இன்றைய டெக்கான் ஹெரால்ட் நாளிதழில் கொல்கத்தாவிற்கருகில் இரண்டாவது இந்திய அறிவியல் கழக வளாகம் வரவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜீ இதற்கென மத்திய அரசு 500 கோடி ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது என்றும் இத்திட்டத்திற்குப் பிரதமரின் அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

ஐஐஎஸ்ஸியின் முன்னாள் மாணவன் என்ற வகையில் எனக்கு இன்னும் அதனுடன் நெருங்கியத் தொடர்பு உண்டு. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னால் அங்கே சென்றிருந்தபொழுதுகூட இப்படியொரு திட்டம் பரிசீலனையில் இருப்பதாக யாரும் சொல்லவில்லை. இதை ஏன் இவ்வளவு இரகசியமாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. டெக்கான் ஹெரால்டில் வந்ததற்கு மேலதிகத் தகவல்களை வேறெந்த ஊடகங்களிலிருந்தும் பெறமுடியவில்லை.

சென்றவாரம் ஐஐஎஸ்ஸி வந்த இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஐஐஎஸ்ஸி இளமறிவியல் வகுப்புகளைத் துவங்க வேண்டும் என்றும் உலக அளவில் ஸ்டான்ஃபோர்ட், கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழங்களுக்கு இணையக வளரக்கூடிய தகுதியுள்ள ஒரே நிறுவனம் ஐஐஎஸ்ஸி-தான் என்றும் சொல்லியிருந்தார். (ஐஐஎஸ்ஸியில் இளமறிவியல் படிப்பித்தல் குறித்த என்னுடைய கருத்துக்களை இந்த ஆங்கில வலைப்பதிவில் காணலாம்). அப்பொழுதுகூட அவர் வங்கத்தில் வரவிருக்கும் இரண்டாம் வளாகம் பற்றி பேசியதாகத் தெரியவில்லை.

இருந்தபோதும் இந்த இரண்டாம் வளாகம் வங்கத்தில் வருவது முற்றிலும் பொருத்தமானதுதான் என்று தோன்றுகிறது. இதைப் பற்றிய விபரங்கள் வந்தவுடன் என் மேலதிக கருத்துக்களை எழுதுகிறேன்.