தமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு - பாமர சந்தேகங்கள்
கொஞ்ச நாளாவே இதை எழுத நெனச்சிருந்தேன். தமிழ்மணம் நட்சத்திர மொறையை நாந்தான் தப்பா புரிஞ்சுகிட்டிருக்கேனா அல்லது எல்லாருமான்னு தெரியல. வெளங்க வச்சா உங்களுக்கு… கடைசில்ல சொல்லேறன்.
பதிவ மத்தவங்க படிக்கலாமா வேணாமான்னு மத்தவங்களுக்குச் சொல்லத்தான் காசி சாரு இந்த நட்சத்திர சமாச்சாரத்தைக் கொண்டுவந்தாரு. வழக்கமாக ஊருகூடி தேரு இளுக்கறச்ச வார சிக்கல்தான் இங்கயும். சனமெல்லாம் இளுக்க வேணாம் வடத்தைத் தொட்டுக் கண்ணுல ஒத்திக்கிட்டாலே புண்ணியம்னு நெனக்கிது. இப்ப என்னோட பக்கத்தையே எடுத்துகிங்க, அதிகமாபோனா ஒரு பதிவுக்குப் பத்து நட்சத்தெரம்தான் விளுவுது. எங் கணக்குப்படி நா ஒன்னு எளுதினா நூத்தம்பது பேரு படிக்கிறாங்க. இதுல பத்துல ஒம்போது கண்ணுல ஒத்திகிட்ற ஆளுங்கதான்
செலபேருக்கு நட்சத்தெரம் மளையா பொளியுது. நம்மமாரி ஆசாமிக்கு வானத்துல எப்பயும் மேகமூட்டந்தேன். செல சமயம் இருபது பேரு கருத்து எளுதுவாங்க ஆனா ரெண்டுபேருகூட நட்சத்துரத்துல குத்தமாட்டங்க. இப்பிடி இருந்தா இந்த நட்சத்துர மொறைய காசி மீள்வாசிப்பு செய்யலாம் [அருள், மீள்வாசிப்புன்னு சொன்னதுக்காக சாப்பாடு இல்லைன்னு வெளில துரத்திடாதீங்க, நீங்களே எல்லா பார்வைகளும் கண்டிப்பாகப் பதிக்கப்பட வேண்டும் சொல்லுவீங்க அப்பொறம் பேசினா தட்டத் தூக்கிகிட்டு வெளில ஓடும்பீங்க. பாக்குற பக்கத்துவூட்டு காரங்களுக்கு கவுண்டமணி செந்தில் காமெடியாட்டம் இருக்கும். எல்லாருஞ் சிரிக்கிறாங்கன்னு விளுந்து விளுந்து சிரிப்பாங்க
].
நெறயா பேரு நட்சத்திரத்துல ‘+’ குத்திட்டேன், ஓங்கி ‘-’ குத்திட்டேன் அப்புடீன்லாம் எக்ஸிட் போலிங்க் செய்றாங்க (சூப்பர் படம் சார், மொத பைட்டுக்கே காசு சரியாபோச்சு). “கரெக்ட் தலீவா, உனுக்கு ‘+’ போட்டேன்”, “அந்தாளு பார்ப்பனீய வன்முறையைப் பரப்புறான் அவனுக்கு எல்லாரும் ‘-’ போடுங்க” அப்படின்னு பின்பெட்டியில் கருத்துறாங்க. இப்படி ‘-’ ஓட்டுப் போட்றது கருத்தியல் வன்முறை (அய்யய்யோ… அருள் அடிக்காதீங்க…) இல்லியா? எனக்குச் சுத்தமாப் புரியல. எளுதினதோட ஒப்பில்லம போவலாம், ஆனாக்கவும் மத்தவுகளும் தாராளமா படிக்கலாம் அப்ப்டின்னா ‘+’ போடுங்ள். நாம் படிச்சு டைம் வேஸ்டு நைனா நீ படிக்காதே அப்படீன்னா ‘-’ போடுங்க இன்னுதான் காசி ஸார் (இன்னா… ‘ஸார்’ இல்லியா, இல்ல இந்தமாரி வெசயம்லா எளுதறப்ப ஒங்களுக்கு ஸார் போடனும் ஸார்) சொன்னதா நெனச்சேன். இல்ல நாந்தான் தப்பா புரிஞ்சிருக்கேனா?
இதெல்லா ஒரு பக்கங் கெடக்கட்டும். இந்த ‘+, -’ ன்னு ரெண்டு ஏண் இருக்கனும்னே எனக்கு இன்னும் புரியல. படிச்சேன் மச்சி, நீனும் படி அப்படின்னு சொல்ல மாத்ரம் ஒரே ஒரு ‘+’ போதாதா? இதுல ‘-’ எதுக்கு? ஓட்டுப் போடம போயிட்டா சுவாரசியம் இல்லைனுதானே அர்த்தம்? நா வளக்கமா படிக்கிற தங்கமணி, மாண்டி, நாரெய்ன், பெயரிலி, பத்ரி இவுங்களுக்கெலாம் எப்பயுமே என்னால ‘+’ தானே போடமுடியும் (யோவ், என்னோட நேரம் வேஸ்டாச்சில்ல, நீயும் படிச்சு வேஸ்ட்பண்ணு). முளுக்கப் படிக்கப் பொறும இல்லாம பாதிலயே ஓடிப்போயிலான்னு நெனச்சா நட்சத்துரத்துல மௌஸ வச்சி சொடுக்கி ஏன் இன்னும் நேரத்த வேஸ்ட் பண்ணனும்? (அதுதான் ஜனங்க இப்ப பண்ணிகிட்டு இருக்கு).
இப்ப பரிசுக்கு வந்தாச்சு. பெரிய கம்புமேல கைல ஜால்ரா வச்சுகிட்டு ஒரு பொம்மையோட முட்டாய் விப்பாங்களே, அதாங்க, எச்சி தொட்டு இழுத்து கைல கடிகாரமா கட்டுவிடுவாங்களே, அதுல ஒன்னு வாங்கித்தாரேன். (அப்பாடி இந்த மாதுரி கடைசில பரிசு வெச்சாக்க எல்லாரும் என்னோட கணக்குப்படி ஓட்டுப் போடுவாங்கல்ல…)
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
அட இப்படி குழப்பமாகீதுன்னா, கேள்வியாவுது கேக்கிறீங்களேபா…பலபேரு, " நாம எளுதுனதை இவங்க என்ன ரேட் பண்ணி குத்தறதுன்னு அதி மேதாவித்த்னமா நென்ச்சுக்கினு, இந்த வோட்டுப் போடற வஜதிய எனேபிள் பண்ணவே இல்லைபா.."
கேட்ட வரைக்கும் சந்தோஷம்.
என்னைப் பொறுத்த்வரை பின்னூட்டமாயிருந்தாலும் சரி, நட்சத்த்ர குத்தாயிருந்தாலும் சரி, அதிகமா ஃபீலாவரதில்லை. நட்ச்சத்திர எண்ணிக்கை குறைஞ்சா நானே வீட்ல ஒரு தரம்/ ஆபிஸ்ல ஒரு தரம் குத்திடுவேன். பின்னுட்டம் கொறஞ்சா, அடுத்த பதிவுல ஒரு கவர்ச்சிப்படம் போட்ருவேன் ;-). எப்படி வச்தி..??
——————————
>>>
பாக்குற பக்கத்துவூட்டு காரங்களுக்கு கவுண்டமணி செந்தில் காமெடியாட்டம் இருக்கும். எல்லாருஞ் சிரிக்கிறாங்கன்னு விளுந்து விளுந்து சிரிப்பாங்க
——————————–
வெங்கட்…..
கிர்ர்ர். அது என்னாச்சுன்னா, என்னடா இப்பிடி ரொம்ப ஓவரா பந்தா விட்டு எழுதிட்டோமேன்னு ஆயிடுச்சு. . மொதல்ல நம்ம தலையிலே நாம தானே தட்டிக்கணும். அடுத்தது அந்த பிபிசி தளத்தில மேஞ்சேனா, சரி விழுமியத்த ஒரு கை பிடிக்கலாம்ன்னு படமா போட்டுட்டேன். அந்தக் குட்டி டைனோ நாந்தான்னு யாரும் கண்டுபிடிக்கலே. போகட்டும். மீழ்வாசிப்புக்கும் ஒண்ணு போட்டேன். ஆனா அத கொஞ்ச நாள் கழித்து மண்டை ஓடாம இருக்கறப்ப புதுசா போட்ட மாதிரி போட்டுடலாம். நீங்க உங்க கொற்றவை பதிவை உடனடியாப் போடுங்க.
——————————–
அருள்
நான் + போடுவதுண்டு. - போடுவதில்லை (அப்பப்ப சோதனைக்கு எனக்கு நானே ஊசி போட்டுக்கொண்டால் ஒழிய). நான் ஒத்துக்கொள்ள கருத்தினை எழுதினாலென்ன, அந்த எதிர்கடைக்கீரைக்கும் (டோண்டு ஐயா மாதிரி; ஆனால், டோண்டு ஐயாவின் கருத்துகளுக்கு விழும் + எல்லாமே என்னைப்போல எண்ணத்திலே போடுகின்றவர்களாலே வருகின்றதில்லை என்பதும் என் அபிப்பிராயம்) + தான். குறைந்த பட்சம், எதிர்க்கவேண்டிய கருத்து என்பதற்காக வாசிக்கப்படவேண்டியதல்லவா? மிகுதிப்படி, வாசிக்க நேரம் எடுத்துக்கொள்வதிலே அர்த்தமில்லை என்று எனக்குப் படும் பதிவுகளுக்கு ஒன்றுமே போடுவதில்லை. +/- பகுதியையே எடுத்துப்பார்த்தேன் (அதோடு சேர்ந்து பின்னூட்ட எண்ணிக்கையும் தமிழ்மணத்திலே தொலைந்துபோகிறது); அதனாலே, மீண்டும் சேர்த்துக்கொண்டேன். மிகுதிப்படி, +/- ஓரளவுக்கு ஒரு மாயைதான்.
[1] தங்கமணி - இந்த அடப்பாவி எழுத்தையும் அடுத்தவங்க படிக்க வேணாமா? அடப்பாவின்னு நெனச்சாதான் சொல்லனும். ஜால்ரா பொட்றதுல என்ன பிரயோசனம். இதுனாலதான் நான் பெரும்பாலும் எழுதினா நாலுவரியாவது எழுதுறேன். இல்லன்னா, பேசாம போயிட்றேன். (பெரும்பாலனா சமயம் நேரமிருப்பதில்லை. ஆனால் கொஞ்சம் நாளக்கி முன்னால நான் வேணும்னே கருத்து எளுதறதில்ல, அப்பிடீக்கறமாரி ஒரு எண்ணம் வந்தப்புறம் கொஞ்சம் சிரத்தையெடுத்து ரெண்டுவரியாவது எழுதுறேன்).
[4] >அந்தக் குட்டி டைனோ நாந்தான்னு யாரும் கண்டுபிடிக்கலே. போகட்டும்.
அய்யய்யோ, உங்க கார்ட்டூன் புரிஞ்சிடிச்சுன்னு எம்பிக் குதிச்சவங்கள எல்லாம் இப்படி ஒரேயடியா குழில தள்ளிட்டீங்களே
[2] தம்பி கார்த்திக்கு - நான் ஏம்பா உனுக்கு சொல்லப்போறேன். என்னோட விழுமியம் எனக்கு ஒன்னோடது ஒனக்கு. அஜக்குன்னா அஜக்குதான் குமுக்குன்னா குமுக்குதான். ஆங் அஜக்கு, ஆங் குமுக்கு…
[3] என்னா ஸுந்தர் ஸார் (என்னாது ஸுந்தர் இல்ல, சுந்தரா. அதெல்லாம் அப்படித்தான். ஜெயந்தியை செயந்தின்னு எழுதுறோம்ல :)) - அடுத்த தடவ நீங்க படம் போட்றச்சே உங்க ஸைட்லேந்தே லிங்க் கொடுத்து இங்கெயும் போடட்டுமா?
வெங்கட்,
பதிவு நன்றாக (சுமாராக கூட) இருந்தால் கூட்டல். நிஜமாகவே மோசமாக இருந்தால் கழித்தல் (அதாவது எழுதியவர், படிப்பவர் இருவரின் நேரத்தையும் வீணாக்கியது மாதிரியானவை). மேற்கொண்டு ஏதாவது சொல்ல இருந்தால் மட்டுமே பின்னூட்டமிட மெனக்கெடுவது.
ஹி.ஹி. எந்தப் பிரதிக்கும் பன்முக வாசிப்புகள் உண்டல்லவா? அதான். வாசகருக்கும் படைப்பாளிக்கும் ஈரேழு பதினாலு லோகத்தின் இலக்கியக் காடுகளிலெல்லாம் கடந்த அரை நூற்றாண்டு காலம் நடந்த இந்த துவந்த அர்த யுத்தத்தில் வென்றது யாரென்று நினைக்கிறீர்கள்? வாசகரா? இல்லை. படைப்பாளியா? ஊஹும். பின்னே யார்தான் வென்றது? டொட்டொடய்ய்ய்ங். இறுதியில் வென்றது பிரதிதான். ;-).
அருள்.
>>>
அய்யய்யோ, உங்க கார்ட்டூன் புரிஞ்சிடிச்சுன்னு எம்பிக் குதிச்சவங்கள எல்லாம் இப்படி ஒரேயடியா குழில தள்ளிட்டீங்களே
ஹி.ஹி. எந்தப் பிரதிக்கும் பன்முக வாசிப்புகள் உண்டல்லவா? அதான். வாசகருக்கும் படைப்பாளிக்கும் ஈரேழு பதினாலு லோகத்தின் இலக்கியக் காடுகளிலெல்லாம் கடந்த அரை நூற்றாண்டு காலம் நடந்த இந்த துவந்த அர்த யுத்தத்தில் வென்றது யாரென்று நினைக்கிறீர்கள்? வாசகரா? இல்லை. படைப்பாளியா? ஊஹும். பின்னே யார்தான் வென்றது? டொட்டொடய்ய்ய்ங். இறுதியில் வென்றது பிரதிதான். ;-).
அருள்.
நான் ஒருநாளும் குத்துக்களைப் பார்த்து படிப்பதில்லை. தலைப்பைப் பார்ப்பேன். தொடக்கத்தில் வரும் சில வரிகளைப் பார்ப்பேன். புரிந்து விடும் படிக்க வேணுமா வேண்டாமா என்று. மற்றப்படி குத்துக்களை நான் அதிகம் கவனிப்பதில்லை. சில வேளைகளில் சிலருக்கு ஒன்றுமே இல்லை என்று கவனித்தால் போடுவதுண்டு அதை விட மிகப்பிடித்திருந்தாலும் சில வேளைகளில்தான் போடுவேன்;. காரணம் மறந்து விடுவது. பின்னூட்டமே இல்லாமல் சிலரது பரவாயில்லை பதிவுகள் இருக்கின்றன. அவர்களை ஊக்கப்படுத்தப் பின்னூட்டங்களும் அவ்வப்போது இடுவதுண்டு. என்னைப் பொறுத்தவரை இங்கும் ஒரு வகை குரூபிஸம் உருவாகி வருகின்றது. இவருக்கு இவர் நிச்சயமாகப் பின்னூட்டமிடுவார். அது என்னவாக இருந்தாலும். போன்ற ஒரு நிலமை உருவாகி வருகின்றது.
அது சரி யார் யாருக்கு குத்துப் போடவேண்டும் என்ற எதிர்பார்க்கின்றீர்களோ தயங்காமல் சொல்லுங்கள் நான் ஒவ்வொருநாளும் குத்துக் குத்தாய் போட்டு விடுகின்றேன். (நேரடியாகக் கேட்க வெட்கமாக இருந்தால் மின்அஞ்சலில் எழுதி விடுங்கள்) இது ஒரு உளவியல் பிரச்சனை என்றுதான் நினைக்கின்றேன். என் குழந்தைகள் கிண்ரகாடினில் ஸ்டார் போட்ட பேப்பரோடு சிரித்துக் கொண்டு வருவார்கள். அப்போது அவர்கள் முகத்தைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கும். நான் உங்களுக்கு ஸ்டார் போடுகின்றேன். நீங்களும் சிரியுங்கள்.
[15] >தயங்காமல் சொல்லுங்கள் நான் ஒவ்வொருநாளும் குத்துக் குத்தாய் போட்டு விடுகின்றேன். (நேரடியாகக் கேட்க வெட்கமாக இருந்தால் மின்அஞ்சலில் எழுதி விடுங்கள்) இது ஒரு உளவியல் பிரச்சனை என்றுதான் நினைக்கின்றேன்
கறுப்பி. கேட்காம இருந்தா உளவியல் பிரச்சனை என்று சொல்லிட்டீங்க. அதுனால கேட்டுத்தான் ஆகனும். எனக்கு தினசரி நாலு நட்சத்திரம் போடுங்க. நானும் கிண்ட்ற கார்டான் மாதிரி பாத்தவுடனே தனியா சிரிச்சு வைக்கிறேன்.
+/-, எழுதப் பொறுமை/நேரம் இல்லாதவர்கள் சுருக்கமாகத் தங்களது அபிப்ராயத்தைக் காட்டுவதற்காக இருப்பது என்று நினைக்கிறேன் - அதுவும் தேவைதான். -2/100 என்று ஓட்டு எண்ணிக்கை இருந்தால், 50 பேர் ஆதரவுக் குத்தும் 52 பேர் எதிர்க் குத்தும் குத்தியிருக்கிறார்கள் என்பதுதான் கணக்கு என்று நினைக்கிறேன். பெரும்பாலும் +ம், சகிக்கமுடியாத உளறல்களுக்கு -ம் குத்துவது உண்டு. எதிர்க்குத்து விழுந்திருக்கிறது, நிறையப்பேருக்கு இந்த விஷயத்தை ஒத்துக்கொள்ளமுடியவில்லை என்று தெரிவிப்பதற்காகவாவது - குத்துவதும் அவசியமே என்று நினைக்கிறேன். வெங்கட், கூல் டவுன்
நீளமாக ஒரு பதிவு எழுதினால் அதற்கு இரண்டு மூன்று பின்னூட்டங்கள் வருவதே அதிகபட்சம் - பெயரிலி அவர் பதிவின் பின்னூட்டத்தில் சொன்ன மாதிரிதான்! முக்கி முக்கி மூன்று மணி நேரம் எழுதினாலும்…..
நல்லதற்கென்று நினைத்து காசி செய்திருக்கிறார்; நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். குதிரையைக் குளம் வரைதான் கூட்டிப்போகமுடியும், தண்ணி குடி என்று தலையைப்பிடித்து அமுக்கவா முடியும்? அவரவருக்குத் தெரியவேண்டியதல்லவா அது?
[15] கறுப்பி அக்கா, நல்ல காலம் யார் + போடுகிறார் யார் - போடுகிறார் என்று ஒவ்வொரு பதிவாளருக்கும் தெரியாமல் இருக்கிறது. இல்லாவிட்டால், எங்கே கறுப்பி அக்கா எங்கடை பதிவுக்கு + போட்டுட்டாவே, அந்தளவுக்கு மோசமாகவா எழுதியிருக்கிறேன் என்றே உள்ளம் வெந்து நாக்கைப் பிடுங்கிக்கொண்டு ஒரு சிரட்டை தண்ணிக்குள்ளை மூக்கைத் தாட்டுக்கொண்டு "பதிவாளனும் நானோ? நற்பதிவானதும் எனதோ?" எண்டு தற்கொலை பண்ணியிருப்பம்.
இது வெரிக்கும் வந்திருக்கிற பின்னூட்டம்ஸ் 19. ஆனா உய்ந்துகீற ஓட்டு எத்தினி? ஏழு. இதிலேந்து இன்னா தெரியுது? தலீவர் அன்னிக்கே ஸொல்ட்டார்…
" மாயா மாயா மாயா
எல்லாம் மாயா
சாயா சாயா சாயா
எல்லாம் சாயா…"
//இப்ப பரிசுக்கு வந்தாச்சு. பெரிய கம்புமேல கைல ஜால்ரா வச்சுகிட்டு
ஒரு பொம்மையோட முட்டாய் விப்பாங்களே, அதாங்க, எச்சி தொட்டு
இழுத்து கைல கடிகாரமா கட்டுவிடுவாங்களே,
அதுல ஒன்னு வாங்கித்தாரேன். //
ஐய்யோ, என் சின்ன வயசு வாழ்க்கையிலே ஆசைப்பட்டுக் கிடைக்காமப் போனது
இதுதான்! இதைப் பத்தி என் பதிவு ஒண்ணுலே புலம்பியிருப்பேன்!
இப்பவாச்சும் உங்க புண்ணியத்துலெ கிடைக்குதான்னு பாக்கறேன்!
[20] சர்தான் போய்யா!
கறுப்ஈ, எருமை? அதுதானே ஸ்ரீரங்கன் செல்வம் என்று சொல்லிவிட்டாரே!
மொத்தத்திலே, இணையம் என்றில்லை பதிப்புலகம் படவுலகம் எங்கேயும் நட்சத்திரம் போடவிட்டால், நிலை இப்படியாகத்தான் இருக்கும். எல்லாத்திலேயும் டாப் டென்னிலேயே டென்னிஸு அடிச்சுப்பழகிட்டோம்; இதிலேயும் அடிச்சுவிட்டுக்கொண்டே போனால், சும்மா ஒரு த்ரில். அவ்வளவுதான். வேண்டுமானால், விசுர்த்தனமாக,
"உடுக்குறி விழுந்ததெல்லாம் உருப்படியானதில்லை
உடுக்குறி விழாததெல்லாம் உருப்படியில்லாததுமில்லை - ஆனால்,
உடுக்குறி விழுந்ததிலும் உருப்படியானவையுண்டு
உடுக்குறி விழாததிலும் உருப்படாததுண்டு" என்று பைனாகுலர் வைத்துப் பார்த்துச் சொல்லிவிட்டுப்போகலாம்
நான் அடப்பாவின்னு சொல்றது ரொம்ப ரொம்ப குறைச்சு. நடத்துங்கன்னு சொல்றதுதான் அதிகம். அப்ப ஒன்னும் போடம இடத்த காலிபண்ணிடுவேன்.
இந்த (-) குறியால சிலர் தங்களை வெளிப்படுத்திக்க விரும்பாம எதிர்க்க விரும்புவாங்க. அப்படியாப்பட்டவங்களுக்கு பயன்படுது..
வெங்கட் ஜோக்ஸ் அபார்ட்,
நட்சத்திரம் சில வேளைகளில் உண்மையிலேயே எனக்கு உதவியதுண்டு. நேரமில்லாமல் அவசரமாக வாசிக்கும்போது (அது எப்போது?) + போட்டு விட்டு போய்விடுவேன்.
சில நேரங்களில் சில பதிவுகள் (ஆகா அமர்களமான தலைப்பு) என் அறிவுக்கு மீறியிருக்கும்போதும் அப்படி செய்வதுண்டு. உங்களுக்கு கூட சில சமயம் செய்ததுண்டு(வளைச்சி பிடிச்சுட்டனா?).மாண்டி மாதிரி ஓவர் இலக்கியமா எழுதுற ஆக்களுகெல்லாம் என்ன பதில் பின்னூடம் இடறது. குத்துடா ராசா'தான்.
கறுப்பி சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில், நானூறு பதிவர்களில் ஒரு நாளைக்கு சில நூறு பதிவுகள் உள்ளீடாகிறது. அதில் சிலதைதான் வாசிக்க முடிகிறது. நிலைமை அப்படி இருக்கும் போது குழுக்களாகத்தான் ஆகமுடியும். அதற்கு விரோதக்குழு என்று கற்பிதம் செய்யக் கூடாது. இதைல் அவரவர் ரசனையும்,கருத்தியல்களும். (கூடவே விழுமியங்களும் ;-))
என்னைப்பொறுத்தளவில், பெயரிலி போல கொஞ்சம் குசும்பு ஜாச்தியானர்களின் பதிவுகளில் போர் அடிக்க்கும்போது பொழுதைக்கழிப்பதுண்டு.
மற்ற்வர்களிடம் விஷயம் இருந்தால் நிச்சயம் எழுதுவேன். பாருங்கள் இந்தப்பதிவிலே என் முதல் குசுப்புப் பின்னூடமும் அடுத்து,இதுவும்.
மொத்ததில் இப்படி ஒரு சிஸ்டம் பயன்படுத்துவதில் தான் கோளாறு , சிஸ்டத்தில் இல்லை(ஆகா த்துதுவம்!).
எல்லாவற்றிஅயும் தாண்டி, நல்ல பதிவுகளுக்கு, குத்தோ பின்னூட்டமோ வந்து கொண்டுதானிருக்கிறது. உதாரணமாக , பத்மா அரவிந்த சமீபத்தில் தான் நம்மிடையே வந்தார். அவர் பதிவுகளுக்கு வரக்கூடிய பின்னுட்டம் வந்துகொண்டு தான் இருக்கிறது.
நான் சில் நேரம் ரொம்ப யோசித்து எழுதினாலும், 'போ டா வெண்ணை' தான்.
இதைத் தாண்டியும், வலைப்பதிவர்கள் நேரம் , அலுவல்கள் மிகப்பெரும் பங்குண்டு.
மேலே சொன்ன அதையும் தாண்டி:-) நட்சத்திரத்தை பெற்றுக்கொள்ளத்தான், வாரம் ஒருவரை நட்சத்திரமாக்கி அழகு பார்க்கிறோமே. அவருக்கு அப்போது பின்னுட்டம் எல்லோரிடமிருந்தும் கிடைக்கிறதே.
நட்சத்திரங்களால் நாட்டுக்கு நன்மையே என்று கூறி, வாய்ப்புக்கு நன்று கூறி….. இருங்கப்பா மைக்க குடுக்கிறேன்.
இது தவிர பாஸ்டன் பாலாவின் பல பதிவுகளுக்கும் இருக்கு ஒரே ஓட்டு என்னுடையதுதான் என்று இந்தப் பொன்னான நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன்.
வாய்ப்பு தந்த'மைக்'கு நன்றி. எனக்கு முன்னாலே பேசிய அண்ணன் கார்த்திக்ரமேஸ் அவர்ஹே..ள் அரியபல கருத்துக்களைய் நம்மிடையே சொல்லிச் சென்றார்ஹே…ள்.
நான் ஒன்றே ஒன்றைய் மட்டூம் இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.
குமுகத்தோ டொட்டிக் கலாசல் பலகற்றும்
குத்தார் கண்ணிலா தார்.
ஆகவே தனியொருவருக்குக் குத்தில்லையென்றால் அவரைத் தேடிப் பிடித்து, விரட்டி விரட்டிக் குத்த இந்த வலைச் சமூகம் கடமைப் பட்டுள்ளது என்பதை சொல்லிக் கொண்டு வாய்ப்பளித்த அண்ணன் வெங்கட்டுக்கு நன்றி கூறி (நா எங்கேய்யா அளித்தேன்?) அந்த பம்பாய் மிட்டாயை எனக்கே அளிக்குமாறு கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன். :))
[25]
/என்னைப்பொறுத்தளவில், பெயரிலி போல கொஞ்சம் குசும்பு ஜாச்தியானர்களின் பதிவுகளில் போர் அடிக்க்கும்போது பொழுதைக்கழிப்பதுண்டு./
அப்ப பெயரிலி வெறும் குசும்புதான் என்கிறீர்கள்.
உர்ர்ர்ர்ர்ர்….
நானும் இனி இண்டலெக்ஸுவலா, ஸயண்டிபிக்கா, பெமினிஸ் கதைக்கப்போறன். பெயரிலி பதிவெண்டால், பிலிமாலயா எண்டு ஒரு தம்பி தங்கச்சியும் சொல்லாதமாதிரி எழுதப்போறன். (அண்ணா, ஐயா, அக்காமார் சொன்னாச் சொல்லட்டும்) எருமைச் சின்னத்தில புள்ளடி போட்டாலுஞ் சரி. பெயரிலியா பேமாங்காயா? அதுக்கொரு மொகமூடி வேணுமெண்டாலும் போட்டுடுவன்.
எனக்கு மட்டும் பறக்கும் சக்தியிருந்தால் ஆகாயத்தில் உள்ள அத்தனை நட்சத்திரங்களையும் இங்கே தோரணமாக கட்டி தொங்கவிட்டிருப்பேன். என்ன செய்வது எனக்கு அந்த சக்தி இல்லையே. பதிந்தவைக்கெல்லாம் குத்திவிட்டால் இந்த மன்றத்தில் தரத்திற்கு இடமேது என்று எனக்கு தெரிந்தவரை நான் வாக்களிப்பது உண்டு. எனக்கு எதுவுமே புரிவதில்லை என்பதால் பின்னூட்டம்+நட்சத்திர பொருத்தமெல்லாம் பார்ப்பதில்லை
/////இந்த நட்சத்துர மொறைய காசி மீள்வாசிப்பு செய்யலாம்/////
:))
//நா வளக்கமா படிக்கிற தங்கமணி, மாண்டி, நாரெய்ன், பெயரிலி, பத்ரி இவுங்களுக்கெலாம் எப்பயுமே என்னால '+' தானே போடமுடியும் (யோவ், என்னோட நேரம் வேஸ்டாச்சில்ல, நீயும் படிச்சு வேஸ்ட்பண்ணு). //
:)) :))
[17]> -2/100 என்று ஓட்டு எண்ணிக்கை இருந்தால், 50 பேர் ஆதரவுக் குத்தும் 52 பேர் எதிர்க் குத்தும் குத்தியிருக்கிறார்கள் என்பதுதான் கணக்கு என்று நினைக்கிறேன்.
மாண்டி - one of those daysன்னு நெனக்கிறேன். இப்படி அருமையான விளக்கம் சொல்லியிருக்கீங்களே. அஜக்குன்னா அஜக்குக்கு மாதிரி.
பெரும்பாலும் +ம், சகிக்கமுடியாத உளறல்களுக்கு -ம் குத்துவது உண்டு. எதிர்க்குத்து விழுந்திருக்கிறது, நிறையப்பேருக்கு இந்த விஷயத்தை ஒத்துக்கொள்ளமுடியவில்லை என்று தெரிவிப்பதற்காகவாவது - குத்துவதும் அவசியமே என்று நினைக்கிறேன். வெங்கட், கூல் டவுன்
அய்யய்யோ, நான் பின்னூட்டம் நட்சத்திரம் இல்லேன்னு வருத்தப்படல. பொதுவுல இது எப்படி வேலை செய்யுதுன்னு புரிஞ்சுக்கத்தான் கேட்டேன். பல பேரு ந்ட்சத்திரத்தைக் கண்டுக்கறதே இல்ல (அதிக கருத்து/குறைந்த் நட்சத்திரம்), அப்புறம் பெரும்பாலும் புடிக்கலண்ணா -, இன்னும் சிலர் கருத்து ஒத்துப்போகலன்னா - இப்படி எனக்கிருக்கிற கொழப்பம் எல்லாருக்குமமிருக்கான்னு கேட்டு சந்தோஷப்படத்தான்.
[21]துளசி, மொதல்ல சந்தேகத்தைத் தீருங்க, அப்புறம் பொற்கிளியெல்லாம் தானா கெடக்கும்.
ஆமாம், உங்களுக்குச் சின்ன வயசுல அந்த பொம்மை எப்படி ஜால்ராபோடும்னு தெரியுமா? அதை வச்சுத்தான் நான் வாழ்க்கைல உயரமான எடத்துக்கு வரனும்னா ஜால்ரா போட்றது முக்கியம்னு தெரிஞ்சுகிட்டேன்.
[25][27] பெரியோர்களே, தாய்மார்களே, இதுவரைக்கும் நம் பேட்டையைச் சேர்ந்த கார்த்திக்கும் சுந்தரவடிவேலு அவர்களும் உங்களிடையே நட்சத்திரங்களால் விளையும் நன்மைகளைப் பற்றிப் பேசினார்கள்.
தலைவர் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார். தலைவர் வரும்வரை பொறுமையாக அமைதிகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தைவிட்டு யாரும் கலைந்துவிடவேண்டாம்.
தலைவர் வரும்வரை நாலாவது வட்டத்தின் சார்பாக….. பேசுவார்.
[28]>நானும் இனி இண்டலெக்ஸுவலா, ஸயண்டிபிக்கா, பெமினிஸ் கதைக்கப்போறன். பெயரிலி பதிவெண்டால், பிலிமாலயா எண்டு ஒரு தம்பி தங்கச்சியும் சொல்லாதமாதிரி எழுதப்போறன்
அண்ணாத்தே நீங்க பிலிமாலயாவ உட்டுறாதீங்க. அப்புறம் முந்த்ரசகி, எம்பாய் முக்ஸ்ப்ரஸ் இதெல்லாம் பத்தி எங்களுக்கு யாரு சொல்லுவாங்க.
//அப்ப பெயரிலி வெறும் குசும்புதான் என்கிறீர்கள். உர்ர்ர்ர்ர்ர்….//
ஐய்யோ இத எங்க போய் சொல்லி அழ. படிச்சவுடனே கன்னத்திலே 100 முறை போட்டுக்கிட்டேன்.
பொறுமை காத்தருளும் பகவானே!!!
சமீபத்து ஆழமான பதிவு இதுக்காகாவா?
//மற்ற்வர்களிடம் விஷயம் இருந்தால் நிச்சயம் எழுதுவேன். //
மற்ற்வர்களிடம் சொல்ல எனக்கு விஷயம் இருந்தால் நிச்சயம் எழுதுவேன் என்று வாசித்து ஆழமான பதிவுக்கு போனவர்கள் மேலே வரவேண்டும் என்று இந்த பன்னாடையைப் போர்த்தி வேண்டிக்கொள்கிறேன்.
[35]
அடப்பாவி! இதை இப்பிடியுமா கட்டுடைப்பாய்!
காக்கா இருக்க பனங்காய் விழுந்துச்சாமே, அது உன் தலைல விழுந்திருக்கலாம்
[34]
அதெல்லாம் நான் காட்றதில்லையே சாரே; We don'r see Tamil fixures, Only English pictures
//பனங்காய் விழுந்துச்சாமே//
பனங்காய் முதலில் பனங்காட்டு 'எருமை' மேலே விழுதுச்சுன்னு தெரியும் ; சும்மா தமாசுக்கு
[31]
//மாண்டி - one of those daysன்னு நெனக்கிறேன். இப்படி அருமையான விளக்கம் சொல்லியிருக்கீங்களே. அஜக்குன்னா அஜக்குக்கு மாதிரி.//
அடேய் உனக்குக் கடிச்சுத் துப்பினாலும் கணக்கு வராதுன்னு வாத்தியார் என்னைப்பார்த்து சபிச்சு கஜகர்ண பல்டியடிச்சுப் புலம்பினதால்தானே வெறுத்துப்போய் அதன் பக்கமே தலைவைச்சுப் படுக்கலை!! இதுமாதிரி விஷயங்களில்தான் பழைய கணக்குத் திறமையைச் சாணி, அடச்சே, சாணைபிடிக்கவேண்டியதாயிருக்கு ;-)!! இந்தமாதிரி இனிய விபத்துக்களையெல்லாம் கண்டுக்கக்கூடாது. புத்தகத்தைத் திறந்துபார்க்காமலே பாடம்சொல்றதுன்னா இதுதானோ!!
//அய்யய்யோ, நான் பின்னூட்டம் நட்சத்திரம் இல்லேன்னு வருத்தப்படல.//
அப்படி நினைத்து நான் சொல்லவில்லை!! அப்படிப் பட்டிருந்தால் மன்னிக்க… எதைநினைத்து கூல்டவுன் சொன்னேனென்பது இப்போது குழப்பத்தில் எனக்கே மறந்துபோய்விட்டது… சொல்லப்போனா இந்த மைனஸ் குத்து சமாச்சாரத்தை அரசியல் ஓட்டுலயும் கொண்டுவரணும்.
Let x be "for" votes,
Let y be "against" votes.
For a posting having 72 votes, say the score given is 20/72,
Scoring as per formula = (x-y)/(x+y)
Thus here we have,
x+y= 72………(1)
x-y= 20………(2)
Adding 1 and 2 above,
2x = 92, hence x = 46 and y = x -20 = 46 -20 = 26.
Regards,
N.Raghavan
//தா பாருங்க.. இனி ஒருத்தரும் டோண்டு ஐயாவுக்குக் கணக்குத் தெரியல்லேன்னு சொல்லிடப்படாது. ஆமா! //
தா பாருங்க.. இனி ஒருத்தரும் டோண்டு ஐயா கண்ணுக்குத் தெரியல்லேன்னு சொல்லிடப்படாது. ஆமா!
[40]
//Let x be "for" votes,
Let y be "against" votes.
For a posting having 72 votes, say the score given is 20/72,
Scoring as per formula = (x-y)/(x+y)
Thus here we have,
x+y= 72………(1)
x-y= 20………(2)
Adding 1 and 2 above,
2x = 92, hence x = 46 and y = x -20 = 46 -20 = 26.
Regards,
N.Raghavan//
கட்ஸியா இன்னா சொல்ல வர்றே தலீவா?!
[42] //தா பாருங்க.. இனி ஒருத்தரும் டோண்டு ஐயாவுக்குக் கணக்குத் தெரியல்லேன்னு சொல்லிடப்படாது. //
விடையை கடைசில தனியா எழுதி கட்டம் கட்ட மறந்திருக்காரு. அதுக்கு ரெண்டு மார்க் கட்.
[47]
சுந்தரமூர்த்தி அவர்கள் மதிப்பெண்களை வெட்டுவதில் என் ஒன்பதாம் வகுப்பாசிரியர் ஏ.கே. திருவேங்கடாச்சாரி அவர்களை நினைவுபடுத்துகிறார். நிற்க.
நான் கூற நினைத்ததை இப்போது தெளிவுபடுத்துகிறேன். காசி அவர்கள் பேசாமல் (x)/(x+y) என்பதுடன் விட்டிருக்கலாம் என்பதே நான் எழுதிய ஒரு பதிவின் சாரம். அப்போதுதான் தெரிந்தது பலர் நட்சத்திர மதிப்பு (x)/(x+y) என்றே நினைத்திருக்கிறார்கள் என்று. நாட்டில் அவனவன் பல பிரச்சினைகளுடன் இருக்கையில் (x-y)/(x+y) என்பதையெல்லாம் பார்த்து x-யை மனக் கணக்கெல்லாம் போட்டு கண்டுபிடிக்க வேண்டுமா என்பதே என் கேள்வி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
காசியின் மதிப்பீட்டு முறையை நான் நம்புவதில்லை. என்னிக்கு கொசப்பேட்டை உண்மையைச் சொன்னாரோ.. நம்ம உஷாக்கா காலைல 5போட்டேன்.. சாயங்காலம் 10 போட்டேன்னு சொன்னாங்களோ அன்னிலேருந்து கொஞ்சம் கோவந்தான். அதுக்கோசரம் படிக்கிறதுக்கு பின்னூட்டாம வறதில்ல.. ஞாபகம் இருந்தா அப்படியே குத்திட்டும் வறதுதான். என்னா சில வேளைல மறந்திடுறேன்.
[49] மூர்த்தி - பிற நண்பர்களுக்கு, இந்தப் பதிவு காசியின் மதிப்பீட்டு முறையைக் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல. ஒருவரும் ஒரு அடி கூட எடுத்துவைக்காத நிலையில் காசி சுமக்கும் பாரம் மிக மிக அதிகம். இதற்கு நான் தனிப்பட்ட முறையில் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
எதிர்மறையான கருத்துக்களைச் சொல்லுவதைவிட வேறு எப்படி நேர்த்தியாகச் செய்யலாம் என்று சொல்வது நமக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக, காசிக்கும் நல்லது.
நான் இந்தப் பதிவை ஒருவித நகைச்சுவை நடையில் எழுதியதற்குக் காரணம் இது கவனம் பெற வேண்டும் என்பதற்காகவே. அதற்கும் மேலாக, என்னுடைய பல பதிவுகள் கனத்த, நகைச்சுவைக்கு அதிகம் இடமில்லாத நிலையில் அமைந்திருக்கின்றன. இது எனக்கு நடையை மாற்ற ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.
இன்னொரு முக்கியமான காரணம், இந்த நட்சத்திர மதிப்பீட்டு முறையைப் பற்றி மற்றவர்களுக்குப் புரிதல் எப்படியிருக்கிறது என்று அறிந்துகொள்ள. கையில் கிடைத்திருக்கும் வாக்குச் சீட்டைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்று அறியும் முயற்சி. (நான் உட்பட).
//அதற்கும் மேலாக, என்னுடைய பல பதிவுகள் கனத்த, நகைச்சுவைக்கு அதிகம் இடமில்லாத நிலையில் அமைந்திருக்கின்றன. இது எனக்கு நடையை மாற்ற ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான். //
வெங்கட்,
இதை உங்களிடம் நான் நீண்ட நாட்களாகச் சொல்லவேண்டும் என்று இருந்தேன். இப்போது தான் வாய்ப்புக் கிடைக்கிறது.
இந்தப் பதிவை படித்த போது, 'பொம்மலாட்டம்' திரைப்படத்திலே சோ, தன்னுடைய சென்னைத் தமிழிலே, ராமாயணம் கதையைச் சொல்வதாக செமை ரகளையாக வரும் ஒரு காட்சிதான் நினைவுக்கு வந்தது. பொதுவாக அறிவியல் விஷயங்களைப் பற்றிப் பேசும் போது, 'நீங்கள் அனைவரும்' , எதற்காகவோ, ஒரு இறுக்கமான நடையைக் கையாள்கிறீர்கள். இசை பற்றியோ, சினிமா பற்றியோ, மற்ற பொது விஷயங்கள் பற்றியோ எழுதும் போது, இருக்கும் இளகலான, தோள்மீது கைபோட்டு அணைத்துச் செல்லக்கூடிய பாவனையை, அறிவியல் கட்டுரைகள் எழுதும் போது, வேண்டுமென்றே கழற்றி வைத்து விட்டு, கையில் பிரம்புடன் நிற்கும் கண்ணாடி போட்ட வாத்தியார் பிம்பத்தை அணிந்து கொள்ளுகிறீர்களோ என்று நினைக்கிறேன். இது உங்கள் கட்டுரைகளை, சிற்றிதழ்களில் படித்து வரும் ( இணையத்துக்கு எல்லாம் வராத ) என் நண்பர்கள் சிலரின் அபிப்ராயமும் இதுதான்.[இது மாதிரியெல்லாம் கூட தமிழ்லே வருதா.. என்று வியப்பது வேறு விஷயம் ]
எளிமையாக எழுதுகிறேன் என்ற பெயரிலே, விஷயத்தின் சாராம்சத்தை நீர்த்துப் போகச் செய்வதென்பது வேறு. கடினமான விஷயத்தை, புரிந்து கொள்ளும்படியாகவும், ஆர்வமூட்டும் படியாகவும், நடைமுறை உதாரணங்களைக் கொண்டு விளக்குவதென்பது வேறு. "வாட் நான்ஸென்ஸ்… ? " என்று உறுமுகிற சோடாபுட்டி பேராசிரியராக நீங்கள் இருந்திருந்தால் இதைக் கேட்க மாட்டேன். எல்லா பேட்டையிலும் புகுந்து புறப்படும் நம்ம லோக்கல் பட்டறை என்பதால் தைரியமாகக் கேட்கிறேன்.
//அதாங்க, எச்சி தொட்டு இழுத்து கைல கடிகாரமா கட்டுவிடுவாங்களே, அதுல ஒன்னு வாங்கித்தாரேன். //
எனக்கு எச்சி தொடாம ஒண்ணு…. please

//நா வளக்கமா படிக்கிற தங்கமணி, மாண்டி, நாரெய்ன், பெயரிலி, பத்ரி இவுங்களுக்கெலாம் எப்பயுமே என்னால '+' தானே போடமுடியும் (யோவ், என்னோட நேரம் வேஸ்டாச்சில்ல, நீயும் படிச்சு வேஸ்ட்பண்ணு). //
ம் அப்படியா? கவனிச்சுக்குறேன்..
வெங்கட், சில பேருக்கு படிச்சு முடிச்சவுடன என்ன பின்னூட்டு எழுதறதுன்னு தோணாது, ஆனா கரெக்ட் (+) இல்லேன்னா அடப்பாவி (-) அப்படீன்னு சொல்லத்தோணும். இல்லாட்டி படிக்க நேரமிருக்காது; பின்னூட்டு எழுத நேரமிருக்காது அப்ப ஒரு குத்து வச்சுட்டு போறது மனசுக்கு உறுத்தல் இல்லாம இருக்கும் இப்படித்தான் இந்த ஓட்டுப் பெட்டி விசயமே ஒரு மாதிரிதான்.