இவ்வார Wired சஞ்சிகையில் $100 டாலர்களில் உலகெங்கிலும் இருக்கின்ற பள்ளிக் குழந்தைகளுக்கு மடிக்கணினி கொடுப்பதைப் பற்றிய தகவல் வந்திருக்கிறது. (முன்பு ஒரு முறை மாஸாசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் ஊடக ஆய்வகத்தின் தலைவர் நிக்கோலஸ் நெக்ரோ·பான்டே இதைப் பற்றி சொல்லிய பொழுதே எழுதவேண்டும் என்று நினைத்துத் தவறிப்போனது).

இன்றைய தயாரிப்புச் செலவுப்படி வெறும் திரையைத் தயாரிக்கவே $180 டாலர்கள் ஆகும் நிலையில் எப்படி முழுக்கணினியையும் நூறு டாலர்களில் அடக்குவது?

கட்டுரையின் ஆசிரியர் ஜேஸப் ஜேக்கப்ஸன் இரண்டு முக்கிய காரணிகளைச் சுட்டுகிறார்; 1. அதிக அளவில் விற்பனை செய்வதால் விலை தானாகக் குறைந்துபோகும். (அவருடைய கணக்குப்படி குறைந்த பட்சம் ஒரு மில்லியன் கணினிகளையாவது ஆர்டர் செய்யவேண்டும்). 2. புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குவது அல்லது பிற துறைகளில் இருக்கும் நுட்பங்களை நீட்டிப்பதன் மூலம் விலையைக் குறைப்பது. ஜேக்கப்ஸன் மசியைக் கொண்டு எழுதுவதைப் போன்ற (அல்லது இங்க் ஜெட் அச்சுப் பொறியைப் போல) அமைப்பில் சிலிக்கன் சில்லுக்களை வடிப்பதற்கான தொழில் நுட்பத்தை உருவாக்கியவர். இதே தொழில்நுட்பத்தை கணினித் திரைகள் அமைப்பதற்குப் பயன்படுத்தலாம் என்று சொல்கிறார். (என்னுடைய வேலையில் நான் இதே போல இங்க் ஜெட் அச்சுப்பொறியைக் கொண்டு பாலிமர்களை வார்த்து அமைக்கப்பட்ட மிக நுண்ணிய லென்ஸ்களின் தொகுப்பைப் (Ink-jet printed microlens arrays) பயன்படுத்தியிருக்கிறேன். இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி விரிவாக இன்னொரு நாள் எழுதுகிறேன்).

இந்தத் திட்டத்தின் எம்.ஐ.டி மீடியா லாப் உடன், கூகிள், ஏ.எம்.டி போன்றவையும் இணைந்து பணியாற்றுகின்றன. சொல்லத்தேவையில்லை. $100 ரூபாயில் கணினி தரவேண்டுமென்றால் மைக்ரோஸாப்ட் வரியை முழுவதுமாகத் தவிர்த்தாக வேண்டும். எனவே இதில் லினக்ஸ் பயன்படுத்தப்படும்.

இந்தியாவில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனம், அல்லது சமூக நல அமைப்பு இந்தத் திட்டத்தில் இணைந்து பணியாற்றுவது நல்லது. (இதில் சமூக வளர்ச்சியுடன் கூடவே, வர்த்தகச் சாத்தியங்களும் அதிகம். பில்லியன் கணக்கில் கணினிகளை உருவாக்கும் தொழிற்சாலைகளை இந்தியாவில் முனையாவிட்டால் கட்டாயம் சீனாதான் இதைப் பெறும்).