2005 இயற்பியல் ஆண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, கடந்த சில வருடங்களைக் காட்டிலும் இந்த வருடத்திய நோபெல் பரிசுகள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டன. ஒரு வகையில் இயற்பியலுக்குள்ளே இருக்கும் துறைகளின் முக்கியத்துவத்தை – இன்றைய இயற்பியலின் அதிமுக்கிய துறையை, இயற்பியலின் எதிர்காலம் என்று கணிக்கப்படப் போகின்ற ஒரு துறையைச் சேர்ந்தவருக்குத்தான் இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வருடத்தில் பரிசளிக்கப்படும் என்று பெரிதும் நம்பப்பட்டது. இன்று இந்தப் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பரிசின் ஒரு பாதியை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராய் க்ளாபர் பெறுகிறார். மறு பகுதி கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் ஹாலுக்கும் ஜெர்மனியின் மாக்ஸ் ப்ளாங் இன்ஸ்டிட்யூட் ஆஃப் குவாண்டம் ஆப்டிக்ஸைச் சேர்ந்த பேராசிரியர் தியோடர் ஹன்ஸ்ச்-க்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

சென்ற வருடம் நான் நோபெல் பரிசுகளைப் பற்றி விரிவாக எழுதியிருந்ததைப் பலரும் வரவேற்றார்கள். (இயற்பியல், , வேதியியல், மருத்துவமும் உடற்கூறியலும்) எனவே இந்த வருடமும் எல்லா துறைகளையும் பற்றி விரிவாக எழுதும் உத்தேசமிருப்பதால் இப்போதைக்கு ஒத்திப் போடுகிறேன். ஒரு சில எண்ணங்கள் மாத்திரம் இங்கே;

பரிசு ஒளியியலின் இரண்டு துறைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. க்ளாபரின் கண்டுபிடிப்புகள் நியதி குவாண்டம் ஒளியியல் (Theoretical Quantum Optics) என்ற துறையைச் சேர்ந்தவை. மற்ற பகுதி நிறமாலையியல் (Spectroscopy) என்ற துறையைச் சேர்ந்தது. இரண்டுமே லேசர்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின் தொடர்ச்சியாக வரும் முன்னேற்றங்களைச் சேர்ந்தவை. சென்ற நூற்றாண்டில் எலெக்ட்ரான்களுக்கு அலைப்பண்பு உண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டபின் தொடர்ந்த காலங்கள் எலெக்ட்ரானியல் துறையை வளர்த்தெடுத்தன. குவாண்டம் ஒளியியல் துறை அலைகளாகப் பெரிதும் உருவகிக்கப்படும் ஒளியின் துகள் பண்பை விளக்குகிறது. கடந்த நாற்பது வருடங்களில் எலெக்ட்ரானை அடிப்படையையாகக் கொண்டு முன்னேறிய தகவல் நுட்பமும், பிற கருவிகளும் இதற்கு அடுத்த கட்டமாக ஒளியை அடிப்படையாகக் கொண்டு வளரவிருக்கின்றன. அந்த வகையில் ஒளியியல் துறை இயற்பியல் வருடத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

பேராசிரியர் க்ளாபருடன் இணைந்து நம்மூர் பேராசிரியர் (நம்மூர் ஆனாலும் இவர் பெரும்பாலும் வேலை செய்தது டெக்ஸஸ் ஆஸ்டின் பல்கலைக்கழகத்தில்தான்) ஜார்ஜ் சுதர்ஸன் சில முக்கிய குவாண்டம் ஒளியியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார். போட்டான்களின் நிலைபண்பை விவரிக்கும் Glauber-Sudarshan-Klauder சமன்பாடு குவாண்டம் ஒளியியலில் மிகவும் முக்கியமான அடிப்படைச் சமன்பாடு. எங்கள் ஆய்வகத்திற்கு வருகை தந்திருக்கும் பேராசிரியர் ஜோஸஃப் எபர்லி (Prof. Joseph Eberly, University of Rochester) நேற்றுதான் தன்னுடைய குவாண்டம் ஒளியியல் குறித்த தொடர் சொற்பொழிவுகளைத் துவங்கினார். அதன் ஆரம்பத்தில் குவாண்டம் ஒளியியலின் முக்கியத்துவத்தைப் பற்றிய தனது எதிர்பார்ப்புகளைச் சொன்னார். மறுநாளே இந்தத் துறைக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பத்தாவது இயற்பியல் நோபெல் பரிசு இது. இதற்கு முன்னால் ஹார்வர்டின் நிக்லஸ் ப்ளூம்பெர்கன் (Nicolaas Bloembergen) நேரிலி ஒளியியல் (Nonlinear Optics) துறைக்கு நோபெல் பரிசு பெற்றார்.

இந்தக் கண்டுபிடிப்புகளின் அறிவியல் அடிப்படைகளை வரும் நாட்களில் விளக்க முயற்சிக்கிறேன்.