oleander_yellow.jpg இவ்வாரம் பிபிஸி வானொலியில் வெளியான ஒரு அலசலின்படி  இலங்கையில் மிக முக்கியமான விஷமாக தங்க அரளி அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  நானறிந்த வகையில் தமிழகத்திலும் இது முக்கியமான பிரச்சினைதான்.

பிபிஸி கட்டுரையால் உந்தப்பட்டு கொஞ்சம் Lancet, British Medical Journal போன்றவற்றில் அரளி குறித்து வாசித்துப் பார்த்தேன். Lancet கட்டுரை இலங்கையில் ஆண்டுதோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சாவுகளுக்கு அரளி விஷம் காரணம் என்று சொல்கிறது. மிக அற்பமான காரணங்களுக்காக்கூட அரளி விதையை அறைத்துக் குடித்து மாண்டுபோகிறார்கள் என்பதைக் கேட்க அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. இலங்கையில் 1980 ஆம் ஆண்டுவரை அரளி விஷம் அதிகம் வெளியில் தெரியாததாக இருந்திருக்கிறது. 80ல் அரளி குடித்து இறந்துபோன இரண்டு பெண்களைப் பற்றிய செய்தி பத்திரிக்கைகளில் பரபரப்பாக வெளிவர, அடுத்த மூன்று வருடங்களுக்குள் வருடத்திற்கு 103 பேர் செத்துப் போயிருக்கிறார்கள். இப்பொழுதும் தொடர்ச்சியாக அரளி விஷத்தால் சாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். படிக்கும்பொழுது “இலங்கையில் சாவுறதுக்குன்னு இருக்கிற கொடுமைகள் போதாதென்று இது வேறவா” என்றுதான் வேதனை மேலிடுகிறது.

அரளி மிகக் கொடிய விஷமுள்ள தாவரம். பெரும்பாலான விஷத் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் மிகப் பளீரென கவர்ச்சிகரமான பூக்களோ தோலமைப்போ இருக்கும். இது தாங்கள் இருக்கும் இடத்தை வெளிச்சமிட்டுக் காட்டி தழை உண்ண வரும் அல்லது இரையாகத் தேடிவரும் பிற விலங்குகளை விரட்டும் உத்தி. அந்த வகையில் அரளிக்கும் மிக அழகான அற்புத வடிவம் கொண்ட பூ உண்டு. சிறிய வயதில் எங்கள் ஊர் சிவன் கோவில் பிரகாரங்களில் கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கும் அரளியை நிறையப் பறித்து விளையாடியிருக்கிறேன். அரளி விதை எல்லாவற்றையும்விட விஷம் அதிகம்கொண்டது. இதில் குறைந்தபட்சம் எட்டுவிதமான கொடுமையான விஷப் பொருட்கள் அடங்கியிருக்கின்றன. அரளிப் பாலையோ, அல்லது அரளிவிதையையோ உட்கொண்டவர்களுக்கு இரத்தம் இழைகளாகிக் கெட்டிப்பட்டு மரணம் சம்பவிக்கும். அரளித் தழையையோ பூவையோ தின்றால் வாந்தி, மயக்கம் போன்றவை உண்டாகும், சில சமயங்களில் கண்பார்வையையும் இழக்கக் கூடும்.

சிறு வயதில் பச்சையான அரளிக்காயை எடுத்துக் கோவில் சுவற்றில் ஓங்கி அடித்து அதிலிருந்து பால் சிதறுவதைக் கண்டு விளையாடியிருக்கிறோம். இப்படி நாங்கள் அடித்துவைத்த அரளிக்காய்களின் கறை சுவற்றில் நீண்ட நாட்களுக்கு இருந்தது. அப்பொழுதெல்லாம் பயமே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் கோவில் வெளிப்பிரகாரத்தில் அரளி மரங்களுக்குக் கீழே பாம்பு புற்றுகள் கூட உண்டு. (நாக பஞ்சமியன்று மாத்திரம் இங்கே வந்து பால் வார்ப்பார்கள்). மற்ற நாட்களில் சீந்துவாரில்லாமல் கிடக்கும். எட்டாம், வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மிகச் சிறிய வீட்டில் அமைதியாகப் படிக்கமுடியாது என்று கோவில் பிரகாரத்தில் காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை படித்துவிட்டு வீடு சென்று பள்ளி கிளம்பியிருக்கிறேன்.

அரளி விஷத்திற்கு மருந்து இல்லாமலில்லை. ஆனால் ஒருவரைக் காப்பாற்ற மூவாயிரம் டாலர்கள் வரை செலவாகும் என்கிறது பிபிஸி கட்டுரை. இது இலங்கையின் பொருளாதார நிலையில் சற்றும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற விலை. (இதற்கும் காப்புரிமைக் கட்டுப்பாடுகள்தான் காரணம்). ஒரு வகையில் இந்தக் காப்புரிமைகளெல்லாம் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு  நம்மூர்களில் இதுபோன்ற உயிர்காக்கும் மருந்தைத் தயாரிக்க வேண்டியது அவசியம்.

அது இல்லாத நிலையில் வெறும் கரித்துண்டு அரளி விஷத்திற்கு ஓரளவுக்கு ஏற்ற மருந்து என்று சொல்கிறார்கள். அதாவது யாராவது அரளியை அறைத்துக் குடித்துவிட்டால் உடனடியாக அவருக்கு அடுப்பில் அணைத்த கரியைத் தின்னக் கொடுக்கலாம்.   வெறும் கரியைத்  தின்பதன் மூலம் 70% சாவுகள் தவிர்க்கப்படலாம் என்று  தெரிகிறது. அரளியிலிருந்து மக்களைக் காப்பற்ற மரங்களை முழுமையாக அழித்துவிட வேண்டும் என்று ஒரு திட்டம் இலங்கையில்  இருந்ததாம். இப்படியான முட்டாள்தனமான திட்டங்களால் ஒருபோதும் பயனிருக்காது. (ஒரு அரளி மரம் 500-2000 காய்கள் வரைத் தரக்கூடும். எல்லா மரங்களையும் அழித்துவிட்டு ஒன்றை விட்டால் கூட அதன் விஷத்தினால் ஒரு கிராமத்தையே அழிக்கலாம்). இந்தியா இலங்கையில் இருப்பவர்கள் இயன்ற அளவு மக்களிடம் அரளியின் விஷத்தைப் பற்றிச் சொல்லுங்கள். கூடவே முதலுதவியாக அடுப்பணைத்த கரியைப் பயன்படுத்தலாம் என்றும் சொல்லுங்கள். (குறிப்பாகச் சொல்லப்போனால் ஆராய்ச்சிக் கட்டுரை Activated Charcoal என்றுதான் சொல்கிறது.   இது கரியில் ஆக்ஜிஸனைப் பாய்ச்சப்படுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது.  இந்தவகை கார்பனுக்கு உறிஞ்சு திறன் அதிகம். ஆனால் எடை குறைவாக உள்ள விறகு அணைத்த கரியும் Activated Charchoal-ஐப் போலவே செயல்படக்கூடும்.)