miles davis

ஜாஸ் இசையில் அதிகம் பயன்படும் வாத்தியங்களாகப் பின்வருனவற்றைச் சொல்லலாம்; ட்ரம்பெட், சாக்ஸஃபோன், பியானோ, கிளாரினெட், கிடார் (அக்குஸ்டிக் கிடார், ஸ்லைட் கிடார், மாண்டலின்), பாஸ் கிடார் (டபுள் பாஸ் கிடார்), ட்ரம்ஸ், த்ராம்போன். நவீன ஜாஸ் இசையில் பயன்படுத்தப்படாத இசைக்கருவிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் ஆரம்ப ஜாஸ் வடிவத்தில் இந்தப்பட்டியலில் இருப்பவைதான் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டன. உதாரணமாக வயலின் மிகப் பிரபலமான இசைக்கருவியாக இருந்தாலும் ஜாஸில் இதற்கு அதிக இடமிருப்பதில்லை.

ஆரம்ப ஜாஸ்களில் மூன்று அல்லது நான்கு கருவிகளுக்கு மேலாக அதிகம் வாசிக்கப்பட்டதில்லை. பெரும்பாலான ஜாஸ் குழுக்கள் நான் சென்ற முறை சொன்னதுபோல நடந்துகொண்டு கருவிகளை இசைத்துச் செல்ல வேண்டியிருந்ததால் ட்ரம்பெட், க்ளாரினெட் போன்ற வாத்தியங்கள் பெரிதும் பயன்பட்டன. ஆரம்பகால நியூ ஆர்லியன்ஸ் வடிவத்தில் நம்மூரில் மௌத் ஆர்கன் என்று அழைக்கப்படும் ஹார்மானிக்கா ஜாஸில் நிறையப் பயன்பட்டது. (இதற்கு ஜாஸ் உலகில் ப்ளூஸ் ஹார்ப் என்ற பெயரும் உண்டு). ஆனால் பின்னாட்களில் இன்னும் சிக்கலான ஒலிகளை இசைக்கக்கூடிய கருவிகள் ஜாஸில் பிரசித்தமடைய, ஹார்மானிக்கா போன்ற எளிமையானவை மறைந்துபோயின.

ஜாஸ் இசையைப் பற்றி தெரிந்துகொள்ள பிரபலமான ஜாஸ் கலைஞர்களைக் கேட்பது மிகவும் முக்கியம். அதே போல ஜாஸிற்கே அடிப்படையான கருவிகளின் இசையையும் தெரிந்து கொள்வது நல்லது. எனவே இந்த வாரம் Brass Instruments என்று அழைக்கப்படும் காற்றுக்கருவிகளின் ஒலிகளில் சிலவற்றை அடையாளம் காணலாம். ஜாஸிற்கென்றே இருக்கும் மிகச் சில கருவிகளுள் இந்த பித்தளைக் கருவிகள் (இவற்றில் பெரும்பாலும் பயன்படுத்தபடும் உலோகம் பித்தளை என்பதால் …) முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. மேலும் இந்தக் கருவிக் கலைஞர்களே அதிகம் ஜாஸ் சூப்பர் ஸ்டார்களாக அடையாளம் காணப்பட்டார்கள்.

ட்ரம்பெட்

ஜாஸ் இசையைப் பற்றிப் பேசும்பொழுது மிகவும் முக்கியமான பெயர் – லூயி ஆர்ம்ஸ்ட்ராங். மிகச் சிறந்த ட்ரம்பெட் கலைஞரான இவர் ஜாஸின் மிகவும் முக்கியமான வாய்ப்பாட்டுக்காரரும் கூட. ஜாஸ் இசையை வரையறுத்ததில் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு முக்கிய இடமுண்டு. மைல்ஸ் டேவிஸ் 1950களில் துவங்கி ஜாஸின் போக்கையே மாற்றியமைத்தவர். டேவிஸின் பல படைப்புகள் ஜாஸ் உலகில் தனி வகையாகக் கிளைத்திருக்கின்றன. மிக முக்கியமாக இவருடைய Kind of Blue என்ற தொகுப்பு ஜாஸின் மிக முக்கிய்மான படைப்பாகக் கருதப்படுகிறது. இவர் இருவருமாக ஜாஸ் ட்ரம்பெட் தெய்வங்கள் என்று அறியப்படுகிறார்கள். இவர்களைத் தவிர முக்கியமான ட்ரபெட் கலைஞர்களாக நான்கருதுபவர்கள் – Buddy Bolden, Dizzy Gillespie, Freddie Hubbard, Wynton Marsalis . இவர்களுள் மார்ஸலிஸ் பற்றி தனியாக எழுத வேண்டும். ஒரு புறம் ஜாஸின் ஆதி வடிவத்தை மீட்டெடுத்தவர் என்று புகழப்படும் மார்ஸலிஸ் மறுபுறம் பழமைவாதி மாற்றம் என்பதே ஆதாரமாகக் கொண்ட ஜாஸைத் தேக்க நிலைக்குத் தள்ள முயற்சிப்பவர் என்று கடுமையான விமர்சனங்களைப் பெறுபவர்.

ட்ரம்பெட் : Bye Bye<
Artist : Miles Davis
Album: The Complete Blackhawk Sessions
[audio:md_byebye.mp3]

க்ளாரினெட்

ஆரம்ப காலங்களில் தனி ஜாஸ் வாத்தியமாக முக்கியத்துவம் பெற்றிருந்த க்ளாரினெட் பிறகு கூட்டத்தில் ஒரு வாத்தியமாகத் தள்ளப்பட்டுவிட்டது. பென்னி குட்மான் ஜாஸ் க்ளாரினெட் கலைஞர்களிடையே முக்கியமானவர். இவருக்கு King of Swing என்ற பட்டம் இருந்தது. 1950-60களில் புகழ் பெற்ற பெரும் குழுக்களில் (Big Band Jazz) க்ளாரினெட்டிற்கு மிகவும் முக்கிய இடமிருந்தது. அந்த காலங்களில் ஆர்டி ஷா மிகவும் முக்கியமானவராக இருந்தார்.

க்ளாரினெட் : Temptation
Artist : Artie Shaw and his Orchestra
Album : Begin the Beguine
[audio:shaw_temptation.mp3]

சாக்ஸபோன் பற்றி சென்ற வாரம் ஜான் கொல்த்ரெய்னைப் பற்றிச் சொல்கையில் கொஞ்சம் சொல்லியாகிவிட்டது. ஆனால் சாக்ஸில் பல வகைகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றியெல்லாம் யாருக்காவது தேவை என்றால் பின்னால் எழுதுகிறேன். சீக்கிரமாகத் தமிழ்த் திரையுலகிற்குச் சென்றாக வேண்டும்.

* * *

ஜாஸின் ஆதாரம் improvisation என்று சொல்லப்படும் நொடியில் மாறும் திறம்தான். தமிழ்த் திரையிசையில் (பொதுவாகத் திரையிசையில்) இசைக்கப்படுவது தொகுக்கப்பட்ட இசை (Composed music); அதாவது இசையமைப்பாளர் ஏற்கனவே தீர்மானித்து அதற்கேற்ற வகையில் பாடலாசிரியர் பாட்டெழுதி துல்லியமாகப் பிரிக்கப்பட்டு இசைக்கலைஞர்களிடம் சொல்லப்பட்டு இசைக்கப்படுவது. இந்த இடத்தில் ஜாஸின் அடிப்படை இதயமான சுதந்திர மாற்றங்களுக்குச் சாத்தியமில்லாமல் போவதால் திரையுலகில் ஜாஸ் என்பது ஒரு சொல்முரண்தானா?

இதைப்பற்றி அடுத்ததாக எழுதுகிறேன். இதிலிருந்து தமிழ் உதாரணங்கள் துவங்கும்.