marsalis family

ஜாஸின் முக்கியமான இலக்கணங்களில் ஒன்று (ஜாஸிற்கு இலக்கணம் உண்டா?) ஸிவிங் என்று சொல்லப்படும் ஊசல். இதை வரையறுப்பது மிகவும் கடினம். (நோட்ஸ் எல்லாம் எழுதி இன்னும் கொஞ்சம் குழப்ப முடியும்). முதல் விஷயம் இந்த ஊசலை அதிகமாகக் கையாண்டவை பெருங்குழுக்கள் (Big Band Jazz). பல வாத்தியங்கள் இருக்கும் பொழுது ஒவ்வொருவரும் மானாவாரியாக சுயகற்பனையோடு (independent improvisation) என்று சொல்லிக் கொண்டு தனித்தனிப் போக்கில் போனால் இசையில் இரைச்சல்தான் மிஞ்சக் கூடும். இதைத் தவிர்க்க பெரும்பாலும் வாத்தியங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக வாசித்து (தங்களுடைய improvisation உட்பட), தொடர் ஓட்டத்தின் முந்தையவரிடமிருந்து கட்டையைப் பெற்றுக் கொண்டு தொடர்ந்து ஓடுவதைப் போல அடுத்தவர் தன்னுடைய இசையைத் தொடர்வார். இதற்கு அடிநாதமாக ரிதம் வாசிப்பவர்கள் (கிட்டார், ட்ரம்ஸ்) தீர்மானிக்கப்பட்ட தாளகதியில் தொடர்ந்துகொண்டிருப்பார்கள். கடைசியாக எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிணைந்து சேர்ந்து வாசித்து முடிப்பார்கள். இது துவக்ககால ஸ்விங் இசையின் வடிவம். (ஆனால் பெருங்குழுக்கள் இல்லாமல் மூன்று-நான்கு பேர்களை மாத்திரமே கொண்ட குழுக்களிலும் இது சாத்தியம்தான்).

எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதா? கர்நாடக இசையின் தனி ஆவர்த்தனத்தை நினைத்துப் பாருங்கள். பாடகரின் ராக ஆலாபனைக்குப் பிறகு வயலின் வாசிப்பவர், பின்னர் மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், என்று ஒவ்வொருவரும் தனி ஆவர்த்தனத்தை வாசித்து (சில சமயங்களில் இரண்டு பேர் இணையாகவும்), பின்னர் கடைசியில் பாடகரும் வயலினும் சேர முடித்து வைப்பது நம்மூர் வழக்கம். கிட்டத்தட்ட பெருங்குழு ஸ்விங் இசையும் இப்படித்தான். இந்த ஒரே காரணத்தினால்தான் சக்தி போன்ற அளவுக்கதிகமான இந்திய சாஸ்திரிய இசை வடிவம் கொண்ட குழுக்களில் ஜாஸ் சாத்தியமாகிறது. ஜான் மெக்ளாக்லின் – கிடார், எல்.சங்கர் – வயலின் (அல்லது ஸ்ரீநிவாஸ் மாண்டலின்), சிவமணி – ட்ரம்ஸ், ஜாக்கிர் ஹுசேன் – தபலா, விக்கு விநாயகராம் – கடம் (அல்லது/மற்றும் அவர் மகன் செல்வகணபதி – கஞ்சிரா) என்று மேற்கத்திய, ஹிந்துஸ்தானி, கர்நாடக இசைக் கலைஞர்களைக் கொண்ட கலவையை ஒன்றிணைத்து ஜாஸ் ஆக்குவது ஸ்விங்தான்.

மேற்சொன்ன தனி ஆவர்த்தனம்தான் ஸ்விங்-கா? தீர்மானமாக இல்லை என்று சொல்ல முடியும். உண்மையில் ஸ்விங்கில் ஒரே இசைக்கலைஞர் மாறுபட்ட தாள கதியில் வாசிக்கும் (அல்லது பாடும்) இசைதான் ஸ்விங்கைத் தருகிறது. உதாரணத்தை வைத்துக்கொண்டு இதை இன்னும் கொஞ்சம் நெருக்கமாகப் பார்க்கலாம்.

Song: Henderson Stomp
Artist : Benny Goodman & His Orchestra
Album : Way Down Yonder
[audio:henderson.mp3]

இந்த இசைத் துணுக்கின் ஏறி இறங்குவதைப் போன்ற வடிவம் கொண்ட இசைதான் ஸ்விங்கின் ஆதாரம்.

இனி இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்

Song: Swinging at the Heaven
Artists: Marsalis Family (Wynton Marsalis – Trumpet, Branford M- Saxaphone, Delfeayo M-Trombone, Jason M – Drums)
Album : A Jazz Celebration (2003)
[audio:swinging_heaven.mp3]

இதில் ஒருவர் ஒருவராகத் தனித்தனியாக வாசித்துப் பின்னர் ஒன்று சேரும் ஸ்விங் வடிவம் புரியும்.

* * *

ஸ்விங்கின் பிதாமகர் என்று கருதப்படுபவர் ட்யூக் எல்லிங்டன். இவரை முதல் தர பியானோ இசைக்கலைஞர் என்று சொல்வதைக் காட்டிலும் பெருங்குழுக்களின் தந்தை, ஸ்விங்கின் பிதாமகர் என்று சொல்வதுதான் பொருத்தம். இவர் மெட்டமைப்பது (Composing), ஒழுங்கமைப்பது (arranging) போன்ற விஷயங்களில் அசாத்திய அழகை எட்டியவர். 1920 முதல் 60 வரை கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு ஜாஸ் உலகின் போக்கை நிர்ணயித்தவர்களுள் ட்யூக் எல்லிங்டனும் ஒருவர். நியூயார்க் நகரின் ஹார்லெமில் புகழ்பெற்ற காட்டன் கிளப் என்ற குழுவை நடத்தியவர்களுள் இவரும் ஒருவர் (எல்லிங்டன் உட்பட இதன் முக்கிய இசைக்கலைஞர்கள் அமெரிக்கக் கறுப்பர்களாக இருந்தாலும் இதில் உறுப்பினராவதற்குக் கறுப்பர்களுக்கு அனுமதி கிடையாது). ஸ்விங் ஜாஸின் வடிவத்தை நிர்ணயித்த ட்யூக் இதன் பரபரப்பு குறைந்த பிற்கு மேற்கத்திய செவ்வியல் சிம்பொனி குழுக்களை முன்மாதிரியாகக் கொண்ட ஆன்ஸாம்பிள் ஜாஸ் (Ensamble Jazz) என்ற புது வடிவத்திற்கு மாறிப்போனார்.

ஸ்விங் ஜாஸின் இன்னொரு முக்கிய கடவுள் லூயி ஆம்ஸ்ட்ராங். (இவரைப் பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில்). இவர்களைத் தொடர்ந்து பெண்ணி குட்மன் (Benny Goodman) , ஆர்த்தி ஷா (Artie Shaw) போன்ற பெருங்குழுத் தலைவர்களும் முக்கியமானவர்கள். கூடவே ஜாஸ் உலகின் இரண்டு பெரும் பாடகிகளான பில்லி ஹாலிடே, எல்லா ப்ரிட்ஜெரால்ட் இருவரும் அற்புதமான ஸ்விங் பாடகிகள்.

* * *

பாடல் : கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
பாடியவர் : ஹரிஹரன்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
படம் : இருவர் (1997)
[audio:Kannai.mp3]

தமிழ்த் திரை இசையின் மைல்கற்களில் ஒன்று இருவர் படம். நீண்ட நாட்களுக்குப் பிறகு (விஸ்வநாதன் – ராமமூர்த்தி, பழைய விஸ்வநாதன் இவர்களுக்குப் பிறகு ஒரு ஜாஸ் பயன்பாட்டில் ஒரு பெரிய இடைவெளி) மூன்று பாடல்கள் அற்புத ஜாஸ் வடிவத்தில் இந்தப் படத்தில் வந்தன. முதலாவதாக இன்றைய விஷயமான ஸ்விங். நான் எழுதப்போவதையெல்லாம் படிக்காமல் அப்படியே விட்டுவிட்டு இந்தப் பாடலின் இனிமைக்கு என்ன காரணம் என்று யோசித்துப் பாருங்கள் – உங்களுக்குத் தானாகவே பிடிபடும் விஷயம் ஸ்விங் ஆகத்தான் இருக்க முடியும். இந்தப் பாடலின் முழுவதும் பாடகரின் வரிகள் அடுத்துவரும் சேர்குரலிசை இரண்டும் ஒருவித ஊசலில் இருக்கும். இதுதான் ஸ்விங் ஜாஸின் ஆதாரம். பாடலின் முன்னீட்டில் வரும் கிட்டார் இசையைக் உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள்.

தொடர்ந்து ஹரிஹரனின் குரலுக்கும் கூடவே வரும் கோரஸின் இசைக்கும் இடையில் ஒருவித தொடர்பற்றதன்மை இருப்பதை அவதானிக்க முடியும். இது ஸ்விங்கின் குணம். இதைத் தவிர நான் முதலாவதாக ஸ்விங் பற்றி வரையறுத்த வேவ்வேறு இசைக் கருவிகள் தனித்து இசைப்பதும் ட்யூக் எல்லிங்க்டன், ஆர்டி ஷா, பென்னி குட்மன் போன்ற பெருங்குழுக்காரர்கள் வரையறுத்த ஸ்விங்கின் வடிவம்தான். மூன்று வயதுச் சிறுவர்களிலிருந்து வாலிபர்களை வரை ஆடவைக்கும் இந்த வி..டு..த..லை பாடலில் தனித்தனியே கிடார், பியானோ, சாக்ஸஃபோன் என்று ரஹ்மான் அற்புதமான இசைக் கோர்வையைத் தந்திருக்கிறார். ஹரிஹரனும் மிகச் சரியாகப் பாடியிருக்கிறார். (ஆனால் என்னமோ ரொம்ப சாஸ்திரீயத்தனமாக அவர் குரல் ஒலிப்பதை மறுக்க முடியவில்லை).

* * *

ஸ்விங் வடிவத்தைப் பின்னாட்களில் எல்லோருமாகப் போட்டுச் சின்னாபின்னப்படுத்திவிட்டார்கள். ஸ்விங்கின் ஏற்ற இறக்கங்கள் கட்டுப்பாடுகளின்றி ஆடுவதற்குத் தூண்ட பல இரவுக் கேளிக்கை விடுதிகளில் “குடித்து விட்டு ஆட வேண்டுமா, கூப்பிடு ஸ்விங் குழுக்களை” என்று தொடங்கிவிட்டார்கள். காசுக்கு நாலு என்று பல வெள்ளைக்கார ரெண்டும் கெட்டான் கலைஞர்கள் ஸாக்ஸிலும் ட்ரம்பெட்டிலும் ஆட்டம் காட்ட ஆரம்பித்து “சூப்பர் ஸ்டார்”களானார்கள் (காளான்கள்). அதே நேரத்தில் அற்புதமான இசைக்கலைஞரான லூயி ஆம்ஸ்ட்ராங் காசுக்கு வழியில்லாமல் இருந்தார்.

ஆனாலும் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை ஜாஸின் அடிப்படை விஷயங்களில் ஒன்றாக ஸ்விங் நிலைத்துப் போயிருக்கிறது. ஸ்விங் வகையில் இன்னும் உதாரணம் காட்டத் தமிழில் கொஞ்சம் இருக்கிறது. அதையெல்லாம் பார்த்துவிட்டு அடுத்த விஷயங்களுக்குப் போகலாம்.

* * *

கொசுறு : ஸ்விங் ஜாஸ் ஒழுங்கமைவுகள் இல்லாமல் தறுதலையாக இருக்கிறது என்று குற்றம் சொல்லி (கட்டுக்கோப்பை முன்னிருத்திய) ஹிட்லரின் நாஸி ஜெர்மனியில் தடை செய்யப்பட்டிருந்தது.