CBSE : ஒற்றைப் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி

சமீபத்தில் இந்தியாவின் மத்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி குழுமம் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு தனது மத்திய பள்ளிகளில் இலவசக் கல்வி தருவதாக அறிவித்திருக்கிறது. ஒற்றைக் குழந்தையாக இருந்தால் முழு உதவியும், இரண்டு பெண்குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் பாதி உதவியும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. வீட்டில் ஒரு ஆண் குழந்தை இருந்தால் கூட இந்தத் தகுதி கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இருக்கும் பராபட்சத்திற்குப் பரிகாரமாக இந்த உதவி இருக்கும் என்று கட்டாயம் நம்பலாம் (என்னைப் பொருத்தவரை சிபிஎஸ்ஸி போன்ற மேட்டிமை பள்ளிகளைக் காட்டிலும் சராசரி நகராட்சி, கிராமப் பள்ளிகளில் பெண் கல்வியை ஊக்குவிக்க சிறந்த வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டியது முக்கியம்). ஆனாலும் இது மத்திய பள்ளிகளுக்கும் ஓரள்வு முக்கியம்தான் என்று தோன்றுகிறது.

மத்திய பள்ளி கனவில் தோய்ந்து குழந்தை சேர்ந்தவுடன் தேய்ந்துபோகிறவர்கள் பெரும்பாலும் மத்திய தரக் குடும்பங்கள்தாம். இங்கே எனக்குத் தெரிந்தவகையில் “பையனா இருந்தாலாவது செண்ட்ரல் ஸ்கூல்ல போட்டு கடனோ ஒடனோ வாங்கி பணங்கட்டாலாம்; இவளுக்கு நாளைக்கி கல்யாணம் பண்ண வேற காசு சேத்த்தாக வேண்டியிருக்கே” என்று சொல்லி பெண்களை மிக நன்றாகப் படித்த பெற்றோர்களே ஒதுக்குவதைப் பார்த்திருக்கிறேன். பையனாக இருந்தால் சில்ச்சார் ஆர் ஈ ஸியாக இருந்தாலும் பிலானி பிட்ஸாக இருந்தாலும் ஊக்கமாக அனுப்புபவர்கள் பெண்களை சென்னையை விட்டு திருச்சி ஆர் ஈ ஸிக்கு அனுப்பத் தயங்குவதைப் பார்க்கலாம். இந்த நிலையில் பெண் குழந்தைகளுக்கு இது மிக நல்ல வரம் என்றுதான் சொல்லவேண்டும். அதென்ன இரண்டு பெண்கள் இருந்தால் பாதி உதவி என்று தெரியவில்லை. இரண்டு பெண்களுக்கும் முழு உதவி கொடுக்க வேண்டியது முக்கியம் என்று தோன்றுகிறது.

இதற்காக சிபிஎஸ்ஸி-யைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகள் குய்யோ முறையோ என்று குதித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தங்கள் வருமானம் பாதிக்கப்படுமாம்.

“my school has to fend for 140 girls and I do not know whether we can afford it.” Some schools may opt to convert into matriculation or the ISCE Boards or make “subtle attempts to discourage girls’ admission to avoid losses.” Alternatively, she suggests, the Board ask schools to provide free education to one girl child per class based on economic criteria. The present order can lead to more girls flocking to good schools.

The number of boys to be admitted will come down, as the class strength is defined. “This can be discrimination against boys. This gender showdown can also reflect at home,” says Mrs. Parthasarathy.

என்று பத்மா சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் திருமதி பார்த்தசாரதி கதறியிருக்கிறார். இருந்துவிட்டுப் போகட்டுமே இதனால் இவர்களுக்கு வருமான இழப்பு என்று சொல்வதெல்லாம் அதீதமான புலம்பலாகத்தான் படுகிறது. பத்மா சேஷாத்ரியில் இரண்டு பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக (8000+5000) 13,000 மாணவர்கள் இருப்பதாக அவர்கள் தளம் தெரிவிக்கிறது. இதில் 140 ஒற்றை பெண்கள் என்பது ஒரு விழுக்காடு. ஒரு விழுக்காடு இழப்பை, 140 குழந்தைகளின் வருமானம் போவதாகச் சொல்லி அழுவது என்ன அயோக்கியத்தனம். (இவர்களெல்லாம் கல்விச் சேவைக்கு விருதுகள் வாங்கியவர்கள்). இதை எழுதுவதற்காகத் தேடியபொழுது அவர்களின் மில்லேனியம் பள்ளி என்ற இன்னொரு பள்ளியின் கட்டணம் எனக்கு மயக்கத்தை வரவழைத்தது. எல்கேஜி படிக்க 20,000 ரூபாய் நுழைவுக் கட்டணமும் மூன்று பருவத்திற்கும் தலா எட்டாயிரம் ரூபாய் என வருடத்தில் 45,000 ரூபாய் செலவிட வேண்டியிருக்கிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் 2000 மாணவர்கள் என்று வைத்துக்கொண்டால் இவர்களது வருடாந்திர வருமானம் (2000 x 45,000) 90,000,000 ரூபாய்கள். மலைப்பாக இருக்கிறது. இப்படியொரு பணம் புழங்கும் இடத்தில் 140 பெண் குழந்தைகளுக்கு உதவி செய்வதற்கு அழுவது கேவலமாக இல்லை!?

நம்மூரில் ஒற்றைப் பெண் குழந்தைகள் மிகக் குறைவு. முதலாவது பெண்ணாகப் பிறந்துவிட்டால் கொள்ளி போட, பேர் சொல்ல, குடும்பத்தைக் காக்க, என்று தலைகீழாக நின்றாவது (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்) இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்வார்கள். சொல்லப்போனால் நம்மூரில் ஒற்றைக் குழந்தைக் குடும்பமே மிகவும் குறைவுதான். இப்படியிருக்கும் பொழுது ஆண்கள் இல்லாத குடும்பத்தில் எல்லா பெண்களுக்கும் உதவி என்று அறிவிக்க வேண்டியது முக்கியம். திருமதி பத்மா சேஷாத்ரி “இது ஆண் குழந்தைகளுக்கு எதிரான பாரபட்சம்” என்று வேறு சொல்லியிருப்பது இப்படிப்பட்ட பணக்கஷ்டத்திலும் அவரது தளராத நகைச்சுவை உணர்வைக் காட்டுகிறது.

இன்னொரு பரமாத்மா

Making a case for a grant component from the Government, V. Venkatachalam, CBSE school principal, says that because of free education “parents will seek to shift more girl children from government or aided schools to our institutions. Government schools will see reduction in strength.”

என்று வேறு அழுதிருக்கிறார். எவ்வளவு உத்தமமான விஷயம். ஏழைக்குழந்தைகளுக்கு முழு இலவசக் கல்வி கொடுக்கும் அரசாங்கத்தின் சுமையைப் பகிர்ந்துகொள்ள பணம் கொழுத்த தனியார் பள்ளிகளுக்கு எவ்வளவு நல்ல வாய்ப்பு. என்னைக் கேட்டால் தனியார் பள்ளி ஆசிரியர்களை மூன்றாண்டுக்கு ஒருமுறை sabbatical முறையில் கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் பயிற்றுவிக்க அனுப்ப வேண்டும் என்று சொல்வேன். இதன் மூலம் அவர்களுக்கு உண்மை நிலை தெரியவரும்.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

இந்த திட்டத்தை முன்மொழிந்தவர்களின் நோக்கம் நியாயமானது. ஆனால், நடைமுறை படுத்திய முறை தான் சகிக்கவில்லை. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் என்ன நடக்கும்?

1. அரசு சொல்கிற criteria வில் அடங்கும் பெண்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி கொடுக்க வேண்டும் என்றால், பள்ளிக்கு வருமானத்தில் நஷ்டம் ஏற்படும். அதற்காக, பெண்கள் தங்கள் பள்ளிகளின் சேர்வதை மறைமுகமாக discourage செய்வார்கள். பெண்களின் சேர்க்கையை குறைத்துக் கொள்வார்கள். பள்ளிகளில் குறைந்தது இத்தனை பெண்கள் படிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் இல்லை.

2. பெண்கள் கல்விக்கு சலுகை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னர், இன்னும் கொஞ்சம் சிந்தித்து நல்ல திட்டம் எதையாவது கொண்டு வந்திருக்கலாம். ஏதோ ஒரு உயரதிகாரியின் தன்னிச்சையான முடிவு மாதிரிதான் இது தோன்றுகிறது.

3. இது தொடர்பாக, அரசு மானியம் பெறாத தனியார் பள்ளிகளிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை. சிபிஎஸ்ஈ பள்ளிகள் சங்கப் பிரதிநிதிகளையாவது கூப்பிட்டு கலந்தாலோசித்திருக்கலாம். இதை விட பெட்டரான, தீர்வு கிடைக்கலாம்.

[1]பிரகாஷ்

>பெண்கள் தங்கள் பள்ளிகளின் சேர்வதை மறைமுகமாக discourage செய்வார்கள். பெண்களின் சேர்க்கையை குறைத்துக் கொள்வார்கள். பள்ளிகளில் குறைந்தது இத்தனை பெண்கள் படிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் இல்லை.

…வார்கள். அவர்களது அயோக்கியத்தனம் தெரிந்ததுதானே! எனவே இதைத் தடுக்க மொத்தமாக எத்தனை ஒற்றைப் பெண் குழந்தைகள் சிபிஎஸ்ஸியில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எவ்வளவு உதவித்தொகை தரப்படுகிறதோ அதை ஒவ்வொரு பள்ளியும் மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறதோ அதன் வீதத்தின் படி பெண் குழந்தைகளைச் சேர்த்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும் என்று சட்டமிடலாம். இப்படிச் செய்தால் அவர்களால் ஓட முடியாது. வேறு பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு பணம் செலவழிப்பதற்கு தங்கள் பள்ளியிலேயே சேர்த்து பெருமை தேடிக்கொள்வார்கள்.

>இது தொடர்பாக, அரசு மானியம் பெறாத தனியார் பள்ளிகளிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை. சிபிஎஸ்ஈ பள்ளிகள் சங்கப் பிரதிநிதிகளையாவது கூப்பிட்டு கலந்தாலோசித்திருக்கலாம். இதை விட பெட்டரான, தீர்வு கிடைக்கலாம்.

ஹீ.. ஹீ.. பணத்தில் மூழ்கிக் கிடக்கும் சிபிஎஸ்ஸி முதலாளிகள் இதற்கெல்லாம் தீர்வு சொல்ல மாட்டார்கள். என்ன அயோக்கியத்தனம் இருந்தால் மெட்ரிக்குலேஷானாக மாற்றுவேன் என்று சொல்வார். சரி என்று சொன்னால் இவர்களால் மாற்ற முடியுமா?

[1] பிரகாஷ் - வருமானத்தில் நஷ்டம் எல்லாம் 1%க்கும் குறைவாகத்தான். நான் போட்டிருக்கும் பணக்கணக்கைப் பார்த்தீர்களா? அந்த அம்மா சொல்வதை எந்த வகையில் இழப்பாகப் பார்க்க முடியும்.

இவர்களுக்கு சேவை எல்லாம் குறிக்கோள் இல்லை. இது வியாபாரம். எனவே அரசாங்க இலவசப் பள்ளிகளின் சுமையைக் கொஞ்சம் தலையில் கட்டுவது தவறில்லை.

வெங்கட், மத்தியவர்க்கத்தில் முதல் குழந்தை பெண்ணாய் பிறந்தால் அத்துடன் நிறைய பேர்கள் இன்னொன்று வேண்டாம் என்று இருந்துவிடுகிறார்கள். கீழ் மத்தியவர்க்கத்தினருக்கு இந்த திட்டம் உதவியாய் இருக்கும்.
இன்னொரு விஷயம் நகரம், சிறு நகரம் இரண்டிலும் நான் பார்த்தவரையில், பெற்றோர்கள் பெண் குழந்தையின் கல்விக்கும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். ஆண் என்றும் பெண் என்றும் பேதம் செய்வது வெகுவாய் குறைந்து வருகிறது.

நாளையே இவர்கள் நீதிமன்றத்தில் தடையாணை வாங்குவார்கள். பணம் பாதாளம் வரை பாயும்.
பாவம் அப்பாவி மக்கள்தான்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதைதான்.

the scheme is a good one.as your calculations show the private schools can afford this.schools like padma seshadri should be put in the hands of enlightened educationists with a committment to education and society.right now such schools are in the hands of hypocrites and they have a vested interest in running them as their private business establishment.'educationists- like mrs.ygp will lecture about tradition, human values etc but will cater only to elites.

இது தொடர்பாக, அரசு மானியம் பெறாத தனியார் பள்ளிகளிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை. சிபிஎஸ்ஈ பள்ளிகள் சங்கப் பிரதிநிதிகளையாவது கூப்பிட்டு கலந்தாலோசித்திருக்கலாம். இதை விட பெட்டரான, தீர்வு கிடைக்கலாம்

good joke.

//என்ன அயோக்கியத்தனம் இருந்தால் மெட்ரிக்குலேஷானாக மாற்றுவேன் என்று சொல்வார். //

இப்படி முழுக்க முழுக்க லாப நோக்கத்திலேயே நடக்கும் பள்ளிகள்/கல்லூரிகள் 'கல்விச் சேவை' தருவதாக எப்படி வாய் கூசாமல் சொல்ல முடிகிறது? லாபமே நோக்கமே செயல்படுவர்களுக்கு அரசு வரி விதிக்காமல் இருப்பது பெரும் தவறு.

[4]உஷா - உங்களைச் சுற்றியிருக்கும் குடும்பங்களில் எத்தனை ஒற்றைக் குழந்தை குடும்பம் என்று பாருங்கள். உதாரணமாக உங்கள் தெருவில் இது என்ன சதவீதம் என்று பாருங்கள். அவர்களுக்குள்ளே எத்தனை ஒற்றைப் பெண் குழந்தைக் குடும்பம் என்றும் பாருங்கள். இது மிக மிகக் குறைவான வீதத்தில்தான் இன்னும் இருக்கிறது.

பெண் கல்வி மறுப்பு குறைந்து வருகிறது என்பது மிகக் கொஞ்சம் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

[6] ரவி - இவர்கள் வருவாயில் இது மிகச் சிறு குறைவைத்தான் ஏற்படுத்தப்போகிறது. அந்த பத்மா சேஷாத்ரி அம்மா கணக்கை வைத்துப் பார்த்தல்கூட இது ஒரு சதவீதம்தான். இதற்காக லபோதிபோ என்று அடித்துக் கொள்வது கொடுமை. நானறிந்த வகையில் இந்தியாவில் தனியார் பள்ளிகளில் (செண்ட்ரல் போர்ட்) மாஃபியா மனப்பான்மை இருக்கிறது. நீ என்ன சொல்றது; நானென்ன கேக்கறது என்ற அகம்பாவம்தான். பத்மா சேஷாத்ரி போன்ற பள்ளிகளால் நம் நாட்டுக்கு ஒரு நன்மையும் கிடையாது.

[7] அந்த good joke ஐத்தான் நான் ஹி.. ஹி.. என்றேன் :)

வெங்கட்: இது கிராமப்புறங்களில் செயல் படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் அதுவும் கீழ்தட்டு குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். ஆனாலும் நடைமுறையில் எத்தனை பெண் குழந்தைகள் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு படிக்க வருவார்கள் என்பது கேள்விக்குறியே?
பல திட்டங்கள் நல்ல நோக்கத்துடன் செயல்படுத்த படுகின்றன ஆனால் நடைமுறையில் குழப்பம் ஏற்படுகிறது. பத்மா சேஷாத்ரி பள்ளியில் இடம் பெற செய்யவேண்டிய சில செயல்களை கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கும் கல்வி சேவைக்கும் வெகு தூரம்…

வெங்கட், மற்றும் நண்பர்களுக்கு : இங்கே பிரச்சனை பத்மா சேஷாத்ரி அம்மாவின் ஆதங்கம் பற்றியதல்ல. அந்தம்மா கல்விச் சேவை செய்கிறாரா அல்லது கொள்ளை அடிக்கிறாரா என்பது வேற பிரச்சனை. அது முக்கியமான பிரச்சனையும் கூட. ஆனால், நான் சொல்ல வந்தது, விதிமுறையை கொண்டுவந்தவரின் பைத்தியக்காரத்தனத்தைப் பற்றியது. இந்த பத்மா சேஷாத்திரி பள்ளியிலே, நூத்து நாற்பது பேர், இந்த criteria வுக்கு உள்ளே வராங்கன்னே வெச்சுப்போம்… அவங்களுக்கு, இலவசக் கல்வி அளிக்க வேண்டிய அவசியம் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்காம எதுக்காக தூக்கிக் குடுக்கறதுன்னு கேக்கறேன்? அந்தக் காசு இருந்தா, சென்னையிலே இருக்கிற அத்தனை மாநகராட்சிப் பள்ளிக்கும், தலா ஒரு பிசி வாங்கிக் குடுக்கலாம் தெரியுமில்லையா? பெண்களுக்கு இலவசக் கல்வி குடுப்பதன் நோக்கம் ரொம்ப உசந்தது. பொருளாதாரக் காரணங்களுக்காக, பெண்களின் கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், இலவசமா கிடைக்கிறது என்பதற்காக, படிக்க வருகிற பெண்களின் எணிக்கை அதிகமாக வேண்டும் என்பதற்காவும், இந்தச் சலுகையை, கொடுத்துத்தான் ஆகவேண்டும். லட்ச லட்சமாய் சம்பாதிக்கிற , நாலைந்து கார் வைத்திருக்கிற , ஒரே குழந்தை போது என்று நிறுத்திக் கொண்ட ஒரு கனவானுக்கு என்னத்துக்காக இந்தச் சலுகை?

ஐ ரிப்பீட்டு….பெண்பிள்ளைகளின் கல்வி முக்கியமானது. சலுகை அளிக்க வேண்டும். ஆனால், சலுகை மூலம் கிடைக்கிற monetary benefit யாருக்குப் போய்ச் சேரவேண்டும் என்பது பற்றி தெளிவு வேண்டும்.

மத்த படி பெருநகரங்களில் இருக்கிற சிபிஎஸ்ஈ பள்ளிகள் அடிக்கிற கொள்ளை, அவர்களின் மேட்டுக்குடி மனப்பான்மைகளில் எனக்கும் உடன்பாடில்லை. அதை இன்னொரு நாள் சாவகாசமா வெச்சுப்பம்…

வெங்கட் கருத்துடன் என்னால் ஒத்துப்போகமுடியவில்லை. ரவி ஸ்ரீனிவாஸ் கருத்துடனும்தான். தனியார் பள்ளிகள் கொள்ளைக்காரர்கள் என்றே முடிவு செய்துவிட்டு எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அரசால் எந்த நிலையிலும் (தொடக்கம், உயர்நிலை, மேநிலை, கல்லூரி) முழுமையாகக் கல்வியை அளிக்க முடியாத நிலையில்தான் இந்தியாவில் தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் தோன்றினறிந்தக் கல்விக்கூடங்கள் பொதுமக்களை ஏமாற்றாமல் இருக்கத் தேவையான சட்டங்களை மட்டும்தான் அரசு இயற்றவேண்டும். யாருக்கு இலவசக் கல்வி கொடுக்கவேண்டும் போன்ற தேவையற்ற முடிவுகளை எடுக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்கக்கூடாது.

வெங்கட்: திடீரென்று கனடாவில் உள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களும் விவாகரத்து ஆன பெற்றோர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்கவேண்டும் (அல்லது அதைப்போல அபத்தமான ஏதோ ஒரு முடிவு!) என்று கனேடிய அரசு முடிவு செய்தால் அதை நீங்கள் ஆதரிப்பீர்களா?

பெண்களின் கல்வி மீது அரசுக்கு உண்மையிலேயே விருப்பம் இருந்தால் அதற்குத் தேவையான பணத்தை வரி வருமானம் மூலம் திரட்டி, ஆவண செய்யலாம். அதை விடுத்து தன் பிரச்னையை அடுத்தவர் மீது வலியத் திணிப்பது நியாயமற்றது.

நாட்டில் ஏழைமையைப் போக்க நாளை முதல் ரூ. 10,000 சம்பாதிப்பவர்கள் கட்டாயமாக இரண்டு பேருக்கு இலவசச் சாப்பாடு போடவேண்டும் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?

பத்மா சேஷாத்ரி பள்ளியால் நாட்டுக்கு எந்த நன்மையுமே இல்லை என்று வெங்கட் சொல்லியிருப்பது மிகத் தவறானது. எல்லாப் பள்ளிகளாலுமே - எல்லாத் தனியார் பள்ளிகளாலுமே - இந்தியாவுக்கு ஏகப்பட்ட நன்மை. நம் நாட்டின் கல்வியறிவு அதிகமாக இவர்கள் அனைவரும் உதவியிருக்கிறார்கள். அரசுகள் முற்றிலுமாகத் தோல்வியுற்ற பின்னர்! அவர்கள் அதனால் பணம் சம்பாதித்தால் கூடப் பரவாயில்லை, மக்களை ஏமாற்றாத வரைக்கும்.

What we need is better regulation and higher spending by the government in education. Not throttling private enterprises by way of draconian moves such as this.

The government, which has not increased the spending on education at all (as percentage of GDP) over the last 30 years or so, must first change itself before thrusting absolutely irresponsible decisions on others.

[13] பத்ரி - ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.
>தனியார் பள்ளிகள் கொள்ளைக்காரர்கள் என்றே முடிவு செய்துவிட்டு எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒற்றைப் பெண்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கொடுங்கள் என்று சொன்னால் தன்னுடைய ஒரு சதவீதத்துக்கும் குறைவான வருமான இழப்பைக் காட்டி (கவனிக்கவும், நான் காட்டும் கணக்கு எல்லாமே நேரடியாக பள்ளிகள் வசூலிக்கும் கட்டணங்களை மட்டும்தான். நம் எல்லோருக்குமே தெரியும் தனியார் பள்ளிகள் இதைத் தாண்டி கொள்ளையடிக்கின்றன என்று) உடனடியாக "நான் மெட்ரிக்குலேஷன் ஆகிறேன்" என்று குதிப்பைதை கொள்ளக்காரத்தனம் என்றில்லாமல் வேறு வழியில் கண்ணைக் கட்டிக்கொண்டு எப்படி உங்களால் ஒதுக்க முடிகிறது?

>யாருக்கு இலவசக் கல்வி கொடுக்கவேண்டும் போன்ற தேவையற்ற முடிவுகளை எடுக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்கக்கூடாது.

ஏன் கூடாது? இந்தியாவின் சமூக நல முன்னேற்றங்களுக்குத் தனியார் துறையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற உரிமை இந்திய அர்சுக்கு உண்டு. நாமிருப்பது அமெரிக்காவில் இல்லை, இந்தியாவில். இங்கே நாம் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கையில் இப்படி முற்றுமுழுதாக தனியார் (வர்த்தக முதலைகள் என்று படிக்கவும்) கையில் கல்வி போன்ற துறையை ஒட்டுமொத்தமாகக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வது இந்தியாவின் சமூக முன்னேற்றத்திற்கு நல்லதல்ல. இதே வழிகளில் இவர்கள் இட ஒதுக்கீட்டையும் குறுக்குப்பாதையில் தாண்டிச் செல்வதைப் பார்க்க முடிகிறது. இப்படி பணம் இருப்பவர்கள் எல்லாவற்றையும் மீறிச் செல்ல, நேரடியாக விளிம்புநிலை மக்களுக்கும் மறைமுகமாக 'முன்னேறிய சமூகங்களில்' இருக்கும் ஏழைகளுக்கும் இதன் பாதிப்பு இன்னும் அதிகரிக்கிறது. - இதனால்தான் இவர்களால் நாட்டுக்கு எந்த புண்ணியமுமில்லை என்றேன்.

[13] >வெங்கட்: திடீரென்று கனடாவில் உள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களும் விவாகரத்து ஆன பெற்றோர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்கவேண்டும் (அல்லது அதைப்போல அபத்தமான ஏதோ ஒரு முடிவு!) என்று கனேடிய அரசு முடிவு செய்தால் அதை நீங்கள் ஆதரிப்பீர்களா?

பத்ரி - எப்படி இப்படியொரு கேள்வியை உங்களால் கேட்கமுடிகிறது? கனடாவையும் இந்தியாவையும் அடிப்படைக் கல்வித்துறையில் ஒரே மாதிரி சட்டம் வைத்துக்கொள்ளச் சொல்ல முடியுமா?

பத்ரி - நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ எதிர்-உதாரணத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். கனேடிய சட்டத்தின்படி ஒற்றைப் பெற்றோரின் குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமான வரிச்சலுகைகள் உண்டு.

இன்னொரு விஷயம் தெரியுமா? இங்கேகூட தனியார் நடத்தும் விமானங்களிலும் டாக்ஸிகளிலும் ஊனமுற்றோருக்கு கட்டணக்குறைப்பு தரவேண்டும் என்று அரசாங்கம்தான் சட்டமியற்றுகிறது. பிரகாஷ் சொல்கிறார்போல் எல்லா டாக்ஸிகாரர்களையும் கூப்பிட்டுச் சொன்னால் அவர்கள் ஊனமுற்றோரை இலவசமாகத் தாங்களே ஏற்றிச் செல்வார்கள் என்று ஒருக்காலத்திலும் கையைக் கட்டிக்கொண்டு அரசாங்கம் இருக்காது.

>பெண்களின் கல்வி மீது அரசுக்கு உண்மையிலேயே விருப்பம் இருந்தால் அதற்குத் தேவையான பணத்தை வரி வருமானம் மூலம் திரட்டி, ஆவண செய்யலாம். அதை விடுத்து தன் பிரச்னையை அடுத்தவர் மீது வலியத் திணிப்பது நியாயமற்றது.

இது வலியத் திணிக்கும் விஷயமாக கல்வி வியாபாரிகள் விளம்பரப்படுத்துவதை எப்படி நேரடியாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்று புரியவில்லை. மாறாக முற்றிலும் இலவசக் கல்வியளிக்கும் அரசாங்கப் பள்ளிகளின் சுமையைக் கொழுத்துக்கிடக்கும் தனியார் பள்ளிகள் பகிர்ந்துகொள்வது என்ற நோக்கில் பாருங்கள். அதுதான் உண்மை. இத்தனைநாள் எந்தக் கடமையும் இல்லாமல் பணம்பண்ணும் உரிமைகளைப் பெற்று வந்தவர்கள் இவர்கள். இனி கொஞ்சம் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை.

கவனிக்கவும்; என்னுடைய வாதங்களைப் பொதுமைப்படுத்த வேண்டாம். நான் சொல்வதெல்லாம் முற்றுமுழுதாக முக்கியமான கல்வித்துறைக்கு மாத்திரம்தான்.

[13]>பத்மா சேஷாத்ரி பள்ளியால் நாட்டுக்கு எந்த நன்மையுமே இல்லை என்று வெங்கட் சொல்லியிருப்பது மிகத் தவறானது

ஏன் தவறானது என்கிறீர்கள்? இவர்கள் யாரைச் சென்றடைகிறார்கள் சமூகத்தின் மேல் 1% உயர்தட்டை மாத்திரமே! மாறாக அரசாங்கம் பெரும்சுமையான மீதம் 99% கவனிக்கிறது எனவே இவர்களால் என்ன புண்ணியம். சமூக நலத்திற்கு இது எப்படி உதவுகிறது. பத்மா சேஷாத்ரி இல்லை என்றால் என்னாகும் என்று பார்க்கலாம். ஒன்று அந்த மாணவர்கள் மாந்கராட்சிப் பள்ளிகளுக்கு வருவார்கள். அப்பொழுது பொதுவில் மா.ப தரம் உயரும். இல்லையென்றால் சுதந்திரத்திற்கு முன்னால் குறுநில மன்னர்களும் பிரபுக்களும் செய்ததைப் போல இவர்கள் அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ போர்டிங் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள். எனவே அவர்களது கல்வி எந்த வகையிலும் பாதிப்படையப் போவதில்லை.

மாறாக சமூக நலத்தில் ஆதாரமான ஆரம்பக் கல்வியில் மேட்டிமைத்தனத்தைப் புகுத்துவதன் மூலம் இவர்கள் செய்யும் சமூக அநீதி அளவிடமுடியாதது.

> எல்லாத் தனியார் பள்ளிகளாலுமே - இந்தியாவுக்கு ஏகப்பட்ட நன்மை.

இந்தியாவுக்கு என்று பொதுமைப்படுத்தாதீர்கள்; இந்தியாவின் உயர்குடியினருக்கு என்பதுதான் சரியாகப் பொருந்தும். கடல் கடந்து பிள்ளைகளைப் படிக்கச் செலுத்தாமல் கண் பார்வையிலேயே வைத்துக் கொள்ள மாத்திரம்தான் இவர்கள் உதவுகிறார்கள்.

> அரசுகள் முற்றிலுமாகத் தோல்வியுற்ற பின்னர்!

அரசுகள் முற்றிலும் தோற்றுவிட்டன என்று சொல்வது தவறான பிரச்சாரம். இந்தியாவில் இன்னும் பெருமளவு கல்வியை இந்திய அரசுதான் பார்த்துக் கொள்கிறது. இந்தியாவில் இன்றைக்கு இருக்கும் ஓரளவு முன்னேறத்திற்கு அரசின் இலவசக் கல்வி முக்கியமான காரணம். இதை இந்த வியாபாரிகளிடம் கொடுத்தால் கட்டுமரத்தில் செல்லும்போதும், கக்கூஸ் கழுவும் பொழுதும் பிள்ளைகள் கூடவே சென்று கொண்டிருப்பார்கள்.

>அவர்கள் அதனால் பணம் சம்பாதித்தால் கூடப் பரவாயில்லை, மக்களை ஏமாற்றாத வரைக்கும்.

நான் சொல்வதெல்லாம் இப்படிச் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை அரசாங்கத்தின் முழு இலவசக் கல்விச் சுமையைப் பகிர்ந்துகொள்ள நேரடியாக இவர்களைப் பயன்படுத்தச் சொல்வதில் எந்தத் தவறுமில்லை.

[13]அதுகிடக்கட்டும் பத்ரி - அந்த அம்மா மெட்ரிக்குலேஷானாக மாற்றிவிடுகிறேன் என்று சூளூரைப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அதேபோல ஆண்களுக்கு எதிரான அநீதி என்றும் அரசுப் பள்ளிகளின் சுமையை எங்கள் தலையில் கட்டுகிறார்கள் என்றும் சொல்வதெல்லாம் உங்களுக்குச் சரியாகப்படுகிறதா?

Who knows, even the Tamil Nadu government can bring in a similar rule tomorrow for matriculation schools. I wonder what will they do then.
There is a need to increase govt. spending on education.If my understanding is right in New Delhi
schools were alloted lands with concessions in
price with a condition that they would provide
free education to poor i.e. to certain % of students.
But that was not followed. When a PIL was filed this
came to light. Govt. is not imposing an unreasonable
burden on them. The fact is all these managements are
scared of applying the norm of industry when it comes
to trade union and service conditions for teachers and staff and make a hue and cry when are asked to fulfill a social obligation.

[12] பிரகாஷ் - உங்களுடைய ரீப்பீட்டு ஆதங்கத்தில் இருக்கும் எல்லா முக்கியமான விஷயங்களுக்கும் பத்ரிக்கான மேலுள்ள என் பதில்களில் விடை சொல்லியிருக்கிறேன். அடிப்படைக் கல்வியை மற்ற எல்லா விஷயங்களிலிருந்தும் தனித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

நீங்கள் சொன்ன ஒரே ஒரு விஷயம் கொஞ்சம் முக்கியமானது - கொழுத்துக்கிடக்கும் ஒற்றைப் பெண்குழந்தைத் தகப்பனுக்கு கட்டாயம் ஒரு விலக்கு கொண்டு வரவேண்டும். இதற்குப் பொருளாதார உச்ச வரம்பை அறிமுகப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இதுவும் மிக அதிகமாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல் நம்மூரில் ஒற்றைக் குழந்தைகளே குறைவுதான், இதிலும் ஒற்றைப் பெண் குழந்தைகள். எனவே, இந்தக் கொழுத்த ஒற்றைப் பெண் குழந்தைத் தகப்பன்களின் வீதம் இதில் மிகமிகக் குறைவாகத்தான் வரும் என்று நம்புகிறேன். இதைக் காரணம் காட்டுவதெல்லாம் இங்கே தேவையில்லாதது. அந்த அம்மாவின் 140/70000 திமிர்வாதத்திற்கு தீனிபோடுவதாகும்.

[18] ரவி - அது முக்கிய விஷயம். கட்டாயம் இந்தப் பள்ளிகள் அரசாங்கத்திலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் சலுகைகள் பெறுகின்றன. 70,000 சந்தாதாரர்களைக் கொண்ட வர்த்தக நிறுவத்தின் மீது அரசு விதிக்கும் கெடுபிடி இவர்களுக்குக் கிடையாது. நாம் சொல்வதெல்லாம் நேரடியாக இவர்கள் விதிக்கும் கட்டணத்தை மாத்திரமே முன்வைத்து. இவர்கள் மறைமுகமாகக் கொள்ளையடிப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷ்யம்.

முக்கியமாக இது இவர்களுக்கு ஒரு சுமையேயில்லை என்பதுதான் என் வாதம். சுமையில்லை - சமூக நன்மை என்றால் ஏன் சமூக அக்கறை கொண்டவர்கள் எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லை.

ஆசிரியர்களைப் பிழிவது, சம்பளத்தில் கொடுமை குறைந்தபட்ச தொழிற்சங்க விஷயங்கள் இல்லாமல் இருப்பது, இதெல்லாம் நீங்கள் சொல்லியிருப்பதைப் போல முக்கியமானவையே.

வெங்கட்: பத்மா சேஷாத்ரி ஸ்கூல் முதல்வர் சொன்னது பற்றி: அவர் எங்குமே தன் பள்ளியில் இந்த விதியினால் பாதிக்கப்படுபவர்கள் வெறும் 140 பேர் மட்டுமே என்று சொல்லவில்லை. அதையே பிடித்துக்கொண்டு நீங்கள் அவரைக் கட்டையால் அடிக்கிறீர்கள். அவர் சொன்னது இதுதான்:

Mrs. Y.G. Parthasarathy, founder of the Padma Seshadri group of schools, says even if one single girl child per class is given fee waiver, "my school has to fend for 140 girls and I do not know whether we can afford it."

அதாவது, வகுப்புக்கு ஒரு பெண்ணுக்கு இந்தச் சலுகை என்றால் கூட 140 குழந்தைகளுக்குக் கட்டணச் சலுகை கொடுக்க வேண்டும் (அதாவது அவரது பள்ளிகளில் மொத்தமாக 140 வகுப்புகள் உள்ளன - 6-12 வகுப்புகளில்.) என் கணிப்பின் படி கிட்டத்தட்ட 25% கட்டண இழப்பு நேரிடும். இன்று இல்லாவிட்டாலும் அடுத்த மூன்று வருடங்களில். ஏனெனில் ஒவ்வொரு வருடம் தாண்டவும் 'ஒரு குழந்தை குடும்பங்கள்' அதிகரிக்கின்றன.

ஏற்கெனவே எஜுகேஷனல் செஸ் என்று வரி கட்டும் நாங்கள் அனைவரும் நேர் வரி, மறைமுக வரி என்று இரண்டிலுமே 2% அதிகமாகக் கட்டுகிறோம். அதெல்லாம் எங்கே போகிறது என்று தெரியவில்லை.

பிரகாஷ் சொல்வது போல யார் என்ன என்ற வகை அறியாது எல்லாருக்கும் இந்தக் கட்டணச் சலுகை இருக்கவேண்டும் என்று அரசு சொல்வது அபத்தமாகத்தாண் இருக்கிறது; தனியார் பள்ளிகளை நசுக்குவதாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.

ரவி ஸ்ரீனிவாஸ் - CBSE -> மெட்ரிக் போவோம் என்று சொல்வதைக் குறை சொல்கிறார். நாளை மெட்ரிக்கிலும் இதே கதி வந்தால் என்ன ஆவது என்கிறார். அப்பொழுது நேஷனல் ஓப்பன் ஸ்கூல் எக்ஸாமுக்குப் போங்கள் என்று சொல்வேன். அங்கு இந்த விதியைப் புகுத்த முடியாது. ஏனெனில் இங்கு மாணவர்கள் தாங்களாகத்தான் பரிட்சை எழுதுகிறார்கள். எந்தப் பள்ளியும் எந்த அரசு நிறுவனத்திடமும் பதீந்து கொள்ள வேண்டியதில்லை.

மோசமான விதிமுறைகளை அரசு விதிக்கும்போது அதை எதிர்த்து சட்டபூர்வமான முறையில் நடந்துகொள்வது தவறல்ல.

பத்மா, கிராமம் மற்றும் டவுன் எனப்படும் சிறுநகரங்களில் சிபிஎஸ்ஸி பள்ளிகள் இருக்கின்றனவா என்ன? நான் பார்த்ததில்லை.
வெங்கட், ஒரு குழந்தை ஆணோ, பெண்ணோ போதும் என்று நிறுத்திக் கொள்ளும் கலாச்சாரம் பெருகிவருகிறது. ஒரு பெண் குழந்தையுடன் நிறுத்திக் கொண்ட என் நண்பர்கள், உறவினர்கள் எண்ணிக்கை கணிசமாய் உள்ளது.
சென்னைப் போன்ற நகரங்களில் வசிக்கும், பொருளாதார கண்ணோட்டத்தில் ஒரு பெண் குழந்தையை மட்டும் பெற்றவர்கள் தங்கள் குழந்தையை பத்மா சேஷாத்ரி போன்ற பள்ளியில் சேர்க்க ஆசைப்படலாம். ஆனால் இடம் கொடுப்பார்களா என்பது சந்தேகம்தான் :-) இத்தனை சதவீதம் இந்த திட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அடுத்த சட்ட திருத்தம் கொண்டு
வரலாம்.
தமிழகத்தில் குடும்பங்களில் பெண்கள் முன்னேறித்தான் வருகிறார்கள். இப்பொழுது மெல்ல என்று நினைக்கலாம், ஆனால் என்
கண்ணோட்டத்தில் வேகமாய் மாற்றம் வந்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஊருக்கு செல்வதால், பல தரப்பட்ட பெண்களுடன் பேசும் பொழுது இந்த மாற்றங்கள் நன்றாகவே கண்ணில் விழுகின்றன.

பிரகாஷ் சொல்லும் //இந்த திட்டத்தை முன்மொழிந்தவர்களின் நோக்கம் நியாயமானது. ஆனால், நடைமுறை படுத்திய முறை தான் சகிக்கவில்லை.// 100% சரி. எனக்கு பத்ரி சொல்வதிலும் 75% உடன்பாடாக இருக்கிறது. அவலை நினைத்து உரலை இடிக்கிறார்கள். பொதுவாக, சாமானியர் படிக்கும் பள்ளிகளில் பெண்பிள்ளைகளுக்கு மேலும் ஊக்கமும் கவனமும் கொடுத்து அதிகம்பேர் மேல்நிலைக்கல்விக்கு மேல் படிக்க வர வைப்பது இதைவிட முக்கியத் தேவையாக இருக்கும். அதன்மூலமே மேட்டிமைப் பள்ளிகளின் தேவையையும் முரட்டுத்தனத்தையும் குறைக்கமுடியும். இங்கே வெங்கட் சொல்லும் //என்னைப் பொருத்தவரை சிபிஎஸ்ஸி போன்ற மேட்டிமை பள்ளிகளைக் காட்டிலும் சராசரி நகராட்சி, கிராமப் பள்ளிகளில் பெண் கல்வியை ஊக்குவிக்க சிறந்த வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டியது முக்கியம்// உடன் முழுமையாக ஒத்துப்போகமுடிகிறது.

( பி.கு: என் பிள்ளைகள் இருவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிப்பதாலும், எனக்குத் தெரிந்த யாருமே சி.பி.எஸ்.சி.யில் படிக்காததாலும், எனக்கு நேரடியாக சி.பி.எஸ்.சி. பற்றி முழு அறிவு இல்லை. இதே காரணத்தால் சி.பி.எஸ்.சி. பள்ளிகள் மேட்டிமைப் பள்ளிகளாக இருக்கலாம் என்றும் நம்புகிறேன்)

காசி: என் பெண் படிப்பது CBSE பள்ளி ஒன்றில். பி.எஸ்.சீனியர் செகண்டரி ஸ்கூல், மைலாப்பூர். இதே நிர்வாகத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. கோபாலபுரத்தில் நான் வசிக்கும் தெருவில் மூன்றோ, நான்கோ CBSE பள்ளிகள் உள்ளன, DAV, நேஷனல் பப்ளிக் ஸ்கூல் ஆகியவை. பி.எஸ்.சீனியர் பள்ளியை மேட்டிமைப் பள்ளி என்று சொல்ல மாட்டேன். குறைந்த கட்டணம்தான். படிக்கும் பலரும் மைலாப்பூரைச் சுற்றியுள்ள நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.

சென்னை தவிர்த்த பிற தமிழக நகரங்களில் உள்ள CBSE பள்ளிகளை வேண்டுமானால் மேட்டிமைப் பள்ளிகள் என்று ஒருவேளை சொல்லலாமோ என்னவோ…

வெங்கட்: அரசு கல்வி அளிப்பதில் தோல்வியுற்றது என்னும் என் கருத்தை நீட்டிக்க முயற்சி செய்கிறேன். இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு முன் சில கிறித்துவ மிஷனரிகள் பள்ளிகளை எழுப்பினார்கள். அதைப் பார்த்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் பிற செகுலர்வாதிகளும் பள்ளிகளைக் கட்டினார்கள். சுதந்தரத்துக்குப் பிறகுதான் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையும் அரசே பள்ளிகளை எழுப்புவதும் ஆரம்பித்தது. தமிழகத்தில் காமராஜ் முதல்வராக வருவதற்கு முன்னர் கல்விக்காக செலவிடப்பட்ட தொகை குறைவுதான்.

காமராஜ் காலத்தில்தான் ஊருக்கு ஒன்று என அரசுப் பள்ளிகள் கட்டப்பட்டன. ஆனால் கடந்த 30 வருடங்களின் அரசு உருவாக்கிய பள்ளிகள் = கிட்டத்தட்ட 0. இந்த நேரத்தில்தான் தனியார் கல்விக்கூடங்கள் வர ஆரம்பித்தன. முதலில் இவை யாவுமே தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில்தான் இயங்கின. ஆனால் அரசு இந்தப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ஏற்றுக்கொண்டது. (Aided Schools)

கடந்த இருபது வருடங்களில்தான் மெட்ரிக் பள்ளிகள் அதிகமாக உருவாகத் தொடங்கின. இதுவும் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்குபவை, ஆனால் எல்லாமே ஆங்கிலக் கல்வி. மக்களுக்கு ஆங்கிலத்தின் மீதுள்ள மோகத்தினால் பலரும் இந்தக் கல்விக்கூடங்களில் சேரத்தொடங்கினர். இங்கு கல்வியின் தரம் குறைவாகத்தான் இருந்தது. வசூலிக்கும் கட்டணம் அதிகம்தான். (அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது)

(மீதி அடுத்த பின்னூட்டத்தில்)

நாளடைவில் அரசு புதிதாக உருவாக்கப்படும் பள்ளிகளுக்கு சம்பள உதவி தருவதையும் நிறுத்திக்கொண்டது. அல்லது குறைத்துக் கொண்டது. கடந்த சில வருடங்களில் புதிதாக எந்தப் பள்ளியையும் aided ஆக சேர்த்துக்கொள்ளவில்லை.

ஆனால் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாகிக்கொண்டேதான் வருகிறது. எனவே தனியார்கள் மட்டும் இல்லையென்றால் இந்தியா சப்-சஹாரன் ஆஃப்ரிகாவை விட மோசமான கல்வி நிலையில் இருந்திருக்கும்.

தனியார் கல்விக்கூடங்கள் அரசிடமிருந்து உதவி கிடைக்காத நிலையில் மாணவர்களின் கட்டணத்தை அதிகரிக்கத் தொடங்கினர். ஏனெனில் அதிலிருந்துதான் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்க வேண்டும்.

அப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் பல பள்ளிகளும் தான் ஏன் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தனர். விளைவு: அவர்கள் மெட்ரிக் அல்லது CBSE இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தனர். இதன் காரணமாகத்தான் தமிழ் மீடியம் பள்ளிகள் குறையத் தொடங்கின (சதவிகிதத்தில்).

என்னிடம் இப்பொழுதைக்கு முழுமையான புள்ளிவிவரங்கள் இல்லை, சேர்க்கத் தொடங்கியுள்ளேன்… ஆனால் இப்பொழுதைக்கு யாரிடமும் நிதி உதவி பெறாத (ஆனால் நில உதவி பெற்றிருக்கலாம்…) கல்விக்கூடங்கள் 25%க்கு மேலான மாணவர்களைப் பயிற்றுவிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சென்னை போன்ற ஊர்களில் இது இந்த விழுக்காடை விட அதிகமாக இருக்கும்.

(மீதி அடுத்த பின்னூட்டத்தில்)

அடுத்த இருபது வருடங்களில் தமிழகத்தில் 50% பள்ளிக் கல்வியைப் பயிற்றுவிப்பது அரசு மான்யம் பெறாத பள்ளிகளாகத்தான் இருக்கும். இதுபோன்ற பள்ளிகளை ஏற்படுத்துபவர்கள் லாபம் பெற ஆசைப்படுவார்கள். இது பிசினஸ்தான். ஆனால் unethical business ஆக மாறாமல் இருக்க அரசு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.

இந்நிலையில்தான் மைய அரசின் கொள்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. இன்னமும் பல தனியார்களை பள்ளிகளை ஏற்படுத்த உற்சாகப்படுத்தவேண்டிய நிலையில் இருக்கும் அரசு, அவர்ககளுக்குத் தொல்லை தரும் விதமாக நடந்துகொள்கிறது என்பதுதான் என் கணிப்பு.

மைய அரசு பெண்கள் கல்வியை பெரிதும் வரவேற்கிறது என்றால் அதற்கான கட்டணத் தொகையை தனி வரி வருமானத்திலிருந்து மான்யமாகக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தன் பணத்திலிருந்து சில கல்விக்கூடங்களைக் கட்டி அதில் பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்கலாம்.

(முற்றும்)

[21]> வெறும் 140 பேர் மட்டுமே என்று சொல்லவில்லை. அதையே பிடித்துக்கொண்டு நீங்கள் அவரைக் கட்டையால் அடிக்கிறீர்கள்.

பத்ரி - திருமதி பார்த்தசாரதி ஒரு முதிர்ந்த நிர்வாகி (ஒரு பெரிய நிறுவனத்தையே கட்டியெழுப்பியவர்) - அவர் இதுமாதிரியான கணக்குகளைக் கொடுத்து தன் வழக்கை முன் வைக்கும்பொழுது குறைந்தபட்சக் கணக்கைத் தருவார் என்று நான் ஏமாறத் தயாரில்லை. இதைவிடக் குறைவாகக் கூட இருக்கலாம்.

>என் கணிப்பின் படி கிட்டத்தட்ட 25% கட்டண இழப்பு நேரிடும். இன்று இல்லாவிட்டாலும் அடுத்த மூன்று வருடங்களில். ஏனெனில் ஒவ்வொரு வருடம் தாண்டவும் 'ஒரு குழந்தை குடும்பங்கள்' அதிகரிக்கின்றன.

உங்கள் தரவு எனக்கு மயக்கத்தைத் தருகிறது. தமிழகத்தில் 25% குடும்பங்களில் ஒரு பெண் குழந்தைகள்தான் இருக்கிறார் என்கிறீர்களா? இது உண்மையானால் நான் என்னுடைய முழு வாதத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளத் தயக்கமில்லை. நான் இந்தியாவிற்கு வந்து 5 வருடங்கள் ஆகப் போகின்றன. நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது போல உங்கள் கணக்கு காட்டுகிறது. I think I am frozen in time and India has evolved drastically.

>இரண்டிலுமே 2% அதிகமாகக் கட்டுகிறோம். அதெல்லாம் எங்கே போகிறது என்று தெரியவில்லை.

இதெல்லாம் நியாயமான ஆதங்கம்தான். இந்த விவகாரத்தில் வரிப்பணம் செலவிடல் குறித்து திறந்தமுறையில் விவாதிக்கத் தொடங்கினால் நல்லதுதான்.

[21] தொடர்ந்து…

>மோசமான விதிமுறைகளை அரசு விதிக்கும்போது அதை எதிர்த்து சட்டபூர்வமான முறையில் நடந்துகொள்வது தவறல்ல.

இவ்வளவு rebellious ஆக இந்த ஆணையை எதிர்க்க வேண்டுமா என்று எனக்குப் புரியவில்லை. இதுதான் உங்கள் பார்வை என்றால் நாம் இருவரும் இந்த விஷயத்தில் நேரெதிர் துருவங்களில் இருக்கிறோம். நான் இந்தப் பிரச்சனையை அரசாங்கப் பள்ளிகளின் சுமைக்குறைப்பு என்ற வகையில் பார்க்கிறேன். நீங்கள் ஏற்கனவே இளைத்துப் போயிருக்கும் தனியார் பள்ளிகளின் வயிற்றில் மண்ணை அள்ளிப்போடுவதாகப் பார்க்கிறீர்கள். இதில் எனக்கு மேற்க்கொண்டு சொல்ல் ஒன்றுமில்லை என்றுதான் தோன்றுகிறது.

ஒரே ஒரு விஷயம் 70,000 பேர் சந்தா கட்டி நிரந்த வருவாயுடன் நடக்கும் ஒரு வர்த்தக நிறுவனத்திடம் அரசு பொதுவில் விதிக்கும் கெடுபிடிகள் இந்த தனியார் கல்வி வியாபாரிகளிடம் உண்டா என்று யோசித்துப்பாருங்கள். செண்ட்ரல் போர்ட் தனியார் பள்ளிகளுக்காக அரசு செலவிடவே இல்லையா என்று பாருங்கள். அப்படிச் செலவிடுகிறார்கள் என்றால் மாறாக இந்த வியாபாரிகளிடம் எப்படி அரசு திரும்பப் பெறலாம் என்று கொஞ்சம் சொல்லுங்கள்.

[21]…
மறுபுறத்தில் நான் இந்தத் திட்டம் இப்படியே முழுமையாக அற்புதமானது என்று அரசுக்கு வக்காலத்து வாங்கவில்லை. இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். நான் ஏற்கனவே பிரகாஷ்க்குச் சொன்னதைப்போல பணம் கொழுத்த குடும்பங்கள் இதில் குளிர்காய்வதைத் தடுக்க வேண்டும். அப்புறம் இரண்டு பெண்களைக் கொண்ட குடும்பங்களுக்கு, ஏழையாக இல்லாத பட்சத்தில் சலுகையை நீட்டிக்க வேண்டும் (இரண்டுக்கு மேல் இருந்தால் அவர்கள் தேசவிரோதிகள்). அப்புறம் நான் வழக்கமாக சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்குச் சொல்லும் 'எந்த ஒரு சலுகையும் நாளாக ஆகக் படிப்படியாகக் குறைக்கப்பட்டு சமநிலைக்கு வர ஆரம்பத்திலேயே அதில் வகை செய்ய வேண்டும். There should be an exit strategy for all reservations. There should also be provision for periodic revision and restructuring' என்பதும் முக்கியம். ஆனால்

1. 140/70000 க்காக நாங்கள் மெட்ரிக்குலேஷன் ஆகிவிடுவோம் என்று பயமுறுத்துவது
2. ஆண் குழந்தைகளுக்கு எதிரான சமூக அநீதி என்று முதலைக் கண்ணீர் விடுவது
3. அரசுப் பள்ளிகளின் சுமையைக் குறைப்பதால் அரசு எங்களுக்கு பண உதவி தரவேண்டும் என்று கேட்பது

இப்படி இவர்கள் முன்வைக்கும் எல்லா வாதங்களுமே திமிர்த்தனமானமாகத் தெரிகின்றன என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

[23 காசி - கிராமப்புற பள்ளிகளில் பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது எல்லாவற்றையும்விட முக்கியம். அரசாங்கம் நேரடியாக வரிப்பணத்தைப் பெண்கல்விக்குச் செலவிட்டால் அது கிராமப்பள்ளிகளுக்காத்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புவேன். எனவேதான் பத்ரி வாதமான 'வரிப்பணத்தில் செய்யட்டுமே' என்பது இங்கே எடுபடவில்லை.

மறுபுறத்தில் தனியார் பள்ளிகள் கொழுத்துக் கிடக்கின்றன (மில்லேனியம் பள்ளியின் வருவாயைப் பாருங்கள். இதில் எல்லாமே நேரடியாக கல்விக்கூடத்தில்தான் செலவிடப்படுகின்றதா?). அவர்களின் வருவாயைக் கொஞ்சம் பாதித்து அவர்கள் பள்ளியிலேயே பெண்களுக்கு ஏதாவது நன்மை செய்யும் திட்டம் என்ற வகையில் எனக்கு இதில் மறுப்பேதுமில்லை.

[26][27] பத்ரி - தனியார் கல்வியின் சேவை நீங்கள் சொல்வதுபோல் அவ்வளவு உயர்வாகக் கணக்கிட முடியாது அதேபோல அரசுப்பள்ளிகளின் நிலையையும். இந்தியாவின் மாணவர் விழுக்காட்டில் தனியார் பள்ளிகள் எவ்வளவு வீதத்தைச் சென்றடைகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

ஒன்றை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். இன்றைக்கு வியாபாரத்தில் பெருத்து நின்று மெட்ரிகுலேஷன்/சிபிஎஸ்ஸிக்குத் தாவிய பல கல்வி நிறுவங்களுக்கு அரசு நேரடியாகவும் மறைமுகவாகவும் நிறைய உதவிகள் செய்திருக்கின்றது. Government has almost played the role of Venture Capitalists - seeding, incubating and promoting these 'commerical' ventures. You know very well what kind of a percentage VCs would demand from any start-up. If you talk in terms of 'let pure commerce succeed' - let them pay their dues to the VC.

Even if government is not aiding any new schools, it still provide subsidizes them through various tax shelters and land allocations. This would at least amount to 10% seed money for this business. They still owe to the government.

வேண்டாம் இந்த வாதத்தைத் தனியார் - அரசு கல்வியாகத் திருப்ப வேண்டாம். அதை இன்னொரு தளத்தில் இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம் (திங்கட்கிழமை துவங்கிவிட்டது). இந்த வாதத்திற்கு நான் தயார் என்றாலும் வேலைகளையும் பயணத்தையும் முன்வைத்து இதில் நான் இப்பொழுது இறங்கத் தயங்குகிறேன்.

முக்கியமான விஷயம் உயர்கல்வியைப் பொருத்தவரை (பல்கலைக்கழகங்கள், தொழிற்கல்விக் கல்லூரிகள்) என்னுடைய பார்வை மாறுபடும். ஆதாரக் கல்வியைத் தனியார் வியாபாரமாகப் போகாமல் சமூக நலமாகத் தக்கவைப்பது மிகமிக முக்கியம் என்று கருதுகிறேன். இதில் தனியாரை ஈடுபடுத்துவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் இதன் நோக்கங்கள் அரசாங்கத்தால்தான் வரையறுக்கப்பட வேண்டும்.

உஷா
நான் பொதுவாக கிராமங்களில் பெண்குழந்தைகளின் கல்வியை அதிகம் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற பொருளில் சொன்னேன். நகரங்களில் ஒரு பெண் குழந்தையாக இருந்தாலும் இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தாலும் படிப்பின் அவசியம் புரிந்தவர்கள் அதிகம். எப்படியும் படிக்க வைத்துவிடுவார்கள். ஆனால் பல நடுத்தர ஊர்களில், கிராமங்களில் பெண்கள், இளம் அன்னையர் இவர்களுக்கு அடிப்படை கல்வி அறிவே இல்லை. இது நாளை இவர்கள் வளர்க்கிற குழந்தைகளின் நலன், பில்ளை பேறு, மற்றும் இவர்களின் சொந்த நலனையும் பாதிக்கும். மேலும் இலவச கல்வி தந்தால் மட்டும் போதுமா? உடுத்த ஆடை, அவர்கள் வேலையில் இருந்து நின்று கொண்டால் அதற்காக அந்டஹ் குடுமபம் ஊதியத்தை (கூலி) இழந்துவிட்டால் என்ன செய்யும் என்பது பற்றியும் யோசிக்க வேண்டும். சமீபத்தில் என்னை தொடர்பு கொண்ட ஒரு BCom படித்த நகர சூழ்நிலையில் வளர்ந்த பெண்ணின் நிலையே என்னை இந்த கவலை கொள்ள செய்தது. இதை பற்றி முன்பே தொடராக பெண்களின் கல்வியின் முக்கியத்துவம் பற்றி எழுதி இருக்கிறேன். நம்முடைய கவனம் பெரும்பாலும் நகர பள்ளிகள், நகர மக்கள், இல்லை என்றால் சில நடுத்தர ஊர்கள் பற்றியே இருக்கிறதே தவிர, கிராமங்கள் பற்றி இல்லை என்பது என் தாழ்மையான கருத்து

Hello webmaster…I found your site via Yahoo! when i was searching for padma seshadri, and this post regarding ®‰à®³à¯à®³à¯à®®à¯ புறமும் really sounds very interesting to me.. Thanks.

Hi…Man i just love your blog, keep the cool posts about ®‰à®³à¯à®³à¯à®®à¯ புறமும் comin..holy Thursday .

Leave a comment

(required)

(required)