மதுரைத் திட்டத்தின் தலைவர் முனைவர் கல்யாணசுந்தரம் ஜுலை முதல் வாரத்தில் டொராண்டோ வரவிருக்கிறார். இவரது வருகையையொட்டி டொராண்டோ தமிழ் கழகத்தின் (MACA) இலக்கியக்குழு ஒரு விசேட நிகழ்வை ஒழுங்கைமக்கவிருக்கிறது ஒழுங்கமைக்கவிருக்கிறது. இது ஜூலை 8ம் தேதி நடைபெறவிருக்கிறது. இடம், காலம் முடிவானபின் அறியத் தருகிறேன். மதுரைத் திட்டம், தமிழிலக்கியம், தமிழ் கணிமை இவற்றில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ள விழைகிறேன்.

1998-ல் அதிகாரபூர்வமாக மதுரைத் திட்டம் துவக்கப்படுமுன்னரே கல்யாண் இதையொட்டிய வேலைகளில் ஈடுபட்டிருந்தார். 1995-ல் நான் ஸ்காட்லாந்தில் வசித்தபொழுது தமிழ் இலக்கியங்களை மின்வடிவமாக்கல் குறித்து அவரிடமிருந்து எனக்கு வந்த முதல் கடிதம் இன்னும் நினைவிலிருக்கிறது. எந்தவித அரசாங்க அல்லது தனியார் நிதியுதவிகளும் கட்டுப்பாடுகளுமில்லாமல் கிட்டத்தட்ட பத்துவருடங்களாகத் தீவிர முனைப்புடன் மதுரைத் திட்டத்தை வழிநடத்தி வருகிறார் கல்யாண். பத்துக்கும் குறைவான நண்பர்களுடன் துவங்கிய இந்தத்திட்டம் இப்பொழுது 300க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டிருக்கிறது. வெகுவிரைவில் மதுரைத் திட்டத்தின் 250-வது வெளியீடு வரவிருக்கிறது. துவக்கத்தில் செவ்விலக்கியங்களை மின்வடிவமாக்கி வந்த இந்தத் திட்டம் இப்பொழுது சமகால காப்புரிமையற்ற வெளியீடுகளையும் அளித்து வருகிறது.

நண்பர் கல்யாணை நான் முதன் முதலில் சென்னையில் 2000 வருடம் சந்தித்தேன். இது தற்செயலாக நடந்தது. ஜப்பானிலிருந்து நானும் சுவிஸ் நாட்டிலிருந்து அவரும் சென்னை வந்திருந்தோம். அந்த சமயத்தில் நாங்கள் இருவருமாக தமிழ் மின்பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு நடைபெற்றுவந்த ஆயத்தங்களைப் பார்த்தோம். பின்னர் 2002 ஆம் ஆண்டு சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த தமிழ் தகவல் நுட்ப மாநாட்டில் மீண்டும் சந்தித்தேன். தற்பொழுது இவர் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.

டொராண்டோ வருகையின் பொழுது முனைவர் கல்யாணசுந்தரத்தைச் சந்திக்க ஆர்வமுள்ளவர்கள் என்னைத் தொடர்புகொள்ளவும்.