இந்தத் தொடரின் முடியும் கட்டத்தில் ஜாஸின் அடிப்படை பாதிப்புகளைக் கொண்டு வேற்று இசைகளின் வடிவங்களையும் கொண்ட ஒன்றிரண்டு பாடல்களைப் பார்க்கலாம்.

பாடல் : தேடினேன் வந்தது…
படம் : ஊட்டி வரை உறவு (1967)
பாடியவர்: பி.சுசீலா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
[audio:thedinen.mp3]

அது தமிழ்த் திரையுலகில் ஸ்ரீதர் கோலேச்சிக் கொண்டிருந்த காலம். சொத்தைக் கதைகளை விறுவிறுப்பான திரைக்கதைகளாலும், அற்புதமான கலைஞர்களின் ஒத்துழைப்பில் மறக்கமுடியாத நகைச்சுவைப் பகுதிகளாலும் கோர்த்து வெற்றிமேல் வெற்றியாக ஸ்ரீதர் குவித்துக்கொண்டிருந்த காலம் அது. நான் தேடித் தெரிந்து பார்த்தவரையில் ஒரு இயக்குநரின் படங்களில் கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் அற்புதமான பாடல்கள் என்ற பெருமையில் ஸ்ரீதருக்குத்தான் முதலிடம். அது விஸ்வநாதன் (ராமமூர்த்தி) காலமான கல்யாண பரிசு, கலைக்கோவில், ஊட்டிவரை உறவு, சாந்தி நிலையம், உத்தரவின்றி உள்ளே வா, வீட்டுக்கு வீடு வரிசையாக இருக்கட்டும், பின்னர் இளையாராஜாவுடன் இணைந்து அழகே உன்னை ஆராதிக்கிறேன், நினைவெல்லாம் நித்யா-வாக இருக்கட்டும், அவ்வப்பொழுது உதிரியாக வந்து போகும் ஒற்றைப்பட இசையமைப்பாளர்கள் (உதாரணம் – ஆனந்த் ஷங்கர், யாரோ எழுதிய கவிதை) ஆக இருக்கட்டும் ஸ்ரீதரின் படங்களில் பாடல்கள் எப்பொழுதுமே சோடைபோனதில்லை.

1967ல் வந்த ஊட்டி வரை உறவு மறக்க முடியாத சாதனை படைத்த படம். வழக்கமான ஸ்ரீதரின் அதே காதல் ஃபார்முலாவுக்கு உயிர் கொடுக்க ஒரு பட்டாளமே இருந்தது. இவர்களில் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு (இவர் ஸ்ரீதரின் பள்ளித் தோழர்) மிகவும் முக்கியமானவர். இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள் மனதில் பதிந்துபோனவை. சிவாஜி, முத்துராமன், நாகோஷ், பாலையா, கே.வி. ராமசாமி இவர்களில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அற்புதமாக நடித்திருப்பார்கள். முக்கியமாகச் சொல்லவேண்டிய நகைச்சுவைக் காட்சியில் இவர்கள் ஒவ்வொருக்கும் இருந்த அற்புதமான காலப்பிரமாணம் (Timing Sense).

பாடலின் ஆரம்பத்தில் வரும் வசனத்திற்கிடையே இழையும் இசையில் மேற்கத்திய செவ்வியல் இசையின் பாதிப்பைக் கேட்கமுடியும். தொடர்ந்து வரும் சுசீலாவின் குரலுடன் ஜாஸின் தாக்கம் ஆரம்பமாகும். இதில் ஜாஸிற்கே அடிப்படையான ஊசல் (Swing) நிறைய இருப்பதைப் பார்க்க முடியும். திடீரென முடியும் வரிகளும் பின்னர் குரலோசையின் கதிக்குச் சற்றும் சம்பந்தமில்லாத வேகத்தில் இரண்டாவது நிமிடத்தில் வரும் கிபோர்ட்-அக்கார்டியன் கலவையின் இசை இருக்கும். இதேபோல “பெண்ணென்றால் தெய்வமாளிகை திறந்து கொள்ளாதோ” என்ற வரிவரும்பொழுதும் மீண்டும் பல்லவி திரும்பும்பொழுதும் பாடலின் கதி முற்றாக மாறி ஜாஸிற்கே உரிய வகையில் திசை திரும்பும். பாடலின் முடிவில் தீடீரென நின்று போகும் தன்மையும் தமிழ்த்திரையிசைக்குச் சற்று அந்நியமானதுதான்.

முழுமையாகப் பார்க்கும்பொழுது பாடலின்பல்லவி, சரணங்களின் அமைப்புகூட சற்று வித்தியாசமானதாகத்தான் இருக்கும். பாடியிருக்கும் சுசீலாவின் குரலைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. தமிழ் இசையுலகை கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குக் கட்டிப்போட்ட குரல் அது. நான் சுசீலாவைப் பற்றி எழுத ஆரம்பித்தால் அது நீண்டுகொண்டே போகக்கூடும். என்னைப் பொருத்தவரை திரையிசையில் குற்றங்கள் அதிகம் சொல்லமுடியாத ஒரே பெண் குரல் சுசீலாவினுடையது – இந்தப் பாடலுக்கும் அது பொருந்தும்.

* * *

இந்தப் பாடலை முழுமையாக ஜாஸ் பாதிப்பு மாத்திரமே கொண்டதாக வகைபிரிக்க முடியாது. இதில் சற்றே வெஸ்டர்ன் கிளாஸிக்கல், காஸ்பெல் போன்றவற்றின் தாக்கம் இருக்கிறது. காஸ்பெல் இசையின் தாக்கத்தை முழுமையாக ஜாஸிலிருந்து பிரித்துப் பார்ப்பது கஷடம். ஆரம்பகாலம் முதலாகவே ஆப்பிரிக்கர்களின் நாட்டர் இசையுடன் தொழுகைக்கு உரிய காஸ்பல் இசையும் ஒன்று சேர்ந்து உருவானதுதான் ஜாஸ்.

நான் இந்தத் தொடரை எழுதத் தொடங்கியபின் என் தொகுப்புகளில் இருந்த பல எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்க நேர்ந்தது. ஜாஸின் கூறுகளைத் தேடிக்கொண்டு விஸ்வநாதனின் பாடல்களூடே பயணித்தது ஒரு அற்புதமான அனுபவம். அவருடைய காலத்தை மனதில் கொண்டு பார்க்கும்பொழுதும் அந்தக் காலங்களில் பிற இசைவடிவங்களைக் கேட்கும்வாய்ப்புக் குறைவுகளை மனதில் கொண்டும் பார்த்தால் விஸ்வநாதனின் பரந்துபட்ட உலக இசையறிவு வியப்பைத் தருகிறது. வேதா, சங்கர் கணேஷ் போன்றவர்களின் இசைகளிலும் இப்படி பல வித்தியாசமான தன்மைகளைப் பார்க்க முடிகிறது. ஆனால் ஆழ்ந்து கேட்பவர்களுக்கு வேதாவும் பிறரும் ஏதாவது ஒரு மேற்கத்தியப் பாடலை அப்படியே வரித்துக் கொண்டு அதைத் தமிழில் தந்திருப்பது எளிதாகப் புலப்படும்.

மேற்கத்திய கிளாஸிக்கல் இசை, கர்நாடக இசை, ஜாஸ், ரிதம் அண்ட் ப்ளூஸ், காஸ்பல் என்று பல வடிவங்களை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு தனக்கே உரித்தான தனித்தன்மை கொண்ட இசைவடிவத்தைச் செதுக்கிக் கொண்ட மெல்லிசை மன்னரின் சாதனை வியப்பைத் தருகிறது. இந்தப் பாடல் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்வந்தது என்று யோசிக்கும்பொழுது பிரமிப்பாக இருக்கிறது.