வசவுகளின் காலம்

இது இன்றைக்கு ரோசா வஸந்தின் பதிவில் பொடிச்சியின் இந்தக் கருத்தைப் படிக்க நேரிட்டது;

‘பார்ப்பாரப் புத்தி’ என்று திட்டுவதையும் ‘பறப் புத்தி’ என்று திட்டுவதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்தால் இரண்டுமே தவறாய்த் தெரியும். மிகவும் முற்போக்கான பார்ப்பனர்களே இந்த ‘திட்டுதலில்’ sensitive ஆய் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது…

… இங்கே அடிமைத்தளைகள் போனபின்னாலேயே இந்த நிலமை இருக்க, எமது ஜாதி வேறுபாடுகள் ‘இன்னும் இன்னும்’ அப்படியே இருக்கையில் ‘பார்ப்பானைத் திட்டினால் உறைக்காது ஆனால் மற்றவனைத் திட்டினால் உறைக்குது’ என வாதாடுவது ரெண்டுக்குமான வேறுபாடுகளை விளங்க விரும்பாமையின் விளைவுதான். பூஜை செய்பவன் என்று திட்டுவது அவமானமா? மலம் அள்ளுபவன் என்று திட்டுவது அவமானமா என்பதை அப்படி வாதாடுகிற ஒவ்வொரு நாகரீக நபர்களும் கேட்டுக்கொள்ளுங்கள்! அப்புறமும் இதே வாதங்கள் வந்தால் யாருமே உங்களை அசைக்க முடியாது.

இது நாராயணனின் பதிவில் நான் எழுதிய

மதி - ஜாதியை வைத்துத் திட்டுவது ஒரு புறமாக மாத்திரமில்லை. பாப்பார நாயே, பாப்பாரப் புத்தி, செட்டிப்புத்தி என்றெல்லாம் வசைகள் இருக்கின்றன. இது தம் குழுவினுள்ளே ஒருவனை அந்நியப்படுத்தி இழி செய்யும் முறை. இதில் மேல்-கீழ் வித்தியாசமில்லை.

தன்னில் நம்பிக்கை கொண்டவன் பிறரை இழிசெய்ய முயற்சிப்பதில்லை. அவன் வாயிலிருந்து வசவுகள் எளிதில் புறப்படுவதில்லை.

என்பதற்கான மறுமொழி எனத் தெரிகிறது. இதைப் படிக்கையில் எனக்கு வருத்தமாக இருந்தது. என்னுடைய கருத்தை அவர் மறுதலித்தால் அதே பதிவின் கீழ் (அல்லது அவரது சொந்தப் பதிவில்) மறுமொழி இடுவார் என்று நம்பியிருந்தேன். நான் முட்டாள்தனமாக எழுதியிருப்பதாகக் கருதினால் அதை நேரடியாக என்னிடம் சொல்லலாம். மாறாக அதை வேறிடத்தில் பயன்படுத்தியிருப்பது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.

பாப்பார நாயே என்று திட்டப்படும்பொழுது “நறுமணமும், அழகும் பொருந்திய மலர்களைக் கரங்களால் எடுத்துப் பூசிப்பவனே” என்பதாகச் சொல்வதன் அபத்தம் புலப்படுகிறதா? உண்மையில் அதற்குப் “பூசை செய்பவனே” என்றுதான் அர்த்தமா? இந்த அணுகுமுறை வியப்பளிக்கிறது.

தன்னெஞ்சறிய பொய்யற வகையில் பிறப்பால் இழிவதை மறுத்துவந்தாலும், அதற்குப் பரிகாரமாக இயன்றதைச் செய்துவந்தாலும், அதே பிறப்பால் நான் பல இடங்களில் பாப்பார நாயே, பாப்பார புத்தி என்றெல்லாம் திட்டப்பட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் நான் sensitive ஆகத்தான் உணருகிறேன். காரணம், அந்த வார்த்தைகளுக்கு “உன்னுடைய பிறப்பால் மற்றவனை இழிவு செய்யும் ஈனனே” என்பதாகத்தான் அர்த்தம். மனதார நான் அப்படியில்லாத நிலையில், அப்படியிருப்பவர்க்ளை அருவருப்புடன் நோக்கும் நிலையில், என்னை ஒருவன் அப்படி விளிக்கும்பொழுது நான் வருத்தப்படும் (கவனிக்கவும், கோபமல்ல) உரிமையை எனக்கு மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

* * *

இது ஒரு பெரிய சுழற்சி. ஒரு காலத்தில் நானே என் தெருக்காரர்கள் “பறப்பயலே” என்று சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்டிருக்கிறேன். சிறுவயதிலிருந்தே அது இழிவு என்று போதிக்கப்பட்ட குடும்பம் எனது. பின்னாட்களில் நானும் என் சுற்றமும் எந்த நேரமும் ஒரு கொலையை எதிர்பார்த்துக் கழித்திருக்கிறோம் (மீண்டும் மனதார என் சுற்றமும் நானும் எந்தத் தீங்கும் செய்ததில்லை - இந்த இழிகுலத்தில் பிறந்த்தைத் தவிர). கொலை பயத்தை ஈழத்திலிருந்து வருபவர்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை. ஒரு கோடை நாளில் வெளியில் கட்டிலில் படுத்திருந்தவரின் பூணுல் அறுக்கப்பட்டது. அடுத்த வாரம் திண்ணையில் தூங்கியவரின் வலதுகரம் வெட்டப்பட்டது. தெருவில் மரணத்தின் பயம். சக நண்பர்கள் சகஜமாக பள்ளி வரும் நேரத்தில் நானும் என் அண்ணன்களும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அலைந்திருக்கிறோம்.

கொலை நடந்தது! என் அடுத்த வீட்டில் வசித்த, எறும்புக்கும் தீங்கு நினைக்காத ஒரு சரித்திரப் பேராசிரியர் மதிய வேளையில் மிதிவண்டியிலிருந்து கீழே தள்ளப்பட்டு நெஞ்சில் குத்தப்பட்டு இரண்டு நாட்கள் அவதிக்குப் பிறகு மரித்துப் போனார். அந்தக் குடும்பம் சிதைவதை என் கண்ணால்
கண்டிருக்கிறேன். அந்தக் கொலைக்கு நீதி விசாரணைகூடக் கிடையாது. காரணம், இறந்தவருக்குப் புத்தகத்தையும் கோவிலையும் தவிர வேறெதையும் தெரியாது. அதற்குப் பிறகு என் தந்தை தீவிர பிராமண எதிர்ப்புக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றார். ஒரு அப்பாவியின் நெஞ்சில் கத்தியைச்
செருகுமளவிற்கு வன்மம் இருந்தால் அது உருவாகக் காரணமாக என்ன தவறிழைக்கப்பட்டது என்று எனக்குப் புரியவேண்டுமென்பது அவர் எண்ணம்.

புரிந்தது. கோபங்கொள்ள அவர்களுக்கு இருக்கும் தார்மீக உரிமை விளங்கியது. விளைவு - என் முன்னோர்கள் தவறுகளைச் செய்திருக்கச் சாத்தியமிருப்பதாக நான் முழுமனதாக நம்புவது. அந்த எண்ணம் எனக்குள் விளைவிக்கும் அருவருப்பும் அவமானமும். அதற்காக நான் செய்யக்கூடியது மனதார பாதிக்கப்பட்ட என் சகோதரனிடம் நான் மன்னிப்பு விழைவது. அதிலும் முக்கியமாக அவனுக்கு ஆகவேண்டியதைப் பற்றிச் சிந்தித்துச் செயல்படுத்துவது.

ஆமாம், இது ஒரு பெரிய சுழற்சி. இதற்கு ஒரே தீர்வு. இதைவிட்டு வெளியே வருவதான் என்று மனதார நம்புகிறேன். இதில் என்னாலானது கீழே இருப்பவனுக்குக் கைகொடுக்கும் அதே நேரம், மேலே இருப்பவனைக் கீழே தள்ள முயற்சிக்காமல் இருப்பது. எனவே எந்தவிதமான வன்முறையும், கொடுஞ்சொற்களும் எனக்கு ஒப்பானவை அல்ல. எனவேதான், அறிவாளிகளாக நான் நம்பும் ஒருசிலர் பாப்பார நாயே என்று சொன்னாலும், பற நாயே என்று சொன்னாலும் எனக்கு வருத்தமளிக்கிறது. அதேபோலவேதான் செருப்பாலடித்தலும், ஆண்குறி அறுக்க விடுக்கப்படும் அழைப்புகளும். அதையும் விடக் கொடுமையானது இதில் ஈடுபடாதவர்களை எல்லாம் If you are not with us, you are against us என்று புஷ்தனமாகப் பயமுறுத்துவது.

* * *

இப்பொழுது வலைப்பதிவுகளில் வசவுகாலம் என்று தோன்றுகிறது. ஒரு வகையில் தோழமையும் நேயமும் இதனால் பாதிக்கப்படுகிற அச்சம் எழுகிறது. வசவுகளின் உளவியல் பற்றி நாராயணன் எழுதும்பொழுது இந்த வக்கிரங்களின் தோற்றுவாயைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் எழுகிறது. அது
ஒன்றுதான் என் மனதில் வக்கிரங்களுக்கு இடம்கொடாமல் நான் தூய்மைகாக்க உதவும் வழி என்று தோன்றுகிறது.

ஆனால் மறுபுறம் பழகியவர்களுக்குள்ளே ஒருவரையொருவர் குறிவைத்துச் சொல்லப்படும் சொற்கள் அச்சத்தை விளைவிக்கின்றன. நானூறு பேர் மாத்திரமே எழுதும் தமிழ் வலைப்பதிவுலகம் மிகவும் சிறியது. இங்கே இது தவிர்க்கப்பட வேண்டியது.

* * *

இதனால் நான் கோபங்களை வெளிப்படுத்தும் உரிமையை மறுப்பவனல்லன். ஒரு எல்லைக்குள் நின்று சினத்தை வெளிப்படுத்துவோம். என் வேண்டுகோள்கள் எல்லாம் கோபங்களே தீர்வாக மாறிவிடமுடியாது. சமூகத்திற்கு நம்மாலானது நிறைய இருக்கிற்து. நம்பிக்கையுடன் இருப்போம்.

சினத்தை வெளிப்படுத்த படிப்பறியா என் தாழ்த்தப்பட்ட சகோதரனுக்கு உரிமையிருக்கிறது. ஆனால் அறிவாளிகளாய் அவர்களில் உயர்ந்து நிற்பவர்கள் இந்தச் சேர்ந்தாரைக் கொல்லியைத் தவிர்த்து, சகோதரனுக்கு வழிகாட்ட வேண்டியது அவசியம்.

* * *

என்னால் முடிந்த அடியெடுத்துத் தருகிறேன். இன்னும் இருபது, ஏன் ஐம்பது வருடங்களில் சாதியற்ற சமூகத்தை நாம் நம்மில் காணவேண்டுமென்றால் அதற்கான வழிமுறைகளாக உங்கள் மனதில் தோன்றுவதை எழுதுங்கள். உங்கள் தரவுகளில் பிழையிருக்கலாம், நீங்கள் முன்வைக்கும் திட்டங்களில்
ஓட்டையிருக்கலாம். அவற்றையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியும். ஆனால் உங்கள் இலக்கு உயர்ந்ததாக இருக்கட்டும்.

இருபதோ, ஐம்பதோ வருடங்கள் என்பது கனவாக இருக்கலாம். அதை இருநூறாகத் நீட்டிக் கொள்ளுங்கள். ஆனால் இலட்சியக் கனவுகாணாத சமூகம் முன்னேறுவதில்லை. ஆக வேண்டியதைச் சிந்தித்து தீர்வுகளை முன்மொழியுங்கள்.

இது கற்பனாவாதமாகத் தெரியலாம். இல்லை, வரலாற்றில் இதற்கெல்லாம் முன்மாதிரிகள் இருக்கின்றன. யூதர்களிடமிருந்தும் ஜப்பானியர்களிடமிருந்து முப்பது வருடத்திற்குள்ளாக மேலெழுந்து வருவதைக் கற்க முடியும்.

இதை நானே துவக்கி வைக்கக்கூடத் தயார். ஆனால் உண்மையில் தம்மைப் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணுபவர்கள்தான் இதற்கு மேலும் தகுதியானவர்கள் என்று நான் நம்புவதால் இதை வேறிடத்திலிருந்து துவங்க ஆசைப்படுகிறேன்.

சுழலை விட்டு வெளியே வர நாம் ஒருவருக்கொருவர் உதவவேண்டியது முக்கியம்.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

Superb post!

எனக்குப் பட்டதை, சந்தர்ப்பம் வாய்க்கையில் கட்டாயம் இங்கே எழுதமுயல்கிறேன்…

தேவையான நேரத்தில் வந்த அருமையான பதிவு. சமீப காலங்களில் அதிகமாக எழுத தோன்றாததற்கு, இந்த மாதிரியான சூழ்நிலை கூட காரணமோ என தோன்றுகிறது.
நெகிழ்வுத் தன்மையே இல்லாத, முடிவுகளை ஏற்கனவே எடுத்துவிட்ட, தர்க்கம் என்ற பெயரில் குதர்க்கம் பேசுகின்ற வகையில் நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன் சமீபகாலங்களில்.

ஆனால், உயர உயர பறப்பதும் ஒரு நேரம் தரை இறங்கித்தான் ஆக வேண்டும்.:-)

நீண்ட பின்னூட்டம் போட நேரமின்மையால் சுருக்கமாக எனக்குப் பட்டதைக் கூறுகின்றேன். பிறப்பால் தலித்தாகப் பிறந்ததால் தலித்துகள் எதிர் நோக்கும் பாதிப்பு சொல்லில் அடங்கா. அவர்கள் வாழ்வில் அடித்தளத்தையே இழந்தவர்கள். பிறப்பால் பார்ப்பனாகப் பிறந்த அந்தத் திமிருடன் வாழ்ந்து செழிப்பவர்களுக்கு வசைகள் ஒன்றும் கேடல்ல. இருப்பினும் பிறப்பால் பார்பனாகப் பிறந்த சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு இது சற்றுச் சங்கடமான விடையம் தான். தலித்துக்களின் அவலத்தின் முன்னர் இந்த மேவலா மனச்சங்கடம் எம்மாத்திரம். தலித்துக்கள் தலித்தாய் பிறந்தது குற்றமாக்கப்படுவதுபோல் தாங்களும் சிந்திக்கத் தெரிந்த பார்ப்னாகப் பிறந்தது குற்றமே. இந்த வலியைத் தாங்கள் அனுபவித்தே தீரவேண்டும். மன்னிக்கவேண்டும்.

[4] கறுப்பி - உங்கள் தீர்ப்பு இதுவானால் நான் என் முன்னோர்களுக்காகத் தலைகுனிந்து ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மன்னிப்பு என்ற வார்த்தைக்கு நன்றி.

ஆனால், இது அதையும் தாண்டி சிந்திக்க விடப்பட்ட அழைப்பு. இதைத் தான் நான் சுழற்ச்சி என்கிறேன். நீங்கள் இதிலிருந்து விடிவே கிடையாது என்கிறீர்களா? அல்லது இன்றைக்கு என்னால் அடிக்க முடிகிறது, வாங்கிக்கொள் என்கிறீர்களா?

நம்முடைய படிப்பறிவும் பட்டறிவும் நமக்குக் கற்றுக் கொடுப்பதுதான் என்ன?

பிறப்பினால் என் அண்டைவிட்டுக்காரர் கொலை செய்யப்பட்டதையும் உங்கள் மன்னிப்புடன் நான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிறீர்களா? பள்ளிக்கூட வயதில் மரண பயத்தைச் அனுபவித்திருக்கும் உங்களிடமிருந்தா சகநண்பனுக்கு இந்த வார்த்தைகள் வருகின்றன?

தாங்கள் தங்களையே பற்றிப் பேசுகின்றீர்கள் கவலைப்படுகின்றீர்கள் (எல்லோரும் அப்படித்தான்) தலித்துகளின் அவலத்துக்கு முன்னால் தங்களுக்கு இருப்பது பிரச்சனையாகவே எனக்குப் படவில்லை. யாரோ செய்த பாவம், "கர்மா" போன்றவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் இப்படியான சமூகத்தை உருவாக்கியது பாப்பன்கள். அவர்களில் ஒரு சிலர் இறந்துதான் தலித்திற்கு விடிவு வருமென்றால் அதில் தவறென்ன? காலகாலமாய் அவர்கள் ஒடுக்கப்பட்டு வருவதிலும் விடவா இது கொடுமை. இந்தக் கொடுமை தீரும் என்று தாங்கள் கனவு கண்டால் உங்களை நான் கோழை என்றுதான் சொல்லுவேன். கடைசி சிந்திக்கத் தெரிந்த, மனிதாபிமானம் கொண்ட ஒருவராகப் பிறந்ததையிட்டுப் பெருமைப்படுங்கள். பார்ப்பனாகப் பிறந்ததற்காகவல்ல

[6] மன்னிக்கவும், போரின் முன்னே வீரமாக நிற்கும் தற்கொலைப்படைக்கு நான் பயிற்சிபெறவில்லை.

என் கையில் கொஞ்சமாவது இருப்பது நானெடுக்கும் முடிவுகள்தான். எனவே என்னைப் பற்றித்தான் நான் கவலைப்பட முடியும். எல்லோரும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். சுற்றத்தைவிட்டு புலம்பெயர்ந்தவர்களுக்குக்கூட தன்னைப் பற்றிய கவலையைக் குறித்துத் தெரிந்திருக்கும். கோழைத்தனத்தைப் பற்றிய உங்கள் வரையறை வியப்பளிக்கிறது.

>யாரோ செய்த பாவம், "கர்மா" போன்றவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் இப்படியான சமூகத்தை உருவாக்கியது பாப்பன்கள். அவர்களில் ஒரு சிலர் இறந்துதான் தலித்திற்கு விடிவு வருமென்றால் அதில் தவறென்ன?

உங்கள் ஏரணம் என் சிறிய மூளைக்கு எட்டவில்லை. உங்களுக்குக் கர்மாவில் நம்பிக்கையிருக்கிறது எனவே பாப்பானாகப் பிறந்த நீ சாகக் கடவது என்று சொல்லியிருந்தால் புரிந்துகொள்ளலாம். ஆனால், நீ தவறு செய்யவில்லை, இருந்தாலும் நீ செத்தால் தலித்துக்கு நல்லது, எனவே உன்னைச் சாகச் சொல்கிறேன் என்பது கட்டாயம் என் சிந்தனையின் எல்லைக்குள் வரவில்லை.

மரணதண்டனை பற்றி உங்களுக்கு அபிப்பிராயம் இருக்கிறதா? தெரிந்து கொள்ள ஆவல்.

இந்தக் கொடுமை ஒழியும் என்று கனவு காண்பதால் நான் கோழையா? நீங்கள் யாரென்று எனக்கு இன்னமும் தெரியாது உங்கள் புலம் ஓரளவுக்கு உங்கள் எழுத்தில் பிடிபடுகிறது. என்னை உங்களுக்குத் தெரியுமென்று நம்புகிறேன். நான் மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலிருந்து வருபவன். என் அகராதியில் இதற்கு வீரம் என்று பெயர்.

{நீளமானதால் இரண்டாக இடுகிறேன்}

தொடர்ந்து…

உங்களுக்கு மனிதநேயம் என்பதில் நம்பிக்கையிருக்கிறதா என்பதைப் பற்றியும் தெரிய ஆவல்!

>கடைசி சிந்திக்கத் தெரிந்த, மனிதாபிமானம் கொண்ட ஒருவராகப் பிறந்ததையிட்டுப் பெருமைப்படுங்கள். பார்ப்பனாகப் பிறந்ததற்காகவல்ல

பார்ப்பானாகப் பிறந்ததற்காகப் பெருமைகொள்வதாக நான் எங்கு சொன்னேன்? என் கருத்துக்கு எதிர்மாறான வாக்கியங்களைத் தலையில் சுமத்துவது ஏன்? மனிதாபிமானம் கொண்ட ஒருவனாக வாழ ஆசைப்படுகிறேன். வாழ்ந்தால் யாருக்காவது பயனிருக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது. ஆனால் பார்ப்பானாகப் பிறந்த ஒரே காரணத்தினால் நீ சாகலாம், அதில் தவறில்லை என்பது உங்கள் கருத்தா?

வியப்பூட்டும் இந்த விஷயத்தில் சகநண்பர்களின் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.

நான் புலம்பெயர்ந்தது என் உயிரைக் காத்துக்கொள்ளத்தான் இதை நான் மறுக்கவில்லை. நானும் சுயநலவாதிதான். இதற்கு நான் வெட்கப்படவில்லை. ஆனால் தங்களைப் போன்று மனச்சாட்சியுடன் வாழ விரும்புகின்றேன். போராட்டத்தையும் எம் நாட்டு இழப்புக்களையும் வெறுக்கின்றேன்.
நான் கர்மா பற்றிக் கூறியது தலித்துக்கள் பாவப்பிறவிகள் அதனால் அவர்கள் அனுபவிக்கின்றார்கள் என்று ஒருவர் சொன்னார். (அவரும் ஒரு பிராமணக் குடும்பத்தில் இருந்து வந்தவர்) எங்கள் மதம் இப்படியாக மக்களை நம்பவைத்துக் கொண்டிருக்கின்றது. இதனை இந்த வாழ்க்கை முறையை உருவாக்கியதில் பார்ப்பன்களுக்கு முக்கிய பணி இருக்கிறது. நம்பி;க்கைதான் வாழ்க்கை ஈழம் கிடைக்கும் ஒருநாள் எம்நாடு சென்று காலாற பயமின்றி நடக்கலாம் என்ற நம்பிக்கையில் எம்மவர்கள். தலித்துக்களின் பிரச்சனை தீரும் என்று மனிதாபிமானம் உள்ள தங்களைப் போன்ற இந்தியர்கள். இது தவறில்லை. ஆனால் வெறும் கனவு என்றுதான் என் மனம் சொல்கின்றது. பக்கத்து வீட்டு நபர் இறந்தது அவரைத் தங்களுக்குத் தெரிந்ததால் பழகியிருப்பதால்
பாதிப்பைத் தந்திருக்கிறது. தூரத்தில் ஒருவர் இறந்திருந்தால் செய்தியாய் மட்டும் போயிருக்கும். தலித்துக்களின் வாழ்க்கையைப் பற்றிச் சில நிமிடங்கள் கண்ணை மூடிச் சிந்தித்துப் பாருங்கள் அவர்கள் முகங்களில் குடியேறியிருக்கும் நிரந்தர நோ நெருடுகின்றதுதானே? இதற்குக் காரணம் தாங்கள் அல்ல ஆனால் அதற்குக் காரணமான ஒரு இனத்தில் தாங்கள் பிறந்திருக்கின்றீர்கள். ஒன்றுமே செய்ய முடியாது. கொஞ்சம் மனவேதனை தலித்துகளுக்கு நடக்கும் கொடுமைக்காகப் படமுடியும் அவ்வளவே. ஆனால் தங்கள் வாழ்க்கை குடும்பம் செழிப்பாகவே இருக்கப் போகின்றது. அதற்குத் தாங்கள் பார்ப்பனாகப் பிறந்தது ஒரு காரணம் இல்லையா?

[6] இப்படியான சமூகத்தை உருவாக்கியது பாப்பன்கள். அவர்களில் ஒரு சிலர் இறந்துதான் தலித்திற்கு விடிவு வருமென்றால் அதில் தவறென்ன? காலகாலமாய் அவர்கள் ஒடுக்கப்பட்டு வருவதிலும் விடவா இது கொடுமை

தலித்துகளின் விடிவு பிராமணர்களிடம் தான் உள்ளது என்று உங்களுக்கு யார் சொன்னது?

பக்கத்து வீட்டு பிராமணனை கொன்றால் தெருவில் உள்ள சாதியெல்லாம் அழிந்துவிடும் என்றால் இந்தியாவில் சாதியை ராஜாராம் மோஹன்ராய் காலத்திலேயே இல்லாமல் செய்திருக்கலாம். ஹிட்லர் பல வருடங்களாக கொன்ற யூதர்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவர்களை இந்திய/பாக்கிஸ்த்தான் பிரிவினையின் போது நாங்கள் ஒரே வாரத்தில் கொன்றோம். இன்றைக்கு நான் அவர்களை கொன்றால் நாளை அவர்கள் என் பிள்ளையை கொல்வார்கள். அது முடிவாகாது.
சாதியை வாழ வைத்து கொண்டு இருப்பது அந்த அந்த சாதியினரே தவிர வேரு யாரும் இல்லை. சாதியென்னும் விஷம் கக்கப்பட்டு பல ஆயிரம் வருடங்களாகிறது. திரும்பி அந்த விஷத்தை பாம்பினுள் செலுத்த இயலாது. மாறாக நாம் தான் அதனை தைரியமாக விட்டு உதர வேண்டும். பிராமணர்கள் உட்பட அனைவரும் தங்கள் சாதி அடையாளத்தை விட்டொழிக்கவேண்டும். கண்டிப்பாக சாதி பார்க்காமல் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும். அரசாங்கமே சாதியையும் அதன் அடையாளங்களையும் தடைசெய்யவேண்டும். சாதியை தடை செய்யவேண்டும் என்றால் அதை கற்பிக்கும் நூல்களை தடை செய்யவேண்டும். மனிதருள் ஏற்றத் தாழ்வு கூறும் இதிகாசங்களையும் புராணங்களையும் தடைசெய்யவேண்டும். இதிகாசங்களும் புராணங்களும் தடைசெய்யப்பட்டால் தானாக கடவுள் மறுப்பு கொள்கை பரவி சமத்துவமும் சமாதானமும் நிகழும். இந்தியாவெங்கும் அனைவருக்கும் ஒரே சட்டம் என்று தானாக வந்துவிடும். மக்களால் இயற்றப்படும் சட்டம் ஒன்றே அவர்களை நெறி படுத்தும் மார்க்கமாகவும் திகழும். மதங்கள் ஒழியும். இந்த கனவு நினைவாக 50முதல் 100வருடம் கூட ஆகலாம்.

பி.குறிப்பு: சாதி அடையாளத்தை நான் விட சொன்னவுடன் என்னை ஏன் சிலர் தாக்குகிறாரகள் என்பது உங்களுக்கு சரியாக புரியவாய்பு இல்லை.

இதற்காகத்தான்:
As this message is too long I a posting the continuation in the next reply.

வெங்கட்,
முதலில் ஒரு பதிவை இவ்வளவு விரிவாக எழுதும்போது, சொன்னவர் (பொடிச்சி) எந்தத் தளத்தில் அதைச் சொல்லியிருக்கின்றார் என்று பார்க்கவேண்டும். அவர் முழுதாய் சொன்னதில் அரைகுறையை வெட்டிவிட்டு உங்களுக்கு சாதகமான பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு இப்படி எழுதுவதில் 'அரசியல்' இல்லையென்றால் எப்படி நம்புவது?
//'செருப்பு' எல்லாம் ஒரு எதிர்ப்பா? 'பார்ப்பாரப் புத்தி' என்று திட்டுவதையும் 'பறப் புத்தி' என்று திட்டுவதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்தால் இரண்டுமே தவறாய்த் தெரியும். மிகவும் முற்போக்கான பார்ப்பனர்களே இந்த 'திட்டுதலில்' sensitive ஆய் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது. இங்கே சமயம் கிடைக்கும்போதெல்லாம் வெள்ளையர்களை தமது பாடல்களில், எழுத்தில் கறுப்பர்கள் திட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள், இருப்பார்கள். தங்களை ஆண்டதன்மீதான எதிர்ப்பு அத்தனை சுலபமாய் போகாது. அவர்கள் திட்டுகிறார்கள் என்றுவிட்டு வெள்ளையர்கள் 'நீக்ரோ' என்றோ வேறென்ன சொல்லியோ கறுப்பர்களை திருப்பித் திட்டி 'சமன்' செய்ய முடியாது. இரண்டு வேறுபட்ட தட்டுகளாய் வைத்திருந்தவர்களை(வைத்திருப்பவர்களை) அவ்வளவு சுலபமாய் 'நாங்கள் இனிமேல் சமம்' என்றுவிட்டு திட்டாமல் இருக்கமுடியாது. இங்கே அடிமைத்தளைகள் போனபின்னாலேயே இந்த நிலமை இருக்க, எமது ஜாதி வேறுபாடுகள் 'இன்னும் இன்னும்' அப்படியே இருக்கையில் 'பார்ப்பானைத் திட்டினால் உறைக்காது ஆனால் மற்றவனைத் திட்டினால் உறைக்குது' என வாதாடுவது ரெண்டுக்குமான வேறுபாடுகளை விளங்க விரும்பாமையின் விளைவுதான். பூஜை செய்பவன் என்று திட்டுவது அவமானமா? மலம் அள்ளுபவன் என்று திட்டுவது அவமானமா என்பதை அப்படி வாதாடுகிற ஒவ்வொரு நாகரீக நபர்களும் கேட்டுக்கொள்ளுங்கள்! அப்புறமும் இதே வாதங்கள் வந்தால் யாருமே உங்களை அசைக்க முடியாது.//

Contd.
Are there any Brahmins in india?
Loksabha 48% are Brahmins
Rajyasabha 36 % are Brahmins
Governor/L.G. 50 % are Brahmins
Secretary to Governor/ L.G. 54 % are Brahmins
Union Cabinet Secretaries 53 % are Brahmins
Chief Secretaries to Minister 54 % are Brahmins
Private Secretaries to Minister 70 % are Brahmins
JS/ Additional Secretaries 62 % are Brahmins
Vice-Chancellors to Universities 51% are Brahmins
Supreme Court Judges 65 % are Brahmins
High Court Judges/ Addl. Judges 50 % are Brahmins
Ambassadors 41% are Brahmins
Chief Executive of Central Public undertaking: 57 % are Brahmins
Chief Executives of State Undertakings 82 % are Brahmins
Courtesy: Voice of the Week , Oct. 1989
Posted by mishrabn50 on Thursday, 30 September 2004

//இதற்குக் காரணம் தாங்கள் அல்ல ஆனால் அதற்குக் காரணமான ஒரு இனத்தில் தாங்கள் பிறந்திருக்கின்றீர்கள். ஒன்றுமே செய்ய முடியாது. கொஞ்சம் மனவேதனை தலித்துகளுக்கு நடக்கும் கொடுமைக்காகப் படமுடியும் அவ்வளவே. ஆனால் தங்கள் வாழ்க்கை குடும்பம் செழிப்பாகவே இருக்கப் போகின்றது. அதற்குத் தாங்கள் பார்ப்பனாகப் பிறந்தது ஒரு காரணம் இல்லையா?//
Sorry to say this: but this is too much of an oversimplification. Does it mean that at the present moment, all the Brahmins are to be slaughtered for their crimes of the past, and that history should eternally repeat itself to a time where Brahmins or other upper (read dominant, not neccessarily the present "upper" and "sundarar") castes can start killing/dominating the 'then downtrodden' again? If so, it's an atrocious notion. I respect your comments, but I feel it has failed to take notice of the neutrality of the post, I guess. If you don't consider it "neutral" and think of this comment as a spew from a Brahminical vassal, then I can only shrug and pass! :-) It's not a criticism, just a thought. Will write on it if I get time….

(cont…bec of my long posting)

பொறுமையாய் வாசித்துப்ப்பாருங்கள். தமிழகத்தை விடுங்கள். இங்கிருக்கும் சூழலைப் பாருங்கள்( ஒரு பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியராகவும் இருக்கின்றீர்கள் என்று நம்புகின்றேன்). பொடிச்சி சொன்னமாதிரி, கறுப்பரின் பாடல்களிலிருந்து இன்னும் கலை, இலக்கியம் என்ற பலவிடங்களில் வெள்ளையரை நேரடியாவே திட்டுகின்றனர். அதை எந்த வெள்ளையரும், நாங்கள் இப்போது திருந்திவிட்டோம் அல்லது எங்களின் பிழை புரிகின்றது இப்படியெல்லாம் கறுப்பர்கள் திட்டக்கூடாது என்று எந்தக்கோட்டு வாசற்படியும் ஏறியதில்லை. பொடிச்சி சொன்ன மாதிரி ' தங்களை ஆண்டதன்மீதான எதிர்ப்பு அத்தனை சுலபமாய் போகாது.'என்ற மனிதனின் மனோநிலையை புரிந்துகொண்டால் இது இலகுவாய் புரியும். இங்கே பொடிச்சியோ அல்லது நானோ பார்ப்பனர்களை எல்லோரும் சேர்ந்து திட்டுங்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால் அவ்வாறு ஒரு தலித் திட்டும்போது அதற்குப்பின்னாலுள்ள வலியை/மனோநிலையைப் புரிந்துகொள்ளாமால், பறப் புத்தி என்று திட்டுவதும் பார்ப்பாரப் புத்தி என்பதுவும் ஒன்றுதான், இரண்டுமே தவறென்று நீங்கள் அறிவுஜீவித்தனமாகத் கூறிக்கொண்டிருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. அதே சமயம் நீக்ரோ என்ற ஒருவார்த்தையை கறுப்பர்கள் தங்களுக்குள் (உதாரணம் rap பாடல்கள்) மிகச்சாதாரணமாகப் பயன்படுத்தினாலும், வேறெந்த சமூகத்தினரும் பயன்படுத்துவதினால் பொறுத்துக்கொள்வதில்லை என்பதை உங்களுக்குச் சொல்லாமலே புரியும் என்று நினைக்கின்றேன்.
ஆண்டாண்டுகாலமாக அடக்கப்பட்ட சனங்கள், தங்களை அடக்கின வலிமையாலும்/மூளையாலும் அடக்கிய சமூகங்களை ஆயுதம் தூக்கி வன்முறையால் அடக்காமல் ஏதோ இப்படி திட்டமட்டுந்தானே செய்கின்றார்கள். அதைக் கொஞ்சம் பொறுத்துக்கொண்டால் ஒன்றும் குடிமுழுகப்போவதில்லை. 50-100 வருடங்களில் சாதியெல்லாம் ஒழிந்துவிடும் என்றெல்லாம் நீங்கள் கனவுகாணும்போது கொஞ்சம் யதார்த்தையும் புரிந்துகொள்வதில் தப்பில்லை பாருங்கோ.

(cont..)
………
கறுப்பியிற்கும், உங்களுக்கும் உரையாடலில் இடைபுகும் எண்ணம் எதுவுமில்லையெனினும், //நான் மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலிருந்து வருபவன்.//என்று கூறுவதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரிகின்றது (நீ எங்கேயிருந்து வருகின்றாய் என்று எனக்குத் தெரியுந்தானே என்று எக்காளம், உங்கள் மனதில் பெருமையில் மிதக்கட்டும், No Problem). வேண்டுமென்றால் புத்தரையும் சேர்த்துக்கொள்ளுங்கள், balance யாய் இருக்கும். இதற்கு நீங்கள் என்ன சப்புக்காரணம் கொட்டினாலும், உங்கள் மனதின் அடியாழங்களில் என்ன சுழல்கிறது என்பதைப் புரிந்துகொள்கின்றேன்.
…….
இந்தக் குறிப்பிற்கு அப்பால் ஒரு சின்னக்கேள்வி உங்களிடம். சில தினங்களுக்கு ஒரு நண்பரிடம் கதைத்துக்கொண்டிருந்தபோது, நீங்கள் இந்தியர்களைவிட பிறரின் தளங்களில் பின்னூட்டம் இடுவதில்லை என்று ஒரு அவதானமாய் அந்த நண்பர் சொல்லியிருந்தார். இதற்கு ஏதாவது காரணமிருக்கிறதா? கட்டாயம் பதில் சொல்லவேண்டும் என்ற அவசியமுமில்லை. (சத்தியமாய் இதையும், நீங்கள் முந்தி yahoo குழுமங்களில் ஈழத்தமிழர்/இலக்கியம் பற்றி விவாதித்தையோ அல்லது சிலரது இணைப்புக்களை உங்கள் முந்திய தளத்தில் நீக்கியதையோ இணைத்துப்பார்க்கமாட்டேன் என்று கூறிக்கொள்கின்றேன்).
…….
மற்றது, தொடர்ந்து மேலே நீங்கள் எழுதிய 'வசவுகள் காலம்' குறித்து இங்கே விவாதிக்கும் எண்ணம் எனக்கில்லை என்பதை ஒரு பதிவிற்காய் சொல்லியும் விடுகின்றேன். நன்றி.

/// அவர்களில் ஒரு சிலர் இறந்துதான் தலித்திற்கு விடிவு வருமென்றால் அதில் தவறென்ன? ///

கறுப்பி,
உங்களின் முற்போக்குக் கருத்தகளின்மீது எனக்கு மிக மதிப்பிருந்தது. துரதிருஷ்டவசமாக அந்த மதிப்பை நீங்கு இங்கு கூறும் கருத்துக்கள் அதிகரிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் படிக்கப் படிக்க என் கண்களை என்னால் நம்பவே இயலவில்லை.

///பக்கத்து வீட்டு நபர் இறந்தது அவரைத் தங்களுக்குத் தெரிந்ததால் பழகியிருப்பதால்
பாதிப்பைத் தந்திருக்கிறது. தூரத்தில் ஒருவர் இறந்திருந்தால் செய்தியாய் மட்டும் போயிருக்கும்.///

என்ன சொல்ல வருகிறீர்கள் ?. உங்கள் உறவினருக்கு இதுபோல் நடந்திருந்தாலும் இதைத்தான் சொல்வீர்கள் என்று நம்புகிறேன். மனித உயிர்கள் பற்றிய மனிதநேயமுடையோரின் கருத்து கொஞ்சம் அதிகமான அக்கறையுடையது/கவனமுடையது. யாரின் இறப்பும்/கொலையும் எதற்கும் என்றைக்கும் தீர்வாகாது. அது மீண்டும் மீண்டும் மனித குலத்துக்குத் தீங்கினையும், சங்கிலி போல் தொடர்ந்த துன்பத்தையுமே மீண்டும் மீண்டும் மானுடத்துக்கு தரும்.

என் அனுபவத்திலிருந்து சொல்லுகின்றேன். மனிதர்கள் மாறுவதில்லை. மாறுவதுபோல் பாவனை மட்டுமே செய்கின்றார்கள். அவர்கள் அடிமனதில் அவர்கள் வாழ்ந்த வளர்க்கப்பட்ட கூ10ழலின் தாக்கம் இருந்தபடியே இருக்கின்றது. அது அவ்வப்போது எட்டிப்பார்க்கும்.

By கறுப்பி, at 3/16/2005 10:32 AM
http://rozavasanth.blogspot.com/2005/03/blog-post.html#comments...

karupiyidam ippothu athu ettippaaraththu vitathu

வெங்கட், இரண்டு நாட்களாக நீங்கள் சொன்ன

"தன்னில் நம்பிக்கை கொண்டவன் பிறரை இழிசெய்ய முயற்சிப்பதில்லை. அவன் வாயிலிருந்து வசவுகள் எளிதில் புறப்படுவதில்லை."

என்ற வசனங்களை நெஞ்சில் சுமந்துகொண்டு திரிகிறேன். முதல் வரி என்னில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். பதில் எழுதவேண்டும் என்று உட்காரும்போதெல்லாம் அந்த வரியைப் படித்துவிட்டு பேசாமல் எழுந்து போய்விடுகிறேன்.

உங்கள் பதிவிற்கு நிறைய எழுத வேண்டும். மனதில் நிறைய எண்ணங்கள். முடிந்தவரை இப்போது எழுதுகிறேன். மிச்சம் பிறகு.

முதலில் நான் எழுதிய அந்தச் சம்பவம் குறித்து. நான் சொன்னபடி என் உறவினர் தன் மகனை நோக்கி சாதாரணமாக கிண்டலுடன் சொன்ன வார்த்தை, ஏன் என்னைப் பேச வைத்தது. அவர், அவனைப்பார்த்து ****** மாதிரி இருக்கிறாய். போய் நல்லாக் குளிச்சு உடுப்பு போட்டுக்கொண்டு வா என்றதும் அவன் கொஞ்சம் அதிர்ந்து வெக்கப்பட்டு அவனது அம்மாவிடம் போய்விட்டான். பல வருடங்களுக்குப் பிறகு நான் அந்த வார்த்தையைக் கேட்டேனென்றும் இல்லை. எனக்குத் தெரிந்த இன்னொருவர் வாயிலிருந்து பல வார்த்தைகள் சகஜமாக வந்துவிழுந்தபடியே இருக்கும். அதேபடி அவர்கள் வீட்டில் ஒரு நல்ல feeling இருந்ததில்லை. இதை உணர்ந்திருக்கிறீர்களா? சிலரது வீடுகள் நமக்கு சொர்க்கம் போல இருப்பதும், சிலரது வீடுகள் என்னதான் வசதியாக இருந்தாலும் நல்ல feeling இல்லாமல் இருப்பதும். நான் உணர்ந்திருக்கிறேன்.

சரி அதைவிடுங்கள்.

நான் இரண்டாவதாகச் சொன்ன வீட்டில் அந்த பையனுக்கும் பெண்ணுக்கும் அந்த வார்த்தைகளின் அர்த்தம் நன்றாகத் தெரியும். எனக்கே அர்த்தம் என்னவென்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அந்த ஒன்பது வயதுப்பெண்ணுக்கும் பதினான்கு வயது பையனுக்கும் இலங்கையில் இருக்கும் சாதியமைப்பு பற்றியெல்லாம் தெரியும். என்னை விட நிறையவே தெரியும். எப்படி? அவர்கள் வீட்டில் பேசுவதும், மற்றும்படி சொல்லிக்கொடுப்பதும். இன்னும் எழுதலாம். வேண்டாம்.

அதே நிலை முதலில் சொன்ன குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் வரக்கூடாது என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது. அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது. இந்த வி்ஷயங்களையெல்லாம் இந்த வயதில் மறந்தால்தான் அடுத்த தலைமுறையாவது கொஞ்சம் ஒழுங்காக இருக்கும். ஒரு மனிதனோடு பழகுவதற்கு எவை முக்கியமான விசயங்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். எல்லாவற்றையும் விட முக்கியமானது இந்த உறவினர் நான் சொன்னால் கேட்டுக்கொள்வார். அப்படியும் இன்னொருவர் நான் சொன்னதைக் கேட்கவில்லை என்பது வருத்தமான வி்ஷயம். சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள் என்றால், கெட்ட ஜீன்கள் வராமல் தடுப்பாராம். புடலங்காய் என்று அவரிடமே சொல்லிவிட்டேன்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் குறைந்தது யாழ்ப்பாணக் குடாப்பகுதியைப் பொறுத்தமட்டில் சர்வ வல்லமை பெற்றவர்கள் அல்லது பெற்றதுபோல நடப்பது வெள்ளாளர்கள். எதிலும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. சில தலைமுறைகளுக்கு முன்பு இந்தியாவைப் போலவே கோயிலுக்குப் போவதற்கும் தடை இருந்தது என்று சில மாதங்களுக்கு முன்புதான் தெரிந்து வெட்கித்துப்போனேன். குத்துவெட்டுக்கொலை போன்ற வன்முறைகளை நான் கேள்விப்படவில்லையென்றாலும் குறைந்தவர்கள் இல்லை.

முற்போக்கானவர்கள் என்று நான் நினைத்த எங்கள் வீட்டுக்காரரே பழக்கவழக்கம் என்று சில செயல்களைச் செய்திருக்கிறார்கள். ஆனால், இலங்கையில், பழகிய சூழலை விட்டு வெளிகிட்டதும் பழக்க வழக்கங்கள் மாறிவிட்டன. இந்த ஒரு விடயத்துக்காகவே எல்லாரும் ஊரைவிட்டு ஒவ்வொரு ஊராகப் போனது நல்லது என்று அடிக்கடி சொல்வேன். அப்படி வெளியில் வந்தபிறகு உழைப்பு மட்டுமே ஒருவனை உயர்த்தும் என்று எல்லோரும் உணர்ந்தார்கள். அப்படி உணராதவர்கள் இன்னும் பழம்பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் உணர்வுகளை உணர முடிகிறது. சமீபத்தில் படித்த 'வெள்ளாவி' நாவலைப் பற்றி நிறைய சொல்ல நினைத்தாலும் முடியவில்லை. எம்மக்களை நினைத்தும் என் மூதாதையரை நினைத்தும் எனக்கு ஏற்பட்ட அருவருப்பும் அவமானவுணர்ச்சியும் நிறைய. அந்த நாவலைப் படிக்கும்போது எனக்கேற்பட்டதைப்போல ஒரு சிலராவது உணர்ந்திருப்பார்கள். சமீபத்தில் வலைப்பதிவுகளில் சர்ச்சைக்குள்ளான கதையைப் படித்தபோதும் எனக்குத் தோன்றியது அதுதான். படித்து, கதையால் பாதிக்கப்பட்டவர்கள், உங்கள் தந்தையைப் போல அடுத்த தலைமுறையை மாற்றுவார்கள். விழிப்புணர்வு இல்லாதவர்களைப்பற்றி என்ன சொல்ல?

இதில் நான் புரிந்துகொண்டது என்னவென்றால், நமக்கு அவமானமாக இருக்கும். நம் முன்னோர்கள் மீதும் இப்போதும் அவற்றைச் சுமந்துகொண்டு திரிபவர்கள்மீது அருவருப்பு கொள்ள வைக்கும். ஆனால், இது என்னைப்பற்றியது மட்டுமல்ல என்று நினைத்துக்கொள்வேன். ஒன்று, சந்ததி சந்ததியாக சொல்லமுடியாத துயரங்களையெல்லாம் அனுபவித்தவர்கள். என்னைப்பற்றியோ அல்லது நான் சம்பந்தப் பட்ட எதையாவதைப்பற்றி ஏதாவது சொன்னவுடனே எனக்கு வருகிற வருத்தம் அவர்களுடைய வருத்தம் துன்பத்தோடு பார்க்கும்போது ஒன்றுமில்லை.

இரண்டாவது, நிலமை இப்போது மாறியிருக்கிறதா என்றால் இல்லை. ஒரு காலத்தில் அழுத்தப்பட்டவர்கள் இன்னமும் தங்களுக்குக் கீழே இருப்பவர்களை அழுத்துகிறார்கள். நாம் இப்போது எதுவும் செய்யவில்லை என்பதற்காக என்னை எதுவும் சொல்லாதே என்று சொல்ல முடியாது. முன்பிருந்ததைப்போல இல்லையென்றாலும் இப்போதும் அது அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்கிறது. உடல்ரீதியான பாதிப்பு கொஞ்சநாட்களில் மறந்துவிடும். ஆனால் மனரீதியான பாதிப்பு?

அதற்காக, இங்கே இணையத்தில் வழங்கப்படும் சொல்லாடல்களை வரவேற்கிறேனா என்றால் இல்லை. ஏனென்றால் இங்கே இருப்பவர்கள் பாதிக்கப் பட்டவர்களாக நான் கருதுவதில்லை. ஒரு காலத்தில் பட்டிருக்கலாம். ஆனால், அதையே சுமந்துகொண்டு இப்படி react செய்வதனால் நான் அவர்கள் எதிர்பார்க்கும்படி நடந்துகொள்கிறோம். வாயால் பேசிக்கொண்டிருக்காமல் செயலாம் பாசிட்டிவ்வாக செய்யலாம் என்பது என் எண்ணம். எதுவுமே சொல்லாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நம் எதிர்ப்பைக் காட்டிவிட்டு, நம்மால் முடிந்தளவு பாசிட்டிவ்வாக எதையாவது அந்தந்த வி்ஷயங்களில் செய்யலாம். இது எனக்கு நானே சொல்லிக்கொண்டு செயல்படுத்த முயல்வது.

ஒரு சாரார் மட்டும் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்று சொல்லமுடியாது. வலைப்பதிவுகளிலாவது பரவாயில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக யாராவது சீண்டி விடுகிறார்கள்(அதற்கு ஏன் விழ வேண்டும் என்பதுதான் என்னுடைய கேள்வி). ஆங்காங்கே சபாஷ் என்று மறுமொழியிடுபவர்களும் இருக்கிறார்கள். அதையெல்லாவற்றையும் விட மடலாடற்குழுக்களில் வரும் சில வி்ஷம் படர்ந்த மடல்கள். ஆக ஒரு சாராரை மட்டுமே நாம் குறை கூற முடியாது[நீங்கள் குறைகூறுகிறீர்கள் என்று சொல்லவில்லை வெங்கட். இந்த மடல் பல தடவை, பல மாதங்களாக எழுத நினைத்தது. so, எல்லாம் கலந்துகட்டி வருகிறது].

சாதியற்ற சமூகத்தைக் காண

புலம்பெயர்ந்தவர்கள், இந்தியா/இலங்கையில் இருப்பவர்கள் என்று பார்த்து நினைக்க வேண்டும். சீக்கிரம் எழுதுகிறேன்.

-மதி
[பி.கு. பலருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தாலும் எதற்கும் ஒரு முறை ஒரு டிஸ்க்ளெய்மர் குடுத்துவிடுகிறேன்.

பொடிச்சி மற்றும் மாடர்ன் கேர்ள் நானில்லை.]
end.

//'செருப்பு' எல்லாம் ஒரு எதிர்ப்பா? 'பார்ப்பாரப் புத்தி' என்று திட்டுவதையும் 'பறப் புத்தி' என்று திட்டுவதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்தால் இரண்டுமே தவறாய்த் தெரியும். மிகவும் முற்போக்கான பார்ப்பனர்களே இந்த 'திட்டுதலில்' sensitive ஆய் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது. இங்கே சமயம் கிடைக்கும்போதெல்லாம் வெள்ளையர்களை தமது பாடல்களில், எழுத்தில் கறுப்பர்கள் திட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள், இருப்பார்கள். தங்களை ஆண்டதன்மீதான எதிர்ப்பு அத்தனை சுலபமாய் போகாது. அவர்கள் திட்டுகிறார்கள் என்றுவிட்டு வெள்ளையர்கள் 'நீக்ரோ' என்றோ வேறென்ன சொல்லியோ கறுப்பர்களை திருப்பித் திட்டி 'சமன்' செய்ய முடியாது. இரண்டு வேறுபட்ட தட்டுகளாய் வைத்திருந்தவர்களை(வைத்திருப்பவர்களை) அவ்வளவு சுலபமாய் 'நாங்கள் இனிமேல் சமம்' என்றுவிட்டு திட்டாமல் இருக்கமுடியாது. இங்கே அடிமைத்தளைகள் போனபின்னாலேயே இந்த நிலமை இருக்க, எமது ஜாதி வேறுபாடுகள் 'இன்னும் இன்னும்' அப்படியே இருக்கையில் 'பார்ப்பானைத் திட்டினால் உறைக்காது ஆனால் மற்றவனைத் திட்டினால் உறைக்குது' என வாதாடுவது ரெண்டுக்குமான வேறுபாடுகளை விளங்க விரும்பாமையின் விளைவுதான். பூஜை செய்பவன் என்று திட்டுவது அவமானமா? மலம் அள்ளுபவன் என்று திட்டுவது அவமானமா என்பதை அப்படி வாதாடுகிற ஒவ்வொரு நாகரீக நபர்களும் கேட்டுக்கொள்ளுங்கள்! அப்புறமும் இதே வாதங்கள் வந்தால் யாருமே உங்களை அசைக்க முடியாது.//

பொடிச்சி எழுதிய இந்த வரிகள் யோசிக்கவேண்டியவை. இதுதான் என்னுடைய கருத்து.

மாறி மாறி அடித்துக்கொள்ளாமல் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
-Mathy

4]

//பிறப்பால் தலித்தாகப் பிறந்ததால் தலித்துகள் எதிர் நோக்கும் பாதிப்பு சொல்லில் அடங்கா. அவர்கள் வாழ்வில் அடித்தளத்தையே இழந்தவர்கள்.//

கறுப்பி, மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
//
பிறப்பால் பார்ப்பனாகப் பிறந்த அந்தத் திமிருடன் வாழ்ந்து செழிப்பவர்களுக்கு வசைகள் ஒன்றும் கேடல்ல. இருப்பினும் பிறப்பால் பார்பனாகப் பிறந்த சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு இது சற்றுச் சங்கடமான விடையம் தான். தலித்துக்களின் அவலத்தின் முன்னர் இந்த மேவலா மனச்சங்கடம் எம்மாத்திரம். தலித்துக்கள் தலித்தாய் பிறந்தது குற்றமாக்கப்படுவதுபோல் தாங்களும் சிந்திக்கத் தெரிந்த பார்ப்னாகப் பிறந்தது குற்றமே. இந்த வலியைத் தாங்கள் அனுபவித்தே தீரவேண்டும். மன்னிக்கவேண்டும்.//

இந்தியாவில் பார்ப்பனர்கள் மட்டுமே சாதித் திமிருடன் இருக்கிறார்கள் என்று உங்களிடம் யார் சொன்னது?

நிறையப் பேர் இருக்கிறார்கள். அதேபோல் பார்ப்பனர்களிலும் இருக்கிறார்கள்.

இங்கே நீங்கள் பொதுவாகச் சொல்கிறீர்களா அல்லது வெங்கட்டைச் சொல்கிறீர்களா?

கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள்.

இன்னொன்று கொஞ்சம் ஆழமாகப் படித்து/தெரிந்துகொண்டு கருத்துகளைச் சொல்லுங்கள். அவ்வப்போது முன்னுக்குப் பின் முரணாக எழுதுவதை இங்கேயும் செய்யாதீர்கள். This is my humble request.

நிதானமாய் படிக்க என்னால் முடியவில்லை. மேலோட்டமாக படித்ததில் நான் எழுதிய எதையும் வெங்கட் மறுக்க முனைந்ததாகவொ, இந்த பதிவு அதற்கானதாகவோ தெரியவில்லை. அதனால் அதிகம் பேச இல்லை.

ஆனால் 'பாப்பான்' அடைமொழி போட்டு திட்டுவதற்கும், 'பறையன்' அடைமொழி போட்டு திட்டுவதும் ஒரே மதிரியான விஷயம் என்பது வெங்கட் சொல்வதன் பின்னுள்ள பொதுவான ஒரு வாதம். இது குறித்து ஆயிரம் முறை விளக்கம் அளித்தாலும் எதுவும் கணக்கில் எடுத்துகொள்ள படும் என்று தோன்றவில்லை.

ஒருவன் அலுவலகத்தில் திருடுவதை பார்த்து, அதை ஜாதி புத்தியாக பாப்பான்/பறையன் என்ற ஜாதி அடையாளத்தில் ஏற்றி சொன்னால் ஒருவேளை இரண்டும் ஒரே மதிரி என்று பார்பதில் லாஜிக் இருக்கிறது. (எனக்கு அப்படி தோன்றவில்லை, ஒரு தலித்தை சொல்வது இன்னும் அதிக காயத்தை வரவழைக்க கூடியது, இன்னும் ஆழமான நோயின் அறிகுறி என்று நினைக்கிறேன். என்றாலும் இரண்டுமே நியாயமற்றது என்று ஒப்புகொள்ள முடியும்.) ஒரு தலித் சாப்பிடும் விதத்தை கிண்டலடித்து மோசமான வசையால் ஒருவர் திட்டுகிறார், இன்னொரு சந்தர்பத்தில் ஒரு பார்பனர் சாப்பாடு விஷயத்தில் ஆசாரமான ஒன்றை கடை பிடிப்பதை ஒருவர் 'பாப்பார புத்தி' என்று திட்டுகிறார். இரண்டையும் ஒன்றாக பார்க்கவேண்டும் என்றால் ரத்தம் வர முட்டிகொள்ள மட்டும் முடியாது.

ஒருவர் மிக தெளிவாக திருமா மீதான ஜாதியை வசையை நியாயபடுத்துவதையும், அதே நேரம் சுஜாத எழுதுவதை (கவனிக்கவும், எழுத்தை மட்டும்) 'முட்டாள்தனமானது' என்று சொல்வதற்கு கோபம் கொண்டு குதிப்பதை பாப்பார புத்தி என்பதை தவிர வேறு எந்த வார்த்தையாலும் என்னால் விளக்க முடியாது. இதுவும் ஒரு ஜாதிய வசைதானே என்று சொல்லும் அறிவு கொழுந்துகள் நிறய இருக்கிறது. ஹிட்லர்தனமாய் ஒருவர் பேசுவதை 'நாஜிபுத்தி' என்று யாராவது சொல்வதும் இனவெறிதானே என்றும் சொல்லலாம். இப்படிபட்ட வாதங்களை எத்தனை முறை கேட்டாகிவிட்டது. இதையும் பாப்பார லாஜிக் என்று சொல்வதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. வெங்கட்டும் அப்படி சொல்லகூடுமாவென அவர்தான் சொல்லவேண்டும்.

பொடிச்சி பதில் அளித்தது இந்த சந்தர்பத்தில்தான்- அதில் வெங்கட்டை மறைமுகமாய் குறிப்பிட்டிருக்க கூடும் எனினும்.

கடைசியாய் 'இது ரொம்ப தேவையான பதிவு' சூழலின் ஆரோக்கியம், என்றெல்லாம் மக்கள் ஜல்லியடிக்க தொடங்கியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஜாலியாய் எடுத்து கொள்வதோடு, சூழலில் வெளிப்படும் சொரணைத்தன்மைக்கான சான்றிதழாய் இதை கருதலாம்.

இது இந்த பதிவுடன் தொடர்புடைய ஒரு இடையீடு மட்டுமே. வெங்கட்டிற்கான என் எதிர்வினையோ, இதுவரை அவர் தெரிவித்துள்ள பல கருத்துகளுக்கான விமர்சனமோ அல்ல. அதை வேறு ஒரு நிதானமான சந்தர்பத்தில் எழுத உத்தேசம் உள்லது. நன்றி!

பெரிய மறுமொழியை வெட்டி போட்டதில் முக்கிய பகுதி விடுபட்டுவிட்டது, வேறு வழியில்லை, அதில் சொன்னதை பிறகு வேறு இடத்தில் சொல்கிறேன்

[22]இது பற்றி சில தீர்மானமான கருத்துக்கள் உண்டென்றாலும் அதைச் சொன்னால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதால் வேறு சில கருத்துக்களோடு சுருக்கமாக முடிக்கிறேன்.

//மாறி மாறி அடித்துக்கொள்ளாமல் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்//

ஒன்றும் செய்யமுடியாது. இப்படி பேசிக்கொண்டுதான் இருக்கமுடியும். ஊரிலிருந்து நம்மோடு கொண்டுவந்த அரிசி, பருப்பு, மசாலா, சேலை, சுடிதார், இலக்கியம் மாதிரி ஜாதியையும் கொண்டு வந்திருக்கிறோம். அதனால் இட்லி, சாம்பார், இலக்கியத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதைப் போல ஜாதியைப் (சில நேரம் கலாச்சாரம் என்ற போர்வை போர்த்தி) பற்றியும் பேசிக்கொண்டிருப்போம். சிலபேர்களே கொஞ்சம், கொஞ்சமாக உணவு, உடைப் பழக்கங்களை மாற்றிக்கொள்வது போலவே ஜாதியின் தேவையையும் விட்டுவிடுகிறார்கள்.

புலம் பெயர்ந்தவர்கள் மிஞ்சிமிஞ்சிப் போனால் ஓரிரு தலைமுறைகளுக்கு ஜாதியை தங்களோடு இழுத்துக்கொண்டு போகலாம். அதுகூட கல்யாண உறவு வைத்துக்கொள்ள தேவையான அளவு கூட்டம் உள்ள ஜாதியினரால் மட்டுமே அது முடியும். அந்த அளவு இல்லாத ஜாதியினர் கலாச்சார காரணங்களைக் காட்டி தம்மைப் போன்றே குழந்தைகளை வளர்க்கமுடிவதில்லை. அப்படி வளர்த்த சில பெற்றோரின் பிள்ளைகள் social skills வளர்த்துக் கொள்ளாமல் கன்னி கழியாது காலம் ஓட ஜாதி, மொழி, மதம், இனம் என்று கொஞ்சம் கொஞ்சமாக விதிகளை தளர்த்தி கடைசியில் கல்யாணம் ஆனால் போதும் என்கிற நிலைக்கு வருவதை கண்கூடாகவே பார்க்கிறோம்.

தொடரும்…

தொடர்ச்சி…

மதியின் கேள்வி நாம் விட்டுவந்த ஊரில் என்ன செய்ய முடியும் என்பதானால், அங்கும் நாமொன்றும் செய்யமுடியாது. அங்குள்ளவர்கள் தாம் ஏதாவது செய்யமுடியும். அதுகூட அரசியல் மூலமாகத் தான் முடியும். அந்த அரசியல் ஜாதியை அடிப்படையாக வைத்து தான் இயங்கும். ஆனால் அதுதான் 'படித்தவர்களுக்கு' பிரச்சினையே. இந்த விவாதத்தின் ஆரம்பமே அதுதான்–திருமாவையும், ராமதாசையும் திட்டித் தீர்த்துக்கொண்டிருப்பது.

ஜாதி அரசியல் இல்லாமல் ஜாதி ஒழியவேண்டுமென்றால் எல்லோரும் கிராமப் பகுதிகளை விட்டு தனித்தனியாக (கும்பலாக இல்லாமல்) ஊரைவிட்டு செல்லவேண்டும். அப்படிச் செல்லவேண்டுமென்றால் எல்லோருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு தேவை. (ஆனால் மீண்டும் அரசியல் வந்துத் தொலைக்கும்). அப்படிச் சென்றவர்களுக்கு–உள் நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்களுக்கும்–ஜாதி சார்ந்த பிரச்சினைகள் குறைவே.

கொசுக்கள் சுகமாக வாசம் செய்யும் சாக்கடையைப் போல கிராமங்கள் தாம் சாதிகள் வாசம் செய்ய உகந்த இடம். 'கிராமங்கள் தாம் இந்தியாவின் ஆத்மா' என்று காந்தி சொன்னதைப் போலவே நாம் எல்லோருமே நம்பிக்கொண்டிருக்கிறோம்–நான் உள்பட. 'நகரங்களில் மட்டும் என்ன வாழ்கிறதாம்' என்று சிலர் கேட்கலாம். நகரங்கள் என்று நாம் சொல்லிக்கொள்ளும் பழைய பெரிய ஊர்கள் பெரிய கிராமங்களே. அங்கும்கூட ஒவ்வொரு ஜாதிக்கென ஒரு பகுதியோ தெருவோ, இருக்கும். அந்த நகர், இந்த நகர் என்று புதிதாக உருவாகும் பகுதிகளில் மட்டுமே ஜாதி சார்ந்த பிரச்சினைகள் குறைவு.

கிராமங்களைப் பற்றி குறைகூறுவதாக என்மேல் பாய்பவர்களுக்கு: நானும் பட்டிக்காட்டான் தான். எனக்கும் என் ஊரைப்பற்றி தீராத ஏக்கம் உண்டு (என் பதிவில் முதலில் போட்டதே என் ஊர் ஏரியை வைத்து எழுதிய 'கவிதை' தான்). 'திரும்பிப் போனால் என் ஊரில் தான் செட்டிலாகப் போகிறேன்' என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பேன். நான் மட்டும் போனால் பிரச்சினையில்லை. என்னோடு என் ஜாதிப் பிரச்சினை முடிவுக்கு வரும். கூடவே என் பிள்ளைகளையும் கூட்டிச் சென்றால் சாதிப் பிரச்சினை தொடரும். நான் இல்லாவிட்டாலும், சுற்றியிருப்பவர்கள் பெண்பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

//நான் மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலிருந்து வருபவன்.//

இதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது. அந்த மண்ணில் தான் சாதிகள் பிரச்சனை இருக்கிறது. அந்த மண்ணில் தான் இப்பொழுது மதம் பெயரால் ரத்த ஆறு ஓடுகிறது. காந்தி பிறந்த அதே ஊரில் தான் இன்று நரேந்திர மோடிகள் உருவாகி ரத்த ஆற்றை ஓட விட்டு இந்தியா முழுக்க இதனை திருப்பலாமா என்று யோசிக்கிறார்கள்.

காந்தி பிறந்த மண் என்று குதர்க்கமாக பேசுவதும் பார்ப்பார புத்தியில்லாமல் வேறு என்ன ?

>>இது ஒரு பெரிய சுழற்சி. இதற்கு ஒரே தீர்வு. இதைவிட்டு வெளியே வருவதான் என்று மனதார நம்புகிறேன்.<<
உங்களது ஆக்கபூர்வமான இந்தக் கருத்தை நான் முழு மனதாக வரவேற்கிறேன். இதற்கு என்னால் இயன்றதனைத்தையும் செய்ய முன் வருகிறேன்.

மனித குலத்தின் ஒரு பெரும் பிரசினை என்னவென்றால், 'வரலாற்றில் வாழ்தல்'. நம்முடைய கடந்த காலம் எவ்வளவு பெருமைக்குரியதாக இருந்தாலும், அல்லது வேதனைக்குரியதாக இருந்தாலும் அதில் நாம் வாழ முடியாது. மெருகேறிய கருங்கல்லில், கலைநயத்தோடு கட்டப்பட்டதாக இருந்தாலும் கல்லறைகளில் உயிர்த் துடிப்பிருப்பவர்கள் வாழ முடியாது.

ஆனால் அப்படி வாழத்தான் மனிதர்கள் விரும்புகிறார்கள். மதம், ஜாதி, மொழி, பூகோள எல்லைகள், வரலாற்றுப் பாரம்பரியங்கள், பால், நிறம் இவற்றை அடையாளங்களாக சுமந்து திரிபவர்கள்தான், அந்த அடையாளங்களின் பேரில் அதிகாரங்களை விழைபவர்கள்தன் மோதல்களுக்கும், வசைகளுக்கும், யுத்தங்களுக்கும் கூட காரணங்களாக ஆகிறார்கள். இந்த அடையாளங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாதா?

பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் இன்னான்னாவோ பேசறீங்கோ.. எனக்கு ஆரு மேலயும் வன்மம் இல்ல. மன்சில பட்டத பொட்டுன்னு போட்டு ஒடைச்சிடுவேன்.

சாதி, மதம், கொலம், கோத்ரம் அல்லாம் மனுசங்களை ஒருத்தனை ஒருத்தன் மாத்தி மாத்தி வெட்டிக்க ஏற்படுத்தப் பட்டதுங்கோ. உங்க கையல் வெட்டினாலும் சேப்பு கலர்ல ரத்தம். என் கைல வெட்டினாலும் சேப்பு கலர்ல ரத்தம். அதனால நாம அல்லாரும் ஒன்னுக்குள்ளோ ஒன்னுங்கோ. பள்ளி, கல்லூரி.. அலுவலகம் என எங்க சாதி சர்ட்டிபிகேட்டு கேட்டாலும் கொடுக்காம இருந்தோம்னா சரியாய்டுங்கோ. முதலில் நாம் எல்லாம் மனுஷங்களா மாறுவோம்க.. ஏன் இந்த வீணாப்போன சாதி அல்லாம்? இன்னா நாஞ்சொல்றது?

மாலன் தொடர்கிறேன்
முடியும். ஆனால் எதிர்காலம் குறித்த கனவுகள் இல்லாதவர்கள், நிகழ்காலம் குறித்தவோர் அ-நிச்சய உணர்வுகளால் கலக்கமுற்றவர்கள் கடந்தகாலத்தின் உன்னதங்களை அல்லது கசடுகளைத் தின்று வாழ முயற்சிக்கிறார்கள். அம்மாவின் பழம் புடவை போல அவை அவர்களுக்கு இதம் தருகின்றன.இதம் தருகின்றன என்பதால் அவர்கள் அதிலேயே உழன்று சுகம் காண விழைகிறார்கள். கடந்த கால எச்சங்களின் மூலம் அதிகாரம் பெற ஆசை கொண்டவர்கள் அதை ஊக்குவிக்கிறார்கள், சொந்த நலன்களுக்காக.

இவர்களை இதிலிருந்து மீட்பது உங்கள் கடமை என்று கருதினால் அதற்கான வலிகளை எதிர் கொள்ளவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். பற்றியெரிகிற வீட்டிலிருப்பவர்களைக் காப்பாற்றப் பாய்கிறவன் தீக்காயங்களை ஏற்றுக் கொள்ள நேரிடுவதைப் போல.

அதற்குத் தயாராக இல்லாத பட்சத