ltte_humanrights_report.jpgகடந்த மூன்று நாட்களாகக் கனேடிய ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவருகிறது. நேஷனல் போஸ்ட் டொராண்டோ நகரிலிருந்து வெளிவரும் வலதுசாரி தினசரி. இது கனடாவின் இரண்டு பெரும் நாளிதழ்களுள் ஒன்று. (பிற நகரங்களில் இதே குழுமத்திலிருந்து உள்ளூர் செய்திகளை மட்டும் மாற்றி வேறு பெயர்களில் வெளியாகிறது). இந்தத் தொடரின் முதலாவது அத்தியாயம் 14 மார்ச்சு 2006 அன்று போஸ்டின் முதல் பக்கத்தில் தொடங்கியது. இரண்டாவது முக்கிய செய்தியாக நியுயார்க்கைத் தலைமையகமாகக் கொண்ட Human Rights Watch என்ற தனியமைப்பின் சமீபத்திய அறிக்கையான Funding the “Final War” LTTE Intimidation and Extortion in the Tamil Diaspora என்பதை முன்னிலைப்படுத்தி எடுத்த எடுப்பிலேயே மிகக் காரசாரமாகப் புலிகளைத் தடைசெய்ய வேண்டும் என்று செய்தி வெளியிட்டது. அதே தினத்தில் முக்கியப் பகுதியில் உள்ளே ஒன்றரைப்பக்கங்களுக்கு இது தொடர்பான விரிவான செய்திகளை வெளியிட்டது (நேஷனல் போஸ்ட் முழு வெளியீட்டையும் இணையத்தில் இலவசமாக அளிப்பதில்லை. இதற்குப் பணம் செலுத்தி சந்தா கட்ட வேண்டும்).

நியூயார்க் மனித உரிமைகள் குழுவின் ஐம்பது பக்கங்களுக்கு மேற்பட்ட முழு அறிக்கையும் இங்கிருந்து காணக்கிடைக்கிறது. இதன் தமிழ் வடிவத்தையும் அந்தக் குழு வெளியிட்டிருக்கிறது. இவற்றின் சுருக்கமான வடிவமும் வெளியாகியிருக்கிறது. நான் முழு வடிவத்தை இன்னும் படிக்கவில்லை. எனவே இந்த முடிவுகளுக்கு வர இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி முறைகளைப் பற்றி எதுவும் தெரியவில்லை.

அடுத்ததாக நேற்று 15 மார்ச்சு அன்று போஸ்ட் இதைத் தலையங்கத்திற்கு எடுத்துச் சென்றது. One more reason to ban the Tamil Tigers என்று தலைப்பிடப்பட்ட இந்தத் தலையங்கம் (முழுவதையும் படிக்க முடியும்), புலிகளைத் தடைசெய்யச் சொல்லி கனேடிய அரசை வற்புறுத்துகிறது. ஏற்கனவே தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் புலிகளைத் தடைசெய்வோம் என்று ஆளும் கன்ஸர்வேட்டிவ் கட்சி சொல்லியிருப்பதை வலுவாகச் சுட்டிக்காட்டுகிறது இந்தத் தலையங்கம்.

The Tigers belong in that special category of hell reserved for the likes of al-Qaeda and Hamas, the activities of which rightly are illegal in Canada. Instead, Tiger supporters in Toronto have been permitted for years literally to parade around with their Tiger flags, bumper stickers, and baseball caps in the same way others do Maple Leafs paraphernalia. More ominously, Tiger supporters have been allowed to carry out their terrorist fundraising campaigns, directly and through various front organizations.

என்று சொல்லும் இந்தத் தலையங்கத்தில் அல் கொய்தாவிற்கும் ஹமாஸ்க்கும் ஒப்ப புலிகள் பன்னாட்டுத் தீவிரவாதத்தில் எப்படி ஈடுபடுகிறார்கள் என்று விவரிக்கவில்லை.

அதே தினத்தில் நடுப்பக்கத்தில் Expose என்று சொல்லி Toronto Tamils told: Donate or be ‘dealt with,’ report says என்ற தலைப்பில் நீண்ட செய்தி அறிக்கை ஒன்றையும், Case Study என்று சொல்லி Woman Says Group Pressed her to Donate என்று புலிகளுக்குப் பணம் திரட்டும் ஒரு குழுவினால் எப்படி ஒரு பெண் பயமுறுத்தப்பட்டார் என்று ஒரு அறிக்கையையும் போஸ்ட் வெளியிட்டது. கிட்டத்தட்ட அன்றைய நடுப்பக்கம் முழுவதுமே இந்தச் செய்திகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து இன்றைக்கு (16 மார்ச்சு 2006) இந்தத் தடை பிரச்சாரங்களைக் கண்டித்து தமிழர்கள் குழு ஒன்று டொராண்டோவில் நடத்திய கூட்டம் ஒன்றை முன்வைத்து Tamils voice ‘deep anguish’ over Tiger extortion allegations என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டிருக்கிறது. முதல் பாதியில் கண்டக் கூட்டத்தைப் பற்றிய செய்தியாக வெளியாகியிருக்கும் இதன் பின்பாதியில் கடந்த மூன்று நாட்களாகத் தான் எழுதிவரும் “புலிகள் தற்கொலைப்படைகளை நடத்துகிறார்கள், சிறார்களைப் பயன்படுத்துகிறார்கள், பயமுறுத்துகிறார்கள்” ரீதியான அதே பல்லவியைத் திரும்பச் சொல்லியிருக்கிறார்கள்.

நேஷனல் போஸ்ட் மாத்திரம்தான் இப்படிச் சொல்கிறதா? பிற ஊடகங்களில் இது எப்படிப் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது. நேஷனல் போஸ்டின் இந்த அதிரடி பிரச்சாரத்திற்கு நோக்கம் என்ன என்பதை இந்த வார இறுதியில் எழுதுகிறேன்.