h2g2 science
பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் பழைய சோத்தை அறைத்துச் செய்யப்பட்ட டெண்ட் கொட்டகை முறுக்கைப் போன்ற சுருள் வடிவம் கொண்ட பால்வீதி என்ற அண்டம் இருகிறது. இந்த முறுக்குச்சுருள் அண்டத்தின் மேற்குப் புறமாக மஞ்சள் நிறம் கொண்ட சூரியன் இருக்கிறது. வணங்கினால் பாவங்களெல்லாம் போகும் என்று எண்ணி இந்தச் சூரியனைப் பார்த்து நமஸ்காரம் செய்யும் மனிதன் என்ற ஜீவராசிகள் வசிக்கும் (நல்லி குப்புசாமி செட்டியார் கடையில் பட்டுப்புடவைகளின் புட்டாவில் ராமர் கலர் என்று சொல்லப்படும்) பச்சையும் நீலமும் கலந்த நிறத்தைக் கொண்ட பூமி என்ற கிரகம் இருக்கிறது. இந்தப் பூமியில் குரங்கிலிருந்து பரிணமித்து வந்த டக்ளஸ் ஆடம் என்ற எழுத்தாளர், எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லாத இந்தப் பூமியையும், சூரியனையும், பால்வீதியையும் தாண்டி அண்டம் முழுவதும் பயணிக்கத் தலைப்படுபவர்களுக்கு உதவியாக The Hitchhikers Guide to the Galaxy என்ற புத்தகத்தை எழுதினார். இந்தப் பதிவு அந்தப் புத்தகத்தைப் பற்றியல்ல.

அந்தப் புத்தகம் வானொலி நாட்கமாக, ஐந்து பாகங்கள் கொண்ட புத்தகத் தொடராக, வாழ்வழியே சொல்லப்படும் நாட்டார் கதையாக பூமியில் உலாவி வருகிறது. இவற்றின் கூடவே இரண்டு வாரங்களுக்கு முன்னால் இது முழுநீளத் திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது. இந்தப் பதிவு அந்தத் திரைப்படத்தைப் பற்றியல்ல.

இந்தப் புத்தகங்கள்/தொலைக்காட்சித் தொடர்/வானொலி நாடகம்/திரைப்படம் இவற்றின் கதை சுவாரசியமானது. இதில் அண்டங்களுக்கு நடுவே பெருவழிச்சாலை அமைக்க இடையூறாக இருக்கும் பூமி தகர்க்கப்படுகிறது. அங்கிருந்து ஒரு சராசரி மனிதன் ஆர்தர் தப்பிச் செல்லுகிறான். இது அவனுடைய பயணக்கதை. இதில் விசித்திர பாத்திரங்களும் சம்பவங்களும் நிறையவே உண்டு. உதாரணமாக, முன்று முலைகளைக் கொண்ட விபச்சாரி, தன்னைப் பிறருக்கு உணவாக்குவதே பிறவிப்பயன் என்று கருதும் பன்றி,… உள்ளுணர்வுகளுக்கு எதிரான பல அபத்தக் கற்பனைகள். ஆனால் கூடவே இதில் பல நேரடியான, சாத்தியமான அறிவியல் சமாச்சாரங்களும் உண்டு. இவற்றின் பின்னாலிருக்கும் அறிவியல்களைக் குறித்து லண்டன் டெய்லி மெயிலின் அறிவியல் பகுதி ஆசிரியரான மைக்கேல் ஹான்லன் என்பவர் The Science of the Hitchhiker’s Guide to the Galaxy என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இது அந்தப் புத்தகத்தைப் பற்றிய பதிவு அல்ல.

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் ஹான்லன் சென்ற வாரம் கனேடிய ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தில் வாராந்திர அறிவியல் நிகழ்ச்சியான Quirks and Quarks நிகழ்ச்சியில் அதன் அமைப்பாளரான பாப் மெக்டோனல்ட்-ஆல் நேர்முகம் காணப்பட்டார். இந்தப் பதிவு இந்த நேர்முகத்தைப் பற்றியதுதான். மைக்கேல் ஹான்லன் இதில் அறிவியல் சாத்தியமுள்ள விஷயங்களைக் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். கூடவே அறிவியல் புனைகதைகளின் தேவையைப் பற்றியும் சொல்கிறார். (அவர் புகழும் அறிவியல் புனைகதைகள் எல்லாம் திண்ணையில் பரிசுபெற்ற வகையைச் சேர்ந்தவை இல்லை).

இந்த நேர்முகத்தின் ரியல் ஆடியோ ஒலிச்சரம்

தரவிறக்கிக் கேட்க வசதியாக எம்.பி.3 கோப்பு