்மைத் தாராளமாக உலவவிட்டார்கள்.

    memoirs_lem.jpgஸ்டானிஸ்லா லெம்மைப் பற்றிப் பேசினால் பலரும் ஸேலாரிஸ் கதையை முன்வைத்துத்தான் பேசுவார்கள். லெம்மை நான் முதலில் படித்தது Memoirs Found in a Bathtub என்ற நாவலில்தான். எனவே இந்த நாவலைப் பற்றி கொஞ்சம் விரிவாக. புதிதாக வேலைக்குச் சேருகிறான் சாதாரணன் ஒருவன். அது மிகவும் சிக்கலான, குழப்பமான உலகம். அங்கே ஒருவருக்கொருவர் மிஞ்சி நிற்கும் ஒரே சிந்தனை பரஸ்பர சந்தேகம் என்பதே. இவனுக்குக் கொடுக்கப்படுவதும் அதே வேலைதான்; இன்ன நாளில், இந்த நேரத்தில், இந்த இடத்தில் இன்னாரை ஒற்றாட வேண்டும். இந்த உலகில் நடப்பவை எல்லாமே இருமையானவை. புறத்தே தெரியும் மனிதர்களின் அகத்தின் எண்ணவோட்டங்களைப் பற்றிய சிந்தனை தலையெடுக்க இவன் தனது இருப்புக்கும் நடப்புக்கும் அர்த்தத்தைத் தேடத் தொடங்குகிறான். பரஸ்பர சந்தேகம் ஒன்றின் மூலமாகவே தம்மை வழிநடத்திக் கொள்ளும் அந்தச் சமூகம் சரித்திரக் குறிப்புகள் அனைத்தையும் அழித்துவிடுகிறது. இந்நிலையில் அயலின் நடப்பையும் சுயத்தின் இருப்பையும் எழுதிவைக்கும் அந்தச் சாதாரணனின் குறிப்புகள் மாத்திரமே அந்தக் காலத்தை நமக்குச் சொல்கிறது. நாவலின் முழுவது கொடுரமான நகைச்சுவை இழையோடிக்கொண்டே இருப்பதால் மேம்போக்காகப் படிப்பதற்கும் அலுப்பு தட்டாது. இதைத் தாண்டி இப்புதினம் விதைக்கும் கேள்விகள் படித்து முடித்த பல நாட்களுக்கும் நம் மனதை வதைத்துக் கொண்டிருக்கும்.

    பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத்தும் தமது குடிகளுக்குள்ளே விதைத்துக்கொண்டிருந்த பரஸ்பர சந்தேகத்தைக் குறித்த அற்புதமான விமர்சனம் இந்த நாவல். ‘நாகரீகக் கலாச்சாரத்தின் மீதான போர்’ என்றும் ‘விடுதலைக்கான போர்’ என்றும் தம்மையும் எதிரிகளையும் பிரித்து ஒற்றைப்படையான எண்ணங்களை விதைப்பது தொடர்ந்துகொண்டிருக்கும் இன்றைக்கும் அற்புதமாகப் பொருந்தும் விமர்சனம் இது. அறிவியல் என்ற படிமத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட கழிபுதுமப் (Postmodern) புதினங்களில் உச்சங்களைத் தொட்டவர் ஸ்டானிஸ்லா லெம்.

    இனி ஸோலாரிஸ் படத்தைப் பற்றி; இந்தப் படத்தை பனிப்போர் காலங்களில் அமெரிக்காவின் ஸ்டான்லி குப்ரிக் என்ற மேதைக்கு சோவியத்தின் ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கியின் பதில் என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளிவந்த ஹாலிவுட்டின் செழிப்பில் எடுக்கப்பட்ட A Clockwork Orange 2001:A Space Odyssey சோவியத்தின் கட்டுப்பாடுகளுக்குளே எடுக்கப்பட்ட Solaris படத்தையும் (கி.பி இரண்டாயிரத்திற்குப் பிறகு வந்த ஹாலிவுட் ஸோலரிஸ் இல்லை) அடுத்தடுத்துப் பார்க்க சுவாரசியமாக இருக்கும். உலகெங்கிலும் தார்க்கோவ்ஸ்கியின் படமாக்கலைப் புகழ்ந்த சமயத்தில் லெம் அதை வெறுத்தார். தனது வெறுப்பை வெளிப்படுத்தவும் தயங்கவில்லை.

    பொதுவில் மேற்கின் அறிவியல் புனைகதைகளில் இருக்கும் கவர்ச்சிகளையும் மேம்போக்குத்தன்மையையும் கடுமையாக விமர்சித்தவர் லெம். சாயம் தீட்டபப்ட்ட தேவதைக் கதைகளின் மறுவடிவமே அமெரிக்க அறிவியல் புதினம் என்றார் லெம். லெம்மின் விமர்சனக் கடுமைகள் பலமாக விவாதிக்கப்பட்ட போதும் நேர்மையான விமர்சகர்களால் லெம்மைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அமெரிக்க அறிவியல் புனைவாளர்களைக் கடுமையாக விமர்சித்ததால் லெம்மை அந்தக் குழுவே வெறுத்தது. பிலிப் கே டிக் லெம் கம்யூனிஸ உளவாளி என்று தூற்றியது இதன் உச்சம். (ஆனால் பிலிப் கே டிக் ஒருவர்தான் அமெரிக்காவில் நல்ல எழுத்தாளர் என்று லெம் பாராட்டியிருக்கிறார்). இப்படி முரண்பாடுகளின் உச்சமாக வாழ்ந்த லெம், பின்னாட்களில் இவற்றிலிருந்து முழுமையாக ஒதுங்கிப் போனார்.

    ஆழ்ந்த படிமங்களைக் கொண்ட கதைகளை வறட்டு நகைச்சுவையின் மூலம் விறுவிறுப்பாக்கிவர் லெம். அந்தத் துறையில் அவரது உச்சத்திற்கு வேறுயாரும் ஈடில்லை எனலாம்.

    * * *

    லெம்மைப் போன்ற மேதைகளின் அறிவியல் புனைகதைகளை (காலம் கடந்துபோனாலும்) தமிழில் மொழிபெயர்க்க வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் நாம் எதை இழந்திருக்கிறோம் என்பதை அடையாளம் காணமுடியும். அதெல்லாம் சரியா வராதுங்க, சயின்ஸ் ஃபிக்ஸனைத் தமிழ்ல சொல்றது கஷ்டம் என்று மொண்ணையாகப் பேசிப் பேசியே காலத்தை ஓட்டிவிட்டோம். முயற்சி செய்வதன்மூலமே அதற்கான மொழியை வளர்த்தெடுக்க முடியும். லெம்மின் மிகப் பிரபலமான ஸோலாரிஸின் ஆங்கில வடிவம் உண்மையில் போலிஷ் மொழியிலிருந்து சுருக்கப்பட்டு பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் பிரஞ்ச்சிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதுத்தான். அங்கிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்தால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.

    போலிஷ் மொழியில் அறிவியல் புதினம் எழுதமுடியும், அதை ஆங்கிலத்தில் சுவை குன்றாமல் மொழிபெயர்க்க முடியும் என்றால் தமிழில் ஏன் முடியாது என்று லெம்மின் மரணத்தை அடியொற்றி நாம் கேள்விகளை எழுப்ப வேண்டியது அவசியம்.

    * * *

    என்னாலான சிறு முயற்சியாக லெம்மின் ஒரு சிறுகதையை சென்ற வருடம் டொராண்டோ பல்கலைக்கழத்தில் நடந்த மொழிபெயர்ப்புப் பட்டறையில் முயற்சித்துப் பார்த்தேன். லெம்மின் வறட்டு, கோர நகைச்சுவையை மொழிபெயர்ப்பது எளிதாக இல்லை. இருந்தபோதும் இந்த முயற்சி சுவாரசியமாகத்தான் இருந்தது.

    பிற்சேர்க்கை : ஸ்டானிஸ்லா லெம்-மிற்கு அருள் செல்வனின் அஞ்சலி

    16 Responses to அஞ்சலி : ஸ்டானிஸ்லா லெம்

    1. March 28, 2006 at 1:05 pm

      வெங்கட்
      நன்றாக விரிவாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் மொழிபெயர்ப்பைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். சுட்டி கொடுத்து விடுகிறேன்.
      அருள்

    2. சன்னாசி
      March 28, 2006 at 1:30 pm

      வெங்கட், மொழிபெயர்க்கப்பட்ட கதையின் pdf கோப்பில் TAUElangoManimekalai எழுத்துரு இருப்பதாகத் தெரிகிறது – கணினியில் படிக்கமுடியவில்லை. வேறொரு எழுத்துருவுக்கு மாற்றி இடமுடியுமா?

      //உலகெங்கிலும் தார்க்கோவ்ஸ்கியின் படமாக்கலைப் புகழ்ந்த சமயத்தில் லெம் அதை வெறுத்தார். தனது வெறுப்பை வெளிப்படுத்தவும் தயங்கவில்லை.//

      இது ஏனென்று எனக்குப் புரியவில்லை! அது அப்படியென்றால் சமீபத்தைய படத்தைப் பார்த்தால் என்ன சொல்வாரோ :-)

      லெம் பற்றிய குறிப்புக்கு மிக்க நன்றி.

    3. venkat
      March 28, 2006 at 1:51 pm

      சன்னாசி – வெட்டியொட்டி துரித கதியில் ஒரு பக்கமாக ஆக்கியிருக்கிறேன். மாற்றத்தில் எழுத்துப்பிழைகள் மலிந்திருக்கலாம்.

      http://domesticatedonion.net/tamil/?page_id=25

    4. venkat
      March 28, 2006 at 1:53 pm

      அருள் – நன்றி. லெம்மின் மரணம் பற்றி எனக்குத் தெரிந்தவிதம் வித்தியாசமானது. நேற்று பின்மதியம் BoeingBoeing தளத்தின் செய்தியோடை வந்தது. போய்ப்பார்த்தால் விக்கிப்பீடியா லெம் காலமானார் என்று அறிவிக்கிறது என்று மொட்டையாக இருந்தது. இதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா என்று சந்தேகமாக இருந்தது. விக்கிப்பீடியாவிலும் ஒற்றைவரிதான் இருந்தது. ஆனால் நேற்று முன்னிரவில் இங்கே வானொலியில் தெளிவாகச் சொன்னார்கள்.

    5. venkat
      March 28, 2006 at 1:56 pm

      சன்னாசி, லெம் தார்கோவ்ஸ்கி ஆரம்பத்தில் அரைமணி நேரம் சவசவ என்று வளர்த்தியிருக்கிறார் என்பதை முக்கியமான குற்றமாகச் சொன்னார்.

      அதற்கு தார்க்கோவ்ஸ்கி “ஆமாம், வேண்டுமென்றுதான் அப்படி எடுத்தேன். எனென்றால் முட்டாள்கள் அந்த நேரத்திற்குள் திரையரங்கைவிட்டு ஓடிவிடுவார்கள்” என்று பதிலளித்தார்.

    6. சன்னாசி
      March 28, 2006 at 3:03 pm

      ட்ராஃபிக்கில் கார் தொடர்ந்து போ….ய்க்கொண்டே இருப்பதைச் சொல்லியிருப்பாரென்று நினைக்கிறேன். படம் பார்க்கையில் சற்றுப் பொறுமையிழக்கத்தான் வைத்தது, ஆனால் சொன்னதுபோல, அதைப் பார்க்கப் பொறுமையில்லையெனில் படத்தையும் பார்க்கப் பொறுமை இருந்திராதென்பதே நிஜம். அந்த மேம்பாலப் பயணம், சமீபத்தைய ஆங்கில வடிவத்தில் கிடையாது – வலைப்பதிக்கத் தொடங்கிய காலத்தில் இதே விஷயத்தைக்குறித்துக் குறிப்பிட்டிருந்தேன் – என்ன காரணத்தால் அது இன்னும் நினைவிருக்கிறதென்று தெரியவில்லை!!

      சுவாரஸ்யமான கதை. நன்றி.

    7. venkat
      March 28, 2006 at 3:32 pm

      சன்னாசி – உண்மையில் நடந்தது வேறு. படத்திற்கான அதிநவீன காட்சிகளை ஜப்பானில் நடந்துகொண்டிருந்த World Fair-ல் படமாக்க தார்க்கோவ்ஸ்கி சோவியத் இரும்புக்கரங்களிலிருந்து அனுமதி பெற்றிருந்தார். ஆனால் போய்ச்சேர்ந்து எல்லா காகிதங்களையும் பூர்த்தி செய்துவிட்டு, கருவிகள் வர தாமதமாகிவிட்டது. ஏற்கனவே நிறைய செலவழித்தாகிவிட்டது (அந்தக் காலத்தில் சோவியத்தில் படமெடுக்க அரசாங்கத்திடம் Grant Application எழுத வேண்டும்தானே). வெறுங்கையாகத் திரும்பி வருவதற்குப் பதிலாக டோக்கியோவின் சாலைகளையும் சுரங்கப்பாதைகளையும் சுட்டுக்கொண்டு திரும்பினார். அதைப் பார்த்த கம்யூனிஸ நாட்டு மக்கள் மெய்சிலிர்த்துப் போனார்களாம். இதை ஒருமுறை Wired magazine-ல் படித்ததாக நினைவு.

      அது கிடக்க, நம்ம எம்.ஜி.ஆரும் அதே கண்காட்சியில் அதே மாதிரி Futuristic effect-க்காக உலகம் சுற்றும் வாலிபனில் படமாக்கியிருப்பார். தார்க்கோவ்ஸ்கி, எம்.ஜி.ஆர் – Great minds think alike. என்ன வாத்தியார் பூமியெங்கும் பூமேடை, பொங்கிப்பாயும் நீரோடை என்று கூட்டத்தில் லவ்விக்கொண்டிருப்பார்.

    8. சன்னாசி
      March 28, 2006 at 4:14 pm

      தனது poor theater வழியாக மேற்கத்திய நாடக உலகின் கலர்ஃபுல் காஸ்ட்யூம்களைக் கேள்விகேட்ட ஜெர்ஸி குரோட்டோவ்ஸ்கி மாதிரி தார்க்கோவ்ஸ்கியும் போலந்துக்கு பதில் மரியாதை செலுத்த வழியில் கண்டதையெல்லாம் சுட்டுக்கொண்டு வந்து கம்யூனிஸ்ட்டுகளுக்குப் போட்டுக் காட்டினாரோ என்னமோ! என்ன இருந்தாலும் ‘a tin can called sputnik’ ஐ ஆகாயத்தில் வைத்த ரஷ்யர்கள் தானே ;-) .

      இந்த ஸ்கி ஸ்கிகளாக வருவதால், இன்னொரு ஸ்கி பற்றிய மற்றொரு சின்ன விஷயம்: Red படத்தில் க்றிஸ்டாஃப் கீஸ்லாவ்ஸ்கி, காஃபியில் முக்கப்படும் ஒரு சர்க்கரைத்துண்டத்தைப் (sugar cube) படம்பிடிக்கையில், நாலரை வினாடிகளில் முழு சர்க்கரைத்துண்டிலும் காஃபி ஏறிவிடுமாறு சாத்தியமுள்ள சர்க்கரைத்துண்டைத் தேடிக் கண்டுபிடித்து உபயோகப்படுத்துவதில் பிடிவாதமாயிருந்ததைக்குறித்து படத்துக்குப் பிந்தைய விமர்சனங்களில் பார்த்ததுண்டு. அதாவது – நாலரை வினாடி என்றால் நாலரை வினாடி – நாலே முக்காலும் இல்லை, ஐந்தும் இல்லை, எட்டும் இல்லை. சர்க்கரைத்துண்டில் காஃபி ஏறும் காட்சியில் பார்வையாளனின் கவனத்தை நாலரை வினாடிகள் மட்டுமே பிடித்துவைக்கமுடியுமென்று கீஸ்லாவ்ஸ்கி நம்பியது அக்காட்சிக்கான காரணம் என்று கூறப்பட்டது. அது சரியா தவறா என்பது குறித்த விஷயமல்ல அது என்று மட்டும் புரிந்துகொள்ளமுடிந்தது. அழகியல் மீறல்களுக்கு அது ஒரு உதாரணமும் கூட என்று பட்டது, அதைக்குறித்து கீஸ்லாவ்ஸ்கியே சொல்வதும் அவரது ‘சுயதம்பட்டம்’ என்றதைத் தாண்டிய ஒரு தளத்தில் வைத்துப் புரிந்துகொள்ள முடிந்தது.

      ஒரு கோணத்தில் மேலே கூறியதும் இங்கே பொருந்துகிறது என்று நினைக்கிறேன்; தெரியவில்லை.

      //தார்க்கோவ்ஸ்கி, எம்.ஜி.ஆர் – Great minds think alike.// ;-)

    9. March 28, 2006 at 6:44 pm

      வெங்கட், மாபல்லி கதை படித்தேன். நன்றாக இருந்தது. மூலம் எந்தக் கதை என்று தெளிவாகக் கூறினால் மொழிபெயர்ப்புத்தி பற்றியும் ஏதேனும் அறிந்துகொள்ள முடியும்.

    10. kavi
      March 29, 2006 at 1:02 am

      Venkat,
      I dont think its “A Clockwork Orange” but “2001 A space odyssy” which shd be compared to “solaris”.

    11. venkat
      March 29, 2006 at 7:24 am

      செல்வராஜ் – மேலே பதிவின் கடைசியில் ஆங்கில மூலத்திற்கான சுட்டியும் கொடுத்திருக்கிறேனே!

    12. venkat
      March 29, 2006 at 7:25 am

      kavi

      You are right. It should be 2001 ASO. Thanks for pointing this slip. Will correct it.

    13. March 29, 2006 at 10:34 pm

      வெங்கட், ஆங்கில மூலத்தின் சுட்டி லெம் புத்தகங்களின் அட்டவணைக்குத் தானே செல்கிறது? நான் தான் சரியாக கவனிக்கவில்லையா? சரி… விடுங்கள்…

    14. venkat
      March 30, 2006 at 11:56 am

      செல்வராஜ், மன்னிக்கவும். அந்தத் தளத்தில் பட்டியிலிருந்து வலப்புறம் விபரங்களும், கதைகளும் வருகின்றன. இப்பொழுது கதையிருக்கும் தனிச்சட்டத்திற்கான முகவரியைத் தருகிறேன்.

      http://www.lem.pl/cyberiadinfo/english/dziela/bajki/bajkipl.htm

      இந்தக் கதை Mortel Engines என்ற தொகுப்பில் இருக்கிறது. லெம், மனிதர்களும், இயந்திரங்களும் ஊடாடலில் இருக்கும் சிக்கல்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். (The impossibility of communication between human beings and machines).

    15. March 30, 2006 at 1:39 pm

      நன்றி வெங்கட். இரண்டு வடிவங்களையும் அருகருகே வைத்து மீண்டும் படித்துப் பார்த்தேன். நன்றாகப் பெயர்த்திருக்கிறீர்கள். தமிழிலும் தந்திப்பிழையின் சொற்களை அருகருகே அமைத்திருப்பது இயல்பாய் இருக்கிறது (பல்டி-பல்லி, சாரை-சாறு). ஓரிரு இடங்களில் மட்டும் கருத்து சிறுமாறுபட்டிருப்பது போல் தோன்றினாலும், பொதுவாகவே உங்களது பெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது. மூலத்திற்கு நியாயம் செய்வதாய் இருக்கிறது. இதையே எனது நடையில் மறுபெயர்ப்புச் செய்தாலென்ன என்றும் கூடத் தோன்றியது. என்றாவது…

    16. Pingback: Google honours Stanislaw Lem | Domesticated Onion

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *