இந்தத் தொடரில் ஏ.ஆர். ரஹ்மானின் இருவர் படத்தைப் பற்றி ஏற்கனவே நிறைய எழுதியாகிவிட்டது. இருந்தாலும் இன்னொரு முக்கியமான பாடலை ஒதுக்கிவிட்டுச் சென்றால் தொடர் எந்த வகையிலும் முழுமையடையாது.

பாடல் : வெண்ணிலா, வெண்ணிலா
படம் : இருவர்
பாடியவர் :ஆஷா போன்ஸ்லே
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
[audio:vennila.mp3]

ஒரு பாடலைக் கேட்கும் பொழுது அது வெளியான காலத்தை முழுவதுமாக மறைத்து ஒரு கடந்த காலத்திற்கு ரசிகர்களை இட்டுச் செல்வது இசையமைப்பாளருக்கு மாபெரும் சவால். வருங்கால இசை என்ற பெயரில் சிந்தஸைஸர்கள், எலெக்ட்ரிக் கிடார்கள், நவீன கணினிகளின் வெட்டியொட்டல்கள் இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு மிக எளிதாக ஜல்லியடிக்க முடியும். ஆனால் கடந்த கால இசையை அச்சு அசலாக மீட்டுருவாக்கிக் கொண்டுவருவது மிகவும் சிக்கலான காரியம். சாதாரண இசையமைப்பாளர்கள் இதற்கெல்லாம் முயற்சி செய்வதில்லை. ஆனால் ரஹ்மான், இளையராஜா போன்றவர்கள் இதை மிகவும் எளிதாகச் சாதிக்கிறார்கள். ரஹ்மானைப் பொருத்தவரை இருவர் இசைக்காக அவர் மிகவும் கர்வம் கொள்ளலாம். இளையராஜா நாயகனின் ‘நான் சிரித்தால் தீபாவளி’ , தர்மக்ஷேத்ரம் (தெலுகு) ஜானவுலே… போன்ற பாடல்களில் அதியற்புதமாக கடந்த காலத்தை நம் கண்முன்னால் கொண்டுவந்து காட்டியிருப்பார். இருவர் படத்தின் பூங்கொடியின் புன்னகை பாடலும் இன்றைய தெரிவாக வரும் வெண்ணிலா பாடலும் அற்புதமான காலப்பயணத்திற்கு நம்மை ஆட்படுத்துகின்றன.

அதிக சிக்கலில்லாத இசை வடிவம் கொண்டது இந்தப் பாடல். இந்தத் தொடரில் நாம் முன்னர் பார்த்த ‘ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி’ பாடலைப் போல இல்லாமல் நிறையவே இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கருவியின் இசையும் அற்புதமாக வேண்டிய இடத்தில் வந்து விழுகிறது. உதாரணமாக, சரணத்தின் வரிகளை ஒட்டி வரும் பியானோ-வின் இசையை உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள். பாடலில் பியானோ, சாக்ஸஃபோன், ட்ரம்பெட், ட்ரம்ஸ், மணியோசை, சேர்குரலிசை போன்றவை அதிதுல்லியமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் எத்தனைமுறை கேட்டாலும் இந்தப் பாடல் சலிப்பதில்லை.

சென்ற முறை நாம் பார்த்த இளையராஜாவின் ‘பூப்பூத்தது’ பாடலில் முன்னீடு, பல்லவி, முதல் இடையீடு, சரணம், இரண்டாவது இடையீடு… இப்படியாக எந்த இடத்திலும் வரும் மாற்றங்களில் எந்தவிதமான அதிர்வுகளும் இல்லாமல் மென்மையாகச் செல்லும். அது கூல் ஜாஸின் வடிவம் (கூல் ஜாஸ் சில சமயங்களில் ஸ்மூத் என்றும் அழைக்கப்படும்). மாறாக அதே அளவுக்கு மென்மையாக இருக்கும் இந்தப் பாடலில் குரல், வாத்திய மாற்றங்களுக்கும் இடையில் வரும் மாற்றங்களில் ஒரு விசேடமாக வரவழைக்கப்பட்ட கதிமாற்றம் இருக்கும். இது கிட்டத்தட்ட பீ-பாப்பில் பயன்படுத்தபடும் உத்தி. (ஆனால் இந்தப் பாடலை சுத்தமான பீ-பாப் என்று கருத வேண்டாம். பாப்பில் இன்னும் நேரடியாக இந்த மாற்றங்கள் தெரியும்). இந்தப் பாடலில் கூல், பாப் இரண்டின் உத்திகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இரண்டாவது இடையீடு அற்புதமான தன்னிச்சையான இசை. இதில் ட்ரம்ஸ், பாஸ், பித்தளைக் கருவிகள் எல்லாவற்றையும் பயன்படுத்தியிருக்கும் விதம் கவர்ச்சியானது. ஆஷாவின் சில தமிழ் உச்சரிப்புகள் சலிப்பைத் தந்தாலும் பொதுவில் இங்கே பாடலுக்கேற்ற குரலாக வந்து பொருந்தியிருக்கிறது. இந்தப் படத்தில் ஹரிணி (ஹலோ மிஸ்டர்), ஆஷா போன்ஸ்லே (வெண்ணிலா), சந்தியா (பூங்கொடியின்) ஒவ்வொன்றும் பொருத்தமான குரல் தெரிவுகள்.

* * *

ஜாஸைக் கேட்கத் துவங்குபவர்கள் கூல் ஜாஸிலிருந்து ஆரம்பிப்பது நல்லது என்று சொல்லியிருந்தேன். இனி கூல் ஜாஸ் துவங்கிய ஆல்பத்திலிருந்து ஒரு பாடலைக் கேட்போம்.

Song: Venus de Milo
Album : Birth of the Cool (1949)
Artists : Miles Davis – Trumpet, Gils Evans – Arrangement J.J. Johnson – Trombone, Billy Barber -Tuba, Joe Shulman-Bass, Gerry Mulligan – Baritone Sax, Kenney Clarke – Drums
[audio:venusdemilo.mp3]

பி-பாப்பின் ராஜாவான சார்லி பார்க்கருடன் இணைந்து வாசித்துக் கொண்டிருந்த மைல்ஸ் டேவிஸ்க்கு பீபாப்பில் வேண்டுமென்றே அதிரடிக்காக வரவழைக்கப்படும் மாற்றங்களும் தாவல்களும் சலித்துப் போயின. அந்த நேரத்தில் கில் இவான்ஸ் உடன் நட்பு ஏற்பட்டது. இருவருடைய உரையாடல்களும் பிபாப்புக்கு முற்றிலும் எதிர்த்திசையில் செல்லும் ஒரு ஜாஸ் வடிவத்தை உருவாகின – விளைவு கூல் ஜாஸின் பிறப்பு. ஜாஸ் உலகில் கில் இவான்ஸின் ஒழுங்கமைப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஜாஸின் போக்கை முற்றிலுமாக நிர்ணயித்த ஆல்பம் Birth of the Cool.

அதிரடி பாப்பில் சலித்துப் போயிருந்த மக்கள் உடனடியாக கூலைப் பிடித்துக் கொண்டர்கள். லூயி ஆம்ஸ்ட்ராங்க் போன்ற ஸ்விங் கலைஞர்களுக்கு எப்பொழுதுமே பீபாப்பில் நாட்டமிருந்ததில்லை. மைல்ஸ் டேவிஸ் இதற்காக வேண்டுமென்றே மட்டுப்படுத்தப்பட்ட சுருதிகளைக் கொண்ட ட்ரம்பெட்டை வாசிக்கத் தொடங்கினார். அதன் மீது ரசிகர்களுக்குத் தனியாத மோகம் ஏற்பட்டது.

உள்ளூர் நூலகத்தில் இந்த ஆல்பம் கிடைத்தால் தவறாமல் வாங்கிக் கேட்டுப்பாருங்கள்.