பாடல்: சொர்க்கமே என்றாலும்…
இசை : இளையராஜா
பாடம்: ஊருவிட்டு ஊருவந்து (1990)
பாடியவர்கள்: இளையராஜா, எஸ். ஜானகி
பாடலாசிரியர் : கங்கை அமரன்[audio:sorgame_endraalum.mp3]

இளையராஜாவின் மூன்று அன்னங்கள் என்ற தலைப்பில் ஹம்ஸத்வனி, ஹம்ஸாநந்தி, ஹம்ஸநாதம் ராகங்களில் அமைந்திருந்த மூன்று பாடல்களைக் குறித்து தமிழ்மணம் நட்சத்திரமாக இருந்த காலத்தில் எழுதியிருந்தேன். அப்பொழுது ஹம்ஸநாதம் குறித்து எழுதும்பொழுது

ஹம்ஸநாதம் ராகத்தில் கர்நாடக சாஸ்திரிய சங்கீதத்திலேயே சாகித்யங்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கின்றன. தியாகராஜரின் “பன்டு ரீதி கோலு வியவைய்ய ராமா” இவற்றுள் பிரபலமான ஒன்று. இதைப் பாலமுரளிகிருஷ்ணாவின் குரலில் கேட்க அற்புதமாக இருக்கும். திரையிசையில் ஹம்ஸநாதத்தை வடித்தவர்கள் இளையராஜாவைத் தவிர வேறு யாருமில்லை என்று என் அப்பா சொல்லியிருக்கிறார். (தென்றலே என்னைத் தொடு படத்தில் வரும் தென்றல் வந்து என்னைத் தொடும் பாடல் வந்த சமயத்தில் “ஆஹா , மொத மொதல்ல சினிமால ஒரு ஹம்ஸநாதம்” என்று அப்பா சொன்னது நினைவிருக்கிறது). இதைத் தொடர்ந்து இன்னும் சில பாடல்களை ஹம்ஸநாதத்தில் இசைத்திருக்கிறார் ராஜா (இவற்றில் மிகமிக முக்கியமான ஒன்றை இன்னொரு நாளுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறேன்).

இளையராஜாவின் மூன்று அன்னங்கள் – 1
இளையராஜாவின் மூன்று அன்னங்கள் – 2
இளையராஜாவின் மூன்று அன்னங்கள் – 3

என்று எழுதியிருந்தேன். அந்த ஒதுக்கி வைக்கப்பட்ட முக்கியமான ஒன்றைக் கொண்டு இந்தப் புதுவீட்டில் என்னுடைய இசைப் பதிவுகளைத் தொடங்குகிறேன். 1990 – இளையராஜாவின் இசை வாழ்க்கையில் உச்சத்திலிருந்த நேரம். அப்பொழுது தமிழ், தெலுகு இரண்டு மொழிகளிலும் வருடத்திற்குக் கிட்டத்தட்ட இருபது படங்கள் இசையமைத்துக் கொண்டிருந்தார் (இப்படித் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேல்) ஒரு படத்தில் சராசரியாக ஐந்து பாடல்கள். பல படங்களில் எல்லா பாடல்களுமே பிரபலமாகிக் கொண்டிருந்தன. பெரும்பாலான கலைஞர்கள் இப்படி உச்சத்தில் இருக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட வழிமுறையை வகுத்துக் கொண்டு அந்த வார்ப்பிலேயே தங்கள் படைப்புகளை மரச்சட்டத்தில் களிமண் அடைத்துப் பிள்ளையார் உற்பத்தி செய்யும் முறையில் இறங்கிவிடுவார்கள். (இதை இன்றைய இசையமைப்பாளர்கள் எல்லோரிடமும் எளிதில் பார்க்க முடிகிறது).

ஆனால் இதற்கு மாறாக அப்படி ட்யூன்களைப் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்த காலத்தில் கூட, பல புதுமைகளை முயற்சித்துப் பார்த்தவர் இளையராஜா. இன்றைய பாடல் அந்த வகைப் புதுமைகளில் ஒன்று. சுருதி விலகல் அதிகமில்லாமல் அப்பட்டமான சாஸ்திரிய இராகம் ஒன்றில் கிராமத்து இசையை, அதிலும் கிண்டலும் நகைச்சுவையும் இழையோடும் ஒரு பாடலை இளையராஜா தந்திருக்கிறார். ஒருவகையில் இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அவருடைய முதன் முதல் பாடலான “மச்சானைப் பாத்தீங்களா” வில் கிராமத்து மணம் தவழும் வரிகளுக்கு வெர்ஸ்டர்ன் கார்ட்களில் கித்தார் இசையைத் தந்தவர்தானே!

பாடல் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வரும். இதைச் சொன்னால் பலருக்கும் நம்ப முடியாது, அவ்வளவு பெரிய பாடல் கிடையாது என்றுதான் சொல்வார்கள். காரணம் பாடல் செல்லும் வேகத்திலும் இதில் பின்னிப் பிணைந்துவரும் மாறுபட்ட இசையிலும், கதியிலும் நேரம் போவதே தெரியாது. பாடலின் ஆரம்பத்தில் வரும் முன்னீட்டில் அற்புதமான வயலின் பின்னல்கள் இளையராஜாவின் முத்திரை. இந்த முறையைத் தென்றலே என்னைத் தொடு, சிங்காரவேலன் உள்ளிட்ட பல படப்பாடல்களில் வித்தியாசமாகக் கையாண்டிருப்பார். சரணத்திற்கு முன் பாடலின் முத்திரையான விரைவு ட்ரம் பீட் தொடங்கும். இது பாடலின் ஆதாரமாக முழுவதும் வரும். தொடர்ந்து வரிகளுக்கு முன்னதாக “ஹே… தந்தன தந்தன தந்நா…” என்பதை ராஜாவைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு அருமையாகப் பாடமுடியாது. Authentic Folk என்பார்களே அந்த வகையைச் சேர்ந்தது இது. பல்லவியின் அமைப்பு வித்தியாசமானது. “சொர்க்கமே என்றாலும்ம்ம்ம்ம்ம்…” என்று இழுக்கும் முதல்வரியைத் தொடர்ந்து “… போல வருமா” என்று சடாரென முடிவது முரண்பாடாக இருக்கும். அதே போல அடுத்த இரண்டு வரி இரட்டையும் நீட்டி முழக்கிப், பின் வெட்டி முடிப்பதாக இருக்கும். பாடலின் பல இடங்களில் இதைப்போலவே அடுத்தடுத்த வரிகள் வருவது பாடலுக்கு ஒரு துள்ளல் கதியைத் தரும். இப்படி நீட்டி முழக்கிப் பாடுவதை நம்மூரில் பல நாட்டார் பாடல்களில் காணலாம். இடையீடுகளில் வரும் இசை அற்புதமானது. ‘இவ்வூரு என்ன ஊரு, நம்மூரு ரொம்ப மேலு’ வரிகளுக்குப் பின்னே வரும் வயலின் அற்புதமானது.

பாடலின் பெரும்பாலான இடங்களில், வயலின், லீட் கிட்டார், பேஸ் கிட்டார், க்ளாரினெட், ட்ரம்ஸ், சிந்தஸைஸர், கீபோர்ட் என்று நம்மூருக்கு அந்நியமான வாத்தியங்களே வரும். ஒரு இடத்தில் தப்லா கூட வரும். ஏற்கனவே சொன்னதைப்போல ஹம்ஸாநந்தி ராகத்தில் திரையிசை மெட்டமைத்தவர் ராஜா ஒருவர்தான். ஆனால் இந்தப் பாடலில் நம்மூருக்குப் பரிச்சயமான மிருதங்கம், வீணை, நாதஸ்வரம், போன்றவையோ, உருமி, பறை, நையாண்டி மேளம், உடுக்கு, போன்ற நாட்டார் வாத்தியங்களோ கிடையாது. இப்படி சுத்தமான கர்நாடக சங்கீதத்தில் மெட்டமைத்து, அதற்கு மேற்கத்திய வாத்தியங்களைக் கொண்டு இசையமைத்து நாட்டுப்புறப் பாடலின் சாயலை அற்புதமாகக் கொண்டுவந்திருப்பது இளையராஜாவின் மேதைமை. இந்த அளவுக்குப் பரிசோதனைகளை இந்தியத் திரையிசைக் கலைஞர்களிடம் அதிகம் காணமுடியாது.

இளையராஜாவின் ஆரம்ப காலத்திலிருந்தே பல கிராமியப்பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் ஜானகி. இளையராஜா-ஜானகி இரட்டை பல அற்புதமான பாடல்களை நமக்குத் தந்திருக்கிறது.

  • சங்கத்தில் பாடாத கவிதை – ஆட்டோ ராஜா
  • பொன்னோவியம் கண்டேனம்மா – கழுகு
  • நான் தேடும் செவ்வந்திப்பூவிது – தர்மபத்தினி
  • தென்றல் வந்து தீண்டும்போது – அவதாரம்
  • பூமாலையே தோள் சேரவா – பகல் நிலவு
  • ஒரு கனம் ஒருயுகமாக – நாடோடித் தென்றல்

அந்த வகையில் இந்தப் பாடலும் ராஜா-ஜானகி ஜோடியின் அற்புதமான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. எனவே இது படமாக்கப்பட்ட விதம் எனக்குத் தெரியாது. ஆனாலும் இதை யாராலும் ஊகித்துவிட முடியும் மஞ்சள் அல்லது ‘ராமராஜன்’ கலரில் (இதை பஞ்சு முட்டாய் பிங்க் என்றும் சொல்வார்கள்) பளபள சட்டை, உழைக்கும் கரங்கள் எம்.ஜி.ஆரின் விசிறி மடிப்பு வேட்டி சகிதமாக லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதட்டுடனும், கௌதமி அரக்கு, மஞ்சள், சிவப்பு போன்ற ஏதாவது ஒரு ‘குல்ட்-கலர்’ குல்ட் பாணி தார்ப்பாய்ச்சிய புடவைக்கட்டுடனும் சிங்கப்பூரில் வெற்றிலைச்சாற்றை துப்பியிருப்பார்கள் என்பது நிச்சயம். (யாராவது இதை உறுதி செய்யவும்).

ஏற்கனவே இதைப் பற்றி எழுதியாகிவிட்டது. தமிழ்த் திரையுலகில் திறமை அதிகமில்லாமல் இளையராஜாவின் கடைக்கண் பார்வையால் கடாட்சம் பெற்று கொடிகட்டிப் பறந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அன்றைய காலத்து மோகன், சுரேஷ் தொடங்கி, முரளி, ராமராஜன், ராஜ்கிரண் வரை நிறைய பேரை இப்படி உதாரணம் காட்டலாம். இவர்களுக்குள்ளேயும் நம்ம பசுநேசன் ஐயாவுக்கு ராஜாவின் கருணை அதிகமாகவே பொழிந்திருக்கிறது. பின்னாட்களில் ராமராஜன், மாண்புமிகு-ஆகி தில்லியில் மக்களவைக்குச் சென்றதில் இந்தப் பாடலின் பங்கு எந்த அளவிற்கு இருக்கும் என்பது கேள்விக்குரிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அங்கே மத்திய அரசின் சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறையின் காபினெட் அமைச்சருக்கு ஆலோசனை சொல்லும் கமிட்டியில் ராமராஜன் சேர ‘சொர்க்கமே என்றாலும்’ கட்டாயம் ஒரு முக்கிய தகுதியாக இருந்திருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பாடல் வந்த புதிதில் பட்டிதொட்டியெங்கும் முழ்ங்கிக் கொண்டிருந்தது. இப்பொழுது இணையத்தில் அதிக முறை மேற்கோள் காட்டப்படும் தமிழ்த் திரையிசைப் பாடல் இதுதான். சந்தேகமிருந்தால் கூகிளிட்டுத் தேடிப்பாருங்கள். புதிதாக வெளிநாடுவரும் அனைத்து நிரலர்களும் செய்யும் முதல் மூன்று விஷயங்களுக்குள் இதுவும் ஒன்றாக இருக்கும். 1. வீடுபார்த்து குடியமருவது 2. ப்ளாக்ஸ்பாட்டில் ஒரு வலைப்பதிவைத் துவங்குவது 3. தமிங்கலத்தில் முதல் வாரத்தில் பட்ட அல்லல்களை (இதைச் செந்தமிழில் லோல் என்று சொல்வார்கள்) எழுதி இந்தப்பாடலை மேற்கோள் காட்டுவது.