ஜாஸின் ஆதாரம் ப்ளூஸ் என்று சொல்லப்படும் சோக இசையில்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்தாலும் நாளாக ஆக அது ஆட்ட அரங்குகளுக்கான இசை என்று மாறிப்போனது (பின்னர் அது மைல்ஸ் டேவிஸ் போன்ற முதல்தரக் கலைஞர்களால் மீட்டெடுக்கப்பட்டது). இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு ஒன்று ஜாஸிற்கே அடிப்படையாக உள்ள ரிதம் அமைப்பு. தட்டையான சுரங்களைக் கொண்டு இசைக்கப்பட்டாலும் ஜாஸில் ட்ரம்ஸ், ரிதம் கிடார், பாஸ் கிட்டார் போன்றவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. எந்த ஒரு ஜாஸ் பாடலிலும் ஒரு ரிதம் கருவி இருந்தாகவேண்டும் என்பது கிட்டத்தட்ட எழுதப்படாத விதி. இந்த ரிதம் ப்ளூஸின் சோகத்திலிருந்து மெல்ல கடத்திக் கொண்டுபோய் ஜாஸை துள்ளல் நிறைந்த ஆடல்களுக்கு ஆட்படுத்தியது. மறுபுறம் லத்தின் அமெரிக்க நாடுகளின் இசையிலிருந்து ஜாஸ் பெற்ற தாக்கம். சம்பா (Samba), மாம்போ (Mambo), ப்ளெமென்கோ (Flamenco) என்று பல்வேறு வ்கையான நடனம் சார்ந்த ஸ்பானிஷ் இசைகள் ஜாஸின் மீது பாதிப்பைச் செலுத்தத் தொடங்கின. இத்துடன் ஜாஸின் தாளகதியும் சேர்ந்துகொள்ள ஆடலுடன் பாடலைக் கேட்பது அடுத்த கட்டமானது.

பாடல் : அடடா என்ன அழகு
படம்: நீ
பாடியவர் :எல்.ஆர். ஈஸ்வரி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
[audio:adada_enna.mp3]

இன்றைய பாடலாக வருவது சுத்தமான ஜாஸ் வடிவம் கிடையாது. ஆனால் இதன் அடிப்படையில் ஜாஸின் தாக்கம் கொஞ்சம் உண்டு. இது மத்திய அமெரிக்க நாடுகள் (ஸ்பானிஷ் பேசும்) – குறிப்பாக ஹயித்தியின் மாம்போ வகை இசையும் ஜாஸ்-ம் கலந்த கலவை. பாடலின் ஆரம்பத்தில் வரும் (chachacha- chachacha) என்ற ரிதம் அமைப்பு மாம்போவைச் சேர்ந்தது.

சச்சச்சா… சச்சாச்ச – சச்சச்ச
சச்சச்சா… சச்சாச்ச.. சச்சச்ச

என்பதும் அதன் ஒட்டமாக வரும் ட்ரம்ஸ் எடுப்பு கொண்ட பல்லவியும் மாம்போ. ஆனால் பாடலின் சரணம், அதைச் சேர்ந்து வரும் இசை – குறிப்பாக முதல் இடையீட்டில் முதல் பகுதியில் வரும் அமைப்பு வழக்கமான ஜாஸைச் சேர்ந்தது.

சொல்லத் தேவையில்லை. இது போன்ற பாடல்களை ஈஸ்வரி இடது கையில் தாளை வாங்கிக் கொண்டு மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு ஒற்றை டேக்கில் பாடிமுடித்துவிட்டுப் போயிருக்கலாம். ஆனாலும் இவரைத் தவிர வேறுயாராவது இதைப் பாடியிருக்க முடியுமா என்ற தொடர்ச்சியான கேள்விதான் மிஞ்சுகிறது. இது எம்.எஸ்.வி உச்சகட்ட படைப்புக் காலத்தில் இருந்தது. இந்தக் காலத்தில்தான் அவர் விளையாட்டாக நிறைய ட்யூன்களைப் போட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.

* * *

இந்த (நடனம் சேர்ந்த) இசைத் தாக்கங்கள் ஜாஸின் இடைக்காலத்தில் மிக அதிகமாக இருந்தன. ஒரு காலகட்டத்தில் ஜாஸ் என்றாலே இப்படி இரவு விடுதிகளில் ஆடுவதற்கானது என்று மாறிப்போனது. ஜாஸ் எப்பொழுதுமே மிகவும் சிக்கலான, உன்னதமான இசை வடிவமாகத்தான் இருந்திருக்கிறது. இப்படி எளிமைப்படுத்தப்படுவது பரபரப்பு தந்து அதிகம் இசையின் நுணுக்கங்களை அறியாதவர்களிடம் ஜாஸ் பிரபலமாகக் காரணமாக இருந்தாலும் இதுதான் ஜாஸ் என்றாகிப் போனது நல்ல கலைஞர்களுக்கு வேதனையைத் தந்தது. ஒருவகையில் அந்தக் காலங்களில் இதுபோன்ற நாட்டியம் சார்ந்த ஜாஸ் இசையே (1,2,3… 1,2,3.. அல்லது 1,2,3,4… 1,2,4… 1,2,3,4… 1,2,4…) என்று தாளத்தை சூத்திரம் போட்டு கொஞ்சம் ட்ரம்பெட் அல்லது சாக்ஸ் அல்லது பியானோ (கவனிக்கவும் இவை எல்லாம் சேர்ந்து என்றில்லை. இங்கே பல கலைஞர்கள் தனித்தனியாகவும் சேர்ந்தும் improvisation என்பதற்கெல்லாம் இடமே இல்லை.) என்று வடிகட்டி வாசித்துவிட்டுப் போகலாம் என்ற கேவலமான நிலையில் இருந்தது.

இதிலிருந்து விடுபட்டு மிக மிக சிக்கலான வடிவத்திற்கு ஜாஸ் தாவியது. இதை சார்லி பார்க்கர், டிஸ்ஸி கில்லெஸ்பி, தெலோனியஸ் மாங்க் போன்ற அற்புதக் கலைஞர்கள் சாதித்துக் காட்டினார்கள். இதைப் பற்றி அடுத்த வாரம்…