உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் - இந்தியர்!

நேற்று ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை தனது வருடாந்திர உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்த வருடம் பல அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் நிறைந்திருக்கின்றன. முக்கியமானது இந்தியக் குடிமகன் லக்ஷ்மி மிட்டல் உலகின் மூன்றாவது பெரும்பணக்காரராக அறிவிக்கப்பட்டிருப்பது. பழைய இரும்பிலிருந்து பணக்காரராக மாறியவர் லக்ஷ்மி மிட்டல்.
வழக்கம்போல் முதல் இரண்டு இடங்களையும் பில் கேட்ஸ் (46.5 பில்லியன்), வாரன் பஃப்ஃபெட் (44.0 பில்லியன்) தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். (இருவருக்கும் உள்ள இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியிருக்கிறது. அடுத்த வருடம் பணமுதலை மென்கலனை விழுங்கி ஏப்பம் விட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை). ஆனால் பட்டியலில் இருக்கும் மிகப் பெரும் அதிசயம் - மூன்றாவது இடத்தில் இந்தியக் குடிமகனான திரு. லக்ஷ்மி மிட்டல் வந்திருப்பது. இவரது நிகரமதிப்பு 25 பில்லியன்கள். ஏழை நாடாக அறியப்படும் இந்தியாவிலிருந்து இப்படியொரு பெரும்பணக்காரர்??
கொஞ்சம் பொறுங்கள், லக்ஷ்மியின் நிர்வாகத் தலைமையகம் லண்டனில் இருக்கிறது. இவரது குழுமமான மிட்டல் ஸ்டீல்ஸ்/LNM Group ன் செயல்பாடுகள் பிரிட்டன், இந்தோனேஷியா, தாய்லாந்து, கஸகிஸ்தான், ட்ரினிடார், கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ, தென்னமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் எதுவுமில்லை!!
இவர் தன்னுடைய தந்தை மோஹன் மிட்டலிடமிருந்து இஸ்பாட் ஸ்டீல்ஸ் என்ற இந்திய நிறுவத்தை வம்ச உரிமையாகப் பெற்றார். தொடர்ந்து இதை வளர்த்தெடுக்க முயன்றபொழுது இந்தியாவில் கனரக ஆலைகளுக்கு இருந்த அரசாங்கக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தோனேஷியாவுக்குத் தன்னுடைய நிறுவனத்தை நகர்த்திக் கொண்டார். தந்தை மோஹன் மிட்டலைப் போலவே இவருடைய இரும்பாலைகளுக்கும் உபயோகித்துக் கழித்த உலோகங்களே உள்ளீடாக இருந்தன (காயலான்கடை சமாச்சாரம்). விரைவாக வளரும்பொழுது இரும்பின் தேவை அதிகரிக்க, தாய்லாந்திலிருக்கும் இரும்புக் கனிமச் சுரங்கத்துடன் தொடர்புகொண்டார். பின்னர் அதைக் கையகப் படுத்தினார். தொடர்ந்தும் வளர வளர, உலக அளவில் நிர்வாக வசதிக்காக லண்டனுக்குத் தன் தலைமையகத்தை மாற்றினார். அப்பொழுது அயர்லாந்தில் அவர் நிர்வகித்த ஒரு இரும்பு ஆலை பலத்த இழப்புக்குள்ளானது. கொஞ்சம் நிலைமையைச் சரிசெய்துகொண்டு சரிந்து விழுந்த கம்யூனிஸ்ட் நாடுகளின் இரும்பு வியாபாரத்தில் கையைவைத்தார், ரோமானியா, கஸகஸ்தான், (கிழக்கு)ஜெர்மனி என்று ஒவ்வொன்றாகப் பல நாடுகளில் தனது நடவடிக்கையை நீட்டித்தார். இடையில் அமெரிக்கக் கண்டத்திலும் கால் பதித்தார். இழப்பில் ஓடிக்கொண்டிருந்த டிரினிடார் நாட்டின் (மேற்கிந்தியத் தீவுகள்) இரும்பு நிறுவனத்தை வாங்கி, அதற்குத் தன் இந்தோனேஷிய செயற்பாடுகளிலிருந்து உயர்தொழில்நுட்பக் கருவிகளை அனுப்பி ஒரே வருடத்தில் அந்த ஆலையை லாபத்தில் கொண்டுவந்தார்.
இப்பொழுது இவரது நிகர மதிப்பு உலகின் மூன்றாவது பெரும்பணக்காரராக உயர்த்திவிட்டிருக்கிறது.
மிட்டலின் செயற்பாடுகளில் பல கேள்விகள் இருக்கின்றன. இவர் பிரிட்டிஷ் தொழிற்கட்சிக்குப் பெரிய ஆதரவாளர். சென்ற முறை தேர்தலில் டோனி ப்ளேர் வெற்றிபெற தாராளமாகப் பண உதவி செய்தவர். இதற்குக் கைமாறாக ரோமேனிய அரசாங்கத்துடன் நடந்த பேரத்தில் ப்ளேர் தன்னுடைய தலையீட்டால் (நேரடியாக ரோமானியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியும் தொலைபேசியும்) மிட்டல் குழுமத்திற்கு ஆதாயமிக்க ஒப்பந்தங்களைப் பெற்றுத்தந்தார் என்று குற்றச்சாட்டிருக்கிறது. நாளை ப்ளேருக்குப் பதிலாக வேறு யாராவது வந்தால் இது பெரும் விவகாரமாக வெடிக்கக் கூடும்.
மறுபுறத்தில் இவருடைய நடவடிக்கைகள் பல வித்தியாசமாக இருக்கின்றன. இந்தியாவில் அதிக செயற்பாடுகள் இல்லாவிட்டாலும் தன்னுடைய இந்தியக் குடியுரிமையை இவர் இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியம் தருகிறது. இவருடைய மகன் ஆதித்யாவின் திருமணத்தை கல்கத்தாவில் விக்டோரியா நினைவாலயத்தில் நடத்தினார். இந்தக் கட்டிடம் பலருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியின் நினைவுச் சின்னமாகத் தோற்றமளிக்கிறது. இதனால் இந்தியாவில் இவர் பலத்த விமர்சனத்துக்குள்ளானார். அந்த சமயத்தில் இவர் இந்தியக் குடியுரிமையைத் துறந்துவிடுவார் என்று நினைத்தார்கள். ஆனால் இன்னமும் இவர் இந்தியர்தான்.
இப்பொழுது உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற அடையாளம் கிடைத்திருப்பதால் இவருடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் துருவி ஆராயப்படும். பலரும் இதுதான் மிட்டலின் அதிஉச்ச வளர்ச்சி என்றும் இனி இவருக்குச் சரிவுதான் என்றும் சொல்கிறார்கள். ஆனால் தன்னுடைய கூர்மையான வணிகத் திறமையால் இவர் இரும்பைவிட்டு இன்னும் சில துறைகளில் பரவலாக்கம் செய்து (குறிப்பாக இந்தியாவில் தொலைதொடர்பு, கணினி) இன்னும் முன்னேறக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
* * *
இந்த நேரத்தில் இப்படி அதீத வளர்ச்சி பெற இந்தியாவை விட்டு கட்டாயம் வெளியேறியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதைப் போலத் தோன்றுகிறது. திறமையான வர்த்தக முயற்சிகளுக்கு இந்தியாவில் இன்னும் முட்டுக்கட்டைகள் இருக்கிறதா? உதாரணமாக, அதியுன்னத வளர்ச்சி என்று கருதப்படும் கணினி துறையில் கூட இந்தியாவின் பெயர் சொல்லும் ஒரு தயாரிப்பும் உலகில் கிடையாது. அமெரிக்க முதலைகள் தைக்கும் தலகாணிக்கு நம்மாட்கள் உறைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் தலை பத்து கணினி நிறுவனம் போன்ற பட்டியலில் முழுமையான இந்திய நிறுவனம் வருவதில்லை. இதெல்லாம் மறக்கடிக்கும்படியா, இந்தியப் பத்திரிக்கைகள் உலகின் மூன்றாவது பெரும்பணக்காரர் இந்தியர். இந்தியா வல்லரசாக மாறுவதற்கு இது இன்னொரு அடையாளம் என்ற ரீதியில் எழுதிக் கிழிக்கக்கூடும்.
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
இன்னொன்றைக் கவனித்தீர்களா? உலகப்பணக்காரர்கள் இரு வகைப்பட்டவர்கள்:
1. பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொண்டவர்கள் - இளநிலைப்பட்டம் பெற்றவர்கள்
2. தாமாக உயர்ந்து கொண்டவர்கள் - பாடசாலை/பல்கலைக்கழகத்தினைக் கைவிட்டவர்கள்.
நீங்களும் உங்கள் முனைவர் பட்டமும்
[2]
இல்ல ரமணி
படிக்க வரும்பொழுதே பணம் சம்பாதிக்க முடியாதுன்னு எங்க அம்மாட்ட சத்தியம் பண்ணிச் சொன்னேன். "பணம் கெடைக்காதா, அப்படீன்னா சரி, பரவாயில்ல" என்று சொல்லித்தான் என்னை ஈந்தெடுத்து இம்மண்ணுக்களித்த அண்ணையும் குழலில் நெய்பூசி கையில் வேல்கொடுத்து அனுப்பினாள்
வெங்கட் தங்கள் நாட்டவர் மூன்றாவதாய் நிற்பது தங்களுக்குப் பெருமையாக இருக்கிறதா? இல்லாவிட்டால் வெறும் தகவலாகத் தந்தீர்களா? இவருடைய பணத்தால் இந்தியாவிற்கு எந்த வித நன்மையும் இல்லைப் போலத்தான் தெரிகிறது. வெறும் பெயரைத் தவிர.
[4] கறுப்பி - பெருமை, தகவல் என்பதையெல்லாம் தாண்டி, இப்படியாக தொழிலில் வெற்றிபெற்த்தக்கவர்களை முற்றாக எப்படி இந்தியாவிலேயே வளர்த்தெடுப்பது என்ற விசனம்தான்! ஏன் இவர் இந்தோனேஷியாவிலும், இங்கிலாந்திலும் போய் நிர்வாகம் செய்யவேண்டியிருக்கிற்து? மும்பையில் தலைமை நிர்வாகத்தை வைத்துக் கொண்டு ட்ரினிடாட் அல்லது ரொமானியாவின் இரும்பாலைகளை நிர்வாகிப்பதற்கு நாம் ஏந்த விதமான தடைகளைத் தருகிறோம், அது எப்படி நீங்கும் என்ற அக்கறைதான் முக்கியம்.
நிச்சயமாக வெங்கட். ஒரு நாடு பொருளாதாரத்தால் பின்னடைவில் நிற்கும் போது அந்நாட்டைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் உலகின் மூன்றாவது செல்வந்தர் என்று தெரியும் போது பல கேள்விகள் எழத்தான் செய்யும். இதற்கான பதிலை லஷ்மி மில்டன் எங்காவது செவ்விகளில் கூறியிருக்கின்றாரா? தெரிந்தால் அறியத் தரவும்.
அப்பாடி. நல்ல வேளை. ப்ரபஞ்ச அளவில் பட்டியல் தயாரித்து இருந்தால் என் பெயரை முதலில் போட்டிருப்பார்கள். தப்பித்தேன்.
ஆமாம், அமெரிக்க முதலைகள் தைக்கும் தலைகணிக்கு உறை போட்டாலும், அதே தலையணையை வைத்து நிம்மதியாக உறங்குவது நாம்தான். அவர்கள் பாவம், செனட்டில் பில் பாஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்களே.;-)
[7] > அப்பாடி. நல்ல வேளை. ப்ரபஞ்ச அளவில் பட்டியல் தயாரித்து இருந்தால் என் பெயரை முதலில் போட்டிருப்பார்கள். தப்பித்தேன்.
அது ப்ரபஞ்சமா அல்லது பஞ்சமா?
மிட்டல் இந்தியரா?
ஒருவன் இந்தியக் குடியுரிமை வைத்து இருந்தால் மட்டுமே இந்தியராக அறியப்படுவார்.
(அவரின் பிறப்பு/பூர்வீகம்/மதம்/இனம் எதுவும் காரணமாக முடியாது)
மிட்டல் இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர் மட்டுமே.
அவர் இப்போதும் இந்தியக் குடியுரிமை வைதுள்ளாரா என்று தெரியவில்லை.
தெரிந்தவர்கள் சொல்லவும்.
அன்புடன்,
கணேசன்
நான் Redhat (9.0) நிறுவிட்டேனாக்கும்! இனிமேல் என்ன பஞ்சம்! பாஞ்சாலமே கிடைச்சதா பஞ்சு மாதிரி ப்ரொபெல்லுது மனசு. :->
பேருல என்ன இருக்குன்னு கேக்குறவங்களுக்கு!
Bill - ரூவா நோட்டு
வாரன் - வாரிக் கொள்பவன்
லக்ஷ்மி - சொல்லனுமா?
[9] கணேசன் - நான் எழுதியிருக்கேனே
>அந்த சமயத்தில் இவர் இந்தியக் குடியுரிமையைத் துறந்துவிடுவார் என்று நினைத்தார்கள். ஆனால் இன்னமும் இவர் இந்தியர்தான்.
Forbes சஞ்சிகை இப்படி வரையறுக்கிறது;
Country of citizenship: India
Residence: London, United Kingdom
Industry: Manufacturing
Marital Status: married , 2 children
St Xavier's College Calcutta, Bachelor of Arts / Science
இந்தியாவில் எந்த முக்கிய செயல்பாடும் இல்லை, லண்டனின் தலைநகரம், இப்படியாக இருந்துகொண்டு இன்னும் இந்தியக் குடியுரிமையை வைத்திருப்பதுதான் விசேடம்.
[10] இன்னாபா, ஒம்பது புள்ளி ஸைபர்ல விண்மோடம் வேலைசெய்யுதா? ஏதாவது ப்ரச்செனன்னா ஸொல்லு தலைல தட்டுவோம்.
[14] கலக்கல்…
வாழ்க மிட்டல்…
புண்ணாக்கு software வேலைக்காக இந்தியக் குடியுரிமையை அடகுவைத்துவிட்டு
வாழும் மனிதர்களின் மத்தியில் இவர் சிறந்தவரே!
அன்புடன்,
கணேசன்
[15] ம்ஹூம். வீட்டுல விண்மோடத்தோட இத்தனை நேரம் போராடிப் பார்த்து முடியாம ஆஃபீசுக்கே வந்துட்டேன். கேடிதான், மன்னிக்கவும், கே.டீ.ஈதான் இப்போதைக்கு பயன்படுத்தறேன் (பழகிப்போச்சு). நீங்க "காணோம்"தானே?
இச்செய்தியால இந்தியாங்கற பேரு கொஞ்ச நாளைக்கு ரொம்ப இடங்கள்ல அடிபட்டுக்கிட்டிருக்கும். அடிதான், உதையில்ல
[16] ஆஹா, புண்ணாக்கு! லினக்ஸுல ஏதாவது தமிழ் மென்பொருள் பண்ணினா கண்டிப்பா புண்ணாக்குன்னுதான் வைக்கப் போறேன்.
//இந்த நேரத்தில் இப்படி அதீத வளர்ச்சி பெற இந்தியாவை விட்டு கட்டாயம் வெளியேறியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதைப் போலத் தோன்றுகிறது. திறமையான வர்த்தக முயற்சிகளுக்கு இந்தியாவில் இன்னும் முட்டுக்கட்டைகள் இருக்கிறதா? உதாரணமாக, அதியுன்னத வளர்ச்சி என்று கருதப்படும் கணினி துறையில் கூட இந்தியாவின் பெயர் சொல்லும் ஒரு தயாரிப்பும் உலகில் கிடையாது. அமெரிக்க முதலைகள் தைக்கும் தலகாணிக்கு நம்மாட்கள் உறைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் தலை பத்து கணினி நிறுவனம்//
" made in india " என்ற அட்டை எல்லாவற்றிலும் ஒட்டிக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பதே ஒரு oudated காந்தீய-கிராமப்புறப்-பொருளாதாரத்தின் பாற்பட்ட சிந்தனை. பொருள் உற்பத்திக்கு, மூலப்பொருட்கள், தொழில்நுட்பம், cost of production, சந்தை, லாஜிஸ்டிக்ஸ் ஆகியவை மட்டும் தான் முக்கியமானது. அது இந்தியாவில் தயாரிக்கப்படுகிறதா அல்லது அந்த கம்பெனியின் முதலாளி இந்தியரா என்பது முக்கியமில்லை. இந்த நாட்டில் இருந்து கொண்டு உற்பத்தி செய்கிற திறமையைவிடவும், வேறு எங்கோ உற்பத்தி செய்கிற பொருட்களை வாங்குகிற பொருளாதார வலிமை முக்கியம்.
தைவானிலும், கொரியாவிலும் சிலிகன் சில்லு பதித்த உபகரணங்கள் சீப்பாகக் கிடைக்கும் என்றால் அதை அங்கே வாங்குவதை விடுத்து, பாண்டிச்சேரியிலும் நொய்டாவிலும் பாக்டரி கட்ட முனைவது மடத்தனம். சிப்புகளுக்குள் பொதிக்க வேண்டிய நிரல்களை எழுதுவதுதான் நம்முடைய core-competency. அதை இன்னும் சிறப்பாகச் செய்தாலே போதுமானது. நமக்கு எது சிறப்பாக வருகிறதோ அதை மேலும் சிறப்பாகச் செய்து, மற்றவர்களுக்கு நல்ல விலைக்கு விற்று, நமக்கு வேண்டும் என்கிறதை வாங்கிக் கொள்ளுவது தான் smart working culture. அதைத் தான் துணைக்கண்டம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இந்தியத் தயாரிப்பு என்று சொல்லிக் கொள்கிற மாதிரி ஒன்றும் இல்லை என்பது வாஸ்தவம் தான். ஆனால் இருந்தே ஆகவேண்டுமா என்பதுதான் கேள்வி.
(contd..)
நம்முடைய ஆதார பலமே நம்முடைய நம்முடைய அறிவும் படிப்பும் தான். நாலந்தா சர்வகலாசாலையில் துவங்கி, சாந்திநிகேதன், பனாரஸ், ஜாதவ்பூர் , அலிகார், ஜேஎன்யூ பல்கலைகள் வழியாக, நுட்பியல் கல்விக் கழகம், அறிவியல் கல்விக் கழகங்களும், கொல்கத்தா ப்ரெசிடென்ஸிக்களும், பாளயங்கோட்டை சேவியர்களும், மதுரை அமெரிக்கனும், டெல்லி ஸ்கூல் ஆ·ப் இகனாமிக்ஸ¤ம் பதியன் போட்ட வைத்த பாதையில் பயணித்தவர்கள் தான் இன்றைய தினத்தில், knowledge based industries/services துறையில் நம்பிக்கையுடன் வெற்றிகரமாகக் கோலோச்ச்சிக் கொண்டிருக்கிறார்கள். இதை இன்னும் மேம்படுத்துவது முக்கியம். எ·கு ஆலைகள் போன்ற capital intensive தொழில்களை துவங்குவது, தற்போதைய இந்தியாவின் பொருளாதார நிலைக்கு ஏற்றதல்ல.
கணிதம் படித்தவர்கள் வாத்தியார் வேலைக்குத் தான் போகவேண்டும் அல்லது மாமனார் தயவில் தொழில் செய்து செட்டில் ஆகவேண்டும் என்று தான் கொஞ்ச நாள் முன்பு வரை நினைத்திருந்தேன். ப்யூர் கணிதம் படித்த நான்கு விஞ்ஞானிகள் ஒன்றாகச் சேர்ந்து நிறுவனம் ஒன்றைத் துவக்கினார்கள். அந்த நிறுவனத்தின் விற்பனைப் பொருள் என்ன தெரியுமா? mathematical algorthims. மேல் விவரங்களுக்கு இந்தச் சுட்டியைச் சொடுக்கவும் http://www.businessworldindia.com/nov0104/invogue01.asp…. நம்ம ஆட்களுக்கு இது போன்ற novelty உம், idea creativity உம் தான் எல்லாவற்றுக்கும் மூலதனம். இந்த மூலதனத்தைக் கொண்டு எதை வேண்டுமானால் வாங்கலாம் என்கிற போது, கேவலம் எ·கு ஆலை என்ன… பிஸ்ஸாத்…
( எல். என் மித்தல் குழுமம், ஒரிசாவில் புதிய எ·கு ஆலை நிறுவுவதற்காக, மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது என்பது ஒரு துணைச் செய்தி)
(over and out)
[21]
>" made in india " என்ற அட்டை எல்லாவற்றிலும் ஒட்டிக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பதே ஒரு oudated காந்தீய-கிராமப்புறப்-பொருளாதாரத்தின் பாற்பட்ட சிந்தனை.
இல்லை எல்லாவற்றிலும் வேண்டாம். ஆனால் கொஞ்சமாவது வேண்டும். இது 'இந்தியா' என்ற பிராண்டை வளர்த்தெடுக்க மிகவும் முக்கியம். வெறும் பேக் ஆபீஸ் புண்ணாக்கு (!) என்று மூலையில் உட்கார்ந்து கொண்டு அதை மட்டுமே நம்பி உலகை அடக்கியாளப்போவதாகக் கனவு கண்டுகொண்டிருந்தால் நாளை இதே துரைமார்கள் நம்ம கையிலிருந்து பிடிந்து பிலிப்பினோ கையிலோ போலிஷ்காரன் கையிலோ கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள்.
>தைவானிலும், கொரியாவிலும் சிலிகன் சில்லு பதித்த உபகரணங்கள் சீப்பாகக் கிடைக்கும் என்றால் அதை அங்கே வாங்குவதை விடுத்து, பாண்டிச்சேரியிலும் நொய்டாவிலும் பாக்டரி கட்ட முனைவது மடத்தனம்.
இந்த லாஜிக் எல்லாம் நிறைய manufacuring economy-ல் கால் பதித்த ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி - ஏன் சைனா, தைவானுக்குக்கூடப் பொருந்தும். நாளைக்கே Knowledge based நிறுவனங்கள் இந்தியாவைவிட்டு போக நினைத்தால் சாத்தியமே (சில ஆரம்ப இழப்புகள் இருந்தாலும்கூட) ஆனால் சீனாவை விட்டுப் போவது என்பதை அவர்களால் இன்னும் கனவில் கூட நினைக்க முடியாது. இதற்குக் காரணம் ஊசி மணி பாசி மணியிலிருந்து தொடங்கி ஃபைட்டர் பிளேனுக்குத் தேவையான சிலிக்கன் சில்லுக்கள் வரை சீனர்கள் பரந்து விரிந்திருக்கிறார்கள். நாம் இன்னும் மோட்டுவளையை மாத்திரமே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
[21]
> நம்முடைய core-competency. அதை இன்னும் சிறப்பாகச் செய்தாலே போதுமானது. நமக்கு எது சிறப்பாக வருகிறதோ அதை மேலும் சிறப்பாகச் செய்து, மற்றவர்களுக்கு நல்ல விலைக்கு விற்று, நமக்கு வேண்டும் என்கிறதை வாங்கிக் கொள்ளுவது தான் smart working culture.
இல்லை, பிரகாஷ். இந்தியா போன்ற பில்லியன் வயிறுகளுக்குச் சோறுபோட இது போதாது. ஒரு விஷயத்தைப் பார்த்தீர்களா, ஜப்பான் வளர்ந்த காலத்தில் அது வெறும் வாக்மேனைமட்டும் காதில் மாட்டிக் கொண்டு அலையவில்லை. சோனி, பனாஸோனிக் (எலெக்ட்ரானிக்), டொயோட்டா, ஹோண்டா (கார்), சுமிடோமோ (எஃகு, உலோகம்), இன்னும் கப்பல் கட்டுதல், கட்டுமானத் தொழில், என்று எல்லா துறையிலுமாகத்தான் வளர்ந்தார்கள். ஒரே ஒரு துறையில் மாத்திரம் என்று சொல்வது வளர்ச்சியல்ல, வீக்கம்.
> இந்தியத் தயாரிப்பு என்று சொல்லிக் கொள்கிற மாதிரி ஒன்றும் இல்லை என்பது வாஸ்தவம் தான். ஆனால் இருந்தே ஆகவேண்டுமா என்பதுதான் கேள்வி.
என்னுடைய பதில் ஆமாம், ஆமாம் ஆமாம். வெறும் தலைகாணி உறை மாத்திரம் இருந்தால் நாளை நம்முடைய உறையைக் கழற்றிவிட்டுப் போய்விடுவார்கள். (உறையே இல்லாமல் வேண்டுமானாலும் படுக்கலாம்). ஆனால், ஒரு பொதியை இந்தியா வளர்த்தெடுத்து (உதாரணம் SAP) அதில் உலகக் கம்பெனிகளைக் கட்டிபோடுவது இன்னும் உன்னதம். அதற்குத்தான் Made in India என்ற brand building மிகவும் முக்கியம். அப்படியிருந்தால்தான், இந்தியா ஒரு வசதி என்ற நிலை மாறி,இந்தியா ஒரு அத்தியாவசியம் என்ற நிலை வரும்.
எல்.என். மிட்டல் குழுமம்தான் இரும்பு உலகின் ரேங்க் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. நான் பணி புரிவது ஒரு இரும்பு உருக்கு ஆலை ஆலை. கடந்த வாரம் ஒரு மீட்டிங்கில் பொது மேலாளர் சந்தை நிலவரத்தை பற்றி பேசுகையில் என்னைப் பார்த்து "எல்.என். மிட்டல் குழுமம் இந்தியாவில் எத்தனயாவது இடத்தில் இருக்கிறது"னு கேட்டார். அதுக்கு என்னோட பதில் " எங்க ஊர்ல உன்னமேலதான் ஆரம்பிக்க போறாங்க"ன்னு சொன்னப்ப என்னவோ எல்லாரும் ஏதொ நமுட்டு சிரிப்பு சிரித்ததைப்போன்று உணர்ந்தேன்.
— — — — —
என் அமெரிக்க நண்பரொருவர் சொன்னார் "அமெரிக்க முட்டாள் முதலாளிகள் எல்லாம் தொழிற்சாலைகளை சீனாவிற்கு தாரைவார்த்துவிட்டார்கள்.இந்த காரணத்தினால் உலகின் எல்லோரது குடுமியும் எங்கள் கையிலிருந்தாலும் எங்கள் குடுமி இருப்பதோ சீனாவின் கையில்"ன்னு.
//உலகக் கம்பெனிகளைக் கட்டிபோடுவது இன்னும் உன்னதம். அதற்குத்தான் Made in India என்ற brand building மிகவும் முக்கியம். அப்படியிருந்தால்தான், இந்தியா ஒரு வசதி என்ற நிலை மாறி,இந்தியா ஒரு அத்தியாவசியம் என்ற நிலை வரும்//
நல்லா சொன்னீங்க :claps:
/எல்.என். மிட்டல் குழுமம்தான் இரும்பு உலகின் ரேங்க் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது./
அண்மையிலே US Steels இனை வாங்கப்போவதாகவோ வாங்கிவிட்டதாகவோ போகிற போக்கிலே வானொலியிலே கேட்டேன்
இந்த விஷயத்தில் வெங்கட் கருத்து முற்றிலும் சரியானதே!
உதாரணத்திற்கு சீனாவையே எடுத்துக் கொள்ளலாம்.
வெங்கட் கூறியது போல சீனாவின் தொழில் வளர்ச்சியால் உலகம் அதைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை வந்து விட்டது. 15 - 20 வருடங்களுக்கு முன்பு சீனப் பொருட்களுக்கு உலக அரங்கில் இருந்த மதிப்பென்ன, இப்போது இருக்கும் மதிப்பென்ன என்பது, அனைத்திற்கும் வெளி நாட்டை சார்ந்திருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளில் வசிக்கும் எங்களைப் போன்றோர்க்கு மிக நன்றாகவே தெரியும்.
இந்த மாற்றம் ஓரிரு நாட்களில் ஏற்பட்டதா? உலக அரங்கில் அவர்களது பொருட்கள் நிராகரிக்கப் பட்ட போது அவர்கள் துவண்டுவிடவில்லை. மாறாக அவர்களின் பொருட்களை அனைவரும், இந்தியா உட்பட, ஏற்றுக் கொள்ளும் வண்ணம் சாதித்துக் காட்டினர். (நாங்கள் அவற்றை எப்போதோ ஏற்றுக் கொண்டாகி விட்டது. ) இன்னும் ஒரு படி மேலே போய் ஏற்றுக் கொள்ளும் நிலைமையைத் தாண்டி, சார்பு நிலையை உருவாக்கிவிட்டனர். எனக்கென்னவோ கூடிய விரைவில் தங்கள் ஈடுபாடு , அரசியல் பலம், மற்றும் வன்கலன், தொடர்புள்ள தொழிற் சார்பு மூலம் மென்கலன் துறையிலும் அவர்கள் மாற்றங்கள் நிகழ்த்தி மென்கலனில் உள்ள இந்தியச் சார்பு நிலையை சீனச் சார்பு நிலைக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என ஐயமாக உள்ளது. அந்த நிலை வந்து விட்டால், திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் ஏற்பட்ட தேக்க நிலைக்கு மென்கலனும் வந்து விடும். அதைத் தடுக்கவாவது “ Made in India” Brand வேண்டும்.
[28] ஆமாம், இது இன்றைய தகவல். அமெரிக்காவில் இதற்கு அனுமதி கிடைத்துவிட்டது.
http://www.channelnewsasia.com/stories/afp_world_business/view/136992/1/.html...
[25] அன்பின் வெங்கட் & காசி , . நவீன எலகிய வாதிகள் பாஷையில் சொல்லவேண்டும் என்றால், நீங்க சொல்லுவது லட்சியவாதம், நான் சொல்வது யதார்த்த வாதம் :-). இந்தியாவை ஒரு மெகா எண்டர்பிரைசாக நினைத்துக் கொண்டு, அதன் சீஈஓ நீங்களாக இருக்கும் பட்சத்தில் , முதலில் செய்ய வேண்டிய காரியம் என்ன என்று யோசித்துப் பாருங்கள். நான் சொல்ல வருவதன் நோக்கம் புரியும். இருக்கிற விஷயங்களை முதலில் consolidate செய்ய வேண்டும். அதற்குப் பிறகுதான் diversification.
இந்தியா முக்கியமான துறைகளில் தன்னுடைய பிராண்டுக்கு வலுசேர்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையும் கூட. ஆனால், கார் தயாரித்தோ அல்லது ஈஆர்பி மென்பொருள் செய்தோதான் அந்த பிராண்டை நிலை நிறுத்த வேண்டும் என்பதில்லை என்பதுதான் நான் சொல்ல வந்தது. மேலும் அறிவு சார் தொழில் என்று நான் சொல்வது ' பொட்டி தட்டுகிற' அல்லது ' அமெரிக்க டாக்டர்களுக்கு நுங்கம்பாக்கத்தில் இருந்துகொண்டு ஸ்டெனோ சேவகம் 'புரிகிற காரியங்களை மட்டும் இல்லை. அந்த அறிவு சார் தொழில்களும் ஒரு போலந்துகோ அல்லது இந்தோனேசியாவுக்கோ போய்விடும் அபாயம் இருக்கிறது என்பது வாஸ்தவம் தான். எல்லாத் தொழில்களுக்கு swot என்று சொல்லக் கூடிய பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புக்கள் , மிரட்டல்கள் இருக்கிறது. தற்போது இருக்கும் நல்ல பேரை எப்படி காப்பாற்றிக் கொண்டு, அத்துறையிலே நம்மை விட்டால் வேறு ஆளில்லை என்று நிலைக்குக் கொண்டு போவது ஒரு சீஈஓவின் கடமை இல்லையோ? அந்த இமேஜ் இந்தியாவுக்கான ஒரு நல்ல பிராண்டை உருவாக்காதா?
(contd..)
பார்க்கிற பொருட்களில் எல்லாம் மேட் இன் இந்தியா என்ற லேபில் இருக்கவேண்டும் என்பது எனக்கும் ஆசைதான். முழுக்க முழுக்க indigenous ஆக தயாரிக்கப் பட்ட கார் என்று சில வருடங்களுக்கு முன்புதான் டாடா நிறுவனம் வெளியே விட்டது. அதாவது கார் என்ற வஸ்து ரோடில் ஓடத்துவங்கி சுமார் நூறு வருடங்களுக்குப் பிறகுதான். இது நாள் வரையிலும், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ¤ம், ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ¤ம் ப்ரீமியர் ஆட்டோமொபைல்ஸ¤ம் , உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் தயாரித்த கார் என்று சொல்லுகிறது என்பதை முதன் முதலாகத் தெரிந்து கொண்ட நண்பன் ஒருவன், " ஒரு கார் கூட சொந்தமா நம்பளாலே செய்ய முடியாதா? " என்று கேட்டான். உண்மை அதுதானே? நாம் industrial revolution ஐ மிஸ் பண்ணி விட்டோம் என்பதை கவனிக்கவேண்டும். அதற்கான அறிவும் திறமையும் கல்விக்கூடங்களும் இல்லை என்று அர்த்தமில்லை. இருந்தன, ஆனால் அவற்றில் யார் முதலீடு செய்வது? யாரிடம் பணம் இருந்தது? எந்திரங்கள், தொழில்நுட்பம்? முதல் ஸ்டீல் ப்ளாண்டுக்காக நேரு எந்த எந்த நாடுகளுக்குப் போய் கெஞ்சிக் கூத்தாடினார் என்று தெரியும் இல்லையா? மாருதி நிறுவனம் சஞ்சய் காந்தியால் துவக்கப் பட்ட காலகட்டத்தில், அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில், அவர் வானளாவிய அதிகாரம் படைத்த ஒருவர். அவருக்கே அந்த controlled economy சூழ்நிலை தண்ணி காட்டியது. labour intensive தொழில்களுக்குத்தான் எப்போதும் முன்னுரிமை.கார் தயாரிப்பது போன்ற அசெம்ப்ளி லைன் தொழில்களுக்கு அல்ல? இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் விலகியதே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான். manufacturing துறையில் எப்படி ஒரு இந்திய பிராண்ட் உருவாகி இருக்க முடியும்.?
(contd..)
நான் உங்களுடைய மற்றும் காசியுடைய நோக்கங்களை குறை கூறுகிறேன் என்று அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டாம். உலகத் தரத்துக்கு இந்தியப் பொருட்களும் சேவைகளும் இருக்கவேண்டும் என்பதும், மற்ற நாடுகளில் தொழில்நுட்பத்துக்காகவும், plant & equipment க்காகவும் கையேந்தாமல், நாமே தயாரித்து, ஜப்பான் மாதிரி கார், எலக்ட்ரனிக்ஸ், கப்பல் கட்டுதல் எல்லாவற்றிலும் நாமும் பெரிய ஆளாக வரவேண்டும் என்பதுதான் என் உள்ளார்ந்த விருப்பமும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ( சீனாவை உதாரணம் காட்டியிருக்கிறீர்கள். சீனா போல நம் கைகளையும் 15 வருடங்களுக்கு முன்பே கட்டவிழ்த்து விட்டு இருந்தால் நீங்கள் சொல்வது நிகழ்ந்திருக்கக் கூடும் ).
இங்கே தொழில் நடத்த முடியாது என்று ஓடிப்போனவருக்கு , i repeat , ஓடிப் போனவருக்கு, ஓடிப்போவதற்குக் காரணமாக இருந்த அதே socio-political சூழ்நிலையில் தான் டாடாவுக்கும் இருந்தது. இங்கே இருந்து கொண்டே, கம்யூனிஸ்ட் சோஷியலிஸ்ட் கழுகுகளிடமிருந்து வெற்றி கரமாக தப்பித்து டாடா ஸ்டீல் என்ற மாபெரும் நிறுவனத்தை உண்டாக்கினார். அதே மித்தல், இன்று ஒரிசாவில் சலுகைகள் கிடைக்கிறது, சுரங்கங்கள் சல்லிசான குத்தகைக்குக் கிடைக்கிறது என்று அறிந்து, கொரியாவின் பொஷாங்கும் ( POSCO), பிஎச்பி பில்லிட்டனும், ஒரிசாவில் மெகா திட்டங்கள் அறிவித்த உடன், ஒடி வந்து ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறார் . உலகின் மூன்றாவது பணக்காரரான ஆகி இருக்கும் இவரையே, ஒரு காலத்தில் இந்தியாவில் தொழில் செய்ய விடாமல் துரத்தி அடித்தார்கள் என்ற தொனி உங்கள் மூலப்பதிவில் இருந்தது. அதற்காகத்தான் இந்த நீளமான பின்னூட்டம். தட்டச்சு செய்ததை, சரிபார்க்காமல் அப்படியே அனுப்புகிறேன். வார்த்தைகள் எங்காவது கோக்குமாக்காக இருந்தால், தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
(over & out)
எங்கள் ஊரில் இருக்கிற International Steel Groupஐச் சென்ற ஆண்டு வாங்கியபோதே உலகின் முதலாம் இரும்பு/எஃகுத் தயாரிப்பாளராக மாறி விட்டார் மிட்டல். இது பற்றி எழுத எண்ணிக் குறித்து வைத்திருந்தேன். நீங்கள் எழுதியதில் அது அவசியமின்றிப் போய்விட்டது. என்னுடைய ஆச்சரியம் இவரும் கீழ்மட்டத்தில் இருந்து வேலை செய்தே மேலே வந்திருக்கிறார் என்பதே. (இன்னொரு உ-ம் அம்பானி?).
Someone who wishes a quiet life would have done better not to be born in the twentieth century.sometimes unlearning is more useful then learning.
-P.V.Sri Rangan
ஞாயிறு இரவு - ஆஜ் தக் இந்தி செய்தி தொலைக்காட்சியில் இண்டியா டுடேயின் ஆசிரியர் பிரபு சாவ்லா- மிட்டலை பேட்டி கண்டார். நிகழ்ச்சி சுமார் 20 நிமிடம் (விளம்பரங்களுடன்). இதில் பெரும்பாலான கேள்விகள் இந்தப் பதிவில் கேட்கப்பட்டுள்ள்ள சில விஷயங்களை சும்மா தொட்டுவிட்டும், அவருடைய 550 கோடி ரூபாய் புது வீடு பற்றியும், மகளின் திருமண செலவு பற்றியுமே இருந்தது. இந்தியாவில் ஏன் முதலீடு செய்து பிஸினஸ் செய்யவில்லை என்பதற்கு மிட்டல் சரியான வழுக்கல் பதில். ஆனால் இந்தியிலேயே சரளமான பதில்கள் ஆச்சரியம். லண்டனிலும், பிற நாடுகளிலும் வசித்துவரும் ஒருவர், ஆக்ஸெண்ட் இல்லாமல் இந்திய இந்தி பேசுவது நன்றாக இருந்தது. அவரின் பல பதில்கள் - அவர் மிகவும் உழைத்து மேன்மை அடைந்ததை சொல்ல விரும்பியது தெரிந்தது. மீடியாதான் பணத்தைப் பற்றியும், உலக அளவு பணக்காரர் பட்டம் பற்றியும் செய்திகள் வெளியிடுகிறது என்றார்.
- அலெக்ஸ் பாண்டியன்

//இதெல்லாம் மறக்கடிக்கும்படியா, இந்தியப் பத்திரிக்கைகள் உலகின் மூன்றாவது பெரும்பணக்காரர் இந்தியர். இந்தியா வல்லரசாக மாறுவதற்கு இது இன்னொரு அடையாளம் என்ற ரீதியில் எழுதிக் கிழிக்கக்கூடும். //
ha ha..:-}}