மின்மசி
வருங்காலத்திற்கான தொழில்நுட்பம் என்று அறியப்படும் மின்புத்தகங்கள் பற்றி என்னுடைய வலைப்பதிவில் அவ்வப்பொழுது எழுதி வருகிறேன். இந்த வரிசையில் இப்பொழுது Business Week சஞ்சிகையில் வந்திருக்கும் இந்தக் கட்டுரை. என்னுடைய பழைய பதிவுகளில் சுட்டப்பட்ட தகவல்களைத் தொடர்ந்தவர்களுக்கு இதில் புதிதாக ஒன்றுமில்லை என்றாலும் இதைப் பற்றி முன்னர் தெரிந்துகொள்ளாதவற்களுக்கு ஒரு நல்ல அறிமுகமாகக் கொள்ளலாம்.

இதில் தெரியவரும் ஒரே புதிய தகவல்; சோனியில் இந்த மின்புத்தகக் கருவி விரைவில் சந்தைக்கு வரவிருக்கிறது. 400 டாலர்கள் என்பது மின் புத்தகங்களுக்கு மிக அதிகமான விலைதான். இது புதிதாக வருவர்கள் நுட்பத்தைப் பெறத் தடையாக இருக்கும் என்று ஆதங்கமாக இருக்கிறது. இன்னொரு முக்கிய விஷ்யம் தற்பொழுதை சோனி நிறுவனத்தின் நிர்வாக முடிவுகள் அவ்வளவு சரியாக இருப்பதில்லை. அவர்களது தனியுரிமை கொண்ட ATRAC வடிவ இசைக் கோப்புகளைப் பரவலாகப் பயன்படுத்தப்படும் MP3-க்கு மாற்றாக முன்னிருத்தியதுதான் அவர்கள் எம்பி3 சந்தைய ஆப்பிளிடம் இழந்ததற்கு முக்கிய காரணம். இதேபோல இந்த மின்புத்தகத்திலும் தங்கள் தனியுரிமை கோப்புகள் மாத்திரமே படித்தல் சாத்தியம் என்று சொல்வார்களேயானால் இந்த நுட்பத்தைக் கருவிலேயே சிதைத்த பாவம் அவர்களைச் சேரும்.

ஆனால் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இசை உலகில் சோனியின் கைவசம் நிறைய அதிக விற்பனைப் பாடல்கள் இருந்தன, எனவே கருவி விற்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் தங்கள் பாடல் பலராலும் நகலெடுக்கப்பட்டு அதன் விற்பனை இழந்துபோகக் கூடாது என்பது. ஆனால் அவர்களிடம் எந்தப் புத்தகங்களுக்கும் பதிப்புரிமை இல்லை எனவே கருவி விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்து கூட்டன்பர்க் திட்டம் தொடங்கி மதுரைத் திட்டம் வரை இலவசமாகக் கிடைக்கும் மின்நூல்களையும் படிக்க வசதி தருவார்கள் என்று நம்பலாம்.

மின்மசி, மின்புத்தகம் குறித்த என் கடந்த பதிவு (இதில் அதற்கு முந்தைய பதிவுகளின் சுட்டிகள் உள்ளன).