சில நாட்களுக்கு முன்னால் எழுதிய கீதா ராமசாமியின் புத்தக அறிமுகத்தின் தொடர் பதிவு இது.

கீதா ராமசாமியின் இந்தப் புத்தகத்தில் தீர்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றனவா என்று தெரியாது.  என் மனதிற்குப் பட்டவரை கீழ்க்கண்டவற்றையே நான் விடிவுதரும் தீர்வுகளாக நம்புகிறேன்.

தலித்துகளின் தலைவர்களாக அறியப்படுவர்களுக்கு  தாழ்மையான வேண்டுகோள் ஒன்றுண்டு.  உங்கள் கற்பு, தமிழ்க் கலாச்சாரம், தொகுதி உடன்பாடு இவற்றையெல்லாம் வரும் தேர்தல் முடிந்தவுடன் (அதில் உங்களது வெற்றி தோல்வி என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்)  அடுத்த இரண்டாண்டுகளுக்காவது கைவிடுங்கள்.  உடனடியாக  சுத்திகரிப்பில் நேரடி மானிட உழைப்பைத் தடைசெய்ய அதில் நுட்பங்களைப் புகுத்த அரசை வறுபுறுத்துங்கள்.  அவர்களிடமிருந்து எப்பாடுபட்டாவது ஒரு கால இலக்கைத் தீர்மானமாகப் பெறுங்கள்.   (இன்னும் பத்து வருடங்களில் மனிதக் கழிவைத் தலையில் சுமப்பதை முற்றாக நிறுத்துவோம்.  இத்யாதி…).   அதியற்புத துவக்க நிலை வர்த்தக நிறுவனங்களிடையே ‘காலவரையறை உத்தி’ (Time-bound Strategy)  என்று ஒன்று இருக்கும். இதில் காலக்கெடு மிகவும் முக்கியம்.  இத்தனை மாதங்களுக்குள் இந்த இலக்கை எட்டியாக வேண்டும் என்று ஒவ்வொரு கட்டத்தைவிட்டும் வெளியேறும் தீர்மானமாம முன்விதித்த காலக்கெடுக்களை அந்த நிறுவனங்கள் வரையறுத்துக் கொள்வதைக் காணலாம்.   அப்படியாக இந்த சாதி அவலத்தின் ஒவ்வொரு கூறுகளையும் ஆய்ந்து ஒவ்வொன்றுக்கும் ஒரு தீர்மானமான காலக்கெடு வைத்துக் கொண்டு போராட வேண்டியது மிகவும் முக்கியம்.  துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பின் அரைநூறாண்டுக்கும் மேலாகக் கழிந்தும் சமூக அவலங்களைக் குறித்தப் போராட்டத்தில் துவக்க நிலையிலேயே இருந்துகொண்டிருக்கிறோம்.

என் தனிப்பட்ட கணிப்பின்படி சுகாதாரக் கேடுள்ள தொழில்களிளும் ஆபத்துகள் நிறைந்த தொழில்களிலும் நுட்பங்களையும் கருவிகளையும் முனைந்து புகுத்துதல், நமக்கேயான கருவிகளை வடிவமைத்துக் கொள்ளுதல் மிகவும் முக்கியம்.  பத்து வருடங்களுக்கு மேலாக  பிரிட்டன், கனடா, ஜப்பான் நாடுகளில் வசித்ததில் நான் கண்டது இதுதான்; எங்கள் வீடுகளில் கழிவறையைச் சுத்தம் செய்ய பல கருவிகள் இருக்கின்றன.  அதிக சிரமமின்றி கழிவறையின் துர்நாற்றத்தைப்  போக்கவும்,  சுகாதாரத்தை உறுதி செய்யவும் புதுவித வேதிப்பொருட்கள் நாள்தோறும் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறன.   இந்த நிலையில் தனிமனிதன் அவன் சுகாதாரத்தை அவனே பேணிக்கொள்வது எளிதாகிறது.  இதுவே நான் காணும் தீர்வு. இதில் அறிவியலின் பங்கு நிறையவே இருக்கிறது.  வாரம் தோறும் என் கழிவறையை நான் சுத்தம் செய்யாவிட்டால்,  என் குளியல் தொட்டியில் கொஞ்சம் கறுப்பு படிந்துவிட்டால்,  எனக்கு உடனடியாக சுத்தம் செய்தாக வேண்டும்.   இதில் கட்டாயம் எனக்கு பெருமையிருக்கிறது.   இந்த சுத்திகரிப்பு காரியங்களைச் செய்யும் கருவிகளையும் அதற்கு உதவும் வேதிப்பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வமிருக்கிறது.

என் தாத்தா காலத்தில் அவருடைய மீசையையும், தாடியையும் மழிக்க நாவிதன் வரவேண்டியிருந்தது.  என் தந்தையின் காலத்தில் சேப்டி ரேஸர்கள் என்று சொல்லப்படும் சவரச சாதனங்கள் பெருக, மழித்தலுக்காக நாவிதனை நாடவேண்டிய அவசியம் விட்டுப் போனது.  என் காலத்தில் முன்று பிளேடு ரேஸ்ர்கள், ஐந்து பிளேடு ஜில்லட்டின் என்று வர, தாடியை எடுக்க சலூனுக்குப் போவது கேலிக்கும், வியப்புக்கும் உரிய விடயமாக ஆகிப் போயிருக்கிறது.    இதுதான் உண்மை.   கருவிகள் வளர வளர  செய்தொழிலில்  உயர்வு தாழ்வு சொல்லும் மனப்பான்மை நம்மை விட்டோடிவிடும்.    இதைச் சென்னையிலேயே ஒரளவு காணமுடிகிறது சிங்கப்பூர்காரர்கள் வந்து கருவிகளைக் கொண்டு தெரு சுத்தம் செய்ய ஆரம்பித்த உடன் அதில் ஈடுபடும் இளைஞர்களிடையே சுறுசுறுப்பையும் தன் தொழில் மட்டமில்லை என்ற தன்னம்பிக்கையும் பார்க்க முடிந்தது.

என் அலுவலகத்தில் தரையைச் சுத்தம் செய்ய ஒரு நிறுவனத்திற்குக் குத்தகையிருக்கிறது.  செவ்வாய் தோறும் மாலையில் என் அறையைச் சுத்தம் செய்யும் பெண்மனி வருவதற்குள் நானே என் குப்பைகளை எடுத்துப் போட்டுவிட்டு மேசையை ஒழுங்குபடுத்தி வைக்கிறேன்.   இதற்குக் காரணம் அந்தத் தொழிலைச் செய்ய வருபவரிடம் எனக்கிருக்கும் மதிப்பு; அந்தத் தொழிலைச் செய்பவருக்குத் தன் உடலுழைப்பின் உன்னதத்தின் மேல் இருக்கும் தன்னம்பிக்கை என்னிடம் அவர்மீது மதிப்பாக எதிரொளிக்கிறது.    பிறப்பால் வலிந்து ஒரு தொழிலைச் செய்யப் பலவந்தப்படுத்தும் பொழுது இது ஒருக்காலத்திலும் சாத்தியமாகாது.   பிறப்பால் கோவிலில் இருக்கும் குருக்கள் உட்பட.   பிறப்பினால் பிரதமாரானோம் என்ற அவநம்பிக்கை அவ்வப்பொழுது இந்திராகாந்தியையே வதைத்திருக்கும் என்று நம்புபவன் நான்.   தொழிலையும் பிறப்பையும், அது எந்தத் தொழிலாக இருந்தாலும், பிரித்தெடுப்பது மிக முக்கியம்.   அதற்கு எனக்குத் தெரிந்த ஒரே வழியாக எல்லா தொழிலகளிலும் கருவிகளைப் புகுத்துவதுதான் என்று தோன்றுகிறது.   நம்மூரில் வெட்டியான் என்பது தாழ்ந்த தொழில் ஆனால் இங்கே “Funeral Director”  சமூகத்தில் மிகவும் கௌரவமானது.   இரண்டுக்கும் இடையே இருக்கும் முக்கிய வித்தியாசம் கருவிகளின் பயன்பாடு.

இங்கே அற்புத முடியலங்காரச் சாதனங்கள் கிடைக்கையில் என் மகன்களுக்கு நானோ, என் மனைவியோதான் முடி வெட்டிவிடுகிறோம். இன்றளவும் அவர்கள் சலூனுக்குப் போனதில்லை.  இதில் கட்டாயம் பெருமிதம் இருக்கிறது.  நம் அடிப்படைத் தேவைகளுக்கு பிறரை நாடாமல் இருக்க்ப்பது உன்னதமான விடயமாகத்தான் தெரிகிறது எனக்கு.  இதில் கட்டாயம் நுட்பத்தின் பங்கு நிறையவே இருக்கிறது.

ஒருகாலத்தில் அறிவை பிறப்பினால் மறுக்கும் நிலை நம்மிடையே இருந்தது உண்மைதான்.  ஆனால் இன்றைக்கு இது பெருமளவில் மறைந்துவிட்டது.    இதன் அடுத்த கட்டமாக நுட்பங்களைப் புகுத்துவது அவசியம்.  எனவே, மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி தலித் தலைவர்கள்  (சமூக முன்னேற்றத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்ட ஒவ்வொருவர்களும்) நுட்பங்களின் பங்கைத் தம் மக்களுக்குப் போதிக்க வேண்டும்.   அந்த நிலையில் அம்பட்டன், நாவிதன், பரியாரி என்று பிறப்பால் பணிக்கப்படுவது மறைந்துபோய் சிகையலங்காரக் கலைஞர்கள் என்று பெருமைமிக்க, ஆதாயமிக்கத் தொழிலாக மாறிப்போகும்.    அப்பொழுது பிறப்பு வித்தியாசமின்றி  எல்லோரும் அதில் முனைவது நிச்சயம்.

விடுதலைக்கு வெளியிலிருக்கும் சக்திகளுடன் போராடிக்கொண்டிருப்பதுடன் சமூகத்தின் உள்ளிருந்தே இந்த மாற்ற்த்தை விதைப்பதும் சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது.     ஒத்த/மாற்று கருத்துக்களை அறிய ஆர்வமுள்ளவனாக இருக்கிறேன்.

—-

இன்றைக்கு உலகப் பேரழகிகளில் ஒருவராகக் கருதப்படும் ஆஞ்சலீனா ஜோலி தான் சிறுவயதில் Funeral Director  ஆக விருப்பப்பட்டதைச் சொல்லியிருக்கிறார்;

“I wanted to be a funeral director,” she says. She goes back into her office and returns with incontrovertible evidence: her copy of the 1987 Funeral Service Institute Handbook. “It was one of those by-mail courses to learn how to be a funeral director,” she says.