இன்றைய வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வந்த செய்தியைப் படித்தவுடன் இனம் புரியாத வருத்தமாக இருக்கிறது.

கணினி வரைவியல் துறையில் பல சாதனைகளைப் புரிந்தது சிலிக்கன் கிராபிக்ஸ் நிறுவனம். ஹாலிவுட் படங்களில் வரைவியல் கலையை வளர்த்தெடுத்ததில் அதற்கு நிறையவே பங்குண்டு. இதைப் போலவே இராணுவத்தில் விமான சோதனையோட்ட சலனப்படங்களையும், பயிற்றுவித்தலுக்கான கருவிகளையும் வடிக்க சிலிக்கன் கிராபிக்ஸின் அற்புதமான கணினிகள் முக்கிய காரணம். இன்னும் மூலக்கூறு உயிரியல் துறையில் உயிர்வேதிப் பொருட்களின் சிக்கலான வடிவங்களைத் துல்லியமாகக் காட்டி புரிய வைத்ததிலும் எஸ்ஜிஐக்குப் பங்குண்டு.

சிலிக்கன் கிராபிக்ஸுடனான எனது பரிச்சயம் ஐஐஎஸ்ஸியில் ஆய்வு மாணவனாக இருந்த காலத்தில் தொடங்கியது. நான் ஆராய்ந்துகொண்டிருந்த கரிம-கனிம கலப்பு அடிப்படையிலான லேசர் அலைநீள மாற்றி படிங்களின் அமைப்பு-குணம் தொடர்புகளைப் புரிந்து கொள்ள அந்தநாட்களில் உயிரியல்பியல் ஆய்வுகளுக்கு மாத்திரமே பயன்படுட்டு வந்த சிலிக்கன் கிராபிக்ஸ் பயன்பாடுகளில் சிலவற்றை நானாக முயற்சி செய்து கையாண்டேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்தசிக்கலான வரைவியல் சமாச்சாரங்கள் மேசைக்கணிகளிலேயே கிடைக்கத் தொடங்கி இப்பொழுது என் மடிக்கணினிகளிலும் இவை நிரம்பியிருக்கின்றன. இதேதான் எஸ்ஜிஐயின் அழிவுக்கு முக்கிய காரணம். பெருங்கணினி சமாச்சாரங்களெல்லாம் இன்றைக்கு ஸ்டிராய்ட்களில் இயங்கிக் கொண்டிருக்கும் மடிக்கணியில் வர அதற்கு ஏற்றபடி தன்னைத்தானே மாற்றிக் கொள்ளாமல் போன சிலிக்கன் கிராபிக்ஸை ஒழித்துவிட்டது. (சொல்லப்போனால் அதற்கு எதிர் திசையில் பயணித்தி க்ரே என்ற இராட்சதகணினி நிறுவனத்தோடு இணைந்தது அதன் அழிவை ஊக்குவித்திருக்கிறது).

ம்ம்ம். இப்பொழுது என் வீட்டின் கீழறையில் ஒரு சிலிக்கன் கிராபிக்ஸ் O2 கணினி கிடக்கிறது (சென்ற வருடம் ஒரு பேராசிரியர் ஆய்வகத்திலிருந்து இதற்கு ஓய்வு கொடுத்தபொழுது வாஞ்சையுடன் தூக்கிக் கொண்டுபோய் விட்டில் சில நாட்கள் இயக்கிவிட்டு பின்னர் என் பையன்களூக்கும் அதன் வேகம் (வேகமின்மை) பொறுமையைச் சோதிக்க கீழறைக்குப் போய்விட்டது). இன்று மாலை நான் பழையபடி அதைப் பூட்டி இயக்க முயற்சிப்பேன்.

சிலிக்கன் கிராபிக்ஸ் கணினி உலகில் ஒரு சகாப்தம். இந்த துர்மரணம் என்னைப் போல ஒருகாலத்தில் அதைத் தொழுதவர்களுக்கு துக்கத்தைத் தந்திருக்கும் என்பது நிச்சயம்.