india_stinking.jpgஜனவரி 31 தி ஹிந்து நாளிதழில் கீதா ராமசாமியின் India Stinking என்ற புதிய நூலின் மதிப்புரை வெளியாகியிருகிறது. தமிழ் வலைப்பதிவுலகத்திலிருந்து சில வாரங்களாகக் கொஞ்சம் விலகியிருந்த காலத்தில் இதைப் பற்றி யாராவது இங்கே விவாதித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

கீதா ராமசாமியின் புத்தகம் மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. இந்தியாவிலிருந்து நான் தருவித்து வாசிக்க நாட்கள் நிறைய ஆகும். என்றாலும் அக்கறையுள்ள ஒத்த மனதினர் அவசியம் இதைத் தவறவிடக்கூடாது என்பதால் நான் எழுதத் தலைப்படுகிறேன். இது மானிடக் கழிவு, கழிவுநீர் இன்னபிற சுகாதாரக் கேடுள்ள இடங்களில் தங்கள் நேரடி உடலுழைப்பால் சுத்திகரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பற்றியது. சொல்லத் தேவையில்லை சாதிப் பிரிவுகள் என்ற அவலம் பெருத்திருக்கும் நம் நாட்டில் இவர்கள் பிறப்பால் இந்தத் தொழிலைச் செய்ய வற்புறுத்தப்படும், வேறு தொழில்கள் மறுக்கப்படும் தலித் சமூகத்தினரே. இது தொழில்நுட்பம் வளராத, நுட்பம் மறுக்கப்பட்ட, சுகாதாரக் கேடான ஒரு தொழிற்பிரிவினை பிறப்பு ரீதியாக ஒருசிலரின் மீது சுமத்தும் கொடுமை குறித்த ஆவணம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா ஒளிர்கிறது (India Shining) என்று ஆனந்தக் களிப்பாடும் நிலையில் வெளியாகியிருப்பது மிகவும் முக்கியமானது. ஒளிரும் சமாச்சாரங்களுக்கு முதல் பக்கப் பரபரப்பு கொடுக்கும் நாளிதழ்களும் சஞ்சிகைகளும் இத்தகைய மறுக்கவியலா தரவுகளை அடிப்படையாகக் கொண்ட வாதம் ஒன்று வரும்பொழுது ஓடி ஒளிவது நம் அவலம் என்றுதான் சொல்ல்வேண்டும். என்னைக் கேட்டால் ஒவ்வொரு மேடையிலும் இந்தியா ஒளிர்கிறது என்று முழக்கமிடும் அரசியல்வாதிகள் (பத்திரிக்கையாளர்கள், வர்த்தக முதலைகள், பன்னாட்டு நிறுவன இந்தியப் பிரதிநிதிகள்) பேசும்பொழுதும் இந்தப் புத்தகத்தின் இரண்டு பிரதிகளைக் கையிலெடுத்துச் செல்ல வேண்டும். ஒன்றை உங்கள் கையெழுத்திட்டு அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும். மற்றதில் அவர்களின் கையெழுத்தைக் கேட்க வேண்டும். அப்படி அவர்கள் வாங்கிக் கொள்ள மறுப்பார்களேயானால் அதை விளம்பரப்படுத்த வேண்டும். வாங்கிக் கொள்பவர்கள் படிக்காவிட்டாலும் அடுத்த மேடையில் முழக்கமிடும்பொழுது கொஞ்சமாவது சுரத்து குறைந்துபோக வாய்ப்பிருக்கிறது.

ஃபெரெண்ட்லைன் மதிப்புரை (இப்பொழுது சுட்டி கிடைக்கவில்லை) இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக கீதா பல மாதங்கள் சுத்திகரிப்புத் தொழிலாளர்களுடன் உடனிருந்து கவனித்திருக்கிறார் என்று சொல்கிறது. கீதா ராமசாமி கதா நிறுவனத்திற்கா தமிழ் தலித் எழுத்தாளர்களை மொழிபெயர்த்திருக்கிறார் என்பதால் தலித்துகளுடனான இவரது பரிச்சயம் மிகவும் அதிகமாகவே இருக்கும் என்று நம்புகிறேன். அந்த வகையில் இந்தப் புத்தகம் நேரடிப் பார்வையில் எழுதப்படிருக்கும் என்றும் எதிர்பார்க்க வாய்ப்பிருக்கிறது. இதற்கான தரவுகள் பெரும்பாலும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பெறப்பட்டிருக்கின்றன. ஒளிரும் இந்தியாவின் உன்னதக முகமாக ஆந்திரம் திரையில் பாய்ச்சப்படும் நிலையில் அதே களத்தில் இறங்கி அவலங்களை வீதிக்குக் கொண்டுவந்திருக்கும் கீதாவின் சாதுர்யம் பாராட்டப்படவேண்டியது. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் தென்னிந்த மாநிலங்களுக்குள்ளே கர்நாடகத்தில்தான் தலித்துகள் மீதான விழிப்புணர்வும் அக்கறையும் அதிகமிருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆந்திரம் இதன் எதிரெல்லை. பெரியாரில் துவங்கி பேரலையாக சாதி பற்றி விழிப்புணர்வு எழுப்பப்பட்டாலும், தமிழகம் பயணிக்க வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது.

கீதா ராமசாமியின் இந்தப் புத்தகத்தில் தீர்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றனவா என்று தெரியாது. என் மனதிற்குப்பட்டவரை விடிவுதரும் தீர்வுகளாக நம்புகின்றனவற்றை அடுத்த பதிவில் தருகிறேன்.