கனடா இலக்கியத் தோட்டம் அமைப்பும் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் பிரிவும் இணைந்து வழங்கு வருடாந்திர இயல் விருது இந்த முறை அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (Prof. George L. Hart) அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஜோர்ஜ் எல்.ஹார்ட் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் (பேர்க்லி) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்துறை உட்பட நான்கு தலைமைப் பீடங்களை அலங்கரிக்கும் இவர் ஆரம்பத்தில் விஸ்கான்சின் (மாடிஸன்) பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக கடமையாற்றியவர். இவருக்கு லத்தீன், கிரேக்கம், ரஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற பல மொழிகளிலும் தேர்ச்சி உண்டு. பல இந்திய மொழி இலக்கியங்களிலும் பரிச்சயம் பெற்றிருக்கிறார்.

இவர் மொழிபெயர்த்த The Poems of The Tamil Anthologies (1979) நூல் The American Book Awardக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. The Four Hundred Songs of War and Wisdom (1999) எனும் புறநானூறு மொழிபெயர்ப்பு தென்னாசிய மையத்தின் ஏ.கே.ராமானுஜன் பரிசைப் பெற்றது. இது தவிர The Forest Book of the Ramayana of Kampan (1988 ) – ஆரண்ய காண்டம் மொழிபெயர்ப்பு ; The Poems of Ancient Tamil (1975) என்று இன்னும் பலநூல்களை எழுதியிருக்கிறார். தற்பொழுது பதிற்றுப் பத்து -வை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் இருக்கிறார்.

ஜார்ஜ் எல் ஹார்ட்டின் தமிழ் சேவை உலகறிந்தது. தமிழை செம்மொழியாக்கவேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டவர் . செப்டம்பர் 2004 ல் இந்திய மத்திய அரசால் தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதில் பேரா. ஹார்ட்டின் பங்கு மிகவும் முக்கியமானது. பெர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட்டதற்கும் இவர் முக்கிய கர்த்தாவாக இருந்திருக்கிறார். இன்று நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் இங்கே உயர் தமிழ்க் கல்வி பெறுவதுடன் தீவிரமான தமிழ் ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகத்துக்கு உணர்த்திய பெரியோர்களில் இவர் முக்கியமானவர்.

தமிழ் மொழிக்கான ஆயுட்காலப் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் இயல்விருது முந்தைய வருடங்களில் பின்வருபவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது;

2001 : சுந்தர ராமசாமி (இந்தியா)
2003 : கே. கணேஷ் (இலங்கை)
2004 : வெங்கட் சாமிநாதன் (இந்தியா)
2005 : பத்மனாப ஐயர் (ஐக்கியக் குடியரசு)

இந்தக் கௌரவத்தில் ‘இயல் விருது’ கேடயமும், பணமுடிப்பு 1500 டாலரும் அடங்கும். வழமைபோல இம்முறையும் விருது விழா டொராண்டோ பல்கலைக் கழக அரங்கில் எதிர்வரும் ஆனி மாதம் நடைபெறும்.