சமீபத்தில் இந்தியாவின் மத்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி குழுமம் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு தனது மத்திய பள்ளிகளில் இலவசக் கல்வி தருவதாக அறிவித்திருக்கிறது. ஒற்றைக் குழந்தையாக இருந்தால் முழு உதவியும், இரண்டு பெண்குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் பாதி உதவியும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. வீட்டில் ஒரு ஆண் குழந்தை இருந்தால் கூட இந்தத் தகுதி கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இருக்கும் பராபட்சத்திற்குப் பரிகாரமாக இந்த உதவி இருக்கும் என்று கட்டாயம் நம்பலாம் (என்னைப் பொருத்தவரை சிபிஎஸ்ஸி போன்ற மேட்டிமை பள்ளிகளைக் காட்டிலும் சராசரி நகராட்சி, கிராமப் பள்ளிகளில் பெண் கல்வியை ஊக்குவிக்க சிறந்த வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டியது முக்கியம்). ஆனாலும் இது மத்திய பள்ளிகளுக்கும் ஓரள்வு முக்கியம்தான் என்று தோன்றுகிறது.

மத்திய பள்ளி கனவில் தோய்ந்து குழந்தை சேர்ந்தவுடன் தேய்ந்துபோகிறவர்கள் பெரும்பாலும் மத்திய தரக் குடும்பங்கள்தாம். இங்கே எனக்குத் தெரிந்தவகையில் “பையனா இருந்தாலாவது செண்ட்ரல் ஸ்கூல்ல போட்டு கடனோ ஒடனோ வாங்கி பணங்கட்டாலாம்; இவளுக்கு நாளைக்கி கல்யாணம் பண்ண வேற காசு சேத்த்தாக வேண்டியிருக்கே” என்று சொல்லி பெண்களை மிக நன்றாகப் படித்த பெற்றோர்களே ஒதுக்குவதைப் பார்த்திருக்கிறேன். பையனாக இருந்தால் சில்ச்சார் ஆர் ஈ ஸியாக இருந்தாலும் பிலானி பிட்ஸாக இருந்தாலும் ஊக்கமாக அனுப்புபவர்கள் பெண்களை சென்னையை விட்டு திருச்சி ஆர் ஈ ஸிக்கு அனுப்பத் தயங்குவதைப் பார்க்கலாம். இந்த நிலையில் பெண் குழந்தைகளுக்கு இது மிக நல்ல வரம் என்றுதான் சொல்லவேண்டும். அதென்ன இரண்டு பெண்கள் இருந்தால் பாதி உதவி என்று தெரியவில்லை. இரண்டு பெண்களுக்கும் முழு உதவி கொடுக்க வேண்டியது முக்கியம் என்று தோன்றுகிறது.

இதற்காக சிபிஎஸ்ஸி-யைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகள் குய்யோ முறையோ என்று குதித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தங்கள் வருமானம் பாதிக்கப்படுமாம்.

“my school has to fend for 140 girls and I do not know whether we can afford it.” Some schools may opt to convert into matriculation or the ISCE Boards or make “subtle attempts to discourage girls’ admission to avoid losses.” Alternatively, she suggests, the Board ask schools to provide free education to one girl child per class based on economic criteria. The present order can lead to more girls flocking to good schools.

The number of boys to be admitted will come down, as the class strength is defined. “This can be discrimination against boys. This gender showdown can also reflect at home,” says Mrs. Parthasarathy.

என்று பத்மா சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் திருமதி பார்த்தசாரதி கதறியிருக்கிறார். இருந்துவிட்டுப் போகட்டுமே இதனால் இவர்களுக்கு வருமான இழப்பு என்று சொல்வதெல்லாம் அதீதமான புலம்பலாகத்தான் படுகிறது. பத்மா சேஷாத்ரியில் இரண்டு பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக (8000+5000) 13,000 மாணவர்கள் இருப்பதாக அவர்கள் தளம் தெரிவிக்கிறது. இதில் 140 ஒற்றை பெண்கள் என்பது ஒரு விழுக்காடு. ஒரு விழுக்காடு இழப்பை, 140 குழந்தைகளின் வருமானம் போவதாகச் சொல்லி அழுவது என்ன அயோக்கியத்தனம். (இவர்களெல்லாம் கல்விச் சேவைக்கு விருதுகள் வாங்கியவர்கள்). இதை எழுதுவதற்காகத் தேடியபொழுது அவர்களின் மில்லேனியம் பள்ளி என்ற இன்னொரு பள்ளியின் கட்டணம் எனக்கு மயக்கத்தை வரவழைத்தது. எல்கேஜி படிக்க 20,000 ரூபாய் நுழைவுக் கட்டணமும் மூன்று பருவத்திற்கும் தலா எட்டாயிரம் ரூபாய் என வருடத்தில் 45,000 ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் 2000 மாணவர்கள் என்று வைத்துக்கொண்டால் இவர்களது வருடாந்திர வருமானம் (2000 x 45,000) 90,000,000 ரூபாய்கள். மலைப்பாக இருக்கிறது. இப்படியொரு பணம் புழங்கும் இடத்தில் 140 பெண் குழந்தைகளுக்கு உதவி செய்வதற்கு அழுவது கேவலமாக இல்லை!?

நம்மூரில் ஒற்றைப் பெண் குழந்தைகள் மிகக் குறைவு. முதலாவது பெண்ணாகப் பிறந்துவிட்டால் கொள்ளி போட, பேர் சொல்ல, குடும்பத்தைக் காக்க, என்று தலைகீழாக நின்றாவது (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்) இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்வார்கள். சொல்லப்போனால் நம்மூரில் ஒற்றைக் குழந்தைக் குடும்பமே மிகவும் குறைவுதான். இப்படியிருக்கும் பொழுது ஆண்கள் இல்லாத குடும்பத்தில் எல்லா பெண்களுக்கும் உதவி என்று அறிவிக்க வேண்டியது முக்கியம். திருமதி பத்மா சேஷாத்ரி “இது ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாரபட்சம்” என்று வேறு சொல்லியிருப்பது இப்படிப்பட்ட பணக்கஷ்டத்திலும் அவரது தளராத நகைச்சுவை உணர்வைக் காட்டுகிறது.

இன்னொரு பரமாத்மா

Making a case for a grant component from the Government, V. Venkatachalam, CBSE school principal, says that because of free education “parents will seek to shift more girl children from government or aided schools to our institutions. Government schools will see reduction in strength.”

என்று வேறு அழுதிருக்கிறார். எவ்வளவு உத்தமமான விஷயம். ஏழைக்குழந்தைகளுக்கு முழு இலவசக் கல்வி கொடுக்கும் அரசாங்கத்தின் சுமையைப் பகிர்ந்துகொள்ள பணம் கொழுத்த தனியார் பள்ளிகளுக்கு எவ்வளவு நல்ல வாய்ப்பு. என்னைக் கேட்டால் தனியார் பள்ளி ஆசிரியர்களை மூன்றாண்டுக்கு ஒருமுறை sabbatical முறையில் கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் பயிற்றுவிக்க அனுப்ப வேண்டும் என்று சொல்வேன். இதன் மூலம் அவர்களுக்கு உண்மை நிலை தெரியவரும்.