நான் நேற்று முன்தினம் ஊகித்திருந்தபடி ப்ராட் ரட்டர் அல்டிமேட் ஜெப்பர்டி தொடரின் சாம்பியனாக மாறியிருக்கிறார். இதற்கான பரிசு 2 மில்லியன் டாலர்கள். இவர் ஏற்கனவே ஜெப்பர்டி மாஸ்டர்ஸ் தொடரில் ஒரு மில்லியன் வென்றவர். இதன் மூலம் தொலைக்காட்சி விளையாட்டுகளில் அதிகம் பரிசு பெற்றவராகிறார் என்று நினைக்கிறேன்.

நேற்றும் இன்றும் போட்டியிட்ட கென் ஜென்னிங்ஸ், ஜெரோம் வெரெட் இருவருக்கும் கொஞ்சமும் இடம் கொடுக்காமல் ஆரம்பம் முதலே முதலிடத்தில் இருந்தார். இன்றைக்குக் ஃபைனல் ஜெப்பர்டி வரும்பொழுது அவருக்கு எதையும் பந்தயம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்ததாக இருந்த கென் இன்றைய வெற்றித்தொகையை இரட்டித்தாலும் ப்ராடை எட்டிப்பிடித்திருக்க முடியாது.

இந்த வெற்றிகளின் மூலம் கென் ஜென்னிங்ஸை ஒரு சிறுவனைப்போல மாற்றிவிட்டார். தன்னுடைய தொடர் வெற்றிகளின் போது அதிவிரைவாக சமிக்ஞையை அழுத்துவதன் மூலம் எதிராளிகளை நிலைகுலையச் செய்த கென் ஜென்னிங்ஸ்க்கு இந்த இறுதியாட்டத்தில் அதே மருந்து ப்ராட் ரட்டரால் தரப்பட்டது.

2009 ஆம் ஆண்டு இந்த ட்ரிவியா போட்டியின் 25ஆம் ஆண்டு வருகிறது. அப்பொழுது இவர்களை மீண்டும் பார்க்க முடியும். இந்த வெற்றிகளின் மூலம் ப்ராடின் Inquizitive தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்னும் பிரபலமாகும். (இவரை இந்தப் போட்டித் தொடரில் முதல் தடவை பார்த்தபொழுது ஒரு நாள் இதை வழங்கும் அலெக்ஸ் ட்ரெபெக் இதிலிருந்து விலகினால் ப்ராட் அந்த இடத்திற்கு வரலாம் என்று தோன்றியது).

கென் ஜென்னிங்ஸ்? கவலை என்ன இதில் தோற்றாலும் ஏற்கனவே காமெடி செண்ட்ரலில் அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்கனவே ஒப்பந்தம் ஆகிவிட்டதே!