John Coltrane

இருபதாம் நூற்றாண்டின் இசைவடிவம் எது என்று கேட்டால் உலக அளவில் தயங்காமல் கிடைக்கும் முதல் பதில் ஜாஸ் எனபதாகத்தான் இருக்கும். ஆப்பிரிக்க அமெரிக்க அடிமைக் குடியினரிடம் தோன்றிய ஜாஸ் வடிவம், இப்பொழுது லாட்டின் ஜாஸ், அவான் ஜாஸ், ஆஸிட் ஜாஸ், இந்தோ ஜாஸ் என்று பலவாகக் கிளைத்துப் புகழ் பெற்றிருக்கிறது. ஆரம்பகாலங்கள் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் பிணங்களைத் தூக்கிச் சொல்லும் பொழுது வாசிக்கப்பட்ட இசை ஜாஸ் என்று சொல்கிறார்கள். ஆனால் அதற்கும் முன்னால் ஆப்பிரிக்க பூர்வ குடியினரின் இசைகளில் இதன் வேர்களை நிறையவே காணமுடியும். தன்னளவில் வேகமாக வளர்ந்த ஜாஸ் இந்த நூற்றாண்டின் வெகுஜன இசையான பாப் மற்றும் ராக்கின் மீது நிறைய பாதிப்புகளைச் செலுத்தியிருக்கிறது.

ஜாஸின் வடிவத்தை வரையறுப்பது கஷ்டம். தொடர்ச்சியாகப் பல்வேறு வகை ஜாஸ் இசைகளைக் கேட்டுக் கொஞ்சம் அனுபவ ரீதியாகப் பரிச்சயமான பிறகுதான் இதன் வடிவம் பிடிபடுகிறது (குறைந்தபட்சம் எனக்கு அப்படித்தான்). ஜாஸின் அடையாளக் கூறுகளாக; blue note, Syncopation, Swing, Call and Response, polyrhythms, Improvisation போன்றவற்றைச் சொல்லலாம் என்று விக்கிப்பீடியா வரையறுக்கிறது. பின்னால் இவற்றை எல்லாம் ஒரு சில இசைத் துணுக்களைக் காட்டிச் சொல்லலாம் என்ற தைரியத்தில் இப்போதைக்கு சில அரைகுறை விளக்கங்களைத் தருகிறேன்.

ப்ளூ நோட்ஸ் என்பது வழக்கமாக வாசிப்பதை விட சற்று இறங்கிய கட்டையில் வாசிபப்து (அல்லது பாடுவது என்று எல்லா இடங்களிலும் போட்டுக் கொள்ளலாம். ஜாஸ் பெரும்பாலும் வாத்திய இசையைக் கொண்டது என்பதால் வாசிப்பது என்றே எழுதுகிறேன்). ஸின்கோபேஷன் என்பதற்கு நம்மூர் மிருதங்கம் அதைவிட இன்னும் சரியாக ஹிந்துஸ்தானி தபலா இசையிலிருந்து எளிதாக விளக்கம் கிடைக்கும். நான்கு தட்டு தாளத்தில் (1,2,3,4 1,2,3,4 1,2,3,4…) என்று வாசிபப்தில் 1ஐயும் 4ஐயும் அழுத்தியும் வாசிப்பது வழக்கமாக இருந்தால் அதில் 1,4-ஐவிட 2,3க்கு முக்கியத்துவம் கொடுத்து வாசிப்பது ஸின்கோபேஷன் எனப்படும். நம்மூரில் தெருவில் சாமி போகும்பொழுது தவில் வாசிப்பவர் இடையில் ஒரு தட்டு தாளத்தை நிறுத்திவிட்டு ஜால்ராவை மாத்திரம் கேட்கச் செய்வார்கள் இதுவும் ஸின்கோபேஷன் வகையைச் சார்ந்ததுதான்.

இன்னும் நம்மூரில் பிணம் தூக்கிச் செல்லும்பொழுது ஒலிக்கும் பறையில் இதுபோன்றே வேண்டுமென்றே தாளத்தை மாற்றிப் போடுவார்கள், அல்லது இரண்டு மூன்று கொட்டுகளை அப்படியே விட்டு விட்டு தாவிவிடுவார்கள். இதில் டப்பாங்குத்து ஆடும் ஆட்டக்காரர், பறையடிப்பவரின் கையசைவைப் பார்த்து தன்னுடைய காலை கீழே வைக்காமல் அப்படியே அந்தரத்தில் ஒரு உதறு உதறிவிட்டு சுழன்று வருவார். இதெல்லாம் ஸின்கோபேஷன் வகையைச் சேர்ந்ததுதான் (பாலே மற்றும் லத்தின் அமெரிக்க் நடனத்தில் ஸின்கோபேஷனுக்கு நிறைய இடமுண்டு). இதேபோன்று நையாண்டி மேளத்திலும் நிறைய வரும்.

Call and Response என்பதைப் பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை. நையாண்டியும் உறுமியும் அல்லது கடமும் மிருதங்கமும், அல்லது வயலினும் மிருதங்கமும் என்று நம்மூரில் செவ்வியல், நாட்டார் எல்லா வடிவங்களிலும் இதை அடிக்கடி கேட்க முடியும். Polyrhythm என்பதை தபலாவில் நிறைய பார்க்க முடியும். Improvisation என்பதற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களிலிருந்து நிறைய உதாரணம் காட்டமுடியும். நொடி நேரத்தில் பாட்டின் போக்கை விட்டுமாறிவிட்டு பின் தாளகதிக்குத் திரும்ப வருவதில் எஸ்.பி.பி மிகத் திறமையானவர்.

இந்த விஷயங்களில் கொஞ்சம் கோடி காட்டுவதற்காக ஒரு சிறிய இசைத் துண்டு. இதில் ஸ்வப்பன் சவுத்ரியின் தபலாவில் முதல் இருபது நொடிகளுக்குப் பிறகு பாலிரிதம் வருவதைக் கேட்க முடியும். பின்னால் இணையும் கடம் – விக்கு விநாயகராம்.

polyrhythmஸ்வப்பன் சௌத்ரி, விக்கு விநாயகராம்

[audio:20050807-polyrhythm.mp3]

* * *

இதையெல்லாம் கொஞ்சம் அப்படியே விட்டுவிட்டு, எனக்குப் பிடித்த ஜான் கொல்த்ரெய்ன் ஸாக்ஸைக் கொஞ்சம் கேளூங்கள். உன்னிப்பாகக் கேட்டால் நிறைய அடிப்படை விஷயங்கள் இதில் பிடிபடும்.

Love Supreme, Part -1 Acknowledgement

John Coltrane – Tenor Saxaphone, McCoy Tyner – Piano, Jimmy Garrison – Bass, Elvin Jones – Drums

Album – Love Supreme (1965)
[audio:colt_1.mp3]

ஜான் கொல்த்ரெய்ன் உலகின் அற்புத சாக்ஸ் கலைஞர்களுள் முதன்மையானவர். தன்னுடைய வாழ்வை இன்னொரு ஜாஸ் மேதையான ட்ரம்பெட் கலைஞர் மைல்ஸ் டேவிஸ்-உடன் துவங்கியவர். பின்னர் தெலோனியஸ் மாங்க் உட்பட பல முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பணியற்றியவர். சில வருடங்களுக்குப் டேவிஸ், மாங்க் இவர்களுக்கு இணையாகத் தனித்து இயங்கத் தொடங்கினார். ஜாஸ் உலகில் அதிகம் இசைத்தட்டுகளை வெளியிட்டவர்களுள் இவரும் ஒருவர். இவருடைய மனைவி புகழ் பெற்ற ஜாஸ் பியானிஸ்ட் அலைஸ் கொல்த்ரெய்ன். இவர்களுடைய மகன் ரவி இப்பொழுது பிரபலமான டெனார் மற்றும் ஸோப்ரானோ ஸாக்ஸ் கலைஞர். ( ஜான் கொல்த்ரெய்ன் சிதார் இசைக்கலைஞர் ரவி சங்கரின் மீது கொண்ட அபிமானத்தால் மகனுக்கு ரவி என்று பெயரிட்டார்).

கொல்த்ரெய்னின் லவ் சுப்ரீம் இசைத்தட்டு ஜாஸ் உலகில் மிகவும் முக்கியமான ஒன்று. இதை அடிப்படையாகக் கொண்டு பல படைப்புகள் பின்னாட்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.