கே.ஆர். நாராயணன் – காந்தி உரையாடல்

காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணணைப் பற்றிய விரிவான குறிப்புகளும் அஞ்சலிகளும் வந்திருக்கின்றன. தமிழ் வலைப்பதிவுகளில் பத்ரி அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்.

திரு. நாராயணனுக்கு என்னுடைய அஞ்சலியாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக அவர் காந்தியைக் கண்ட பேட்டியின் ஒரு பகுதியைத் தமிழாக்கப்படுத்தித் தருகிறேன். டாட்டா மானிய உதவியைப் பெற்று லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்க்குச் செல்லவிருந்த கே.ஆர். நாராயணனிடம் குளிரைத் தாங்கக்கூடிய உடைகள் இல்லாததால் மறு வாரம் செல்லவிருந்த கப்பலைத் தவறவிட்டுவிட்டு ஆறு மாதம் காத்திருக்க நேர்ந்தது. இடைபப்ட்ட நாட்களில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் செய்தியாளராகப் பணியாற்றினார். அந்தச் சமயத்தில் அவர் காந்தியைக் கண்ட பேட்டி இது. (இந்தப் பேட்டியைப் பிரசூரிக்க டைம்ஸ் ஆஃப் இந்தியா மறுத்துவிட்டது). பேட்டியில் நாராயணனின் தைரியமான, நேரடியான கேள்விகளும் அவற்றுக்குப் பதில் சொல்வதில் காந்திக்கு இருக்கும் தயக்கமும் புரியும். ஒரு கட்டத்தில் நாராயணனுக்கு படிப்பு போதாது என்று காந்தி அவரைத் தாக்க வேண்டியிருக்கிறது.

நாராயணன்:: நீங்கள் இன்னமும் ஹரிஜனப் பிரச்சனை மத, சமூக ரீதியானது என்றுதான் கருதுகிறீர்களா? அதற்கு மேலதிக அரசியல் முக்கியத்துவம் இல்லையா?

காந்தி: அதற்கு அரசியல் முக்கியத்துவம் உண்டு; ஆனால் மறைமுகமாகத்தான்.

நாராயணன்:: அமைப்பு ரீதியாக காங்கிரஸ் ஹரிஜன வேலைகளை மேற்கொள்ளவில்லை. அந்த வேலையை ஹரிஜ சேவக் சங்கம் செய்வதற்குப் பதிலாக காங்கிரஸ் நேரடியாக மேற்கொள்வது நல்லதில்லையா?

காந்தி: காங்கிரஸ் அதைச் செய்யவில்லை என்று சொல்வது தவறு.

நாராயணன்:: ஆனால் ஜவாஹர்லால் நேருவுக்கும் ராஷ்ட்ரபதிக்கும் ஹரிஜன்களைப் பற்றிய விழிப்புணர்வுகள் இருப்பதாகத் தெரியவில்லையே?

காந்தி: அவர்கள் இருவரும் அந்தக் காரியத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.

நாராயணன்:: பல வருட ஹரிஜன் சேவாக் சங்கத்தின் நடவடிக்கைக்களுப் பிறகு இன்னமும் ஹரிஜன்களிலிருந்து ஒரு டஜன் தலைவர்கள் கூடத் தோன்றவில்லையே?

காந்தி: அந்தக் குற்றச்சாட்டில் பாதி உண்மைதான் இருக்கிறது.

நாராயணன்:: எல்லா பெரிய மனிதர்களுக்கும் எளிமைப்படுத்தவதில் பெருவிருப்பு இருக்கிறது. நீங்கள் மனிதப் போராட்டத்தின் இயல்புகளை ஹிம்சைக்கும் அஹிம்சைக்குமாக, உண்மைக்கும் உண்மையற்றதுக்குமாக, நல்லதுக்கும் பொல்லாததுக்குமாக எளிமைப்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் வாழ்க்கை ஒரு நல்லதுக்கும் இன்னொரு நல்லதுக்குமான, ஒரு உணமைக்கு இன்னொரு உண்மைக்குமான போராட்டமாகத்தானே இருக்கிறது? அஹிம்சை அவற்றை எப்படிக் கையாளமுடியும்?

காந்தி: அது எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தது.

நாராயணன்:: ஹிந்து முஸ்லீம் கேள்வி ஹிந்துக்களின் உரிமைக்கும் முஸ்லீம்களின் உரிமைக்கும் இடையிலான பிரச்சனையாக இருக்கிறது, இதில் அஹிம்சை பிரச்சனையைத் தீர்க்க எப்படிப் பயன்படும, குறிப்பாக விலக்கவியலாத உரிமைகளிடத்தில்?

காந்தி: இந்த சங்கடமான நிலையை சத்தியாகிரகத்தின் மூலம்தான் சாதிக்க முடியும்.

உங்களுடைய கேள்விகள் நீங்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை எனக்காட்டுகின்றன என்று நினைக்கிறேன். பியாரிலால் உங்களுக்கு ஒரு புத்தகப் பட்டியல் கொடுப்பார். நீங்கள் இதைப் பற்றி தீவிரமாகப் படிக்க வேண்டும் என்பது என் அறிவுரை.

நாராயணன்:: வெளிநாடு செல்லும் ஹரிஜனங்கள் அங்கே நம் நாட்டிற்கும் சமூகத்திற்கும் எப்படிச் சேவை செய்யலாம்?

காந்தி: அவனால் ஒன்றை விட்டுவிட்டு இன்னொன்றுக்குச் சேவை செய்ய முடியாது. வெளிநாட்டில் (இருக்கும்பொழுது) நீங்கள் இது எங்கள் உள்பிரச்சினை இதை நாங்களாகவே தீர்ப்பதில் முனைப்பாக இருக்கிறோம் என்று சொல்லுங்கள்.

* * *

நாராயணனைப் பற்றிச் சொல்லுகையில் அவர் தலித் என்பதைக் குறிப்பிடுவதில் எனக்கு எந்த தயக்கமுள்ள இல்லை. இது அவரை எந்தவிதத்திலும் இழிவுபடுத்துவதாகக் கருதவில்லை. இந்த அடையாளம் அவரது சாதனைகளின் உச்சத்தை வெளிச்சம்போட்டுக் காட்ட உதவுகிறது. தலித் என்றதால்தான் சாதித்தார் என்று அவரை யாரும் சொல்லப் போவதில்லை, தலித்தாக இருந்தும் சாதித்தார் என்றுதான் சொல்வோம். நாராயணன் முன்னுக்கு வந்த காலங்களில் தலித்துகளுக்கு எந்தவிதமான சலுகைகளும் இருக்கவில்லை என்பதை அறிவோம். விருப்பமிருக்கிறதோ இல்லையோ ஒரு காலத்தின் வரலாறு அது.

வருகின்ற தலைமுறைக்கு இப்படியொரு அடையாளம் இருக்கக்கூடாது என்பதே அவருடைய விருப்பமாக இருக்கும். அதை நிறைவேற்ற முனைப்பதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

Popularity: 3% [?]

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

சுட்டிக்கும், மொழிபெயர்ப்பிற்கும் மிக்க நன்றி வெங்கட்!

— தலித்தாக இருந்தும் சாதித்தார் என்றுதான் சொல்வோம்—
சுட்டிக்கும் மொழிபெயர்ப்பிற்கும் நன்றிகள்.

காந்தியின் பதில்களில் ஒரு வித அசட்டையும் இருப்பதைப் பார்க்கிறேன்.

Thanks

Thanks Venkat!

பதிவிற்கு நன்றி!

Leave a comment

(required)

(required)