பீ-பாப் (Bebop) பற்றி கடந்த அத்தியாயங்களில் எழுதியிருந்தேன். ஸ்விங் அமைப்பிலான ஜாஸை எப்படி பீபாப் சிக்கலான அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்று பார்த்தோம். சார்லி பார்க்கர், டிஸ்ஸி கில்லெஸ்பி, தெலோனியஸ் மாங்க் மிகத் திறமை மிக்க கலைஞர்கள் சிக்கலான சுருதிக்கோர்வைகளின் அடிப்படையில், சற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் அமைத்த வடிவம் பீ-பாப். பீ-பாப் பைப் புரிந்துகொள்வது, ரசிப்பது மிகவும் கஷ்டம். வேறுவார்த்தைகளில் சொல்லப்போனால் பீ-பாப் கலைஞர்களுக்கான இசை, இது அடித்தட்டு இரசிகர்களுக்கு மிகவும் சிக்கலானதும், அதே காரணத்தால் எரிச்சலூட்டக்கூடியதும் ஆகும். கீழ்த்தட்டு மக்களிடமிருந்து எழும்பிவந்த ஜாஸ் போன்ற கலைவடிவங்கள் சராசரி ரசிகனைவிட்டு நீண்ட நாட்கள் விலகியிருக்க முடியாது. எனவே பீ-பாப்புக்கு முற்றிலும் எதிர் கோணத்திலிருந்து கூல் ஜாஸ் என்ற வடிவம் உருவானது.

இதை முன்னெடுத்துச் சென்றவர்களுள் முக்கியமானவர் மைல்ஸ் டேவிஸ். கூல் ஜாஸின் அடிபப்படையாக பீ-பாப்பிலிருந்து மாறுபடும் மூன்று விஷயங்களைச் சொல்லலாம்; Attack, Rhythm & Melodic Improvisation.

Attack என்பது ஒரு குறிப்பிட்ட வகையான வாசிப்பு முறை. சார்லி பார்க்கர், தெலோனியஸ் மாங்க் போன்றவர்களில் வாசிப்பில் ஒரு அழுத்தம் இருக்கும். சுரீரென்ற ஓசைகள், துள்ளல்கள் நிறைந்த சக்தி மிகுந்த வாசிப்பாக இருக்கும். நான் தெலோனியஸ் மாங்கைப் பற்றிய சென்ற பகுதியில் அவர் கிட்டத்தட்ட் தாளவாத்தியத்தைப் போல பியானோவை வாசிப்பார் என்று எழுதியிருந்தது நினைவில் இருக்கலாம். கூல் ஜாஸில் இந்த தடாலடியான விஷயங்கள் எதுவுமே இருக்காது. மாறக ஆழ்ந்த உள்நோக்கிய இசையாக இருக்கும்.

அதேபோல ரிதமும் பீ-பாப்க்கு முற்றிலும் எதிர்மறையாக இருக்கும். பாப்-ஐ வரையற்க்கும்பொழுது ஒற்றை தாளகதியில் ரிதம் சென்று கொண்டிருக்க முன்னணி (சாக்ஸ், ட்ரம்பெட் அல்லது பியானோ) கலைஞர் ரிதத்தைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல், – சில சமயங்களில் முற்றாகக் குழப்பம் விளைவிக்கும் எல்லைக்கு வாசிப்பை எடுத்துச் செல்வார்கள் என்று சொன்னேன். மாறாக கூல் ஜாஸில் ரிதத்துடன் இணைந்து நேரொழுக்காக முன்னணி இசை வழுக்கிக்கொண்டு செல்லும். இதற்கு முக்கிய காரணம் கூல் ஜாஸ் மேற்கத்திய செவ்வியல் இசையில் (Western Classical Music) சில கூறுகளை உள்வாங்கிக் கொண்டதுதான். பீ-பாப்பில் வெட்டியாக ட்ரம்ஸ் வாசிக்கும் கலைஞருக்கு அவருடைய திறமையைக் காட்ட ட்ரம்ஸ் தனியாவர்த்தனம் இருக்கும். ஆனால் முற்றிலும் ரிதத்துடன் இணைந்துவரும் கூலில் இந்தத் தேவை இல்லை என்பதால் ட்ரம்ஸ்காரர் ஆர்ப்பாட்டமாகத் தனியாக வாசிப்பதும் கிடையாது.

மூன்றாவதாக Melodic Improvisation என்ற முறையிலும் பீ-பாப்பிற்கு நேரெதிர் கோணத்தில் சென்றது கூல். பீ-பாப்பில் சுருதிகளை மாற்றி – இம்ப்ரொவைசேஷன் என்பது தடாலடியான முறையில் இருக்கும். மாறக கூலில் இப்படியெல்லாம் இல்லாமல் சுருதிக்குள்ளேயே – கிட்டத்தட்ட செவ்வியல் இசையைப் பொலவே சிக்கலான வடிவங்களைப் பிண்ண முயற்சிப்பார்கள். சில இடங்களில் double chord progression, counterpoint என்று நுட்ப ரீதியான சிக்கல்களைக் கொண்டது. இருந்தாலும் அடிப்படை ரிதத்திற்கு மாறாகச் செல்லாமல் இணைந்தே வாசிப்பதால் கூல் ஜாஸ் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். என்னுடைய பரிந்துரைப்பில் ஜாஸை முதன் முதலில் கேட்கத் துவங்குபவர்கள் கூல் ஜாஸிலிருந்து துவங்குவது நல்லது. இப்படிச் சொல்வதால் கூல் ஜாஸ் என்பது மிகவும் எளிமையானது என்று அர்த்தமல்ல, சொல்லப்போனால் தடாலடியாக வாசிக்கும் ஸ்விங், பீ-பாப் இவற்றைவிட அதிநுட்பங்கள் நிறைந்தது கூல், ஆனால் கேட்பதற்கு எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கும் என்பதால் கூல் ஜாஸை இரசிப்பது எளிது.

பாடல்: So What
ஆல்பம்: Kind of Blue (1959)
கலைஞர்கள்:
* Miles Davis — trumpet, leader
* Julian “Cannonball” Adderley — alto saxophone
* John Coltrane — tenor saxophone
* Bill Evans — Piano
* Paul Chambers — bass
* Jimmy Cobb — drums
[audio:so_what.mp3]

Kind of Blue ஆல்பம் இசையுலகின் வரலாற்றிலேயே மிகவும் முக்கியமானவற்றுள் ஒன்று. 1959-ல் வெளியான இந்த ஆல்பம், எம்பி3 பிரபலமாகி, இணையத்தின் வழியாக மின்வணிகம் சூடுபிடித்த 2001 ஆம் ஆண்டு இணையத்தின் வழியே விற்ற ஆல்பங்களில் 14-ஆம் இடத்தைப் பெற்றது என்றால் இதன் முக்கியத்துவம் எளிதில் பிடிபடும். இன்னொரு முக்கிய ஜாஸ் கலைஞரான க்வின்ஸி ஜோன்ஸ் (Quincy Jones, இவர் மைக்கேல் ஜாக்ஸனின் மிகப் பிரபலமான திரில்லர், பேட் ஆல்பங்களின் தயாரிப்பாளரும் கூட) “கைண்ட் ஆஃப் ப்ளூ எனக்கு ஆரஞ்சு ஜூஸ் மாதிரி, இன்றைக்கும் தினசரி இதை ஒரிரு முறையாவது வாசித்துப் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொன்னார். ஜாஸின் போக்கை மாறியமைத்தது இந்த ஆல்பம். இதிலிருக்கும் இசைக்கலைஞர்கள் – டேவிஸ், ஜான் கோல்த்ரேன், பில் ஈவான்ஸ், பால் சேம்பர்ஸ், கெனான்பால் ஆடெர்லி என்று ஒவ்வொருவரும் மிக மிகத் திறமையான இசைக்கலைஞர்கள். கூல் ஜாஸின் வடிவம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் பாடலை உதாரணமாகச் சொல்லலாம்.

கூல் ஜாஸின் பிதாமகர் என்று சொல்லப்படும் மைல்ஸ் டேவிஸின் வாழ்க்கை அந்த நாளைய சராசரி ஜாஸ் கலைஞரின் பின்னணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. லூயி ஆர்ம்ஸ்ட்ராங், சார்லி பார்க்கர், தெலோனியஸ் மாங் போன்றவர்களின் ஆரம்ப வாழ்க்கை வறுமையிலும் பசியிலும் நிறைந்தது. பாடகிகளான பில்லி ஹாலிடே, எல்லா பிரிட்ஜெரால்ட் இவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பில்லி ஹாலிடே பாலியல் வன்முறைக்கு ஆளானவர். பசியின் கொடுமையில் பாலியல் தொழிலாளியாக சில நாட்களுக்கு வேலை பார்த்திருக்கிறார். ஆனால் மைல்ஸ் டேவிஸ் ஓரளவுக்கு வசதியுள்ள நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவர். சிறுவயதில் செவ்வியல் இசை பயின்றவர். எனவே இவர் ஜாஸிற்குப் பல புதிய பரிமாணங்களை அளித்தார். நல்ல முன்னணி பீ-பாப் கலைஞராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அதில் தேக்கம் வந்தபொழுது அதைவிட்டு விலகி கூல் வடிவத்தை உருவாக்கினார். பின்னர் கூல் ஜாஸிலிருந்து மோடல் ஜாஸ் என்ற கிளை பிரிந்தது. அதேபோல ஜாஸிற்கு வெளியிலிருந்து பல கலைஞர்களுடன் இணைந்து ஜாஸ் ப்யூஷயன் என்ற மாபெரும் துறையை உருவாக்கியதும் மைல்ஸ் டேவிஸ்தான். டேவிஸ் அளவிற்கு தொழில்நுட்ப ரீதியாக ஜாஸிற்குப் பங்களித்தவர்கள் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

இன்னொரு சுவாரசியமான விஷயம் – கூல் கலைஞர்களில் சிலர் ரசிகர்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு வாசிப்பார்கள். ஸ்விங் ரசிகர்களை ஆட்டுவிப்பதற்காக உருவானது. பீ-பாப்பின் துள்ளலுக்கு ரசிகர்கள் தரும் உற்சாகம் பீ-பாப் கலைஞர்கள் இன்னும் அதீதங்களுக்குச் செலுத்தும். மாறக உள்நோக்கிய, ஆழ்ந்த நுடபம் கொண்ட கூல் இசையை வாசிக்கும் கலைஞர்கள் ரசிகர்களின் முகங்களையும் ஆட்டங்களையும் பார்த்து கவனம் சிதறாமல் இசையிலேயே இலயித்துப் போய் வாசிக்க முற்படுவதால் மேடைக்குப் பின்புறம் திரும்புவது வழக்கமாக இருந்தது. இப்படிச் சொல்வதால் இது பொது ரசனையை மனதில் கொள்ளாதது என்று அர்த்தமில்லை. மாறாக கூல்-தான் முதன் முதலாக ஜாஸில் வாசிக்கப் போகும் பாடலைச் சொல்வது, வாசித்து முடிந்தபின் ரசிகர்களின் கைத்தட்டலைத் தலை வணங்கி ஏற்றுக் கொள்வது என்று ஜாஸில் ரசிகர்களின் மனதுடன் இயைந்துபோகும் சில நாகரீகக் கூறுகளைப் புகுத்தியது.

மைல்ஸ் டேவிஸ் பெரும்பாலான கச்சேரிகளுக்கு முழு கோட் சூட் போட்டுக் கொண்டு வருவார். இதுவும் ஜாஸின் அன்றைய வழக்கத்தை மாற்றியது. கை நிறையக் காசு சம்பாதிப்பது, கனவானாகத் தோற்றம் தர சிரத்தை எடுத்துக் கொள்வது போன்ற மேட்டிமை விஷயங்கள் இருந்தாலும் மைல்ஸ் டேவிஸின் இசை எப்பொழுதுமே ஜாஸின் அடிமட்டக் கூறுகளை ஒட்டியே சென்றது. தன்னுடைய வேர்களை நன்றாக உணர்ந்துகொண்டு கிளை பரப்பி ஜாஸை விரித்துச் சென்றது மைல்ஸ் டேவிஸ் என்ற அந்த அற்புதக் கலைஞரின் திறமை.

* * *

இந்த வாரம் இதுவே நீண்டு போய்விட்டதால் தமிழ்ப் பாடலை ஒத்திப் போடுகிறேன். தமிழில் அற்புதமான கூல் ஜாஸ் பாடல் வந்திருக்கிறது. இன்றைய மைல்ஸ் டேவிஸ் இசையை வைத்து இதை யாராவது அடையாளம் கண்டுபிடிக்கிறீர்களா என்று பார்ப்போம். இன்னும் ஏழு நாட்கள் உங்களுக்கு இதைக் கண்டுபிடிக்க.

ஒரு சிறிய க்ளூ – கூல் ஜாஸ் தொழில் நுட்பச் சிக்கல்கள் கொண்டது, அதே சமயத்தில் கேட்க எளிமையானது.