இம்மாத Physics Today செய்தியில் உலகம் முழுவதும் புது உத்வேகத்துடன் அணுசக்தி நிலையங்கள் கட்டப்பட்டுவருவதாக வெளியாகியிருக்கிறது. ஐந்து/பத்து வருடங்களுக்கு முன்பு “அணுசக்தி” என்றாலே கெட்ட வார்த்தையாக இருந்த நிலை மாறி இப்பொழுது விரிவடைந்துவரும் சக்தி தேவைக்கு ‘தற்சமயம்’ அணுசக்தியை விட்டால் வேறு நல்ல வழியில்லை என்று ஒத்துக் கொள்ளத் தலைப்பட்டிருப்பது ஆறுதலளிக்கும் விஷயம். (தற்சமயம் என்பதற்கான விளக்கம் பின்னால்).

சமீபத்திய தரவுகளின்படி அமெரிக்கா:15, பிரிட்டன:6-8, பிரான்ஸ:4 ஜப்பான:5, இந்தியா:9, சீனா:30, கனடா:14 (12 புதியவை 2 புணரமைப்பு) கட்டிவருகின்றன. இவைத் தவிர ஈரான், அர்ஜெண்டினா, செக் குடியரசு, பிரேஸில், பல்கேரியா, சிலி போன்ற நாடுகளில் குறைந்தது 2 அல்லது அதிகபட்சம் ஐந்து அணு உலைகள் தயாராகி வருகின்றன. தற்சமயம் உலகின் 14 சதவீத சக்தித் தேவையை அணுசக்தி ஈடுசெய்கிறது. இது வரும் தலைமுறையில் அதிகரிக்கும்.

அணுசக்தி பயன்பாட்டில் தேக்கம் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. செர்னோபில், மூன்றுமைல் தீவுபோன்றவற்றில் ஏற்பட்ட விபத்துகள் ஒருபுறமிருக்க, பெட்ரோலியம், நிலக்கரி போன்றவற்றினால் பயனடையும் இராட்சத சக்தியுற்பத்தி நிறுவனங்களின் பலம்பொருந்திய அரசாங்க அழுத்தங்களே அணு சக்தியைப் பல நாடுகளும் ஒத்திப்போடக் காரணமாக இருந்தன என்று சொல்வதில் தவறில்லை. ஒதுக்க முடியாது என்று தெரிந்துகொண்டு ஒத்திப்போட்டிருந்த இந்த திட்டங்களைப் பல நாடுகளும் மீட்டெடுக்கத் துவங்கியிருக்கின்றன். முதல் பத்தியில் ‘தற்சமயம்’ என்று நான் குறிப்பிட்டதற்குக் காரணமிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப சமாச்சாரங்களில் நிரந்தர ஒற்றைத்தீர்வு என்று எதுவுமே கிடையாது. வருங்காலத்தில் சீரமைப்பு சக்தி வழிமுறைக்ளான சூரியசக்தி, காற்றாலைகள், அலை சக்தித் திரட்டிகள் மற்றும் நுண்ணுயிரிகளின் துணையுடன் ஹைட்ரஜனை உற்பத்திசெய்யும் சக்தி முறைகள் என்பன பெரிய அளவில் முன்னேறக்கூடும். ஆனால் இன்றைக்கு இருக்கும் நிலையை வைத்துக் கொண்டு கணித்தால் இவற்றில் எதுவுமே பெரிய அளவிற்கு சக்தித் தேவைகளை நிவர்த்தி செய்வது அடுத்த ஐம்பதாண்டுகளுக்குச் சாத்தியமாகப் போவதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் அணுசக்தி ஒன்றுதான் தெளிந்த தீர்வாக இருக்கிறது. பொருளாதார ரீதியாகப் பார்த்தாலும் அணுசக்திதான் மலிவானது.

அணுசக்திக்குத் தற்பொழுது இருக்கும் ஒரே போட்டி நிலக்கரியை எரித்து மின்சாரம் உற்பத்திசெய்யும் வெப்பமின் நிலையங்கள்தாம். பொது மக்களிடையே அணுவுலைகளுடன் ஓப்ப இவை சுத்தமானவை (சூழலை மாசுபடுத்துவதில்லை), இவற்றிலிருந்து கதிரியக்கம் கிடையாது என்ற தவறான தகவல்கள் இருக்கின்றன. உண்மையில் சூழலை மாசுபடுத்துவதில் வெப்பமின் நிலையங்களுடன் ஒப்பிட அணுமின் நிலையங்கள் பத்தில் ஒரு பங்குகூட ஆபத்தானவையல்ல. மறுபுறத்தில் அணுசக்தியின் கோரமுகமாக வருணிக்கப்படும் கதிரியக்கத்தில் நிலக்கரி கழிவுகள் சற்றும் சளைத்தவையல்ல. அணுமின் நிலையத்தின் கழிவுகளையாவது பத்திரமாக அடைத்து வைக்க முடியும், வெப்பமின் நிலையங்க்ளில் கதிரியக்கம் தீயுடன் சேர்ந்து காற்றில் கலந்து நம் எல்லோரையும் தாக்குகிறது.

மறுவுருவாக்க சக்தி வழிகளான சூரியசக்தி, காற்றாலைகள் போன்றவை தனி இல்லங்களுக்கு சக்தியளிக்க முடியும் என்றாலும் தடையற்ற சக்தித் தேவையைக் கொண்டுள்ள தொழிற்சாலைகளுக்கு இவை பயன்படப் போவதில்லை. என்னைப் பொருத்தவரை இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அணுசக்தி ஒன்றுதான் தீர்வு. இதிலும் இந்தியாவில்தான் உலகிலேயே அதிக அளவு தோரியம் கிடைக்கிறது. அறிவியல் அடிப்படைகள் தெரியாமல் சூழலைப் பற்றி முழக்கமிடும் வெற்றுக்கூச்சல்களைக் காற்றில் விட்டு இந்தியா அணுசக்தியின் பக்கம் கவனத்தைத் திருப்பி பாதுகாப்பான அணு உலைகளை வடிவமைப்பதில் முனைய வேண்டும். இந்தியாவிடம் எரிபொருளை மீட்டுருவாக்கம் செய்யும் வேகப் பெருக்கி உலைகளுக்கான (Fast Breeder Reactors) தொழில்நுட்பம் ஏற்கனவே இருக்கிறது. இதில் இந்தியா கவனம் செலுத்துவது முக்கியம்.

இதைப்பற்றிய மறுகருத்துகள் யாருக்காவது இருந்தால் பதிலளிக்கத் தயார். சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன.