• ‘வெளி’ இணையதளம்

    by  • February 22, 2005 • இலக்கியம் • 9 Comments

    ‘எங்க ஊரு’க் கவிஞர் திருமாவளவன். இவரது கவிதைத் தொகுப்புகளான ‘பனிவயல் உழவு’, ‘அஃதே இரவு, அஃதே பகல்’ இரண்டும் முக்கியமானவை. (இவரது கவிதைகளைப் பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்துப் பலநாட்களாக ஒத்திப்போட்டு வருகிறேன். சில சமயங்களில் என் சோம்பேறித்தனத்தின் மீது எனக்கே சலிப்பாக இருக்கிறது). டொராண்டோவிலிருந்து வெளிவந்த ‘ழ’கரம் சிற்றிதழின் இணையாசிரியராகவும் இருந்திருக்கிறார்.

    இன்று காலை என்னை அழைத்து vezhi.com பாருங்கள் என்றார். அறிவுப்புகள் ஏதுமில்லாமல், அழகான வடிவமைப்புடன் ‘வெளி’ இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சேரன், செழியன், இளங்கோ, தேவேந்திர பூபதி, றஷ்மி இவர்களின் கவிதைகள், திலகபாமாவின் சிறுகதையும், செழியனின் நாடகத் தொகுப்பின்மீது வெங்கட் சாமிநாதனின் விமர்சனமும் உண்டு. ‘அஃதே இரவு, அஃதே பகல்’ தொகுப்பிலிருக்கும் கடற்கோள் என்ற கவிதையை அண்மையில் நேரிட்ட ட்சூனாமிக்குப் பிறகு படைப்பாளரின் மறுவாசிப்பாக திருமாவளவனின் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.


    வாழ்நாளில் கடற்கோளைப் பார்த்தவன் அல்ல. கடலுக்கு போனவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் எனக்கு தெரிந்த காலத்தில் கடல் எழுந்து ஊருக்குள் வந்தது இல்லை.

    அறுபதாயிரம் உயிர்கள் வரையில் காவு கொண்ட யுத்தத்தின் படிமமாக என் கண் முன் கடலே தோன்றியது. எந்தவித சிரமமும் இல்லாது முற்றிப் பழுத்த இலையன்று மரத்திலிருந்து இறங்குவது போல மிக இயல்பாகவே இறங்கியது இக் கவிதை. செப்டம்பர் 27, 2002 எழுதப்பட்ட கடற்கோள் கவிதை என் அஃதே இரவு அஃதே பகல் கவிதைத் திரட்டில் பதிவாகியிருக்கிறது.

    இதற்குப்பின் இரண்டாண்டுகள் கழித்து இன்று உண்மையிலே பெரும் கடற்கோள் தோன்றியதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை ஒரு நொடியில் காவு கொடுத்ததையும் பார்க்கும் போது மனம் துயரத்தில் விம்முகிறது. இக் கடற்கோளின் வியாபகத்தை அதன் கொடூரத்தை, அழிவை, அலை அள்ளிக் கொண்டு சென்ற எம்மவர் வாழ்வைச் சொல்வதற்கு வேறு படிமம் தோன்றுமா? தெரியவில்லை.

    உண்மைதான் மனிதன் தானாக விதைத்துக் கொண்ட அவலங்களின் ஆசுவாததைக் கட்டிலடங்காத இயற்கையின் சீற்றங்களுடன் ஒப்பிடல் காலம்தோறும் நடந்துவந்திருக்கிறது. மறுபுறத்தில், கண் முன்னே இயற்கை அவலத்தை அள்ளித் தெளிக்கும்பொழுது நாமெல்லாம் வார்த்தைகளின்றி வாயடைத்துத்தான் நிற்கவேண்டியிருக்கிறது.

    தளத்தில் கருணாவின் கடற்கோள் ஓவியமும் இருக்கிறது. தளத்தின் வடிவமைப்பே ஓவியர் கருணாவினுடையதுதான். எளிமையாகவும், நிறைவாகவும் செய்யப்பட்ட வடிவமைப்பு கவர்ச்சியாக இருக்கிறது. திருமா-விடம் பாமினிக்குப் பதிலாக யுனிகோடு எழுத்துருக்களில் மாற்றிவிடுங்களேன் என்று சொன்னேன். கருணாவிடம் கலந்தாலோசிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

    வெளி இணையத்தில் திருமாவளவனின் இன்னும் சில கவிதைகளும் உண்டு. திருமாவளவனுக்குள்ளே இருக்கும் பத்திரிக்கையாசிரியர் மீண்டும் உயிர்பெற்று எழுந்திருக்கிறார். அதிகம் இட்டு நிரப்பாமல் தெரிந்தெடுக்கப்பட்ட மிகச் சில ஆக்கங்களை மாத்திரமே கொண்டு மாதந்தோறும் புதுப்பிக்கவிருப்பதாகச் சொல்கிறார் திருமாவளவன். அந்த வகையில் இன்னும் அதிகம் எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது வெளி.

    9 Responses to ‘வெளி’ இணையதளம்

    1. February 22, 2005 at 1:00 pm

      ஃபயர்ஃபாக்ஸில் 'வெளி' எழுத்துருப்பிரச்னை உள்ளது. என்ன encoding வைக்கவேண்டுமென்று சந்தர்ப்பம் வாய்க்கும்போது கூறமுடியுமா? நன்றி…

    2. February 22, 2005 at 1:14 pm

      [1]

      மேலேயே எழுதியிருப்பதைப்போல இந்தத் தளம் பாமினி எழுத்துருவில் இருக்கிறது. பாமினி இல்லாமல் படிக்க முடியாது. எனவேதான் திருமா-விடம் யுனிகோடில் மாற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.

    3. Ramanitharan Kandiah
      February 22, 2005 at 1:42 pm

      venkat, thanks for the link.
      Hope this will appear here. :last time in your kirAmangkaL post, I posted, but before confirming left :-(

    4. February 22, 2005 at 2:30 pm

      [3]

      ரமணி – பலர் கருத்துக்களை எழுதிவிட்டு நிச்சயம் செய்யாமல் போய்விட்டதாகத் தெரிகிறது. இந்த நிச்சயத் தேவை நானாகச் செய்ததில்லை, தளத்தின் பொதியை இற்றைப்படுத்தியதில் வந்த குழப்பம்.

      இப்பொழுது அதன் தேவையை நீக்கிவிட்டேன்.

    5. February 22, 2005 at 3:54 pm

      [1] [2] அட ராமா: கண்ணிருந்தும் அந்தகமென்பது இதுதானோ!! கவனிக்கவில்லை – மன்னிக்க! நன்றி, எப்படியிருப்பினும்!!

    6. February 24, 2005 at 3:54 pm

      வெங்கட்டிடம் ஒரு கேள்வி புலிநகக்கொன்றை படித்தீர்களா?

    7. February 25, 2005 at 11:17 am

      கறுப்பி – படித்தேன். நிறையபேர் இதைப் பற்றி எழுதிவிட்டதால் எழுதச் சோம்பேறித்தனம் :)

      ஆமாம், நீங்கள் டொராண்டோவில் இருக்கிறீர்களா? அப்படியென்றால் தொலைபேசியில் தொடர்புகொள்ளுங்களேன். (905 847 3704)

      புலிநகக் கொன்றை ஆசிரியர் திரு. கிருஷ்ணன் டொராண்டோ வரவிருக்கிறார்.

    8. February 25, 2005 at 11:23 am

      ஊப்ஸ் என்ன இப்படி வெட்டவெளியில் தங்கள் தொலைபேசி இலக்கத்தைப் போடுகின்றீர்கள். ஆம் நான் டொறொண்டோவில்தான் இருக்கின்றேன். தங்களுக்கு என்னைத் தெரியும். எனக்கும் உங்களைத் தெரியும். எனது தளத்தில் “புலிநகக்கொன்றை”க்கு விமர்சனமும் எழுதியிருக்கின்றேன்.

    9. February 25, 2005 at 9:06 pm

      கறுப்பி – இந்தப் பதிவுக்குள்ளே வந்து இப்படி எல்லா கருத்துக்களையும் குடைந்து தமிழில் படித்து யாராவது ஒருவர் என் தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டால் – அவருக்குத் தராமல் நான் வேறு யாருக்குத் தரப்போகிறேன். :)

      எனக்குத் தெரிந்து டொராண்டோவில் அதிகம் பேர் வலைப்பதிவு எழுதுவதில்லை. எல்லா ஊரிலும் கூடுவதைப் போல இங்கேயும் ஒரு வலைப்பதிவர் கூட்டம் போடலாமே என்றுதான்.

      உங்களை இன்னும் அடையாளம் தெரியவில்லை. :)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *