ஜாஸின் ஆதாரம் improvisation என்று சொல்லப்படும் நொடியில் மாறும் திறம்தான். தமிழ்த் திரையிசையில் (பொதுவாகத் திரையிசையில்) இசைக்கப்படுவது தொகுக்கப்பட்ட இசை (Composed music); அதாவது இசையமைப்பாளர் ஏற்கனவே தீர்மானித்து அதற்கேற்ற வகையில் பாடலாசிரியர் பாட்டெழுதி துல்லியமாகப் பிரிக்கப்பட்டு இசைக்கலைஞர்களிடம் சொல்லப்பட்டு இசைக்கப்படுவது. இந்த இடத்தில் ஜாஸின் அடிப்படை இதயமான சுதந்திர மாற்றங்களுக்குச் சாத்தியமில்லாமல் போவதால் திரையுலகில் ஜாஸ் என்பது ஒரு சொல்முரண்தானா?

இதற்குப் பதில் ஒரு வகையில் ஆம். ஆனால் கொஞ்சம் பொறுமையாக யோசித்தால் இல்லை, திரையிசையில் ஜாஸ் சாத்தியமே என்று புலப்படும். நீண்ட ராக ஆலாபனைகள், தனி ஆவர்த்தனங்கள், ஸ்வரப் பிரஸ்தாரங்கள் இதெல்லாம் இல்லாமலேயே ஒற்றை வரியில் ராகத்தின் சாயல்வரும் திரைப்படப் பாடல்களைக் கர்நாடக இசையின் ராகங்களின் அடிப்படையில் இனங்காணுவது எப்படிச் சாத்தியமோ அதோபோல கொஞ்சம் வகைப்படுத்திப் பார்க்கலாமே. ஜாஸின் அடிப்படை சமாச்சாரங்களாக blue note, Syncopation, Swing, Call and Response, polyrhythms, Improvisation என்று முதல் வாரத்தில் பட்டியல் போட்டிருந்தேன். அதில் இரண்டு, மூன்று அடிப்படைக் கூறுகள் பொருந்தி வருபவை, மற்றும் ஜாஸின் ஆதார இசைக்கருவிகளான சாக்ஸஃபோன், ட்ரம்பெட், பியானோ, கிடார், பாஸ், ட்ரம்ஸ் போன்றவற்றை மாத்திரமே பயன்படுத்தி வரும் பாடல்களில் கட்டாயமாக ஜாஸின் சாயலை அடையாளம் காணமுடிகிறது.

ஆனால் இவற்றை “தமிழ் ஜாஸ்” என்று தைரியமாக வகையிடுவதற்குத் தயக்கமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் பெரும்பாலான பாடல்களில் ஜாஸ் இசைய்டுடன் பிற வகை இசைகளையும் கலந்துதான் தமிழில் தந்திருக்கிறார்கள். எனவேதான் “ஜாஸ் வடிவம்” என்று தலைப்பு கொடுத்திருக்கிறேன்.

நான் இந்தத் தொடரை எழுதுவதற்காகத் தேடியபொழுது என்னால் முதன் முதலில் தமிழில் ஜாஸ் தாக்கம் எப்பொழுது வந்தது என்பதை என்னால் உறுதியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட அறுபதுகளில்தான் இது துவங்கியிருப்பதாகத் தெரிகிறது. வேதா, விஸ்வநாதன் – ராமமூர்த்தி, எம்.பி.ஸ்ரீனிவாஸன், .. அப்புறம் நீண்ட நாட்கள் கழிந்த்து ஏ.ஆர். ரகுமான், இளையராஜா என்று கொஞ்சம் பாடல்கள்தான் தேறுகின்றன. தமிழ்-ஜாஸ் என்று பேசத் தொடங்கினால் முதலின் சொல்லியாக வேண்டிய பெயர் – எல்.ஆர். ஈஸ்வரி. தமிழ்த் திரையிசை உலகில் இந்தக் குரலுக்கு இணையாக அல்லது மாற்றாக வேறு யாரையும் சொல்லமுடியாது என்ற தனித்துவம் மிக்கவர்களின் ஈஸ்வரி முதன்மையானவர். மிகச் சிறியவயதிலேயே 1959ல் நல்ல இடத்து சம்மந்தம் என்ற படத்தில் கே.வி. மஹாதேவனால் அறிமுகப்படுத்தப் பட்டவர். மிகச் சமீபத்தில் (2004) ஹாரிஸ் ஜெயராஸ் வரை (அருள் திரைப்படம்) ஈஸ்வரி பாடிக்கொண்டிருக்கிறார். தமிழில் ஜாஸ் சாயலில் உள்ள பாடல்களை மிக அதிகமாகப் பாடியவர் எல்.ஆர். ஈஸ்வரிதான்.

* * *

பாடல் :வரவேண்டும் ஒரு பொழுது
படம் : கலைக்கோயில் (1964)
பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி
இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
[audio:Varavendum.mp3]

என்னுடைய பட்டியலில் இருக்கும் மிகப் பழைய ஜாஸ் சாயல் கொண்ட பாடல் இதுதான். சொல்லப்போனால் நீண்ட நாட்களுக்கு இந்தப் பாடல் அளவிற்கு சுத்தமான ஜாஸ் வடிவம் கொண்ட பாடலே தமிழில் இல்லை என்று சொல்லலாம். பாடலின் ஆரம்பத்தில் துவங்கும் பியானோ இசை, அதைத் தொடர்ந்த ட்ரம்பெட், சாக்ஸஃபேன் இவற்றுடன் இணையும் ட்ரம்ஸின் ரிதம் இவை எல்லாமே துல்லியமான ஜாஸ் வடிவங்கள். இந்தப் பாடலில் ஜாஸ்-க்கே அடிப்படையான கருவிகள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டிருக்கும். எனக்கென்னமோ இந்தப் பாடலுக்கு வடிவம் தந்தவர்கள் (இதை arrangement என்று சொல்வார்கள், அதாவது மெட்டை ஒருவர் தீர்மானித்தபின் அதில் வரும் இசைக்கருவிகளின் வரிசை மற்றும் எந்தெந்தக் கருவிகள் சேர்ந்திசைக்க வேண்டும் எவை தனியாகச் செல்ல வேண்டும் என்றெல்லாம் தீர்மானிப்பவர் வேறு ஒருவராக இருப்பார். சில டிஸ்ஸி கில்லெஸ்பி (Dizzy Gillespie) பாடல்களுக்கு க்வின்ஸி ஜோன்ஸ் (Qunicy Jones) செய்திருக்கும் அமைப்புகள் அற்புதமான இருக்கும். (இளையராஜாவைப் பற்றி எழுதும் பொழுது இவர்களின் பாடல் ஒன்றைப் போடுகிறேன்). எம்.எஸ்.விக்கு – கோவர்தனம், ஹென்றி டேனியல், ஜேஸப் கிருஷ்ணா என்று மூன்று உதவியாளர்கள் இருந்தார்கள். இவர்களில் ஹென்றி டேனியல் இதைப் போன்ற ஜாஸ் அல்லது பாப் இசையில் வரும் பாடல்களுக்கு arrangement செய்வார் என்று சொல்வார்கள். ஆனால் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் சேர்ந்து இசைத்தபொழுது எப்படி என்று தெரியவில்லை.

பாடலின் இடையீடுகளில் (interlude) வரும் இசையும் வழக்கமாக ஜாஸில் கேட்கும் ஒலி. இந்தப்பாடலில் ஒரு ஆச்சரியமான, இனிமையான விஷயம் ஆண்களின் கோரஸ் குரலை ரிதம் இசைக்கப் பயன்படுத்தியிருப்பது. வழக்கமான ஜாஸ் இசையில் பாஸ் கருவியைப் பயன்படுத்துவார்கள். விஸ்வநாதன் – ராமமூர்த்தி அதற்குப் பதிலாக ஆண்களின் குரலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இசையோடு சேர்ந்து வரும் ஈஸ்வரியின் குரல் பாடலின் சூழ்நிலையை நன்றாகக் காட்டுகிறது.

பாடல் : நீ என்பதென்ன (1965)
படம்: வெண்ணிற ஆடை
பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி
இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
[audio:Nee_Enbadhenna.mp3]

வரவேண்டும் ஒரு பொழுது பாடல் வந்து ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே அடுத்ததாக வந்த பாடல் இது. கொஞ்சம் வித்தியாசமான பாடல். ஈஸ்வரியின் குரல் ஜாஸின் வடிவத்திற்கு எப்படி ஒத்துப் போகிறது என்று காட்டுவதற்காக வரும் உதாரணம் இது. ஜாஸின் முன்னோடி ஆப்பிரிக்க நாட்டார் இசை வடிவில் பொய்க்குரலுக்கு முக்கியமான இடமுண்டு. ஆண்கள் தங்கள் குரலை அசாத்தியமான உச்சஸ்தாயிகளுக்குக் கொண்டு சென்று கத்துவது – falsetto – ஆப்பிரிக்கப் பழங்குடிகளிடையே முக்கியமான பழக்கம். (பால் சைமனின் க்ரேஸ்லாண்ட் ஆல்பத்தில் இருக்கும் பல பாடல்களில் ஆப்பிரிக்கப் பாடகர்கள் இப்படி falsetto -வில் கத்துவதைக் கேட்கமுடியும்). இதன் தொடர்ச்சியாக ஜாஸிலும் பொய்க்குரல்களுக்கு முக்கிய இடமுண்டு. எப்படி ஆண் பாடகர்கள் குரலை உயர்த்துகிறார்களோ அதேபோல் பெண்கள் தாழ்த்திப் பாடுவதும் வழக்கம். இந்தப் பாடலின் துவக்கத்தில் முதல் இரண்டு வரிகளை ஈஸ்வரி சற்றுத் தாழ்த்தி அழகாகப் பாடியிருப்பார். இதேபோல இந்தப் பாடலின் இடையில் வரும் சிரிப்புகள் மற்றும் எக்காளங்கள் எல்லாம் ஆரம்பகால ஜாஸ் பாடல்களில் மிகவும் முக்கியமான பகுதிகளாக இருந்தவை. இப்பொழுதைய ஜாஸ் பாடல்களில் இது குறைந்துபோயிருக்கிறது.

இந்தப் பாடலின் முக்கியமான விஷயம் – இதில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வரும் கிட்டார். சென்ற பாடலில் எப்படி சாக்ஸஃபோன், ட்ரம்பெட் முக்கியமான இடத்தில் இருக்கின்றனவோ அதேபோல் இங்கே கிட்டார் மிக அற்புதமாக பெண்குரலுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பாடலின் இடையீடுகளில் வரும் கிடார் இசை ப்ளூஸ் தாக்கம் அதிகம் பெற்ற Cream, Yard Birds, Led Zepplin போன்ற குழுக்களில் எரிக் க்ளாப்டன், ஜிம்மி பேஜ் போன்றவர்களின் இசையின் சாயலைக் கொண்டிருப்பதைக் கேட்கமுடியும்.

* * *

இந்த இரண்டு பாடல்களின் வரிகளும் சற்றே சோகம் ததும்பிய விரகம் அல்லது விரக்தியான கருத்துக்களைக் கொண்டிருபப்தைக் கவனிக்கலாம். கேளிக்கை விடுதிகள், பாலியல் தொழிலாளிகளின் வீடுகள் போன்றவற்றில் பாடப்படும் பாடல்கள் எல்லாமே ப்ளூஸ் எனப்படும் சோகம் தோய்ந்த பாடல்களாக இருக்கும். மிகவும் ஆச்சரியமாக இந்த இரண்டு பாடல்களுமே அதே சாயலில் வருபவை.

(தொடரும்)