cindy_klassen.jpgசென்ற வாரம் நடந்து முடிந்த குளிர்கால ஒலிம்பிக்ஸைப் பற்றி எத்தனைபேர் ஆர்வம் கொண்டு பார்த்து/படித்திருப்பீர்கள்? முதலில் எத்தனை பேருக்கு குளிர்கால ஒலிம்பிக்ஸ்கள் ‘நெசமான’ ஒலிம்பிக்ஸ்க்கு இணையாக உலக ஒலிம்பிக்ஸ் குழுவால் மதிக்கப்படுகிறது என்று தெரியும்?

இருபதாவது குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 10-26 பெப்ருவரி 2006-ல் இத்தாலியின் டொரினோ (டூரின், தூரின் என்றும் இவ்வூரின் பெயர் பலுக்கப்படுகிறது) நடந்து முடிந்தது. குளிர் ஒலிம்பிக்ஸில் பெரும்பாலும் காக்கேஷியன் இனம் என்று பகுக்கப்படும் வெள்ளைக்காரர்கள்தான் அதிகம் பங்கேற்கிறார்கள். குறைந்த அளவில் பங்கேற்றாலும் ஜப்பான், கொரியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் வீரர்களும் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களைப் பெறுகிறார்கள். இதில் நடக்கும் விளையாட்டுகளைப் பற்றி இந்தியா, இலங்கையில் பலரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். இவற்றை Biathalon, Bobsleigh, Curling, Ice Hockey, Luge, Skating and Skiing என்ற பெரும்பிரிவுகளில் அடக்கலாம்.

பையாத்தலன் போட்டி குளிர்காலத்தில் உறைபனி நாடுகளில் உயிர்த்திருக்கத் தேவையான உடற்தந்திரங்களை அடிப்படையாகக் கொண்டது. பனிச்சருக்குவது, வேட்டையாடுவது போன்ற பண்டைய நாட்களின் தகுதிகள் இவ்விளையாட்டில் தெரியவரும். பாப்ஸ்லே என்பது தள்ளுவண்டியில் பனிச்சருக்கும் விளையாட்டு, கர்லிங் என்பது ‘பெரியப் பசங்க, பெரிய கோலிகுண்டை பனித்தரையில்’ விளையாடுவது லூக் என்பது கிட்டத்தட்ட பனித்தரையில் மல்லாந்து படுத்துக்கொண்டு வண்டியோட்டுவது. மற்றபடி ஐஸ் ஹாக்கி, ஸ்கேட்டிங், ஸ்கீயிங் போன்ற விளையாட்டுகளை அவ்வப்பொழுது தொலைக்காட்சியில் பார்த்திருக்கக் கூடும்.

இந்த குளிர்கால விளையாடுகளில் ஒரு முக்கிய அம்சம், இவற்றின் வேகம். பெரும்பாலானவை உராய்வு குறைந்த பனித்தரையில் நடப்பதால் மிக வேகமாக இருக்கும். வழமையான (தரை)ஹாக்கியைப் பார்த்துப் பரிச்சயமானவர்களுக்கு பனிஹாக்கியின் வேகம் வியப்பளிக்கு. கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் விளையாடப்படுவதால் இந்த விளையாடுகளில் மோதலும் விபத்துகளும் அதிகமிருக்கும்.

நான் குளிர் ஒலிம்பிஸ்களை கடந்த 2002ல் ஸால்ட் லேக் சிட்டி (அமெரிக்கா) முதல்தான் பார்க்கத் துவங்கினேன். ஆரம்பத்தில் பல விஷயங்கள் புரியாமல் இருந்ததால் சுவாரசியம் இருக்கவில்லை. இந்த ஒலிம்பிக்ஸில் பல நுணுக்கங்கள் பிடிபட்டதால் சுவாரசியமாகவே இருந்தது. குளிர் ஒலிம்பிக்ஸ் மீது ஆர்வம் வரவேண்டுமானால் இதில் நடக்கும் தொடர் ஓட்டங்கள் (ரிலே) பார்த்தாலே போதும். பதினைந்து சுற்றுகளில் மிகக் குறுகிய இடத்தில் அதிவேகத்தில் இவர்கள் தொடர் மாறுவது மிகப் பரபரப்பாக இருக்கும்.

* **

Country Gold Silver Medal TOTAL
GERMANY 11 12 6 29
UNITED STATES 9 9 7 25
CANADA 7 10 7 24
AUSTRIA 9 7 7 23
RUSSIA 8 6 8 22

இந்த ஒலிம்பிஸின் பதக்கப்பட்டியல் இங்கே இருக்கிறது. கடந்த ஒலிம்பிக்ஸில் நார்வே, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, ரஷ்யா முதல் ஐந்து இடங்களில் இருந்தன. இந்த முறை இது ஜெர்மனி, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்த்ரியா, கனடா என்று தலை ஐந்து இடங்களைப் பிடித்தன. (பதக்கப்பட்டியலில் கனடா மூன்றாவதாக இருப்பது வியப்பளிக்கலாம், மொத்தப் பதக்கங்களில் கனடா மூன்றாமிடத்திலும் தங்கப் பதக்கப்பட்டியலில் ஆஸ்திரியா (9), ரஷ்யா (8) க்கு அடுத்ததாக கனடா (7) பதக்கங்களைப் பெற்றது).

இந்தப் போட்டியின் பெரும் பரபரப்பு நார்வேயின் மோசமான தோல்விதான். வழமையாக நார்வே குளிர் ஒலிம்பிக்ஸ்களில் சக்தி வாய்ந்த ஒரு நாடாக இருக்கும். இந்த முறை இரண்டே இரண்டு தங்கங்களுடன் 13ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் ஆறு தங்கப்பதக்கங்களுடன் தென்கொரியா ஏழாமிடத்தைப் பிடித்தது. பல அதிவிரைவு ஸ்கேட்டிங் பந்தயங்களில் கொரியா அசைக்கமுடியாத சக்தியாகவே இருந்தது.

* * *

கனடாவைப் பொருத்தவரை இந்த ஒலிம்பிக்ஸில் பெரும் வெற்றிதான் என்று சொல்ல வேண்டும். முதன் முறையாக கனடா 24 பதக்கங்களைப் பெற்றது. (சென்ற ஸால்ட் லேக் ஒலிம்பிக்ஸில் 17 பதக்கங்களைப் பெற்றது கனேடிய சாதனை). குறிப்பாக கனேடியப் பெண்கள் அதிக அளவில் பதக்கங்களைப் பெற்றார்கள். உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு கனடாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் விளையாட்டில் சமமான மதிப்பளிக்கப்படுகிறது.

இந்த ஒலிம்பிக்ஸின் தனிப்பெரும் முகமாக வந்தவர் கனடாவின் ஸிண்டி க்ளாஸன். இவர் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் ஐந்து பதக்கங்களை பெற்றிருக்கிறார். குளிர் ஒலிம்பிக்ஸில் ஐந்து பதக்கங்களைப் பெற்ற முதல் பெண் இவர்தான்.

இன்னொரு சாதனை; 5000 மீட்டர் வேக ஸ்கேட்டிங்கில் தங்கப் பதக்கம் பெற்ற க்ளாரா ஹ்யூஸ் கோடை-குளிர் இரண்டு ஒலிம்பிக்ஸ்களிலும் பதக்கம் பெற்ற (உலகில்) இரண்டாவது பெண். இவர் அட்லாண்டா ஒலிம்பிக்ஸில் மிதிவண்டிப் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றவர்.

இத்தனை இருந்தாலும் கனேடியர்களுக்கு முக்கிய வருத்தம், ஆண்களுக்கான ஐஸ் ஹாக்கி போட்டியில் கனடா பதக்கம் பெறாதது. ஐஸ் ஹாக்கியின் தாயகமாகக் கருதப்படும் கனடாவில் இந்த விளையாட்டில் வெறி அதிகம். கடந்த ஒலிம்பிக்ஸில் இரண்டு தங்கங்களையும் கனடாதான் பெற்றது. இந்த முறை பெண்கள் மட்டும் தங்கம் பெற கனடா காலிறுதிச் சுற்றில் தோற்றுப் போனது.

இன்னொரு கனேடியரான பெக்-ஸ்மித் டேல் ஃப்ரீஸ் ஸைட்ல் ஸ்கீயிங்கில் தங்கப்பதக்கம் பெற்றார். ஆனால் இவர் பதக்கம் ஆஸ்திரேலியாவின் கணக்கில் போகிறது. கனேடியக் குடிமகனான இவர் கனேடிய ஒலிம்பிக்ஸ் குழுவின் பயிற்சி முறைகளில் அதிருப்தி கொண்டு ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்று (இப்பொழுதும் இவர் கனடா-ஆஸ்திரேலியா இரட்டைக் குடிமகன்), கனடாவிலேயே முழுப் பயிற்சிகளையும் மேற்கொண்டு ஆஸ்திரேலியா சார்பில் போட்டியிட்டார்.

* * *

குளிர்கால ஒலிம்பிக்ஸில் வெள்ளையர்களை மட்டுமே அதிகம் பார்க்க முடிகிறது. கறுப்பின விளையாட்டு வீரர்கள் அதிகமுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கறுப்பர்கள் பங்கேற்க இனரீதியான மறைமுகத் தடையிருக்கிறது என்று சொல்கிறார்கள். கடந்த ஸால்ட் லேக் போட்டிகளில்தான் முதன் முதலாக ஒரு கறுப்பிர் (அமெரிக்கப் பெண்) தங்கம் பெற்றார். இந்த விளையாட்டுகளில் இன்னும் பிற இனத்தவர் பங்கு வளரவில்லை.

கொரியா மாத்திரம் வேக ஸ்கேட்டிங்களில் ஒரு பவர்ஹவுஸ் என்று சொல்லத்தகுந்த இடத்தில் இருக்கிறது.

* * *

இத்தனைக்கும் இடையில் இந்தியாவிலிருந்து வந்த ஒரே போட்டியாளர் சில கலாட்டாக்களைச் செய்தார். இதைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில்

* * *

அடுத்த குளிர் ஒலிம்பிக்ஸ் 2006  2010ஆம் ஆண்டு கனடாவின் வான்கூவர் – விஸ்லர் நகரங்களில் நடக்கவிருக்கிறது.