பாடல் : பளிங்கினால் ஒரு மாளிகை
படம் : வல்லவன் ஒருவன்
பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி
இசை : வேதா
[audio:Palinginaal.mp3]

வேதா என்கிற எஸ்.வேதாச்சலம் தமிழ்த் திரை இசையமைப்பாளர்களுள் கொஞ்சம்வித்தியாசமானவர். தான் எங்கிருந்து பாடலை நகலெடுக்கிறேன் என்ற விஷயத்தையெல்லாம் மறைக்க அவர் முயற்சி செய்ததே இல்லை. அந்தக் காலங்களில் (1950-60) ஹிந்திப் பாடல்களை நேரடியாகத் தமிழில் தந்தவர் வேதா. இந்தக் காலத்தில் 2பாக், 50செண்ட் என்று எண்ணும் எழுத்துமாகப் பெயர் கொண்ட ஹிப்-பாப் கலைஞர்கள் அமெரிக்காவில் பாட்டை வெளியிட்டால் அது அடுத்த அரைமணிக்குள் அருப்புக்கோட்டையில் எம்பி3 வடிவில் கிடைக்கிறது. பொதுவில் இப்பொழுதைய தலைமுறைக்கு (இப்பொழுதைய தலைமுறையைச் சேர்ந்த) உலக இசையை நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்தக் காலங்களில் எல்லாம் அப்படியில்லை. ஹிந்தியில் ஒரு படம் வெளிவந்தால் அதன் இசைத்தட்டு கும்பகோணத்தில் லெக்ஷ்மிநாறாயண செட்டியார் (ஆமாம் சத்தியமாக வல்லின றா-தான்) ம்யூஸிக் ஸ்டோரில் எல்லாம் கிடைக்காது, ‘மெட்றாஸ்’ போய் ஸரஸ்வதி ஸ்டோரில் சொல்லி வைத்தால் அடுத்த முறை பட்டணம் போகும்பொழுது வாங்க முடியும். ஹிந்திக்கே இந்த நிலைமை என்றால் ராக் அண்ட் ரோல், ஜாஸ் இதெல்லாம் சத்தியமாக சாத்தியமே இல்லை. வேதா தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் (படித்ததெல்லாம் சென்னையில்தான்) அதனால் அவருக்கு லோக ஸங்கீதம் நன்றாகத் தெரிந்திருந்தது. வஞ்சனையில்லாமல், மாற்றி மறைக்க வேண்டும் என்று அதிகச் சிரமப்படாமல் இந்தியோ, ஜாஸோ பாடல்களை நேரடியாக அப்படியே தமிழ்த் திரைப்படங்களுக்குப் பெயர்த்துக் கொடுப்பார். சுருட்டை விக் வைத்து ஜெய்சங்கர் சி.ஐ.டியாவும் ஜேம்ஸ் பாண்ட் ஆகவும் நடித்த பல படங்களுக்கு வேதா-தான் ஆஸ்தான இசையமைப்பாளர். இவருடைய ‘இறக்குமதி தர’ இசைக்கு அந்த நாட்களில் ஒரு பெரிய இரசிகர் பட்டாளமே இருந்தது. வேதா மாத்திரம் இல்லாமல் போயிருந்தால் உலக அளவில் நடந்துகொண்டிருந்த இசை முயற்சிகள் தமிழனுக்குத் தெரியாமலேயே போயிருக்கும். பின்னால் நிறைய வருஷங்கள் கழித்து இதே சமூக சேவையில் ஈடுபட வேதாவின் பெயரையே நேரடியாக எடுத்து (கொஞ்சம் மாற்றிப் போட்டு) தேவா என்று ஒருவர் வந்து வேதா இல்லாத குறையைப் போக்க வேண்டியிருந்தது. (இப்பொழுதெல்லாம் இந்தக் கவலையே இல்லை. யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என்று ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. ஒரு காலத்தில் இசையமைப்பாளருக்கு மெட்டமைக்க ஹார்மோனியம் அத்தியாவசியமானதாக இருந்தது. இப்பொழுதைய தலைமுறையைக் கேட்டால் “மௌஸ்-தான் சார் ரொம்ப முக்கியம். இல்லாட்டா எப்படி வெட்டி ஒட்றது” என்று சொல்லக்கூடும்.

பாடல் : Frenesi
தொகுப்பு: Begin the Beguine
இசை: Artie Shaw
[audio:Frenesi.mp3]

ஆர்ட்டி ஷா என்றழைக்கப்பட்ட Arthur Arshawsky-வைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் வித்தியாசமான ஆசாமி. கறுப்பர்களின் ஜாஸ் உலகில் ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தவர். பெருங்குழுத் தலைவர். க்ளாரினெட் கலைஞர் (ஃப்ரெனெஸி-யில் வரும் க்ளாரினெட் இவருடையதுதான்), எழுத்தாளர், From here to eternity உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர். திரைப்பட விநியோகஸ்தர், மீன்பிடிப்பவர்… ஒருகாலத்தில் முதல்தர கறுப்பு இசைக்கலைஞர்களுக்கு அதிகப் பணம் கொடுத்து இவர் குழுவில் இசைக்க வைத்தார். மிகப் பிரபலமான பாடகி பில்லி ஹாலிடே (இவரைப் பற்றி இன்னொரு நாள்) ஷாவின் குழுவில் பாடகியாக இருந்திருக்கிறார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அமெரிக்க வீரர்களை உற்சாகப்படுத்த அமெரிக்கப் படை முகாமில் தங்கியிருந்து ஒரு நாளைக்கு நான்கு கச்சேரிகள்வரை வழங்கினார். டைம் பத்திரிக்கை இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மானியர்களுக்கு அமெரிக்கா என்றால் “sky-scrapers, Clark Gable, and Artie Shaw.” என்று எழுதியது. பின்னர் அதில் ஏற்பட்ட வெறுப்பினால் இசையைவிட்டு முழுக்க முழுக்க விலகி எழுத்தாளரானார். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்து மீண்டும் இசைக்குத் திரும்பினார். ஆனால் எல்லா காலங்களிலும் தொடர்ச்சியாக விடாமல் இவர் செய்துகொண்டிருந்தது ஒரே ஒரு காரியம்தான் – அவ்வப்பொழுது புதிதாகத் திருமணம் செய்துகொள்வது. நம்மூரில் ஜெமினி கணேசன் நடித்த படங்களைக் கணக்கு வைத்துக் கொண்டவர்களைவிட அவரது மனைவிகளின் எண்ணிக்கையைத் துல்லியமாகத் தெரிந்துகொண்ட இரசிகர்கள் அதிகம். இதேபோல அமெரிக்காவில் “married as many times as Artie Shaw” என்பது பரவலான பிரயோகமாக இருந்தது.

இன்றைய பாடல் மிக மிகப் பிரபலமான எல்.ஆர். ஈஸ்வரி பாடல்களுள் ஒன்று. கிட்டத்தட்ட முழுமையாக ஃப்ரெனெஸியைத் தழுவி அமைக்கப்பட்டது. ஷா-வின் வடிவத்தில் பாடல் கொஞ்சம் வேகமாக இருக்கும். வேதா கொஞ்சம் கதியைக் குறைத்திருக்கிறார். ஸ்விங் பற்றி சொல்லி விளக்க முடியாது என்று எழுதியிருந்தேன். இப்பொழுது பளிங்கினால் ஒரு மாளிகை பாடலையும் ஃப்ரெனெஸியையும் திரும்பத் திரும்பக் கேட்டால் வேதாவின் வடிவத்தில் ஸ்விங் இல்லாமல் இருப்பது புரியும். வேதாவின் இசை ஒருவித தட்டையானதாக இருக்கும், ஆர்ட்டி ஷா-வின் வடிவத்தில் ஏற்ற இறக்கங்கள் நிறைய இருக்கும். குறிப்பாக ஆரம்ப இருபதைந்து நொடிகளுக்குப் பிறகு (கிட்டத்தட்ட நம்மூர் வழக்கப்படி பல்லவி முடிந்து சரணம் துவங்கும் இடத்தில்) துவங்கி பல இடங்களில் இந்த ஸ்விங்கை நன்றாக அடையாளம் காணமுடியும்.

ஆர்ட்டி ஷா முதல்தர க்ளாரினெட் கலைஞர். சென்ற அத்தியாத்தில் மாறுபாடுகள் (Variations) ஜாஸில் ஏன் முக்கியம் என்று சொல்லியிருந்தேன் (டி.எம்.எஸ் ஸின் வேறுபாடற்ற இசைப்பைப் பற்றி நான் சொல்லியிருந்ததில் சிலருக்கு உடன்பாடு இல்லை). இங்கே ஆர்ட்டி ஷாவின் முதல் முறை பல்லவி இசைப்பையும் கடைசியாகப் பாடல் முடியும் இடத்தில் அதே இசைக்குத் திரும்பி வரும்பொழுது அதில் இருக்கும் அற்புத மாறுபாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். இது ஜாஸின் ஆதாரம். ஒரே கலைஞர் ஒரே இசையைத் திரும்ப வாசிக்கும் பொழுதும் பல்வேறு கலைஞர்கள் ஒரே கோர்வையைத் திரும்ப வாசிக்கும்பொழுதும் தங்கள் தனித்தன்மையைக் காட்டியாக வேண்டியது முக்கியம். வேறேந்த இசை வடிவங்களையும் விட ஜாஸில் கலைஞனின் தனித்தன்மையைக் காட்ட நிறையவே இடமுண்டு. திறமையான கலைஞர்கள் இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இனி ஸ்விங்கை கொஞ்சம் விட்டுவிட்டு ஜாஸின் வேறு விஷயங்களைக் கவனிக்கலாம்.