CBC Radio Show – பத்ரியின் கருத்துக்களை முன்வைத்து.
by வெங்கட் • March 31, 2005 • கனடா • 16 Comments
பத்ரி – நான் இதற்கு நிறைய எதிர்வினைகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். குறைந்தபட்சம் உங்களிடமிருந்தாவது, இரண்டு நாட்கள் கழித்து வந்திருக்கிறது. பெரியதாகிவிட்டதால் வெட்டிவெட்டிப் போடுவதற்குப் பதிலாகத் தனிப்பதிவாக.
பொதுவாகவே இந்தத் தொடரை நீங்கள் கடுமையான சார்நிலை விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. என்னைப் பொருத்தவரை இது ஒரு தரமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய புரிதலுக்கான துவக்கம் என்ற வகையில் பார்க்க வேண்டும். கொஞ்சம் உற்று நோக்கினால் உலகில் கனடாவைத் தவிர்த்த பெரும் நாடுகளில் இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு (ட்சூனாமியின் விழிப்புக்குப் பிறகு) தமிழர் பிரச்சனையை யார் பேசியிருக்கிறார்கள்?
முதலாவதாக, ஏன் சிங்களவரை, இந்தியர்களைப் பேசவிடவில்லை என்பது இங்கே பொருந்தாது. கனடாவில் சிங்களவர் ஒரு பொருட்டேயில்லை. அதேபோல கனடாவின் கண்ணோட்டத்தில் ராஜீவ் காந்தி கொலையைத் தவிர இந்தியா இந்தப் பிரச்சனையில் ஒரு முக்கிய ஆட்டக்காரர் இல்லை. (ஏனென்றால் இந்திய-கனேடிய பேச்சுவார்த்தைகளில் இந்தியா இதை நுழைக்காது). மறுபுறத்தில் வந்திருக்கும் மூன்று பின்னூட்டங்களும் சிங்களவரிடம் இருந்து என்பதால் நிகழ்ச்சியில் விடுபட்டுப்போன இவர்களுக்கு ஒரு குரல் கிடைத்திருகிறது.
பின்னூட்டம் இடாததது தமிழர்கள் குறையே தவிர சிபிசியின் நோக்கத்தில் எந்தவிதமான தவறும் இல்லையல்லவா? ஏன் தமிழர்கள் பின்னூட்டமிடவில்லை – இங்கேகூட அவர்களிடையே கருத்துச் சுதந்திரம் இல்லையா? இது உண்மையாகும் பட்சத்தில் இது மிகவும் அச்சத்தைத் தருவதாக இருக்க வேண்டும்.
முக்கியமான விஷயம், இது ஆறு பத்து நிமிடங்கள் நிகழ்ச்சி. இதில் ஆதிகாலத்திலிருந்து பிரச்சனையின் வரலாற்றைச் சொல்வது சாத்தியமில்லை. உண்மையில் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் சராசரி கனேடியர் வெளியிலிருந்து இலங்கையின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள ஆர்வமூட்டுவதுதான். (அரசு மானியம் பெற்று சார்பில்லாமல் இயங்கும் சிபிசிக்கு இதைத் தவிர வேறு நோக்கம் என்னவாக இருக்கமுடியும்).
நீங்கள் இந்த நிகழ்ச்சியை புலிகளுக்கு எதிரானதாக இருப்பதாகச் சொல்கிறீர்கள். எனக்கு மிகவும் சமநிலையுடன் அணுகியிருப்பதைப் போலத்தான் தோன்றுகிறது. முதல் பகுதி நேரடியாகச் சென்று பார்த்த கனேடியர் (தெற்காசிய வம்சாவளியில் வருபவரை இதற்கு அனுப்பியது நல்ல திட்டம்) சொல்லும் வர்ணனை. எப்படி சராசரி ஈழத்தமிழர்களுக்கு கனடா முக்கியம் என்பதைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறார். கனேடியர்களுக்கு ஆர்வமூட்ட மிகச் சிறந்த வழி.
புலிகளுக்கு ஆதரவாக தந்தை பிரான்சிஸ் சேவியர் என்றால் புலிகளுக்கு எதிராக ஆக்ஸ்வொர்த்தி. இடையில் மெக்கின்ஸி கழகத்திலிருந்து ஒரு கல்விமானின் கண்ணோட்டத்தில் பிரச்சனையின் தீவிரம். ஜான் தாம்ஸன் எப்படி கம்பியின்மேல் நடக்கும் செயலை புலிகள் நன்றாகச் செய்கிறார்கள் என்றுதான் விவரிக்கிறார். அவருடைய கவலை நாளை பிற நாடுகளிலிருந்து வரும் போராளிக் குழுக்கள் கனடாவில் இதேமுறையைக் கையாளத் தொடங்கினால் அவர்களிடம் புலிகளைப் போன்ற அணுகுமுறையை எதிர்பார்க்க முடியாது என்பதுதான்.
மறுபுறத்தில் சராசரி கனேடியர்களுக்கு தமிழர் குழுக்களின்மீது பயம் இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்வரை ஸ்கார்புரோ (டொராண்டோ பெருநகரின் கிழக்குப் பகுதி – தமிழர்களின் மையம்) தெருவில் தமிழ் இளைஞர்கள் ஒருவரையொருவர் சுட்டுக் கொண்டார்கள். தெருவில் சுடுவது, பள்ளியில் சுடுவது என்பது அமெரிக்காவின் தனிக்குணமாக இங்கே அறியப்படுகிறது. கனடாவிற்கு ஒவ்வாதது. இந்த நிலையில் ஜெயராஜ் சொல்வதைப் போல கால் முறிக்கும் சம்பவங்கள் சராசரி கனேடியருக்கு அதிர்ச்சியைத் தருகின்றன. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கனேடியரின் சகிப்புத்தன்மைக்கு உலக அளவில் இன்னொரு ஒப்புமை கிடையாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
உங்கள் இரண்டு கருத்துக்கள் மூலமாக நீங்கள் இதைப் புலிகளின் மீதான எதிர்ப்பு என்று சொல்கிறீர்கள். முதலாவது சிறுவர்களை ஈடுபடுத்துவதன் தீவிரத்தை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். உலகம் முழுவது செய்கிறார்கள் என்பதால் இதை நியாயப்படுத்துகிறீர்களா? இப்படியான உங்கள் அணுகுமுறை எனக்கு வியப்பளிக்கிறது. என்னைப் பொருத்தவரை சிறுவர்களிடம் துப்பாக்கி தருவதை எப்படியும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதைத் தவிர என்னிடம் இரண்டாம் வார்த்தை கிடையாது. முற்றுப்புள்ளி. இதற்குப் பிற நாடுகளுக்குப் போகவேண்டாம், வரலாற்றின் இரத்தக்கறை ஏடுகளைப் புரட்டிப் பார்க்க வேண்டாம்.
எனவே குழந்தைப் போராளிகளைப் பற்றிய ஆக்ஸ்வொர்த்தியின் கவலையை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த நாட்டில் என் எட்டுவயதுப் பையன் கடையில் சென்று தீப்பெட்டி வாங்கமுடியாது (நம் சிவகாசியில் தீப்பெட்டி தயாரிப்பவர்களே சிறார்கள் என்பது ஒவ்வொரு முறையும் வீட்டில் விளக்கேற்ற தீப்பெட்டி வாங்கும்பொழுது என் மனதைப் பிழியும்). அப்படியான நாட்டின் அமைச்சர் என்ற முறையில் ஆக்ஸ்வொர்த்தியின் கவலை மிகவும் இயல்பானது; நேர்மையானது. கவனிக்கவும் இது புலிகளின் மிதான முழுத்தீர்ப்பு இல்லை. அவர்களின் ஒன்றிரண்டு செயல்முறைகளின் மீதான விமர்சனமும், விசனமும் மாத்திரமே. இதைச் செய்வது அறிவுசார் நேர்மை எனக் கருதுகிறேன். நோக்கங்களை ஒத்துக் கொண்டாலும், வழிமுறைகளின் மீதான விமர்சனம் அவசியமல்லவா? ஆக்ஸ்வொர்த்திக்கு இப்படிப் பேச இடம்கொடுத்ததை நாம் முதலில் ஆராயவேண்டும், வெறுமனே அவர் பேச்சை விமர்சிப்பது முக்கியமல்ல.
இரண்டாவதாக பிற நாட்டைச் சேர்ந்த குழுக்களும் கனடாவில் கை, கால் ஒடிப்பதில்லையா என்று கேட்கிறீர்கள் (அதன் வழியே இந்தச் செயல்களை நியாயப்படுத்துவதைப் போன்ற தொனியும் இருக்கிற்து). உண்டு கனடாவில் பல வம்சாவளியினர் இவற்றில் ஈடுபடுகிறார்கள். இஸ்லாமிய, சீன, சீக்கிய, வியட்நாமிய, மேற்கிந்திய, சோமாலிய, தீவிரவாதக் குழுக்கள் உண்டு. அவர்களும் கை, கால் முறிக்கிறார்கள். இன்னும் இரசியமாக, இதையெல்லாம்விடக் கொடுமையாகத் – தேவையே இல்லாமல் – இத்தாலிய மாஃபியாக்களும் யூதர்களின் லாபியும் செயல்படுகிறன. இதெல்லாவற்றையும் பற்றி சிபிசி நிறையப் பேசுகிறது. மெக்கின்ஸி இன்ஸ்டிட்யூட்டும், ஆக்ஸ்வொர்த்தியும் கூர. ஆனால் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் தமிழர்கள். அதில் “ஆமாம், சீனர்களும் இப்படித்தான் செய்கிறார்கள்” ரீதியில் பேசி புலிகளுக்கு ஆதரவு சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அப்படியென்ன முடை அவர்களுக்கு.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பிறரைப்பற்றியெல்லாம் அப்படிக் கதைத்தாகிவிட்டது. இது தமிழ்ர்களுக்கான முறை. இதில் பொதுமைப்படுத்தி, இந்த வன்முறைகளுக்கு உலகப்பொதுமை பட்டம் சூட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பது வியப்பளிக்கிறது.
உண்மையில் இலக்கற்ற வன்முறை, சிறுவர்களை ஈடுபடுத்துவது போன்ற விஷயங்கள் இல்லாத நிலையில் கனடாவில் வசிக்கும் பல ஈழத்தமிழர்கள் தார்மீக உரிமையுடன் கனேடிய அரசாங்கத்தைத் தலையிட வற்புறுத்துவார்கள். அதற்கும் மேலாக அவர்களுக்கு இப்பொழுது அபரிமிதமான ஜன்நாயக பலமும் இருக்கிற்து (ஒரு லடசம் ஓட்டுகள்). ஆனால் கனடாவில் இந்த அளவிற்கு தமிழர்கள் தங்கள் சக்தியைத் திரட்டுவதில்லை. இது வருத்தத்திற்குரிய விஷயம்.
பின்குறிப்பு: 1. இந்தப் பதிவும் விளக்கங்களும் என்னுடைய தனிப்பட்ட கருத்துகள் இல்லை. சிபிசியின் கண்ணோட்டத்திலிருந்து நான் இதை அணுகும் முறை. இந்த நிகழ்ச்சியை சிபிசி வேறெப்படிச் செய்திருக்க முடியும் என்று சிந்திப்பதன் வெளிப்பாடு. தயவு செய்து நண்பர்கள் இதைத் தனிப்பட்ட முறையில் தமிழ்ப் போராளிகள் மீதான என் விமர்சனமாகப் பார்க்க வேண்டாம்.
2. மூன்றே மூன்று கடிதங்கள் சிங்களவரிடமிருந்து மாத்திரமே. இப்படித் தமிழர்கள் ஆர்வம் காட்டத நிலையில் தனிப்பட்டு தங்கள் நிலையை விளக்காத நிலையில் சிபிசியின் இந்த ஆரம்பம் முளையிலேயே நீர்த்துப்போக வாய்ப்பிருக்கிறது. எனவே தனிப்பட்ட முறையில் இனியாவது தமிழ் நண்பர்கள் (குறிப்பாக கனடாவில் வசிப்பவர்கள்) சிபிசி தளத்தில் சென்று இந்த ஆர்வமூட்டும் நெருப்பு அணையாமல் தூண்டவேண்டும் என்பது என் ஆசை.
எனது கருத்தை நாளை எழுதுகிறேன். இரண்டுமே அவசியமான பதிவு. நன்றி வெங்கட்.
//முதலாவது சிறுவர்களை ஈடுபடுத்துவதன் தீவிரத்தை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். உலகம் முழுவது செய்கிறார்கள் என்பதால் இதை நியாயப்படுத்துகிறீர்களா? இப்படியான உங்கள் அணுகுமுறை எனக்கு வியப்பளிக்கிறது. என்னைப் பொருத்தவரை சிறுவர்களிடம் துப்பாக்கி தருவதை எப்படியும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதைத் தவிர என்னிடம் இரண்டாம் வார்த்தை கிடையாது.//
போர்ச்சூழலில் இருக்குமொரு நாட்டில், கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு எதிரியை அடிக்க புறப்படும் நிலைமை தான் இருக்கும். இதற்காக அங்கே, சிறுவர்கள், சிறுமிகள் என்று தனியாய் விட்டு வைக்க இயலாது. தனிப்பட்ட முறையில் உங்களின் கருத்தோடு முழுமையாய் ஒத்துப் போவேன். ஆனால், தன் நாட்டிற்கான போர் என்று வரும்போது சற்றே விஷயம் தெரிந்த எவரும் போராட துணிவது இயல்பு. நான் சிறுவர் போராளிகளை நியாயப்படுத்தவில்லை. நான் இங்கு சொல்லவருவது, நம்மால் (நீங்கள், நான், இந்தியாவில் இருப்பவர்கள்) போரின் கோர முகங்கள் முழுவதுமாக தெரியாது. சற்றே காஷ்மீர் பக்கம் திரும்பினால் தெரியும், தீவிரவாதிகளாக கொல்லப்படுவர்களின் சராசரி வயது 16- 24க்குள். இதனை எவ்வாறு பார்ப்பீர்கள்?
போரில் தன் ஆண்மக்களை இறந்த தாய், தன் கடைசி மகனையும் போருக்கு அனுப்புவாள் என்று புறநானூறு கூறுகிறது. ஆகவே, நீங்களோ இல்லை நானோ எந்த கண்ணாடிப் போட்டு பார்க்கிறமோ, அதற்கேற்றாற் போல் நம் பாதிப்புகள் மாறும். அதனால் இதனை நீங்கள் பார்க்கும் கோணத்தில் பார்க்க முடியாது என்றுதான் என்னால் சொல்ல முடியும்.
நாராயணன் – போரின் கோர முகங்கள் நமக்குத் தெரியாதுதான். ஆனால் இப்படி ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட முன்னனுபவம் வைத்துக் கொண்டுதான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? (குடியின் தீங்கைப்பற்றிச் சொல்ல குடித்துக் கெட்டுப்போயிருக்க வேண்டிய அவசியமில்லையே). குழந்தைகளைப் போரில் ஈடுபடுத்துவது தவறு அது ஈழத்திலிருந்தாலும், கஷ்மீரத்திலோ, பலஸ்தீனத்திலோ, கொஸவோவோ, எங்கும் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
புறநானூற்றுக் காலத்திலிருந்து நாம் வெகுதொலைவில் வந்துவிட்டோம். சதிக்குகூட வரலாறு இருக்கிறது. அன்றைய போர் முறை வேறு, இன்றைக்கு வேறு. கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு அடிக்கும் காலத்திலிருந்து மாறிப்போய் எந்திரங்களுக்கும், அவற்றுக்கும் மேலாகத் தந்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் நாளில் புறநானூறு உளவியலை வைத்துக்கொண்டு பார்க்கமுடியாது. இதற்கும் மேலாக போர் தர்மங்கள் என்றும் இருக்கின்றன (வல்லான் வைத்ததே சட்டம் என்றிருந்தால் இராக்கில் பொம்பளையை விட்டு டவுசரை அவிழ்க்கவிட்ட அமெரிக்காவையும் போரின் கோரமுகங்கள் என்றும் வீட்டைவிட்டுப் பிரிந்து பாலையில் உழலும் உளவியல் ரீதியிலும் நியாயப்படுத்தலாம்). ஆனால் உண்மையில் இப்படி பிறழல்கள் நடக்கும்பொழுது பிறர் தெருட்டுவது இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாக அல்லவா ஆகும்.
படிப்படியாக நாகரீகம் வளரும் நிலையில் குழந்தைகள், பெண்கள், ஊனமுற்றோர், வயோதிகர், நோயாளிகள் என்று மெலிந்தவர்களுக்கான பாதுகாப்பைப் பெற்றுத்தருவது அறிவுள்ளவர்களின் கடமையாக ஆகிறது. இந்த நிலையில் இவற்றைப் போரின் கோரமுகம் என்ற பார்வையில் பொதுமைப்படுத்துவது நியாயமின்மையாகப் படுகின்றது.
போராளிகளின் மனநிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால் குறுகியகால ஆதாயத்திற்காக தங்கள் தார்மீக நிலையை அவர்கள் இழப்பது வேதனையளிக்கிறது.
செய்திகளின் வாயிலாக மட்டுமே நமக்குப் போர் குறித்த சில விஷயங்கள் தெரிந்தாலும் போரின் உண்மையான வலி தெரியாது. இருப்பினும், போரில் சிறாரை ஈடுபடுத்துவது (நிர்பந்திப்பது?) என்பது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. இது புலிகளுக்கு எதிராகப் பேசுவோருக்கு மேலும் ஒரு துருப்புச் சீட்டாக வேறு பயன்படுகிறது. போரில் சிறுவர் சிறுமியரை ஈடுபடுத்துவது தவறு என்ற வாதத்தை முற்றிலும் ஏற்கிறேன்.
வேறு: வெங்கட், தரக்கணிப்பில் சொடுக்கினால் Sorry! This blog is not yet listed in thamizmanam.com என்ற பிழைச்செய்தி வருகிறது?!
Venkat,
I got this for one of my email to you:
THIS IS A WARNING MESSAGE ONLY.
YOU DO NOT NEED TO RESEND YOUR MESSAGE.
Delivery to the following recipient has been delayed:
vvenkat@……
Message will be retried for 2 more day(s)
Whats happening?
ராதா சொல்வது fancy url plugin காரணமாக வருவது. தலைப்பில் ரோமன் எழுத்து வரும்போது மட்டுமே அதுக்கு உயிர்வரும்:( )
வெங்கட், உங்கள் பதிவுக்கு நன்றி!
நான் இங்கு குறிப்பிட விரும்புவது ஒன்றுதான். குழந்தகளை போரில் ஈடுபடுத்துவது மிகவும் தவறுதான். கண்டிக்கப்படவேண்டியதுதான். ஆனால் இந்தக் குழந்தைப்போராளிகள் உருவாக்கத்தை கண்டிக்கும் போது ஏராளமான குழந்தைகளை கொன்று குவிக்கவும், அனாதைகளாக்கவும் காரணமாக இருக்கும் அரசுகளை யாரும் குற்றம் சொல்வதில்லை (இந்தக்க் குழந்தை போராளிகளைப் பற்றிய எண்ணீக்கைகளை வழங்குவது, அதை பிரபல்யமாக்க இந்து மாதிரி ஊடங்கங்களை பயன்படுத்துவது போன்ற உத்திகளை அரசுகள்கையாளும் போது, குழந்தைகளைக் கொன்ற அரசுகளை விமர்சிக்க, கண்டிக்க அதே ஊடகங்களில் தாய்மார்களுக்கும்,அரசு சாரா இயக்கங்களுக்கும் இடமிருக்கவேண்டும். ஆனால் எத்தனை முறை, ஒரு முனைப்படுத்தப்பட்டதாக அந்தவிமர்சனங்கள் இந்து (Hindu) மாதிரி ஊடகங்களில் வருகின்றன. இங்கு இந்துவை ஒரு உதாரணமாகக் காட்டியிருக்கிறேன்.
தாலிபான் புத்தர் சிலைகளை உடைத்ததை ஊடகத்தின் வழி ஊதி அனைத்து நாடுகளின் கண்டனத்தையும் பெற்றுக்கொடுத்த ஊடகங்கள், அதே தாலிபான் குழந்தகளுக்கு பால் பவுடர் உலக நாடுகளைக் கேட்டு நின்றபோது யாரும் செவிமடுக்கவில்லை. ஆனால் புத்தர் சிலைகளைக் காப்பாற்ற ஐ.நா. பணவுதவி செய்ய தயாராக இருந்தது. அதனால் தான் அச்சிலைகள் தாக்கவும் பட்டன. இராக்கிலும், உலகென்ஹ்கிலும் குழந்தைப்போராளிகளைப் பற்றி பேசுவோர், அமெரிக்க இராக்குக்கு குளோரினை தடைசெய்து 5 இலட்சம் குழந்தைகள் (மட்டும்) சாக வழி செய்ததை ஏன் பேசுவதில்லை? அதை அறிந்தே அமெரிக்கா செய்தது.
இதனால் நான் சொல்லவருவது குழந்தைப்போராளிகளைப்பற்றி பேசுவோர்கள், கண்டிப்பவர்கள் அங்கேயே அரசு பயங்கரவாதத்தால் கொல்லப்படும் குழந்தைகளைப் பற்றி பேச ஆரம்பிக்கவேண்டும்.
அப்போதுதான் குழந்தைக் கொலைகள் உண்மையில் நிறுத்தப்படும்.
வெங்கட்,
நல்ல வேளையாக இந்தப் பதிவை நீங்கள் எழுதினீர்கள், அல்லது உங்கள் முந்தையப் பதிவைப் பார்த்திருக்க மாட்டேன். அருமையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். முதன்முறையாக உங்கள் பதிவில் பின்னூட்டமிடுகிறேன் – தமிழ் லினக்ஸ் முதல் அறிவியல் தமிழ் படைப்புக்கள் என நீங்கள் பல ஆக்கபூர்வமான காரியங்கள் செய்வதை சில வருடங்களாக பலரிடம் பாராட்டிக் கூறி வந்திருக்கின்றேன். ஒரு முறை உங்களை கனடா தமிழ் TVI நிகழ்ச்சியிலும் பார்த்திருக்கிறேன். உங்கள் ஆக்கபூர்வமான பணிகளுக்கு என் வாழ்த்துக்கள்.
நிற்க, சமூக மற்றும் அரசியல் சம்பந்தமான உங்கள் கருத்துக்களில் நான் மாறுபடுகிறேன். உங்கள் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்துவோர் ஏற்படுத்தியுள்ள உலக நியாயங்களை (அவற்றில் நிச்சயம் சில நியாயங்கள் உண்டு என்று நானும் ஒத்துக்கொள்கிறேன்) மட்டுமே பிரதிபலிக்கின்றீர்கள்.
உலக நியாயங்கள் என்று வரையறுக்கப் பட்டவை எல்லாமே ஒடுக்கப்பட்ட இனம் அல்லது வர்க்கப் பார்வையிலிருந்து அணுகாமல், ஒடுக்கிய இனம் அல்லது வர்க்கத்தின் உள்ளிருந்து தோன்றிய மனித நேயவாதிகளின் பார்வையிலிருந்து வந்தவை. மனித நேயம் என்றும், நியாயம் என்று அவர்களுக்கு படுபவையெல்லாம் வெறும் மேல்தட்டு வர்க்கப் புரிதலிலிருந்து வெளிப்பட்டவை – they are pro-establishment.
அதனால்தான் இந்தியாவிலுள்ள ஓட்டு வாங்கும் பொதுவுடைமைக் கட்சிகள் கூட ஈழப்பிரச்சினையின் மொத்தக் காரணமே புலிகள்தான் என்ற புளுகு மூட்டையை வைத்துக் காலம் தள்ளுகின்றனர். தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கண்ணை மூடிக்கொண்டு இலங்கையின் இறையாண்மைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் போன்றோரின் பம்மாத்துப் பிரச்சாரத்துக்கு பயன் படுமாறு அமைகின்றது சிறார்களை ஆயுதம் ஏந்தச்செய்தல் என்ற குற்றச்சாட்டு.
தங்கமணி, நீங்களே இந்துவை இலங்கை தூதரகம் என்று கூறிவிட்டு அவர்களிடம் இலங்கை அரசைப் பற்றிய விமர்சனத்தை எதிர் பார்க்கலாமா?
நன்றி – சொ. சங்கரபாண்டி
என் நெடிய பதில் என் பதிவில் இங்கே.
ஹ்ம்ம். சரியாக வரவில்லை. இங்கே:
http://thoughtsintamil.blogspot.com/2005/04/whose-truth-response-to-venkat.html…
[6] தங்கமணி – எனக்குத் தோன்றியவரை ஒரு தவறை இன்னொரு தவறுகொண்டு நியாயப்படுத்தக் கூடாது. போராளிகள் குழந்தைகளைப் பயன்படுத்துவதைத் "தவிர்க்க முடியாதது" என்று சொல்பவர்கள்கூட அரசாங்கங்கள் சிறுவர்கள் நலன்களைக் காற்றில்விடுவதைக் கண்டிக்க வேண்டும்.
அமெரிக்காவின் பல நிலைப்பாடுகளையும் இரட்டை முகங்களையும் நான் தொடர்ச்சியாக விமர்சித்து வருபவன். (அதன் மூலம் எனக்கு எழுதிக்கொண்டிருந்த சில நண்பர்கள்கூட நிறுத்திவிட்டார்கள்). கொஞ்சம் நாட்களுக்கு இதை நிறுத்திவைத்திருக்கிறேன். எனவே உங்கள் அமெரிக்கா குறித்த விமர்சனத்தை முழுமனதுடன் ஆமோதிப்பதைத் தவிர வேறெதையும் சேர்க்கத்தேவையில்லை என நினைக்கிறேன்.
[7] அன்புள்ள சங்கரபாண்டி – வருகைக்கு நன்றி. சுந்தரமூர்த்தி மூலமாக உங்களை வேறொரு விஷயத்திற்கு அணுகவிருந்தேன். அதைப்பற்றி பின்னர்.
>நிற்க, சமூக மற்றும் அரசியல் சம்பந்தமான உங்கள் கருத்துக்களில் நான் மாறுபடுகிறேன். உங்கள் கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்துவோர் ஏற்படுத்தியுள்ள உலக நியாயங்களை (அவற்றில் நிச்சயம் சில நியாயங்கள் உண்டு என்று நானும் ஒத்துக்கொள்கிறேன்) மட்டுமே பிரதிபலிக்கின்றீர்கள்.
இளம்போராளிகள் குறித்த கருத்தைத் தாண்டி பொதுவில் என் மீதான விமர்சனமாக இதை வைத்திருக்கிறீர்கள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் உருவாக்கியிருக்கும் அபிப்பிராயங்கள் முழுக்க முழுக்க என் அனுபவங்களிலிருந்து கிளர்ந்தெழுந்தவை. மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து எந்தவிதமான சலுகைகளும் இல்லாமல் என்னை வளர்த்துக்கொண்டவன். என்னிடம் மேல்தட்டு நியாங்களைக் காண்பதாகச் சொல்லுமுன் இன்னும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டு என்னை உற்று நோக்குங்கள்.
எனக்கென்று சில தர்மங்களை வார்த்துக்கொண்டவன். வன்முறையின் அபத்தத்தை சிறுவயதிலேயே அருகில் சந்தித்தவன். எந்தவிதமான வன்முறையையும் எதிர்ப்பவன், கருத்தியல் வன்முறை உட்பட. என்வே, நலிந்தோரின் மீதான வன்முறை எனக்கு ஒப்பானதல்ல. ஆனாலும் பலரும் வன்மத்தையும், வெறியையும் காணுமிடங்களில் நான் அறியாமையையே காண்கிறேன். அதுவே என்னால் இயன்ற அளவுக்கு நான் கற்றுக்கொண்டதைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம். (இதைப் பாராட்டிய உங்களுக்கு என் நன்றிகள்).
எந்தப் பிரச்சாரத்தையும் முழுமையாக உள்வாங்க மறுப்பவன் நான். என்னில் இருப்பது மேல்தட்டு, ஆதிக்கக் குழுக்களின் நியாயங்கள் என்று சொல்வது வியப்பாக இருக்கிறது. இது ஒரு விதத்தில் என் நியாயத்தை, என் எழுத்தை மழுங்கடிக்கச் செய்வதைப் போலத் தோன்றுகிறது.
[தொடர்ந்து]
குழந்தையைத் துன்புறுத்தாதீர்கள் என்று சொல்வதற்கு மேல்தட்டு நியாயம் தேவையில்லை என்று கருதுகிறேன். ரத்த உறவு என்ற யூமா. வாசுகியின் கதையைப் படித்திருக்கிறீர்களா? கதை முழுவதும் தொடர்ச்சியாகத் திருக்கை மிளாறால் அடிவாங்கிக்கொண்டும், மான் கொம்பால் குத்துப்பெற்றுக்கொண்டும் ஒரு தாய் தன் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொண்டிருப்பாள். மேல்தட்டு நியாயம்??
இது அடிப்படை மனிதநேயம். கழுகைக் கண்டு சிறகுகளை விரித்து அகவும் கோழியின் நியாயம். இதற்கு மேலைநாட்டுப் பிரச்சாரம் அவசியமில்லை. நான் இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன். இதுபோதும் உங்களுக்குப் பதிலாக என்று நினைக்கிறேன்.
இனி,
>அவர்களைப் போன்றோரின் பம்மாத்துப் பிரச்சாரத்துக்கு பயன் படுமாறு அமைகின்றது சிறார்களை ஆயுதம் ஏந்தச்செய்தல் என்ற குற்றச்சாட்டு.
இது ஒன்றுதான் நான் சொல்வது "ஏன் இப்படியான பிரச்சாரத்திற்கு இடம் கொடுக்க வேண்டும்"? ஆனால் இதையும் வெளியிலிருந்து நியாயப்படுத்துவதைத்தான் நான் இங்கே காண்கிறேன். எதிர்பாராத இடங்களிலிருந்து வரும் இந்த "நியாயப் பேச்சு" விரக்தியளிக்கிறது.
வெங்கட்,
எங்களது கருத்துக்களை, எது சரி எது பிழையென்ற வரையறையை நாம் வளர்ந்த சூழலும் & அனுபவங்களுமே தீர்மானிக்கின்றன. நான் ஈழத்தில் இருந்த போது சிலவிடயங்களைத் தவறானவையென்று எண்ணியிருக்கின்றேன்; சில விடயங்கள் தவறானவை என்ற கேள்வியே எழுந்ததில்லை. வாத்தியார் பிரம்பால் அடிப்பதனை பிழையென்று நான் ஊரில் ஒருபோதும் எண்ணியதில்லை. நிறையத் தெரிந்த வாத்தியார்களும் எண்ணியதில்லை. ஆனால் கனடாவிற்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே எனது கருத்துக்கள் மாறிவிட்டன.
நாம் இங்கிருந்துகொண்டு குழந்தைப் போராளிகள் பற்றி உன்னத எண்ணத்தில் கதைக்கலாம். ஆனால், அங்குள்ளவர்களிடம் தெரிவில்லை. போராடி பண்டைய தமிழ்வீரங் காட்ட வேண்டுமென்பது விடுதலைப் புலிகளுடைய இச்சையுமில்லை. ஆயுதம் ஏந்துவதைத் தவிர அவர்களுக்கு வேறு ஒருவழியுமில்லை என்பதனை நீங்கள் மறக்க வேண்டாம். காந்தீய வழியில் போனால் சுதந்திரம் கிடைக்கும் என்று கனவுகள் கண்டவர்கள்தாம் நாங்கள். திலீபனுக்கு என்ன ஆச்சு? அன்னைபூபதிக்கு என்ன ஆச்சு?
முன்பு சிறுவர்களை விடுதலைப் புலிகள் தமது இயக்கத்தில் இணைத்து உண்மைதான். ஆனால், சிறுவயதிலேயே அவர்களைப் போராட்டத்திற்கு அனுப்பி இருப்பார்கள் என்று நான் எண்ணவில்லை. அரசியல் அமைப்புக்களும், இயக்கங்களும் தமது ஆரம்ப காலங்களில் பிழைகள் விட்டுத்தானே பக்குவ நிலையை அடைகின்றன.
இப்போது சிறுவர்களை தமது இயக்கத்தில் விடுதலைப்புலிகள் இணைத்துக்கொள்வதில்லை என்று நான் எண்ணுகின்றேன். மன்னிக்கவும், அதனை என்னால் நிரூபிக்க முடியாதென்பதனையும் சொல்லியாக வேண்டும்.
இவ்விடயம் பற்றிய விவாதத்தினையாவது வலைப்பதிவர் யாவரும் நாகரீகத்துடனும், விதண்டாவதம் இல்லாமலும் தொடர்வார்களா பார்ப்போம்.
இந்த பதிவு தொடர்பாய் வந்த கருத்துக்கள் முழுமையாய் வாசிக்கவில்லை. எழுதுவதாய் சொன்ன விடயத்தை மட்டும் எழுதுகிறேன்:
அனேகமாக பத்ரி எழுதியவற்றுடன் உடன்படுகிறேன். த.வி.புலிகளின் கொலைகள் தொடர்பான, 'கடந்த 6 மாதங்களில்' கணக்கைத் தவிர. த.வி.பு.கள் தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் விமர்சனங்களை இணையத்திலேயே பலவகை ஊடகங்கள் முன்வைக்கின்றன, அவை தேவைப்படுகிறவர்கள் பார்க்கக்கூடிய தொலைவிலேயே இருக்கின்றன. யுரீஎச்ஆர் போன்றவற்றை வி.பு.ளிற்கு 'எதிரானவர்கள்' ஏற்கனவே உபயோகித்தும் வருகிறார்கள்.
இவற்றைப் பற்றி நிறையத் தடவைகள் எழுதப்பட்டிருப்பதால், நான் முக்கியமான இதில சொல்ல விரும்பிறது,
இந்த மாதிரி ஊடக நிகழ்ச்சிகள் தாற சாரம் புலிகளிற்கு (மக்களுக்கும்)எதிரான கருத்துருவாக்கம்தான். எல்லாப் பக்கங்களையும் சொல்லி, கேட்பவர்கள்/பார்ப்பவர்கள் ஒன்றை முடிவெடுத்துக்கொள்கிற அறத்தின் அடிப்படையில்தான் இங்குள்ள ஊடகத்தினர்/கல்வித்துறையினர் நடந்துகொள்கிறார்கள். எப்போதும் மேற்கின் ஊடகங்கள் குழந்தைப் போராளிகள் போன்ற அவர்களை நெகிழ்த்திற விடயங்களை முதன்மைப்படுத்துவார்க்ள. அது தவிர்க்கவியலாதது. நான், யுனிசெப் தொடங்கி எல்லாவற்றையும் 'பொய்'என ஒரு சொட்டும் நம்பவில்லை. அவை உண்மை விளம்பிகள்தான்.
ஆபிரிக்கா, ஆசிய நாடுகளின் உள்நாட்டு யுத்தங்களின் நிலமை இதுதான். சிலநாடுகளில் குழந்தையின் வயது 8 இலிருந்து கூட ஆரம்பிக்கிறது. இதை யாரும் நியாயப்படுத்த முடியாது, இதை செய்கிறவர்கள்கூட நியாயப்படுத்தமாட்டார்கள. ஆகையால் இதில் ஒருவரது கவலை இதை ஏற்பதா வேண்டாமா என்பதாக இருக்கவேண்டியதிலலை.
மறுபுறத்தில், இதில் இந்த யுத்தங்களின் போராளிகளிற்கு எதிராக 18 வயதிலிருந்து இராணுவத்தினர் போரிடுகிறார்கள். அனேகமாக ஏழைப் பெற்றோரின் பிள்ளைகள். டாண் என்று 18 வயதில் அவர்கள் பெரியவர்களாக ஆவதும் 17 வயசும் 6 மாதமும் என்றால் குழந்தை அல்லது சிறியவர் என்பதும் மேற்கின் வாதங்கள். அந்த எல்லைக்கோட்டை பத்ரி எழுதுவதுபோல அபத்தமாகவே பார்க்கமுடிகிறது.
…தொடர்ச்சி)
புலிகள் குறித்த இந்த நிகழ்ச்சிகள் தருகிற கருத்துருவாக்கம் எவ்வளவு தூரம் நியாயம் அற்றது (unfair) என்பதைவிட, அதால் அவர்களுக்கு ஒரு இழப்பும் இல்லை என்பதுதான் உண்மை. இன்று த.வி.புலிகள் நன்றாக வளர்ந்த, நிதி சேகரிப்பு இன்ன பிற முறைகளில் வளர்த்துக்கொண்ட ஒரு அமைப்பு. மக்களோட சமாதானமும் விடுதலைப்புலிகளை 'விமர்சித்து' திருத்துதலோ பதிலான ஒரு மாற்று சக்தியோ – ஈழத்தில் சாத்தியமாகத் தெரியவில்லை. பலரின் நலன்கள் அடிப்படையில் நடப்பது இது. இதில் தொடர்ந்து தமிழர்கள் தமது பிரச்சினையை உலக அரங்கில் அழுத்தி தீர்வு காணுவது என்பது சகாப்தங்களாய் கண்டுவிட்ட கனவு.
'நலன்கள்' உள்ள சக்திகள் மனது வைத்து சமாதானத்தால் அவர்களுக்கு நலன் விளைந்தாலே ஒழிய மற்றப்படி இல்லை.
இதில் யார் யாரை அல்லது எந்த உண்மைகளைப் புரிந்துகொள்வது என்பதுதான் தெரியவில்லை. உங்களுடைய concern குழந்தைப் போராளிகள் மனித உரிமைகள் போன்ற இன்னஇன்னதென்றால் யுனிசெப்ஃ போன்ற அமைப்புகள் 'பொய் சொல்கின்றன' என்று சொல்வதை நம்பத்தேவையிலலை. எவ்வளவு நியாங்களை உடைய போராட்டம் என்றாலும், அந்த அமைப்புகள் -அரசாங்கத்தின் 'தேசியம்' 'தேசியப்பற்று' என்கிற அடிப்படை மூளைச்சலவைகளை கேள்விக்குட்படுததாதபோதும்- தருகிற தகவல்கள் முக்கியமானவை. இத்தகைய அமைப்புகளை மறுக்கிற உரிமை போராடுகிற இனத்துக்கு இருக்கலாம், ஆனால் அவர்களது இருப்பும் மிக முக்கியமானது. அத்தோடு, அவற்றை நம்பிக்கொண்டும், ஈழப்பிரச்சினையை 'புரிந்துகொள்வது' சிரமமில்லை.
பொதுவாக இதை எழுதுகிறேன். ஏதும் தெளிவின்மை இருந்தால் அவசியமாயின் பிறகு எழுதுகிறேன்.
http://pooraayam.blogspot.com/2005/05/blog-post_28.html