சில நாட்களுக்கு முன் நான் அணுசக்தி மறுமலர்ச்சி காலம் என்ற தலைப்பில் உலகம் முழுவதும் சக்தி தேவைக்கு அணுப்பிளவு பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவது குறித்து எழுதியிருந்தேன். அணுசக்தி என்றாலே அழிவு என்றும் அது சூழலுக்கு ஒவ்வாதது என்றும் பொய்ப்பிரச்சாரங்கள் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகின்றன. விஷயம் தெரிந்தவர்கள் அணுசக்தியின் தேவையை ஒத்துக் கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்பொழுது க்ரீன்பீஸ் சூழியல் குழுவைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான பாட்ரிக் மூர் இன்றைய வாஷிங்க்டன் போஸ்ட் நாளிதழில் அணுசக்தியின் உன்னதத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.

இது முக்கியமான கட்டுரை. அணுசக்தியின் மீதான தவறான புரிதலுக்கு க்ரீன்பீஸின் அறிவியல் உண்மை மறுக்கப்பட்ட பொய்ப்பிரச்சாரம் மிக முக்கியமான காரணம். ஒரு காலத்தில் இந்தக் குழுக்கள் அலாஸ்கா துவங்கி நியூஸிலாந்துவரை அணு சாதனங்களுக்கு முன்னால் மறியல்கள் செய்திருக்கிறார்கள். இன்றைக்கு பாட்ரிக் மூர் அணுசக்தியைப் பரிந்துரைத்து கட்டுரை எழுதுகிறார் என்றால் அது அணுசக்தியின் தவிர்க்க முடியாமையைக் காட்டுகிறது.