பாடல் : பூப்பூத்தது…
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷால், சோனு நிகம்,
இசை: இளையராஜா
படம்: மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
[audio:poo_pooththathu.mp3]

ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஜாஸ் இசை அடிப்படையில் இருவர் ஒரு மைல்கல் என்றால் இளையராஜாவுக்கு மும்பாய் எக்ஸ்பிரஸ். என்னுடைய கணிப்பில் சமீபத்திய இளையராஜாவின் இசைகளில் ஹே ராம்-க்கு அடுத்தபடியாக மிகவும் சிக்கலான இசையைக் கொண்டது மும்பாய் எக்ஸ்பிரஸ்தான். சென்ற வருடம் வரை என்னுடைய பெரிய ஆச்சரியம் இளையராஜா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஜாஸ் அடிப்படையில் பாடல்கள் எதையும் அமைத்ததில்லை. (என்னுடைய இன்னொரு பெரிய ஆச்சரியம் இன்னும் தீராத புதிராகவே இருக்கிறது. தமிழில் ஜாஸ் பாடல்களைப் பாடுவதற்கு எப்படி எல்.ஆர்.ஈஸ்வரி முழுத்தகுதி பெற்ற பெண்குரலாக அமைந்ததோ அதேபோல ஆண்குரலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருந்தும் இன்றுவரை அவருக்கு ஜாஸ் அடிப்படையிலான பாடல்கள் எதுவுமே தமிழில் கிட்டியதில்லை. Falsetto, Syncopation, yodeling, blues scale இவை எல்லாவற்றிலுமே எஸ்.பி.பி ஜொலிக்கக்கூடியவராக இருந்தும் இவர் திறமைக்குச் சவால்விடும் ஜாஸ் பாடல்களை யாரும் இவரிடம் கொடுக்காதது பெரிய ஆச்சரியம்).

அதே அளவு ஆச்சரியம் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது – இளையராஜாவுக்கு ஜாஸ் உத்திகளைச் சோதித்துப் பார்க்க. இதற்கு முக்கிய காரணம் இவர் கொடிகட்டிப் பறந்த காலங்களில் மதர்லேண்ட் பிக்சர்ஸ், பாரதிராஜா, பாக்கியராஜ், ராஜ்கிரன், ராமராஜன், என்று ஒரு பெரிய பட்டாளம் இவருக்கு ட்ரேட் மார்க் இசை என்று ஒன்றை உருவாக்கி அதனுள் அவரைக் கட்டிப்போட்டதுதான் என்று தோன்றுகிறது. என்னுடைய கணிப்பில் இளைராஜாவை இதுபோன்ற சோதனைகளுக்கு ஊக்குவிக்கக் கூடியவர்கள் இருவர்தான் – ஒருவர் இயக்குநர் ஸ்ரீதர் மற்றவர் கமலஹாசன். எப்படியோ மும்பை எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப ரீதியாகத் தமிழில் மிகவும் முக்கிய ஆல்பமாக அமைந்தது. படம் வர்த்தக ரீதியாகப் பெருவெற்றியைப் பெறாமல் போய் இளையராஜாவின் அற்புதமான இசை பேச்சிலாமல் ஒடுங்கிப் போனது வருந்தற்குரிய விஷயம்தான்.

சில ஆல்பங்கள் முதல் இரண்டு முறை கேட்கும் பொழுது பிடிக்காது, இன்னும் சில பிடிபடாது (ஏதோ நல்ல விஷயம் இருப்பதுபோலத் தோன்றும் ஆனால் உடனே அப்படியென்ன இருக்கிறது என்று அலட்சியப்படுத்தத் தோன்றும்) மூன்றாவதாக சில முதல் தடவை கேட்கும்பொழுது எரிச்சலூட்டும். – இந்த மூன்று வகையும் நாட்பட நாட்பட பிடித்துப்போகும், சில பிரமிப்பூட்டும். எம்.எஸ்.வி-ராஜா இணைந்து இசையமைத்த விஷ்வ துளசி இரண்டாம் வகையைச் சேர்ந்தது. ஆரம்பத்தில் இது ரொம்ப சாதாரணம் என்ற எண்ணத்தைக் கொடுத்தது, இப்பொழுது ஒரு வருடம் கழித்து என்னுடை காரில் அடிக்கடி இது இசைக்கப்படுகிறது. (ஜாஸ்க்கும் விஷ்வ துளசிக்கும் சம்பந்தமில்லை என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்). மும்பை எக்ஸ்பிரஸ் என்னைப்பொருத்தவரை சமீபத்தில் வந்த அதிசயங்களில் ஒன்று. முதலில் கேட்கும்பொழுது எரிச்சலூட்டியது, குரங்கு கையில் மாலை, ஏலேய் நீ எட்டிப்போ, வந்தே மாதரம் மூன்று பாடல்களும் முதல் முறையாகக் கேட்டபொழுது ராஜாவுக்கு நட்டு கழன்றுவிட்டது என்ற எண்ணம்தான் தோன்றியது. ஆனால் இப்பொழுது குரங்கு கையில் மாலை பாடல் பிரமிப்பூட்டுகிறது. ஆனால் இந்த ஆல்பத்தில் முதன் முறையாகக் கேட்கும்பொழுதே எவருக்கும் பிடித்துப் போகக்கூடியது ‘பூப்பூத்தது’ பாடலாகத்தான் இருக்கமுடியும். ஆனால் எத்தனை பேருக்கு இதன் இசை ஆழம் பிடிபடுகிறது என்பது கேள்விக்குரிய விஷயம்.

காரணம் இது அமைந்திருக்கும் Smooth Jazz வடிவம். ஸ்மூத் எந்தவிதக் கவலையும், இசை நுணுக்க விசாரங்களும் இல்லாமல் கேட்பவற்களுக்குக் கூட பிடித்துப்போகும். சொல்லப்போனால் ஜாஸ் வடிவம் தெரியாதவர்களுக்குக் கேட்க எளிதான வடிவம் ஸ்மூத் ஜாஸ்-தான். இதற்குக் காரணம் இது மேற்கத்திய செவ்வியல் இசை (Western Classical Music) -க்கு மிக அருகில் வருவது. அதே சமயத்தில் செவ்வியல் இசையின் விஸ்தாரமான சிக்கல்கள் குறைந்தது. மறுபுறத்தில் ஜாஸின் அடிப்படை சமாச்சாரங்களான Blue Notes, Syncopation, Polyrhythms போன்றவற்றை உள்ளடக்கினாலும் ஸ்விங்கிலோ, பீ-பாப்பிலோ வரும் ஒருவித அதிரடித்தனம் இல்லாமல் மென்மையான சுருதி மாற்றங்களை உள்ளடக்கியது.

மறுபுறத்தில் நுணுக்கமாக அனுகுபவர்களுக்குப் பிரமிப்பதை தரக்கூடியது இந்தப் பாடல். எத்தனைபேர் சரணத்தில் “தோன்றும் மறையும்” தொடங்கி வரும் ஆண்களின் சேர்குரலிசையை உன்னிப்பாகக் கேட்டிருப்பார்கள் என்று தெரியாது. அதேபோல பாடல் முடியும் பொழுது வரும் சேர்குரலிசையும் சிக்கலான, ஆனால் இனிமையான சேர்க்கை. பாடல் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வரும் கீபோர்ட், பாஸ் இரண்டும் மிக அற்புதமாக இருக்கும். குறிப்பாக முதல் இடையீடுகளில் வரும் கீபோர்ட் – ஆண்களின் சேர்குரலிசை கலவை சிக்கலான இசை வடிவம் கொண்டது.

இந்தப் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்த்தாகவேண்டிய இன்னொரு பாடல் இதற்கு முன்னால் வந்த ஏ.ஆர். ரகுமானின் ‘போர்க்களம் அங்கே…” (படம்: தெனாலி, பாடியவர்கள்: ஸ்ரீனிவாஸ், கோபிகா பூர்ணிமா). கிட்டத்தட்ட இதேபோல அதுவும் கேட்பதற்கு இனிமையான பாடல்தான் என்றாலும் போர்க்களம் பாடலில் எந்தவிதமான இசைச் சிக்கலும், உன்னதங்களும் கிடையாது. (அடுக்கடுக்காக வாத்தியங்களைச் சேர்ப்பது இப்போதைக்கு ரகுமானின் மிகவும் பழகிப்போன, புளித்துப்போன உத்தியாகத்தான் தோன்றுகிறது. இதில் எந்தச் சிக்கலும் இல்லாமல், கிட்டத்தட்ட ஒருவித பார்முலா வடிவமாக மாறிப்போயிருப்பதால் எனக்கு இந்தப் பாடல் எந்தவிதப் புதுமையையும் தரவில்லை). மிகச் சர்வசாதாரணமான வடிவத்தையும் இசைக்கோர்வையையும் கொண்டது அந்தப் பாடல். அதனுடன் ஒப்பிட இந்தப் பாடலில் வரும் கிபோர்ட், பாஸ், சாக்ஸ், சேர்குரல் இசை, ட்ரம்ஸ் (சிம்பல்) இவற்றின் பயன்பாடு எப்படித் திறமையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். இதுதான் நல்ல பாடலுக்கும் – மிக நல்ல பாடலுக்கும் இடையில் இருக்கக்கூடிய நூலிழை வித்தியாசம். போர்க்களம் பாடல் என்னைத் தூங்க வைக்கும் என்றால், பூப்பூத்தது பாடல் என் தூக்கத்தைப் போக்ககூடியது.

இந்தப் பாடலில் மிக மிக எரிச்சல் தரக்கூடிய விஷயம் ஆரம்பத்தில் வரும் சிறுவனின் குரல். இந்தத் தொல்லை தாங்கமுடியவில்லை. முந்தானை முடிச்சு தவக்களையில் தொடங்கியது இது என்று நினைக்கிறேன். பின்னர் ஏ.ஆர்.ரகுமானையும் இதே வியாதி பிடித்தது (ஆலங்கட்டி மழை – தெனாலி). எல்லாவற்றையும்விட இந்தப் பாடலில் இது உச்ச கட்ட அபத்தத்தை எட்டியிருக்கிறது. அந்தச் சிறுவனின் குரலைக் கேட்டால் நாலு கனிந்த பூவன் வாழைப்பழம், ரெண்டு கிளாஸ் ப்ரூன் ஜூஸ், பதினைந்து கிராம் எப்ஸம் சால்ட், மூனு ஸ்பூன் இஸப்கால், முப்பது மில்லி விளக்கெண்ணைய் எல்லாவற்றையும் ஒரு சேரக் கொடுத்து அவனுடைய மலச்சிக்கலைப் போக்கி அவனை உடனடியாகக் காப்பாற்றியே தீரவேண்டும் என்ற வெறிவருவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

பாடகர்களில் சோனு நிகம் பரவாயில்லை இரகம். இரண்டு மூன்று இடங்களில் “உர்றவதன், வற்றுமையைப் பிர்ரிந்தாலும்” – ரீதியில் அதிகமாக ‘ஒற்றிக்’கொண்டே போவது அபத்தமாக இருக்கிறது. மற்றபடி பாடலின் மூடுக்கு ஏற்ற குரல் அவரது. ஷ்ரேயா கோஷால் அற்புதமாகப் பாடியிருக்கிறார். சமீபகாலத்து இறக்குமதி சமாச்சாரங்களில் தமிழுக்கு இனிமை சேர்த்தவர்களில் ஷ்ரேயா மிக முக்கியமானவர். ஒருகாலத்தில் சுசீலா, வாணி ஜெயராம், ஜானகி – கடைசியாக சித்ரா போல இனிமேல் தனியொரு பாடகி தமிழில் பத்து வருஷத்திற்கு ஒட்டுமொத்த குத்தகை எடுக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் ஷ்ரேயாவிடம் அதற்கான திறமைகள் கட்டாயம் இருப்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும்.

நான் படம் பார்க்கவில்லை. இந்த வடதுருவத்தில் சன், ஜெயா இதற்கெல்லாம் சாத்தியம் இல்லை. எனவே எப்படிப் படம்பிடிக்கப்பட்டிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் கிழடுதட்டிப் போன கமலஹாசன் முகம் இந்தப் பாடலைப் பார்த்து இரசிக்கக் கொஞ்சம் இடைஞலாகத்தான் இருந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. இனி செத்து இறுகிப்போன (die-hard) கமலஹாசன் விசிறிகள் என் மீது பாயலாம்.