monk

ஏ.ஆர். ரஹ்மான் தமிழ்த் திரையுலகிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் பல தொழில்நுட்ப விஷயங்களை அறிமுகப்படுத்தியவர். என்னுடைய கணிப்பில் இந்திய இசையமைப்பாளர்களில் சோதனை முயற்சிகளில் மிக மிக அதிகமாக முனைந்து ஈடுபட்டவர் (ஈடுபடுபவர்) எ.ஆர்.ரஹ்மான். இவருடைய பாடல்களில் கற்பனையைவிட அசாத்திய உழைப்புதான் மேலோங்கி நிற்கிறது. இதற்காகவே இவர் ஒவ்வொரு பாடலுக்கும் இசையமைக்க நிறைய நாட்கள் எடுத்துக்கொள்கிறார்.

பாடல்: ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
படம் : இருவர் (1997)
பாடியவர்கள்: ஹரிணி, ராஜகோபால்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து
[audio:hellomister.mp3]

ரஹ்மானின் முயற்சிகள் ஒவ்வொன்றும் சோதனைகளாக இருந்தாலும் அவருடைய படங்களிலேயே இருவர் ஒரு அசாத்திய சோதனை முயற்சி என்றுதான் தோன்றுகிறது. படம் அமைந்தது வித்தியாசமான களம். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தமிழ்த் திரையுலகு, அரசியல் இவற்றில் கோலோச்சிய இருவரின் பிணைந்த வாழ்க்கையை ஒட்டிய இந்தப் படத்தில் ஒரு முப்பது/நாற்பது வருடங்களின் பின்னாலான இசையைக் கொடுக்க ரஹ்மான தேர்தெடுத்த களம் ஜாஸ். இந்தத் தொடரில் ஏற்கனவே இந்தப் படத்தின் “கண்ணைக் கட்டிக் கொள்ளாதே” பாடலைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஜாஸில் அமைந்த பாடல்களைத் தவிர கர்நாடக இசையின் அடிப்படையில், சங்க இலக்கியங்களின் வார்த்தைகளுடன் ஒரு பாடலும் (நறுமுகையே), அற்புதமான மெல்லிசையில் அமைந்த இன்னொரு பாடலும் (பூங்கொடியின் புன்னகை) இந்தப் படத்தில் உண்டு.

இன்றைய பாடல் ரஹ்மான் இசையமைத்த அனைத்துப் பாடல்களிலும் மிக வித்தியாசமானது. சோதனைகளுக்கு அஞ்சாத ரஹ்மான் பொதுவில் பாடல்களில் நிறைய வாத்தியங்களைப் பயன்படுத்துவார். பல பாடல்களில் மூன்று அல்லது ஐந்து நொடிகள் ஒரு மின்னல் போல சாரங்கி, ஸ்லைட் கிட்டார், உறுமி மேளம், தில்ரூபா, ஹார்மானிக்கா, ஜலதரங்கம் என்று அவ்வளவாகப் பிரபலமில்லாத வாத்தியங்கள் வந்து போகும். ஆனால் ஹலோ மிஸ்டர் பாடலில் மொத்தம் மூன்றே மூன்று இசைக்கருவிகள்தான் – கீ போர்ட், ட்ரம்ஸ், பாஸ். இவற்றிலும் பாஸின் இருப்பே அதிகம் தெரியாமல் இருக்கும். இது ரஹ்மானுக்கு முற்றிலும் வித்தியாசமான சோதனை முயற்சி. பல ஜாஸ் குழுக்களில் இப்படி மூன்று அல்லது நான்கு வாத்தியங்கள்தாம் வரும். இவற்றுள் ஒற்றை வாத்தியம் பாடல் முழுவதிலும் முக்கிய இடத்தைப் பெற மற்றவை முதன்மைப்படுத்தப்படும் வாத்தியத்தின் முழு வீச்சும் தெரியும் முகமாக அடங்கிவரும். ஆனால் ஜாஸில் கற்பனைகளுக்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக துணை வாத்தியங்கள் ஒன்றிரண்டு இடங்களில் தனியாக வாசிக்கப்படும். இந்தப் பாடல் அந்த அசல் ஜாஸ் இலக்கணத்தை அடியொற்றி அப்படியே அமைக்கப்பட்டிருக்கிறது. பாடலில் முழுவதும் பியானோதான் முக்கிய இடம். ஆனால் கடைசியில் ஓரிடத்தில் ட்ரம்ஸ் தனியாக வருகிறது. என்னுடைய கணிப்பில் ஜாஸின் வடிவத்தை முழுமையாக அடியொற்றி அமைக்கப்பட்ட முதல் பாடல் இந்தத் தொடரில் வந்த முதல் தமிழ்ப்பாடலான ‘வரவேண்டும் ஒரு பொழுது.” அதற்கு அடுத்தபடியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் பாடல்.

பாடலின் இன்னொரு அற்புத ஜாஸ் கூறு ஆண் மற்றும் பெண் குரலை இடையிடையே வாத்தியம் போலப் பயன்படுத்தியிருக்கும் உத்தி. இது ஜாஸின் அடிவேரான ஆப்பிரிக்க நாட்டார் இசையிலிருந்து வரும் பயன்பாடு. இப்படி வாத்தியமாகப் பயன்படுத்தப்பட்ட ஆண் குரல் ராஜகோபால் என்ற பாடகருடையது. நான் அறிந்தவரை இவர் இந்தப் பாடலிலும் சீவலப்பேரி பாண்டி என்ற படத்தில் ஆதித்யனின் இசையில் இன்னொருபாடலையும்தான் பாடியிருக்கிறார். இந்தப் பாடலைக் கேட்க இவர் திறமையுள்ளவராகத்தான் தெரிகிறார். ஏனோ இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை (இதைவிட மோசமான பல குரல்களை ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ச்சியாக பயன் ‘படுத்தியிருக்கிறார்’.). ஹரிணியின் குரலும் பாடலில் நன்றாகப் பொருந்திப் போயிருக்கிறது. ஆனாலும் அதிகக் கற்பனையுடன் பாடலைப் பாடியதாகத் தெரியவில்லை. சொல்லிக்கொடுத்ததை மிகச் சரியாகப் பாடியிருப்பதைப் போலத்தான் தோன்றுகிறது. பாடலின் பிற்பகுதியில் வரும் (மண்ணை வேர்கள் பிரிந்தாலும்… என்ற) இடத்தில் நன்றாகப் பாடியிருக்கிறார். (ஆமாம் சங்கம் தமிழைப் பிரிந்தாலும் என்ற வைரவரிகளுக்கு யாருக்காவது அர்த்தம் தெரியுமா?)

* * *

ஜாஸ் – பியானோ என்று பேசத் தொடங்கினால் அடுத்ததாகச் சொல்லியாக வேண்டியது தெலோனியஸ் மாங்க் (Thelonious Monk) என்ற பெயர். கற்பனை இசையின் உலகாக அறியப்படும் ஜாஸில் கற்பனைகளின் உச்சங்களைத் தொட்டவர் மாங்க். சார்லி பார்க்கர், டிஸ்ஸி கில்லெஸ்பி, தெலோனியஸ் மாங்க் மூவரும் ஜாஸின் மிகப் பிரபலமான பி-பாப் (Bebop) வடிவத்தின் முக்கிய கர்த்தாக்களாக அறியப்படுகிறார்கள். இதிலும் கூட மாங்க் மற்றவர்களைவிட முக்கியமான்வராகச் சொல்லப்படுகிறார். பி-பாப் மிகச் சிக்கலான வடிவம். ஸ்விங் பற்றி முந்தைய பகுதிகளில் எழுதியிருந்தேன். பாடலின் ஒன்றிரண்டு இடங்களில் ஏற்ற இறக்கங்கள் வருவது ஸ்விங் வடிவம். இதனுடைய நீட்சியாக பி-பாப்பைப் பார்க்கலாம். பி-பாப்பில் பாடல் முழுவதிலும் முற்றிலும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்திருக்கும். எந்த இடத்தில் துரித கதியில் வரும் எப்பொழுது மந்தமாகும் என்று எதிர்பார்க்கவே முடியாது. பெரும்பாலான பி-பாப் பாடல்களில் ட்ரம்ஸ் ஒற்றை கதியில் ஆதார லயத்தைத் தந்துகொண்டிருக்க (பெரும்பாலான நேரங்களில் இது வெறும் சிம்பல் தட்டலாக இருக்கும்) முன்னணி வாத்தியக்காரர் தன்னுடைய கற்பனைகளை விரித்துக் கொண்டே போவது பி-பாப் வடிவமாகும். இந்த ஒரே தாளகதி, வேகமும் மந்தமுமாக வரும் முன்னணி இசை என்பது ஒரு விசித்திரமான கலவை. (நம்மூரில் இப்படியெல்லாம் வாசித்தால் அபஸ்வரம் தட்டுகிறது என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்) ஆனால் இசையில் ஒழுங்கு மட்டும்தான் அழகு என்றில்லை, பிறழ்வுகளும் உன்னதமானவை என்று கருதுபவர்களுக்கு பி-பாப் அற்புதமாகத் தெரியும். என்னுடைய கருத்துப்படி முதன் முதலாக ஜாஸைக் கேட்க ஆரம்பிப்பவர்கள் தவிர்க்க வேண்டிய வடிவம். (என்னுடைய நண்பர்களில் பலர் “சார்லி பார்க்கரைக் கேட்டேன், மாங்கைக் கேட்டேன் இதெல்லாம் என்னய்யா ம்யூஸிக் ” என்று கத்தியிருக்கிறார்கள். எனவே இந்தத் தொடரின் இறுதியில் ஜாஸை எளிமையாக அனுகுவதற்கு என்னென்னவற்றைக் கேட்கலாம் என்று ஒரு பட்டியல் தரலாம் என்று உத்தேசம்). பி-பாப் மிகவும் தேவைக்கதிகமாக சிக்கலாக இருக்கிறது என்று சொல்லி லூயி ஆம்ஸ்ட்ராங்க் அதை வெறுத்தார். இருந்தபொழுதும் ஆம்ஸ்ட்ராங்கின் நிறைய படைப்புகள் பி-பாப்பில் மதிப்புடன் கையாளப்பட்டிருக்கிறன. ஒருவர் கற்பனையில் உதித்த இசையை வேறு சுருதி வடிவங்களுக்கும், அளவுகோல்களுக்கும் மாற்றி இசைப்பது பி-பாப்பின் வழக்கம். அதேபோல் ஒரே பாடலில் ஒரே கற்பனையை பல்வேறு ஸ்வரங்களுக்கு எடுத்துச் செல்வதும் பி-பாப்பில் அடங்கும்.

பாடல் : skippy_monk
இசைத் தொகுப்பு: The Complete Blue Note Recordings – Thelonious Monk (1947-52)
கலைஞர்கள்: Thelonious Monk – Piano, Kenny Dorham – Trumpet. Lou Donaldson – Alto Sax. Lucky Thompson – Tenor. Nelson Boyd – Bass. Max Roach – Drums.
[audio:skippy_monk.mp3]

இன்னொரு ஜாஸ் மேதையான கோல்மன் ஹாக்கின்ஸுடன் (Coleman Hawkins) துவங்கிய மாங்கின் வாழ்க்கை அதிக சிக்கல்கள் நிறைந்த புரட்சியாளர்களின் உலகிலேயே இன்னும் வித்தியாசமானது. பல இசைநிகழ்ச்சிகள், பயணங்களில் இரண்டு மூன்று மாதங்கள் வரை சக இசைக்கலைஞர்களுடன் கூட மாங்க் பேசமாட்டார் என்று சொல்கிறார்கள். இவரது மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதை யாரும் அறியமுடிந்ததில்லை. எனவே பல மாங்கின் இசைகள் அந்தத் தருணத்தில் எதேச்சையாகத் தோன்றியவைதான் (எனவேதான் Monk is the king of Jazz improvisation என்று சொல்வார்கள்). ஆனால் நெருங்கிய நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயங்கியதில்லை அவர். அந்தக் காலங்களில் நியூயார்க்கில் போதைமருந்துகளுக்கு உச்சகட்டத் தடை இருந்தது. மாங்க்-குடன் வந்த இன்னொரு ஜாஸ் பியானோ மேதையான பட் பவல் (Bud Powell) கொண்டுவந்திருந்த போதைப் பொருளை பவல்தான் கொண்டுவந்தார் என்று சாட்சியம் கூற மறுத்ததால் மாங்கின் இசைக்கலைஞர் அடையாள அட்டை பிடுங்கப்பட்டது. இதனால் பல வருடங்கள் மாங்க் தொழில் ரீதியாக இசைக்க முடியாமல் போனது. பின்னர் வழக்கு ஆதாரமில்லாமல் போக மாங்க் இசையுலகிற்குத் திரும்பினார். பின்னர் வந்த வருடங்களில் மாங்க் இசைத்த பியானோ வடிவங்கள் ஜாஸின் ஆதாரப் பதிவுகளாக வரையறுக்கப்படுகின்றன.

சிலர் மாங்க் அவ்வளவு உன்னதமான பியானோ கலைஞர் கிடையாது. அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர், தொகுப்பாளர் மாத்திரம்தான் என்று கூறுவார்கள். குறிப்பாக மாங்க் புகழின் உச்சியில் இருந்த காலங்களில் இப்படியொரு விமர்சனம் பரவலாக முன்வைக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு மாங்க் இறந்த பிறகு இன்னொரு ஜாஸ் கலைஞர் பியானோவை அந்த உச்சத்திற்குக் கொண்டு செல்லவில்லை என்றுதான் சொல்கிறார்கள். மாங்க் பல இட்ங்களில் பியானோவை ஒரு தாளவாத்தியம்போல வாசிப்பார், இதைத் தவிர பின்னிப் பிணைந்த Counter-rhythms and harmonies இவருடைய தனித்து நிற்கும் சிறப்பு.

ஒரு காலகட்டத்தின் ஜாஸ் தெய்வங்களான சார்லி பார்க்கர், டிஸ்ஸி கில்லெஸ்பி, மாங்க், ஜான் கோல்ட்ரேன், மைல்ஸ் டேவிஸ் என்று எல்லோருமாக தங்கள் வேலை நேரம் போக மீத நேரங்களில் எந்தவிதமான வேற்றுமையும் இல்லாமல் இசையில் ஒன்றாக மூழ்கிக் கிடந்திருக்கிறார்கள். அப்படி வாசிக்கப்பட்ட சில பாடல்களின் பதிவுகள் ஜாஸை வரையறுக்கும் இசை என்று சொல்கிறார்கள்.

அதிகம் பேசமாட்டார் என்று சொல்லப்படும் மாங்க் மணிக்கணக்கில் தன்னுடன் இசையைப் பற்றி உரையாடியதாக ஜான் கோல்ட்ரேன் சொல்லியிருக்கிறார். இதை அவருடைய கடைசி காலங்களில் ஈர்முனை பிறழ்வு வியாதி (Bipolar Disorder/Schizophrenia) என்று கண்டுபிடித்தார்கள். இந்த அற்புத இசைமேதையின் மறைவு மிகவும் கொடுமையானதாக இருந்தது. கிட்டத்தட்ட கடைசி பத்து வருடங்கள் பேச்சை முழுவதுமாகக் குறைத்துக்கொண்டு தனக்குள்ளே இறுகிப் போய் தனது விசிறி ஒருவரின் இல்லத்தில் தனியாக இருந்து செத்துபோனார்.

* * *

பின் குறிப்பு: இந்தப் பாடலைப் பற்றி இம்மாம் பெரிசு எழுதிப்புட்டு ஐஸ்வர்யா ராயைப் பத்தி எழுதலென்னா இன்னிக்குத் தின்ன சோறு செரிக்காது. எனவே அந்தப் பேர இங்க எளுதிப்புட்டேன். அப்புறம் அம்மணியைப் பத்தி நீங்க எல்லாரும் வெலாவரியா(!) கீள எளுதிக்கிங்க. 🙂