• வசவுகளின் காலம் – சில விளக்கங்களும் ஆயாசமும்

    by  • March 21, 2005 • பொது • 17 Comments

    என்னுடைய கடந்த வாரத்திய வசவுகளின் காலம் பதிவுக்கு நிறைய எதிர்வினைகள் வந்தன. இவற்றில் பலவற்றுக்கு (சரியாகச் சொன்னால் முதல் 26 கருத்துகளுக்கு நான் பதில்கள் எழுதியிருக்கிறேன்). என்னுடைய கருத்துடன் ஒத்துப் போகும் நண்பர்களுக்கு நான் இப்பொழுதைக்கு நன்றியைத் தவிர வேறெதையும் சொல்லத் தேவையில்லை எனக் கருதுகிறேன்; நன்றிகள். இனி தொடர்ந்து மற்ற நண்பர்களுக்குப் பதில்கள் எழுதுகிறேன். விட்ட இடத்திலிருந்து…

    ரோசா வஸந்த் [26]

    இதுவும் ஒரு ஜாதிய வசைதானே என்று சொல்லும் அறிவு கொழுந்துகள் நிறய இருக்கிறது. ஹிட்லர்தனமாய் ஒருவர் பேசுவதை ‘நாஜிபுத்தி’ என்று யாராவது சொல்வதும் இனவெறிதானே என்றும் சொல்லலாம். இப்படிபட்ட வாதங்களை எத்தனை முறை கேட்டாகிவிட்டது. இதையும் பாப்பார லாஜிக் என்று சொல்வதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. வெங்கட்டும் அப்படி சொல்லகூடுமாவென அவர்தான் சொல்லவேண்டும்.

    நாஜி என்று விளிப்பதற்கும் பார்ப்பான் என்று விளிப்பதற்கும் இடையில் இருக்கும் அடிப்படை வேற்றுமையை நீங்கள் சாதுரியமாக மறைத்து இப்படிச் சொல்கிறீர்கள். நாஜி என்பது இன்றைக்குக் கடந்த காலம். இது யாரையும் சுடுவதில்லை (நாஜிக்கள் உட்பட). பார்ப்பான் என்பது பிறப்பினால், விரும்பாவிட்டாலும் அரசாங்கம் சான்றிதழில் அச்சடித்துத் தரும் நிகழ்காலம் (தனிமனிதனுக்கு). நாஜிப்புத்தி என்று சொல்வது சுயதெரிவினால் ஒரு கருத்தைக் கையிலெடுப்பவனை இழியும் வழக்கு. ஆனால் துரதிருஷ்டவசமாக பார்ப்பாரப்புத்தி நிகழ்காலத்தில் தனி மனிதனைக் குறிவைத்து நோகச் செய்யும் வசவு. சொல்லப்போனால் இதன் நோக்கமே குறிவைத்து ஒருவனை நோகச் செய்வதுதான். இதையும் நீங்கள் பாப்பார லாஜிக் என்று சொல்வீர்களா என்று தெரிந்துகொள்ள ஆசை.

    வசதியாக இன்னும் சிலர் இங்கே கருப்பர்களை வேறு துணைக்கழைத்தார்கள். அமெரிக்காவில் கருப்பர்களைப் பற்றிப் பேசும்பொழுதும். சிறுபான்மை கருப்பர்களுக்கு எதிரிகளாகக் காட்டப்படுவர்கள் பெரும்பான்மை வெள்ளையர். எனவே, இது தனிப்பட்டு எந்த வெள்ளையனையும் பாதிப்பதில்லை. மாறாக சிறுபான்மை தலித்துக்கு எதிரிகளாகச் சுட்டப்படும் சிறுபான்மை பார்ப்பனர்களின் நிலை வேறு. இன்னொன்று, கருப்பர்களைப் பற்றிய தனித்தனி விஷயங்களில் இங்கே ஒருவர் மாற்று கருத்து கொண்டிருக்க முடியும். தைரியமாக முன்வைக்க முடியும். ஆனால் பொதுவில் அவர்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டவன்கூட தலித்துகளினொரு நிலைப்பாட்டை விமர்சிக்க எத்தனித்தால் உடனடியாக பாப்பார முத்திரை குத்தப்பட்டு அவன் பேச்சு மேலெழாமல் அடிக்கப்படும். (தலித்தும் பார்ப்பனர்களும் இல்லாத பெரும்பான்மையோரின் வசதியை நினைத்துப்பார்த்தீர்களா? இந்த வசதியை இழக்காமல் இருப்பதற்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்).

    [strong]இதன் வெளிப்பாடுதான் நான் உருப்படியாக ஏதாவது யோசிக்கலாமா என்று சொன்னவுடனேயே எனக்கு விழுந்த தர்ம அடிகள்.[strong]

    இன்னொன்று கவனித்தீர்களா, நான் என்னுடைய கருத்தை எடுத்துச் சொல்லவேண்டுமானால், நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு என் நிலையை உங்களுக்குப் பொறுமையாகச் சொல்லியாக வேண்டும். உங்களுக்கு இது எளிது; உங்களால் தர்க்கிக்க முடியாத எல்லாவற்றையும் பாப்பார லாஜிக் என்று இழிந்துவிட்டுப் போய்விடலாம். :)

    கடைசியாய் ‘இது ரொம்ப தேவையான பதிவு’ சூழலின் ஆரோக்கியம், என்றெல்லாம் மக்கள் ஜல்லியடிக்க தொடங்கியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஜாலியாய் எடுத்து கொள்வதோடு, சூழலில் வெளிப்படும் சொரணைத்தன்மைக்கான சான்றிதழாய் இதை கருதலாம்.

    ரோ.வ. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? என்னுடைய கருத்துடன் ஒத்துப் போவதாகப் பிறர் எழுதுவது ஜல்லியடிப்பதாக உங்களுக்குத் தெரிகிறதா? தயவு செய்து நண்பர்களை இழிவுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதில் ஜல்லியடிக்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் உங்கள் பதிவில் யாரையாவது செருப்பால் அடிக்கலாம் என்று சொல்லும்பொழுது வெறும் ஒற்றை வரியில் “இல்லை அந்தச் செருப்பில் மலத்தைத் தோய்க்க வேண்டும்” என்று உங்களுடன் ஒத்துப் போனால் அதுவும் ஜல்லியடியா? இப்படி உங்கள் பதிவில் யாராவது எழுதும் பொழுது இதே போல் “எனக்கு ஜல்லியடிக்காதே” என்று எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?

    இதைத்தான் நீங்கள் என்னுடன் இல்லையென்றால், என் எதிரியாவாய் என்று சொல்லும் போக்கு என்றேன்.

    [36] > பொடிச்சியை நோக்கி இப்படி சொல்லும் வெங்கட், என்னை பற்றி பெயர் குறிப்பிடாமல், என் பதிவில் பின்னூட்டமிடுவதற்கு பதில், என் கருத்தை நேரடியாய் எதிர்கொள்ளாமல் மிகவும் நேர்மையற்றமுறையில் (அதாவது பொடிச்சிக்கு இவர் சொல்லும் நியாயத்தை தனக்கு பொருத்தி பார்காமல்) இப்படி சொல்லுகிறார்.

    அவசரப்பட்டு என்னுடைய நியாயத்தை நானே பின்பற்றவில்லை என்று சொல்லிவிட்டீர்களே? நான் சொன்னது பொடிச்சிக்கு நான் கருத்தெழுதிய இடத்திலோ அல்லது அவருடைய பதிவில் இப்படி எழுதியிருக்கலாம் என்று. பல நேரங்களில் நாம் எல்லோருமே இப்படிச் செய்கிறோம். குறிப்பாக நீளமான பின்னூட்டத்தை இடமுடியவில்லை என்றால் நாம் இணைப்பைக் கொடுத்து நம் பதிவில் இடுவது வழக்கமாகத்தானே இருக்கிறது. நீங்கள் கூட இப்பொழுது மற்றவர்கள் பதிவில் எழுதும் கருத்துக்களை உங்கள் தளத்தில் சேர்க்கத் துவங்கியிருக்கிறீர்கள் இல்லையா? இன்னொருவர் பதிவில் இருப்பதற்கு நான் பொறுப்பல்ல, எனவே என் பதிவில் சேர்க்கிறேன் என்பதுதானே இதன் அர்த்தம். இதையேதான் நானும் செய்தேன்.

    மேலும் நான் If you are not with us; you are against us என்று எழுதியது உங்களை முன்வைத்து எழுதியிருதாலும் அது உங்களுக்கு மாத்திரமானதில்லை என்று தெரியும்படியாகத்தான் எழுதியிருக்கிறேன். வசவுகளின் காலம் என்று நான் தலைப்பிட்டு எழுதியதே பொதுவில் கடந்த வாரத்தின் போக்கைக் குறிப்பிட்டுத்தான். எனவே உங்களை முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லாமலிருந்தது.

    இன்னொரு விஷயம் பொதுவில்; நான் தமிழக அரசியல் பற்றி அதிகம் எழுதுவதில்லை. (பொதுவில் சமூகத்தைப் பற்றித்தான் எழுதுகிறேன். அரசியலைப் பற்றி எழுதுவதில்லை). இதற்கு முக்கிய காரணம், நான் தமிழகத்தைவிட்டு நீங்கி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகப் போகின்றன. எப்படி நாராயணனிடம் இந்தியாவின் வணிக வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள இந்தியாவில் இருக்கத் தேவையில்லை என்று நான் சொன்னேனோ அதற்கு நேர் எதிர்மாறாக அரசியலைப் பேச அண்மை அவசியம் என்று நினைக்கிறேன் (மக்களுடன் உரசாமல் அரசியல் பேசுவது இயலாதது). இதன் தேவை புவியியல் ரீதியில் பரப்பு குறைய குறைய இன்னும் அதிகரிக்கிறது. நான் வசித்தேயிராத அமெரிக்கத் தேர்தலைப் பற்றிப் பேசுவது எளிது, ஆனால் கும்பகோணத்தில் நான் வசித்த வார்டு 2க்குத் தேர்தல் நடந்தால் இப்பொழுது என்னால் அபத்தக் கருத்தைத்தான் உச்சரிக்க முடியும். மேலதிகமாக, ராமதாஸ், திருமா ஆகியவர்களின் நடவடிக்கைகள் நான் இந்தியாவைவிட்டு நீங்கியபின்தான் அதிகரித்திருக்கின்றது. எனவே, பரிச்சயமில்லாத விஷயங்களில் நான் அதிகம் தலையிடுவதில்லை.

    சுந்தமூர்த்தி

    [37]> ஒன்றும் செய்யமுடியாது. இப்படி பேசிக்கொண்டுதான் இருக்கமுடியும். ஊரிலிருந்து நம்மோடு கொண்டுவந்த அரிசி, பருப்பு, மசாலா, சேலை, சுடிதார், இலக்கியம் மாதிரி ஜாதியையும் கொண்டு வந்திருக்கிறோம். அதனால் இட்லி, சாம்பார், இலக்கியத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதைப் போல ஜாதியைப் (சில நேரம் கலாச்சாரம் என்ற போர்வை போர்த்தி) பற்றியும் பேசிக்கொண்டிருப்போம்.

    சுந்தரமூர்த்தி, நீங்களா இப்படிச் சொல்வது! அமெரிக்காவில் யூதர்களைக் கவனித்திருக்கிறீர்களா? செழிப்பின் அரவணைப்பில் இருந்தாலும் அவர்கள் ஊரில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் இங்கே அதிர்வை உண்டாக்கும். வாரந்தோறும் ஊரில் இருப்பவர்களுக்கு என்ன செய்வது என்று பேசுவார்கள். இது வெற்றுப் பேச்சாகவே இருந்தாலும் சுடிதாரையும் சாம்பாரையும் போலத்தான் இதுவும் என்று எப்படிச் சொல்ல முடிகிறது உங்களால்? அப்படியென்றால் புலம்பெயர்ந்த நாமெல்லாம் என்னதான் செய்யலாம் என்று சொல்கிறீர்கள்?

    மதுரைத் திட்டம், தமிழ் லினக்ஸ், தகுதரம், தமிழ் எழுத்துருக்கள், மென்கலன், இப்படிப் பல விஷயங்கள் முழுவதும் ஊர்விட்டு வந்தவர்களாலேயே துவக்கப்பட்டவை. வின்னிப்பெக் குளிரில் உட்கார்ந்துகொண்டு தமிழ் லினக்ஸ்க்கு உழைக்கும் என் நண்பர் வசீகரனுக்கோ, அமெரிக்காவில் இருக்கும் தினேஷ் நடராஜாவுக்கோ பைசா பிரயோசனம் கிடையாது. சொல்லப்போனால் பல நேரங்களில் தமிழ் லினக்ஸ் எல்லாம் இங்கே உட்கார்ந்து கொண்டு உனக்கு எதற்கு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுகூட நாம் செய்யாவிட்டால் பின் என்னதான் செய்ய முடியும். இங்கே டொராண்டோவில் ஈழ நண்பர்கள் வருடாவருடம் தொழில்நுட்பக் கண்காட்சி போடுவார்கள். அதில் அவர்கள் ஈழத்தில் பள்ளிக் கல்வி, ஆதார மருத்துவம் இதெல்லாம் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். முடிந்தால் என்னாலான கருத்துக்களையும் சொல்லியிருக்கிறேன். என் பேச்சால் என்ன நடந்துவிடக்கூடும் என்று அவர்கள் கருதியாகத் தெரியவில்லை.

    நீங்களே கூட இதே தினத்தில் பத்ரியின் பதிவில் உலக வங்கியின் தலைவராக அமெரிக்கா சொன்ன தெரிவைப் பற்றி ஆதாரங்ளெல்லாம் எழுதினீர்களே? நாம் பேசி என்ன புஷ் கேட்டுவிடவாப் போகிறார்? :)

    நாம் கூட இதுமாதிரி நேர்மையாக முயற்சிக்காவிட்டால் மொத்த சமூகத்தையும் சொல்லி என்ன புண்ணியம்?

    தங்கமணி

    என்னுடைய கருத்துக்களை நீங்கள் தனிமனித அக்கறையாகக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான், இது தனிமனித அக்கறைதான். குறைந்தபட்சம் நீங்களாவது எனக்கு தனிமனித அக்கறைக்கான உரிமையை வழங்குகிறீர்கள். பொதுவில் நான் கேட்கும் வாசங்கள், தலித்தின் முன்னேற்றமா, பாப்பாரப்பயலே, நீ யாருடா பேச ரீதியில்தான்.

    நான் வேண்டியதெல்லாம் இதில் அடியோடும் நேர்மையைப் பார்க்கச் சொல்லித்தான். இயன்றவரை நான் என் அடையாளங்களிலிருந்து விடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அடையாளத்தைத் தொலைக்கும் முயற்சியில் சுற்றங்களை இழந்திருக்கிறீர்களா? காதல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஒரு தனிப்பட்ட ஆதாயம் இருப்பதால் சுகமாக சுற்றங்களைத் தொலைக்கிறார்கள். இப்படி இட ஒதுக்கீடு நல்லதுதான். உனக்கு வேலை கிடைக்காமல் போனது நாட்டுக்கு நல்லது ரீதியில் அத்தை மகனிடம் பேசியிருக்கிறீர்களா?

    என் கவலையெல்லாம் என் இரண்டு மகன்களையும் பற்றித்தான். அவர்களுக்கு முற்றாக அடையாளங்களே இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இழப்பதற்கு என்று ஊர், சொத்து என்றெல்லாம் ஒருக்காலத்திலும் பெரிதாக ஒன்றுமிருந்ததில்லை. புலம் பெயர்ந்த இடத்தில் சுற்றத்தின் அண்மையை இழந்தோம். அடையாளங்களைத் தொலைக்கும் முயற்சியில் அவர்களின் தொடர்பை முற்றாக இழக்க வேண்டியிருக்கிறது. விரும்பி அடையாளத்தைத் தொலைப்பது ஒரு இனிமையான விஷயம், ஆனால் அடையாளங்களின்றி வளர்வது கொடுமையானது.

    * * *

    இனி, பொதுவாக. ஆயாசம் தரும் விஷயங்களில் முக்கியமானது கடுமையான தீர்ப்புகள். கறுப்பியின் மரணதண்டனை பற்றி ஏற்கனவே வருந்தியாகிவிட்டது. ஈழத்தவர்கள் பதிவுகளில் கருத்து எழுதுவதில்லை, திருமாவைத் திட்டினால் கோபிப்பதில்லை என்றெல்லாம் சொல்லுமுன் பொதுவில் நான் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எவ்வளவு தூரம் ஈடுபடுகிறேன் என்று அறியாமல் எல்லாரும் இந்தாளைத் திட்றாங்களே நாமும்…, அல்லது இவனைக் குறை சொல்வதற்கு இருக்கும் பத்து விஷயங்களில் பதினொன்றாக இதையும் சேர்த்துக் கொள்ளலாமே என்பதும் சோர்வடைய வைக்கிறது. என் அறியாமையை அக்கறையின்மையாகவும் அலட்சியாமாகவும் குற்றம் சாட்டுவதற்குமுன் கொஞ்சம் யோசியுங்கள்.

    எழுதியவற்றுக்கு விளக்கங்கள் சொல்வதைத் தவிர எழுதாதவற்றுக்கும் ஏன் எழுதவில்லை என்று வியாக்கியனங்கள் எழுதும் துர்பாக்கிய நிலையில் ஒரு கனம் உங்களைப் பொருத்திப் பாருங்கள்.

    * * *

    இன்னும் பலர் சொல்வதைப் போல இதையெல்லாம் எழுதாமல் விலகியோடும் எண்ணம் எனக்கில்லை. சாதியம் நம் கையில் தைத்திருக்கும் முள். இதை அடையாளம் கண்டு, நோயாளிகளாக நம்மைச் சுய அங்கீகராம் செய்துகொண்டு சிகிச்சை தேடுவது அவசியம். விட்டு விலகியோடினால், புரையோடிப்போய் நாம் கையை இழக்க நேரிடும்.

    உருப்படியாக ஏதாவது சிந்திக்கலாம் என்று சொன்னேன். அதற்காக ஒன்றிரண்டு அடிகளும் எடுத்துக் கொடுத்தேன். பாதிக்கப்பட்டவர்களாகத் தம்மை அடையாளம் காணும் நண்பர்களிடமிருந்து துவங்கலாம் என்று சொன்னேன். அதைப்பற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. ஜல்லியடிப்பது எளிது, உருப்படியாக என்று சொன்னால் உதைதான் கிடைக்கிறது.

    இருந்தாலும், இன்னும் கொஞ்சம் துல்லியமாக முதல்கட்டமாக என்ன செய்யலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க முயற்சிக்கிறேன். தங்கமணியின் கருத்திலிருந்து இது வருகிறது. இரண்டாயிரம் ஆண்டு சாதி ஒழிந்துவிட்டதாக அவர் நண்பி சொன்னதாகச் சொன்னார். இதை நகர்ப்புறத்தில் வளர்ந்தவரின் அறியாமை என்றும் சொன்னார். இதைப் போக்க, காய்தல் உவத்தலின்றி இந்த வரலாற்றை விளக்கும் புத்தககங்களின் பட்டியல் ஒன்றை யாராவது தருவார்களா?

    வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், ஊரிலிருக்கும் என் பெரியப்பா பையன் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காமல் இட ஒதுக்கீட்டை நொந்து கொண்டால் அவனுக்கு இதன் அவசியத்தை விளக்க எவற்றைப் படிக்கச் சொல்லாலாம்?

    17 Responses to வசவுகளின் காலம் – சில விளக்கங்களும் ஆயாசமும்

    1. March 21, 2005 at 8:44 pm

      //வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், ஊரிலிருக்கும் என் பெரியப்பா பையன் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காமல் இட ஒதுக்கீட்டை நொந்து கொண்டால் அவனுக்கு இதன் அவசியத்தை விளக்க எவற்றைப் படிக்கச் சொல்லாலாம்? //

      நன்றிகள் வெங்கட்.
      நமது கல்வியமைப்பு முறை தன்னை, தன்னை மட்டுமே எதையும் பயன்படுத்தி ஒருவனை முன்னேற தூண்டுவதாக இருக்கிறது. இது ஒரு நாட்டின் மக்கள், அவர்கள் பேசும் மொழி, அவர்களது மருத்துவ முறை, விவசாயமுறை, வளங்கள், பாரம்பரிய செல்வங்கள் இவை பற்றிய எந்த அறிவையும் அந்நாட்டில் பயிலும் மாணவன் ஒருவனுக்கு வழங்காததைப்போலவே அந்நாட்டின் இருண்டகாலங்கள், அதன் சமூக வாழ்வில் இருந்த, இருக்கிற கொடுங்கோண்மைகள், அநீதிகள், அது மதத்தின் பெயராலும், சமூகத்தின் பெயராலும் இழைத்திருக்கிற அநீதிகள் பற்றிய அறிவையும், புரிதல் எதையும் வழங்கவில்லை. அதனால்தான் ஒரேயடியாக இந்தியாவை (தமிழ்நாட்டை) பொன்னுலகமாக, பண்பாட்டு களஞ்சியமாக, உலகின் துருவநட்சத்திரமாக (அதன் பழமையை முன்வைத்து) நம்புவர்களும், அதை ஒரு பெரும்பாண்மை மக்களின் மேல் 2000 ஆண்டுகாலமாக கவிழ்ந்திருந்த சாபமாக, சூழ்ச்சியாக, பொய்மைகளின் கூடாரமாக, அறியாமையின், மூடநம்பிக்கைகளின் இருப்பிடமாக நம்புவர்களும் இரு அணியாகத் திரளுகிறார்கள். (வலைப்பதிவிகளிலேயே இதைக்காணமுடியும்). நமது கல்வி அமைப்பு முறை பள்ளிப்பருவத்திலிருந்தே இவைகளைப்பற்றி சரியாகப்பேசுமேயானால் இதைப்பற்றிய புரிதல் மிக இயல்பாகவே மாணவர்களிடமும் (என் ஆய்வக மாணவியிடமும், உங்கள் பெரியப்பா பையனிடமும்) நடக்கும். அது போன்ற கல்வியை, நம்மைத் திறந்தமுறையில் விமர்சிக்கும், பாராட்டும் கல்வியை, இணைந்து அதில் ஒவ்வொருவரின் பங்களிப்பை கோருகிற, கடமையாக்குகிற கல்வியை உண்டாக்க முனைதல் தான் இதற்கான ஒரே வழியாகத் தெரிகிறது.

    2. March 21, 2005 at 8:48 pm

      இராஜாராம் மோகன்ராய் சதியை ஒழிக்கப்பாடுபட்டார் என்ற பாடப்புத்தக வரிக்கு மேல், சதி என்ற கொடுமைக்குப்பின் உள்ள சமய நம்பிக்கைகளை, அதைத் தூக்கிப்பிடித்தவர்களை, அதை ஏற்படுத்தியதற்கான சமூக, பொருளாதார, ஆணாதிக்க மனப்பாண்மைச் சூழல்களை விரிவாக ஆராய்வதில்லை. எனவே சதி என்பது ஒரு வரலாறு பாடத்தில் ஒரு கேள்வியாக மட்டும் படிக்கப்படுகிறதே ஒழிய, பெண்ணடிமைத்தனத்தின் (ஆணாதிக்கக் கூறின்) சமய மூடத்தனத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுவதில்லை; அதனால்தான் இன்றும் 12 நிமிடங்களுக்கு ஒரு பெண் (இந்தியாவில்) வரதட்சணைக்கொடுமைக்காக கொல்லப்படுகிறாள்; 54 நிமிடங்களுக்கு ஒரு பெண் வல்லுறவுக்காளாக்கப்படுகிறாள்.

    3. March 21, 2005 at 8:51 pm

      தீண்டாமை, பாவம், குற்றம், மனிதத் தன்மையற்ற செயல் என்று பாடப்புத்த்கங்கள், சாதியொழிப்புக்காக பாடுபட்ட தலைவர்களை படங்களோடு சொல்லும் பாடப்புத்த்கங்கள், சாதி என்றால் என்ன, அவை எப்படி உருவாக்கப்பட்டன, அவை அடியில் இருக்கும் மதப்பிண்ணனி என்ன? அவற்றால் யார் இலாபமடைந்தது, அதை யார் ஆதரித்தது, அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டது, பயிலப்பட்டது, அதன் கொடுமைகள் என்ன? தாழ்ந்த சாதிக்காரன் ஒரு துடைப்பத்தை தன் இடுப்போடு கட்டி தான் செல்லும் வழியை தானே துப்புரவாக்கிச் செல்லும் கொடுமையை, மேல்சீலைப் போராட்டத்தை இப்படி எல்லாவற்றையும் பேசவேண்டும். அதை மாற்ற வரலாறு எப்படி அணுகிற்று, அதில் தற்போதைய சமூகத்தின் பங்கு இவற்றைப் பற்றிப் பேசவேண்டும். அப்போது எந்தப்புத்தகத்தையும் கொடுத்துப்படிக்க வைக்க வேண்டாம். அதற்கெல்லாம் முன்பு, இந்த சமூகம், அரசு தன்னை இந்த முற்றாக இந்த பழைய இருண்ட பக்கங்களில் இருந்து துண்டித்துக்கொள்ளவேண்டும். சாதியைப்பற்றி பேசுதல் இழிவல்ல, இன்னும் சாதியைப்பற்றி பேசும்போது தன்னை ஒரு சாதியோடு அடையாளம் கண்டு கொதிப்பது இழிவல்லவா? அப்படி சமூகம் இன்னும் தன்னை இதிலிருந்து விடுவித்துக்கொள்ளாமல் இருப்பதன் சாட்சியம்தான் இன்னும் மறுக்கப்படும் அனைவருக்கும் அர்ச்சகராகும் உரிமை, பெண்களுக்கு அரசியல் உரிமைகள் ஆகியனவாகும்.

      எனவே அரசு (அது சாத்தியமல்ல), ஒரு சமூகத்தின் சான்றோர்கள் இப்படி நமது வரலாற்றை திறந்த மனதோடும், தொடரும் பாசமின்றியும் விரிவாக, முழுமையாக அணுகத் தலைப்படும் விதத்தில் அமைந்த கல்வியே இதற்கான வழியாக இருக்கமுடியுமென நான் நினைக்கிறேன்.

    4. ரோஸாவசந்த்
      March 21, 2005 at 8:55 pm

      நன்றி, எனது விளக்கத்தையும், ஆயாசத்தை ஒரு வார காலத்தில் எனது பதிவாய் தருகிறேன்.

    5. March 21, 2005 at 9:00 pm

      //ஊரிலிருக்கும் என் பெரியப்பா பையன் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காமல் இட ஒதுக்கீட்டை நொந்து கொண்டால் அவனுக்கு இதன் அவசியத்தை விளக்க எவற்றைப் படிக்கச் சொல்லாலாம்?//
      இடம் கிடைக்காமல் வேதனைப்படும் பையன், இடம் கிடைக்காததற்குக் காரணமானவர்கள் என்று அவன் நினைப்பவர்கள் – இருவரும், பக்குவம் பெற்றபிறகு ஒரு புத்தகத்தை மேலோட்டமாகப் புரட்டிப் பார்க்கலாமா என்று என்னளவில் சிபாரிசு செய்யச்சொன்னால், ஜே.எம்.குட்ஸியின் Disgrace படிக்கச்சொல்வேன். உள்ளூரில் தமிழில் புத்தகங்களே உனக்குத் தெரியாதா என்றால்: தெரியும். அதைத்தான் நாம் இத்தனை பேரும் அவரவருக்கு முடிந்தளவு படித்து, இவ்வளவு விவாதங்கள் பண்ணிக்கொண்டிருக்கிறோமே, முடிவுக்கு வந்தோமா? மேற்கொண்டு, Disgraceஐ, ஒரு அய்யரோ, அய்யங்காரோ தலித்தோ, யார் வேண்டுமானாலும் எழுதியிருக்க முடியும். எழுதிய ஆளைப் பொருத்தி அர்த்தம்புகட்டின் அவ்வளவு உக்கிரமாக வேறுபடும் சாத்தியமுள்ள புத்தகம் அது. எழுதிய குட்ஸீ தென்னாப்பிரிக்க வெள்ளைக்காரர் என்பதால், அது வெள்ளை ஆதிக்கவாதியின் பார்வையில் எழுதப்பட்டது, அதே ஆதிக்க வெள்ளையினம்தான் அவருக்கு நோபல் பரிசு கொடுத்ததென்று என்று யாரேனும் சொன்னால், என்னளவில், அதைவிடக் கேவலமான மட்டையடி இல்லை என்றே சொல்வேன். அப் புத்தகத்தைப்பற்றி சந்தர்ப்பம் வாய்க்கையில் ஒரு பதிவு இடுகிறேன். இதுகுறித்த விவாதத்தில் இவ்வளவு துடியாகப் பங்குகொள்ளும் அனைவரும், ஒரு மாறுதலுக்கெனில், குட்ஸீயின் Waiting for the barbariansஐயும் படித்துப் பார்க்கலாமே, மேற்சொன்ன புத்தகத்துடன். குறைந்தபட்சம் பல்கலைக்கழகங்களில் இருப்பவர்களாவது.

    6. March 22, 2005 at 12:22 am

      வெங்கட்:
      நான் எழுதியது மதியின் பரிந்துரையை வைத்து. மதி ஜாதிச்சண்டையைப் பற்றிய தன் தொடர்பின்னூட்டங்களை இவ்வாறு முடித்திருந்தார்: "மாறி மாறி அடித்துக்கொள்ளாமல் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்"

      அறிவியல், தொழில் நுட்பத் துறையில் தமிழர்களுக்கு பயன்படும்படி என்ன செய்யலாம் என்பதாக இதைப் புரிந்துகொள்ளவில்லை. 'ஒன்றும் செய்யமுடியாது' என்று நான் சொன்னது உங்களுக்கு அப்படி புரிந்திருக்கிறது. ஜாதியை ஒழிக்க நாம் என்ன செய்யலாம் என்று புரிந்துகொண்டு எழுதப்பட்டது என் பதில். இதைப் பற்றி நடைமுறையில் பார்த்தவை, கேட்டவைச் சார்ந்து தீர்மானமான கருத்துக்கள் இருந்தாலும் அவற்றை விரிவாக எழுத அவகாசமோ, ஆர்வமோ இல்லை.

      கி. ராஜநாராயணன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார், "அந்த காலத்தில் புதிதாக ஒருவரைப் சந்தித்தால் 'என்ன வர்ணம்' என்று கேட்பார்கள். இப்போது வெளிப்படையாக கேட்பதில்லை. இருந்தாலும் உள்ளுக்குள்ளே 'என்ன வர்ணமாக இருப்பார்' என்று யோசிப்பார்கள்" என்று.

      ஒரு நூற்றாண்டில் ஜாதி ஒழிப்பு இந்த அளவுதான் நடந்திருக்கிறது. என் அனுபவத்தில் பலர் 'என்ன வர்ணமாக இருப்பார்' என்று யோசிக்ககூட விடுவதில்லை. கேட்காமலேயே நேரடியாக சொல்லிவிடுகிறார்கள். இதை உயர்ஜாதியினரிடம் சர்வசாதாரணமாகப் பார்க்கிறேன். வலைப்பதிவுகளில் கூட பலருக்கு தங்கள் ஜாதி அடையாளங்களை சொல்லவேண்டிய அவசியம் இல்லாதபோதும் ஏதாவது ஒன்றை சாக்காக வைத்து ஜாதியைப் பிரகடனம் செய்வதன் காரணம் என்ன என்று புரிவதே இல்லை, தன் ஜாதியைப் பற்றிச் சொல்ல கூச்சம் இல்லை என்பதான உயர்ஜாதி மனோபாவத்தைத் தவிர. இந்த லட்சணத்தில் அரசாங்கம் தான் ஜாதி முத்திரை குத்துகிறது என்று சிலர் வாதம் செய்வது வியப்பாய் இருக்கிறது. அதனால் தான் சொன்னேன் இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று.

      தொடரும்…

    7. March 22, 2005 at 12:23 am

      தொடர்ச்சி…

      அனாதை மிகச்சரியாக சொல்லியிருந்தார்:
      "ஒரு பார்ப்பான் தான் பார்ப்பான் இல்ல எனத் தெளிந்து கொள்ள *தனிப்பட்ட* யோசனை போதுமே. கோயில் சார்ந்த சமுதாயங்களுக்கு வெளியே வந்த பின்னும் ஒரு பார்ப்பன சமூகத்தில் பிறந்தவனுக்கு தான் "பார்ப்பான்" இல்லை எனத் தெளிந்து கொள்ளுவதற்கு ஒரு மயிரை இழப்பதைவிட அதிகமாக இழப்பு ஒன்றுமில்லையே. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் இருந்தாலும் ஆயிரம் பொன் என்பது போலத் தான் பார்ப்பான் இல்லை என "முற்போக்குத் தனமாக" தெளிந்தாலும் தெளியாவிட்டாலும் இரட்டை லாபம் தானே. ஆனால் "தலித்" என்பது அப்படிப்பட்ட சுலபமான ஒன்றா? தலித்தாக பிறந்த ஒருவர் தான் "தலித்" இல்லை என "தனிப்பட்ட" அளவில் யோசித்தாலும் இழப்பு, தான் தலித் தான் என யோசித்தாலும் தனிப்பட்ட அளவில் வலி. ஏற்றுக் கொண்டாலும் வலி ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் வலி".

      அவர் சொன்னது எந்த உயர்சாதியினருக்கும் பொருந்தும். உண்மையிலேயே உயர்ஜாதியினர் ஜாதி அடையாளத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதென்பது (தனிப்பட்ட வாழ்க்கையில் கூட தேவையில்லை, பொது வாழ்க்கையிலாவது) 'நான் இன்ன ஜாதியினன். இப்போது அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன்' என்று பிரகடனம் செய்யாமலிருக்கும்போதே.

    8. yetanothervenkat
      March 22, 2005 at 3:34 am

      //வலைப்பதிவுகளில் கூட பலருக்கு தங்கள் ஜாதி அடையாளங்களை சொல்லவேண்டிய அவசியம் இல்லாதபோதும் ஏதாவது ஒன்றை சாக்காக வைத்து ஜாதியைப் பிரகடனம் செய்வதன் காரணம் என்ன என்று புரிவதே இல்லை//
      I too have often wondered about this. Is it that we as a people have too many caste markers that are too inextricably mixed with who we are that it is simply impossible to talk about anything at all without unwittingly revealing one’s caste? Or is it that there is an intrinsic benefit in revealing it? Despite the backlash, upper caste individuals, who otherwise seem intelligent, fair, reasonable and extremely articulate, continue to do it makes me believe that the latter must be true. Although I have a half-baked theory as to why that is so, I am not going to risk submitting it here for, well… it is half-baked. But I am interested to hear from others about this.

    9. March 22, 2005 at 10:01 am

      [3] தங்கமணி – நன்றிகள். அரசுசார் கல்வியமைப்பின் மீதான நம்பிக்கை வெகுவாகக் குறைந்துவருகிறது. வேலைவாய்ப்பு ஒன்றே கல்வியின் நோக்கம் என்றிருக்கும் பொருளாதார நிலையில் இந்தக் கல்வியமைப்பினால் பெரிதாக எதையும் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.

      மறுபுறத்தில் முறைசாராத கல்விகளின் பங்கு வலுத்து வருகிறது. என்னையே எடுத்துக் கொண்டால் சிறு வயதில் பாடப்புத்தகத்தினால் எந்தவிதமான அறிவியல் ஆர்வமும் எழுந்ததாகத் தெரியவில்லை. மறுபுறத்தில் வானொலி அண்ணா (இல்லை இது வானொலி மாமாவா?) போன்றவர்களின் புத்தகங்களைப் படித்துவிட்டு கலைடாஸ்கோப்புக்குக் கண்ணாடி வெட்டி கையைக் கிழிந்த்துக் கொண்டிருக்கிறேன். எனவேதான், அமைப்பு முறைகளைத் தாண்டி அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு (என் பெரியப்பா பையன் என்பது ஒரு குறியீடுதான், எனக்குப் பெரியாப்பா கிடையாது) நாம் வெளியிலிருந்து என்ன சொல்லித்தரலாம்/பரிந்துரைக்கலாம் என்பது பற்றித்தான் என் கேள்வி.

      இந்தியக் கல்வியமைப்பின் மீது என் நம்பிக்கையை வெகுவாகக் குறைத்த புண்ணியம் முரளி மனோஹர் ஜோஷி என்ற பரமாத்மாவுக்கு உண்டு.

    10. March 22, 2005 at 10:09 am

      [5] மாண்டீ – பரிந்துரைகளுக்கு நன்றி. கொவெட்ஸி என்னுடைய படிக்க வேண்டிய பட்டியலில் இருக்கிறார். ஹோஸே ஸரமாகோ, கொவெட்ஸி என்று படிக்க வேண்டிய பட்டியலை நினைத்தால் கவலையாக இருக்கிறது. இந்த விவாதம் அதைத் துரிதப்படுத்தியிருக்கிறது. அவசியம் படித்துவிட்டு வருகிறேன்.

      நான் கேட்டிருந்தது நம்மூர் சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, உச்சம், எச்சம், இவற்றைப் பற்றிய நிலைசாரா வரலாறு, எளிமையான மொழியில் எழுதப்பட்டது எதாவது இருக்கிறதா என்று. தமிழில் இல்லை என்றாலும் பரவாயில்லை, இந்திய தீண்டாமை வரலாறு பற்றிய நூல்கள்.

    11. March 22, 2005 at 10:16 am

      வெங்கட் என்னுடைய பின்னூட்டம் தங்களுக்கு வருத்தத்தைத் தந்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். நான் தனிமனிதனைத் தாக்கவில்லை. மொத்தமாய் சாதித் திமிரால் வெறிபிடித்தலையும் மக்களைத்தான் குறிப்பிட்;டிருந்தேன்.
      தங்கள் வசவுகளின் காலம் பதிவின் பின்னூட்டத்தில் நான் ஒன்றை அவதானித்தேன். பின்னூட்டம் தந்த எவரும் தம் சாதி பற்றிய சிறிய ஊகம்; கூட வாசகர்களுக்கு விட்டுச் செல்லவில்லை. தங்களை அவர்கள் அடையாளப்படுத்தவில்லை. அதுதான் நாகரீகம் என்பது என் கருத்து. இங்கே அடையாளப்படுத்தல் அவசியமற்றது. மனிதர்களாக மனித உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டுமே தவிர எங்களை எமது சாதியை மதத்தை அடையாளப்படுத்துதல் அவசியமற்றது. தளத்தில் அது அவசியமற்றது. இது என் கருத்து மட்டுமே. தங்களுக்கு அந்த அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது எனக்குப் புரியவில்லை. ஒரு நல்ல மனிதான இருந்து கொண்டு பாதிக்கப்படும் எந்த ஒருவருக்காகவும் குரல் கொடுக்க முடியுமே. அது பார்ப்பன் பக்கம் தாங்கள் வாதிடுவதாக இருந்தால் கூட

    12. March 22, 2005 at 10:32 am

      [7]ோயில் சார்ந்த சமுதாயங்களுக்கு வெளியே வந்த பின்னும் ஒரு பார்ப்பன சமூகத்தில் பிறந்தவனுக்கு தான் "பார்ப்பான்" இல்லை எனத் தெளிந்து கொள்ளுவதற்கு ஒரு மயிரை இழப்பதைவிட அதிகமாக இழப்பு ஒன்றுமில்லையே.

      சுந்தரமூர்த்தி – (இதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்). பாப்பான் இல்லை என்று தெரிந்த பிறகும் இழப்பதற்கு வேலைவாய்ப்பு, படிப்பு என்று கொஞ்சம் இருக்கிறது. :)

      இனி, நீங்கள் அரசாங்கச் சான்றிதழைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். சாதி அடையாளத்தைப் பிரகடனப்படுத்துவது என்பது நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்கள் தலையில் திணிக்கப்படும் அவலம். சேஷாத்ரி என்று அப்பா பெயர் வைத்துவிட்டுப் போய்விட்டால் அதிலிருந்து தப்பிக்க முடியாது. உண்மையிலேயே எனக்குத் தெரிந்த சேஷாத்ரி ஒருத்தர் தலித்தை மணந்து கொண்ட புடம்போட்ட நாத்திகர். அடையாளம் தெரியாமலிருக்க அவருடைய மகளுக்கு யாழினி என்று பெயரிட்டிருக்கிறார். ஆனால் அவரால் இந்தப் பிறவியில் சாதிக்கடலை நீந்திக் கரையேறமுடியாது. (சென்ற முறை தொலைபேசிய பொழுது மகளின் பெயரை யாழினி சேஷாத்ரி என்று பள்ளிக்கூடத்தில் எழுதச் சொன்னதாகச் சொன்னார். உண்மையில் இது கடலல்ல, சமுத்திரம்).

    13. March 22, 2005 at 10:34 am

      [7] [8] [11]

      எனக்குத் தெரிந்தவரையில் பிராமணர்களும் தலித்தும் இந்த சாதி அடையாளத்தை அவர்களாகவோ, பிறராலோ எளிதாகச் சூட்டப்படுகிறார்கள். மறுபுறத்தில் சிக்கலாக, இந்த அடையாளம் எல்லாம் எனக்குக் கிடையாது என்று வீட்டுக்கு வெளியே தலித்தாகவும், வீட்டுக்குள்ளே பார்ப்பனர்களாகவும் பச்சோந்திகளாகச் ஜொலிக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக இது பெரும்பான்மை. வலைப்பதிவுகளில் ஜல்லியடிப்பவர்களில் பலர் அற்புதமாக உயர்கல்வி பெற்று, முதல்தர பன்னாட்டுக் குடிமகன்களாக மாறிப்போனாலும் நாளை ஊருக்குச் சென்றால் தங்கள் இடைநிலை ஜாதியினால் கிடைக்கும் ஆதாயங்களைத் துறக்கத் தயாராக இருப்பார்களா என்பது எல்லோருக்கும் தெரியும்.

      "நான் முன்னேறிவிட்டேன் எனவே இனி எனக்கோ அடுத்த தலைமுறைக்கோ என் இடைநிலை ஜாதியின் அடையாளம் (அதானால் எழும் வாய்ப்புகள்) தேவையில்லை" என்று சொல்பவர்களை நான் இன்றுவரைக் கண்டதில்லை. இதற்கு மேல் ஜாதியை வெளிப்படுத்திக் கொண்டல் என்ன மறைத்துவைத்து ஆதாயம் பார்த்தால் என்ன?

      பார்ப்பனீயம் என்பது பிறப்பினால் வருவதில்லை என்று நான் தெளிவாக நம்புகிறேன். அதனால் புதிய பார்ப்பான்களை என்னால் எளிதாக அடையாளம் காணமுடிகிறது.

    14. March 22, 2005 at 10:54 am

      [11] கறுப்பி – நேரடியாக தனிமனிதனைக் குறிவைத்த மரணதண்டனை தீர்ப்பையும் நீங்கள் முன்வைக்கிறீர்களா என்று தெளிவாகக் கேட்டும் நீங்கள் அப்படித்தான் சொன்னீர்கள். எந்த விதமான வன்முறைக்கும் உடன்பட்டவனல்லன் என்பதால் எனக்கு உங்கள் பதில் வருத்தமளித்தளித்து. மறப்போம்.

      இந்தியாவின் சாதிய அமைப்பு முறையை நீங்கள் எவ்வளவு புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. 1950-85களில் அற்புதமான பல மார்க்ஸீயர்களே பார்ப்பன அடையாளத்தால் நொறுக்கப்பட்டிருக்கிறார்கள். வேண்டும்போதெல்லாம் இந்தத் தடியைக் கையிலெடுக்க யாரும் தயங்குவதில்லை. தேவையானவரை பேசிவிட்டு, இறுதியில் நீ பாப்பான் என்று ஞானோதயம் வந்தவர்களைப் போல தலையில் தட்டி உட்காரவைத்து விடுவார்கள். (புலிநகக் கொன்றை நினைவில் வருகிறதா?)

      நான் நேரில் பேசிய பல ஈழத்து நண்பர்கள் இந்தியாவைப் போலத் தீண்டாமையால் ஈழத்தில் பெரிதும் பாதிப்பில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். எனவெ உங்களால் இதைப் பெருந்தன்மை என்று சான்றிதழ் கொடுக்க முடிகிறது.

      பிறர் சாதி அடையாளம் காட்டவில்லை என்பதை நீங்கள் பெருந்தன்மையாகக் கருதுகிறீர்கள்; நான் அதை அப்படமான பச்சோந்தித்தனமாக இனங்காணுகிறேன். ஏனென்றால் தேவைப்பட்ட பொழுதெல்லாம் இதைக் கையிலெடுப்பதை நான் கண்டிருக்கிறேன் (பெரும்பாலும் இது தனியிடங்களில்தான் நிகழும், பொதுவிடங்களில் எல்லோரும் புடம்போட்ட உத்தமர்கள்).

      சாதியைக் கடந்தவர்களுக்குப் பிறரைப் பாப்பான் என்று சொல்வதிலும் தயக்கம் வேண்டுமல்லவா? (தவிர்க்க என்று சொல்லவில்லை) ஆனால் இது இயல்பாகப் பிரவாகமெடுப்பதைத்தானே காண்கிறோம்.

      நிற்க, துவக்கத்திலிருந்து நானும் பண்டாரம், பரதேசி என்று புனைப்பெயரில் எழுதியிருந்தால் ஒரு வேளை சாத்தியமாகியிருக்கலாம். :) என்னுடைய முழு அடையாளமும் பொதுவில் வைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தாண்டி என்னிடம் ஒன்றும் இல்லை என்பதையே நான் நேர்மையாகக் கருதுகிறேன்.

    15. March 22, 2005 at 11:14 am

      {தொடர்ந்து}
      "நான் பார்ப்பனன்" என்று நானாக ஒரு இடத்தில் எழுதியிருந்தால் அது என் முன்னோர்களின் தவறை நான் உணர்வதை வெளிப்படுத்தவும், அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கவுமாக்த்தான் இருக்கும். இதைக் கடந்த நேர்மை என்ன என்பது என் அறிவுக்கு எட்டியதில்லை.

      பல நேரங்களில் என் முப்பாட்டனார் ஒருவர் இப்படிச் செய்திருக்கலாம் என்ற எண்ணமே எனக்கு அருவருப்பைத் தருகிறது. (எனக்குத் தெரிந்தவகையில் என் தந்தையும், தாத்தாவும் அப்படியில்லை என்பதும் பெருமையாக இருக்கிறது).

      செய்த தவறிலிருந்து (அது என்னுடைய முப்பாட்டனாராக இருந்தாலும்) தப்பியோடுவதைவிட அதை உணர்ந்துகொண்டு பரிகாரம் தேடுவது குற்றவாளி (பரம்பரைக்கு) நேர்மையான விஷயம்.

    16. yetanothervenkat
      March 22, 2005 at 10:05 pm

      [15]
      Venkat: My poser to Sundaramoorthy's observation that people sometimes reveal their caste identity even when there is no need for it, was of a general nature and not directed towards to you. And I apologise if it came across as such. It is painful to read your subsequent posts (14, 15), that (re)clarify your position. As a long time reader here, I wouldn't doubt for one moment your intentions and I had no need for those explanations.
      My point is, uncalled for identifying of oneself by caste is opportunitistic, whether it is done in public or in private. It is downright obscene when the individual thinks he is slipping it in unnoticed under some cleaver pretext. I have been assualted by such flashers time and again, and 9 out of 10 time they happen to be upper caste individuals.

    17. March 24, 2005 at 4:06 am

      Just to divert these caste discussions into something that may be useful :-)

      வெங்கட்,

      அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த தளத்தைப் பார்த்ததுண்டா?
      http://ns.annauniv.edu/rctamil/html/eindex.htm…
      இந்த செயலிகளில் ஈடுபட்டு வரும் பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழ் இணைய உலகில் நடைபெற்றுவரும் மாற்றங்கள், சுரதா, முகுந்த் மற்றும் இன்ன பிறரின் தமிழ் கணினி முயற்சிகள் பற்றி தெரியுமா ? இந்திய அரசு கொடுக்கும் பணத்தில் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களையே மீண்டும் கண்டுபிடிப்பார்களா ?

      Have you tried this software ? http://www.kuralsoft.com/

      - Alex

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *