நூறு வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு தொழிலில் புதுமை புகுத்துவது என்பது ஆகக்கூடி இயலாத காரியம். ஆனால், அவ்வப்பொழுது அப்படியொரு முயற்சி அங்குமிங்குமாகத் தோன்றுபொழுது அதைக் கண்டுபிடித்தவரைப் பாராட்டத் தோன்றுவது நிச்சயம். இது சமீபத்தில் அப்படியொரு நிகழ்வு.

முன்னேறிய நாடுகளில் பாடப்புத்தகங்களின் விலை அசாத்தியமானது. சமீபகாலத்தில் இது தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. என்னுடைய துறையில் உதாரணமாகத் தேடிப்பார்த்தபொழுது அமேசான் தளத்தில் நான் கண்ட விலைகள் இவை;

  • Optics (4th Edition) by Eugene Hecht – $106.78
  • Principles of Optics: Electromagnetic Theory of Propagation, Interference and Diffraction of Light (7th Edition) by Max Born and Emil Wolf – $58.47
  • Optical Physics by Stephen G. Lipson, Henry Lipson, and David Stefan Tannhauser – $55.00

இளமறிவியல் இயற்பியல் படிக்கும் மாணவர்களுக்கான கட்டாயப்பாடமான ஒளியியலுக்கு இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை வாங்கியாக வேண்டும். ஆகக்கூடி ஒரு இளமறிவியல் மாணவர் முப்பது முதல் நாற்பது வரையான பாடங்களைப் பயின்றாக வேண்டும். இவற்றில் ஒரு புத்தகம் ஐம்பது டாலர்கள் என்று கொண்டால் கிட்டத்தட்ட $1,500 வெறும் புத்தகம் வாங்குவதற்கே செலவிட்டாக வேண்டும் (பல பாடங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று புத்தகங்களாவது தேவைப்படும்). புத்தகங்களுக்கான செலவு மாணவர்களின் வருடாந்திர செலவில் ஒரு முக்கியமான வீதத்தை எட்டுகிறது.

(இந்தியாவில் இது கொஞ்சம் பரவாயில்லை. Prentice Hall, Wiley India, McMillen India, Oxford University Press உள்ளிட்ட பல பதிப்பங்கள் இந்தியாவிற்கான விசேடச் சலுகை விலையைத் தருகின்றன. இந்தியாவில் அச்சிடப்படும் பாடப்புத்தங்களின் தாள் தரம், அச்சு நேர்த்தி போன்றவை மிகவும் குறைவாக இருந்தாலும் மாணவர்களுக்கு இவை போதுமானவைதான். உதாரணமாக நான் படிக்கும்பொழுது ஒளியியலில் பைபிள் எனப் போன்றப்படும் பார்ன் & உல்ஃப் புத்தகத்தை நூற்றிருபது ரூபாய்களுக்கு வாங்கினேன் (இன்றுவரை இந்தப் பதிப்பு என்னிடம் பயனில் இருக்கிறது). லிப்ஸன் அண்ட் லிப்ஸனை எழுபது ரூபாய்களுக்கு வாங்கியதாக நினைவு. கடந்த டிசம்பரில் இந்தியா சென்ற பொழுது நான்கு பெட்டி நிறையப் பாடப் புத்தங்களை நான் ஐஐஎஸ்ஸியில் நான் படித்த ஆய்வகத்தில் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்தேன்). இந்தியாவில் பாடப்புத்தங்களைப் பற்றி விரிவாக வேறு சமயத்தில் எழுதவேண்டும்).

கடந்த சில வருடங்களாக பாடப்புத்தங்களின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. சில புத்தகங்களின் விலை கடந்த நான்கு வருட்ங்களில் மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. இங்கே பல்கலைக் கழக மாணவர்கள் தங்கள் வருடாந்திர பல்கலைக்கழகக் கட்டணம் எழுபதுவீதம் உயர்ந்திருப்பதாகப் போராட்டங்களை நடத்துகிறார்கள். அவர்களிடம் பேசும்பொழுது புத்தக விலை உயர்வுக்கு எங்கே சென்று போராட்டம் நடத்துவது என்று தெரியவில்லை என்று விரக்தியாகக் கூறுகிறார்கள்.

textbook_advt.jpgஇந்த நிலைக்கு இப்பொழுது ஒரு மாற்று வந்திருக்கிறது. http://www.freeloadpress.com/ என்ற நிறுவனம் தற்பொழுது பாடப்புத்தங்களை இலவசமாக மின்புத்தக வடிவில் தரத்தொடங்கியிருக்கிறது. ஃப்ரீலோட்பிரஸ்ஸில் பதிவு செய்துகொண்டு இலவசமாக இவற்றைத் தரவிறக்க முடியும். தற்பொழுது மிகச் சில புத்தகங்களே இருந்தாலும் விரைவில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. இப்படி இலவசமாகக் கொடுக்க அவர்கள் மின்புத்தகங்களின் இடையே விளம்பரங்களைச் செருகியிருக்கிறார்கள். FedEx, Pura Vida Coffee உள்ளிட்ட சில நிறுவனங்களின் விளம்பரம் இந்தப் புத்தங்களிடையே வருகிறது. இது ஒன்றுதான் இதில் எதிர்மறையான விஷயம். என்னைப் பொருத்தவரை இது ஒரு பெரும் பிரச்சினையாகத் தெரியவில்லை. எந்த விளம்பரத்தையும் மூன்றாம் முறை பார்க்கும்பொழுது நம் கவனம் அதில் செல்லாது. ஐந்தாம் முறை அந்தப் பக்கத்தை அநாயசமாகத் தாண்டிச் சென்றுவிடுவோம். எனவே இது ஒரு முக்கியமான விஷயம் இல்லை.

மறுபுறத்தில் மின்புத்தகங்களில் (பாடப்புத்தகங்கள்) சில நல்ல புதிய சாத்தியங்கள் இருக்கின்றன.

  1. தொடர்புள்ள பக்கங்களை மீயுரை கொண்டு இணைக்க முடியும்.
  2. புறத்தில் இருக்கும் மேலதிக விபரங்களுக்கு இணையச் சுட்டிகளை நேரடியாக இணைக்க முடியும்.
  3. பல வண்ணத்தில் அச்சிடமுடியும். இது பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள உதவும். உதாரணமாக விசை-எதிர்விசை போன்றவற்றை வேவ்வேறு நிறங்களில் தரும்பொழுது பார்த்தமாத்திரத்தில் மனதில் பதியும்.
  4. ஒலிக்கோப்புகளை இணைக்க முடியும். உதாரணமாக டாப்ளர் விளைவு பற்றிய பாடத்தில் விலகிச் செல்லும் ஒலியின் அதிர்வெண் எப்படி மாறுகிறது என்பதை எளிதில் விளக்கலாம்.
  5. சலனப்படங்களச் சேர்ப்பது எளிது; செல்பிரிதலின் பல நிலைகளைச் சலனப்படம் கொண்டு படிக்கும் பொழுது மிக எளிதாகப் புரியும்.
  6. பிழைகளைத் திருத்த அடுத்த பதிப்பு வரைக் காத்திருக்கத் தேவையில்லாமல் கண்டறிந்த உடனேயே மாற்ற முடியும். இது பாடப்புத்தங்களில் மிகவும் முக்கியம்.

இப்படிப் பலச் சாத்தியங்கள் இருக்கின்றன. இவற்றுக்காக ஒன்றிரண்டு விளம்பரங்களைப் பொறுத்துக்கொள்ளலாம்.

* * *
ஏற்கனவே சொன்னதுபோல் நூற்றாண்டு சமாச்சாரமான பாடப்புத்தகம் பதிப்பித்தலில் விளம்பரம் என்ற ஒற்றை (இதுவும் நூற்றாண்டு சமாச்சாரம்தான்) உத்தியைப் புகுத்தி முற்றிலும் பயனுள்ளதாக மாற்றியிருப்பதற்காக ஃப்ரீலோட்பிரஸ்ஸை மனதாரப் பாராட்டலாம்.