• மோகன்குமார், ரோசா வஸந்த் – குவாண்டம் கணினி தொடர்பாக

    by  • December 22, 2005 • அறிவியல்/நுட்பம் • 7 Comments

    மோகன்குமாரின் குவாண்டம் கணிப்பு குறித்த வலைப்பதிவில் என் பின்னூட்டத்தைப் பற்றி ரோசா வஸந்த இப்படி ஆச்சரியம் தெரிவித்திருக்கிறார்;

    ‘குவாண்டம் கணணி’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய வெங்கட் பதிவை ஒழுங்காய் படித்தாரா என்று தெரியவில்லை. படித்துவிட்டு பாராட்டியிருந்தால் ரொம்பவே கஷ்டம்தான். ஒழுங்காய் படித்திருக்க மாட்டார் என்று மிகவும் நம்புகிறேன். (அதனால் படிக்காமல் பாராட்டியிருந்தால் கொஞ்சம் குறைவான கஷ்டம் மட்டுமே).’…

    …வெங்கட்டும் வந்து பாராட்டியிராவிட்டால் நான் எழுதியிருக்கவே மாட்டேன்…

    …மோகன் எழுதியது அப்பட்டமான ஒளரல் என்பதை, ஏற்கனவே சொன்னதுபோல், வெங்கட் (படித்தோ படிக்காமலோ) பாராட்டிய காரணத்தால், சுட்டி காட்டுவது என் கடமை.

    வஸந்த இவ்வளவு தீவிரமாக என்னைக் குறித்த அவரது எதிர்பார்ப்புகளை எழுதியிருப்பதால் அது குறித்து கொஞ்சம். (சுட்டிகள் இறுதியில்)

    வஸந்த் – உங்கள் பதிவுக்கு நன்றி. முதலாவதாக அறிவியல் சமாச்சாரங்களில் ஒருவரை ஒருவர் தொடர்ந்து, விளக்கி எழுதுவதைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் பல அறிவியல் தகவல்களை இப்படியே விவாதித்தால் நாம் ஒரு ஆரோக்கியமானநிலையை உருவாக்க முடியும்.

    சில விளக்கங்கள்; உங்கள் பதிவின் படி (0) நான் முழுக்கப் படிக்காமல் மோகனைப் பாராட்டி எழுதியிருக்கிறேன் (1) நான் படித்தும் புரிந்துகொள்ளாமல் பாராட்டியிருக்கிறேன். வஸந்த் – மீண்டும் ஒருமுறை மோகனின் பதிவில் என் பின்னூட்டத்தைப் படியுங்கள். அதிகபட்சமாக நான் எழுதியிருப்பது ‘மோகன்தாஸ், பதிவுக்கு நன்றி!’ மாத்திரம்தான். இதில் எங்கேயும் அவரைப் பாராட்டவில்லை. இதுமாதிரியான ஒரு விஷயத்தை எழுதியதற்கான ஒரு நன்றி மட்டுமே அது. நீங்கள் சொல்லியிருக்கும் எல்லா அரைகுறைகளை நானும் கண்டேன். ஆனால் உங்கள் அளவுக்கு அதைத் துல்லியமாகச் சுட்டி எழுத முயற்சிக்கவில்லை. எழுதியிருக்க வேண்டும் (நீங்கள் அதைச் செய்ததற்கு நன்றி). ஏனென்றால் அறிவியல் தகவல்களில் எந்தப் பிழையையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று தீர்மானமாக நம்புபவன் நான். எழுதாததற்கு முதல் காரணம் – கிறிஸ்துமஸ் விடுமுறை, அதைத் தொடர்ந்து இந்தியப் பயணம் இவற்றால் கடைசி இரண்டு நாட்களில் வேலை நெருக்கடி. அதையும் விட முக்கியமானது என் தயக்கம்.

    மோகன் இப்பொழுதுதான் இதுபோன்ற விஷயங்களை எழுதத் தொடங்கியிருக்கிறார். நான் ஏதாவது எழுதினால் இவர் மீது நான் பாய்வதாகப் பரப்பப்படும். இதைத் தவிர்க்க நான் விரும்பினேன். இதேமாதிரியான ஒரு தகவலை சுஜாதா போன்றவர்கள் எழுதியிருந்தால் நான் எப்படி விமர்சித்திருக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னுடைய அளவுகோல்கள் இவர்கள் இருவருக்கும் வெவ்வேறானவை. மோகனுடைய ஆர்வத்தைச் சிதைத்துவிடக்கூடாது என்ற கவனமும் கூட. அதே நேரத்தில் ஆரம்பத்திலேயே இதை அவருக்குச் சுட்டவேண்டியதும் முக்கியம்.

    இன்னும் ஒரு சின்னச் சிக்கலும் இருக்கிறது. மோகன் சுஜாதாவை கிட்டத்தட்ட வழிபடுபவர். அவர் வார்ப்பில் அப்படியே எழுதத் துடிப்பது தெரிகிறது. இந்த நிலையில் இவரை நான் விமர்சித்தால் அது ஒருவிதக் குழுச்சண்டையாகப் (அண்ணாத்தே, நமக்குன்னு எந்தக் குழுவும் கெடயாதுங்கோ) பார்க்கக்கூடும். (தமிழ் லினக்ஸ் தகறாரில் ‘ழ’-வில் இருக்கும் சில இளைஞர்கள் அவர்கள் மீதான முறையான விமர்சனத்தை இப்படித்தான் எதிர்கொண்டார்கள்). இன்னொரு முறை அப்படியொரு விமர்சனத்திற்கு நான் இடம் கொடுக்க விருப்பமில்லை.

    இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் சுஜாதாவின் மீதும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர் தரும் அரைகுறை / தவறான அறிவியல் தகவல்களை மாத்திரம்தான் விமர்சிக்கிறேன் (ஏற்கனவே சொன்ன தவறான அறிவியல் தகவற்பிழை குறித்த விசனம்). தன் மீதான் எந்த முறையான விமர்சனத்துக்கும் மதிப்பளிக்காதமை சில முறை எரிச்சலைத் தூண்டுவதால் வார்த்தைகள் என்னிடமிருந்து நீண்டிருக்கின்றன.

    * * *

    இதையெல்லாம் தவிர்க்கத்தான் நான் பொதுப்படையான சில தொடர்புள்ள சிக்கல்களைப் பற்றி மாத்திரமே எழுதிவிட்டு, தமிழ் வார்த்தைகளைக் கையாளுவதுபற்றிய ஒருவரி விசனத்தையும் தெரிவித்தேன். என்னுடைய கட்டுரையின் சுட்டியைத் தந்திருந்தேன். மோகன் அந்தக் கட்டுரையைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

    என் நிலையை ஓரளவுக்கு விளக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

    - – -

    தொடர்புள்ள பிற வலைப்பதிவுகள்;

    மோகன்குமாரின் பதிவு: குவாண்டம் கம்ப்யூட்டிங்கும் ஜல்லியடித்தலும்

    ரோசா வஸந்தின் பதிவு: குவாண்ட உளறல்

    7 Responses to மோகன்குமார், ரோசா வஸந்த் – குவாண்டம் கணினி தொடர்பாக

    1. December 22, 2005 at 11:38 am

      அட விடுங்கப்பா…சும்மா ஒண்ணுக்கும் உதவாத குஷ்பூ/சுஹாசினி மேட்டருக்கே இங்க வெட்டுக்குத்து விழுது. நீங்க மூணு பேரும் ஒரு நல்ல விசயத்துக்காக சண்டையே போட்டுக்கிட்டாலும் தப்பில்லை( போடுறது நீங்கதானே..என்க்கென்னெ :–)) ).

      சண்டையும் சச்சரவும் அறிவியல்ல இருந்தா நல்லதே. உங்க மூணுபேராலயும் என்னப்போல ஆளுகள் கொஞ்சமாவது இதப் பத்தி தெரிஞ்சுக்க முடியுது. நீங்க இங்க எழுதலேனா நானெல்லாம் ஜென்மத்துக்கும் இதப்பத்தி தெரிஞ்சுருக்கவே மாட்டேன்

    2. Nanban
      December 22, 2005 at 12:03 pm

      மோகந்தாஸ் எழுதியதைப் படித்த பொழுது ஒரு நல்ல விஷயத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறார் என்று தான் நினைத்திருந்தேன்.

      அதில் இத்தனை விவகாரம் உண்டா?

    3. ரோஸாவசந்த்
      December 23, 2005 at 5:47 am

      வெங்கட், முதலில், நான் உங்களை பற்றி எழுதியதை எல்லாமே உங்களை பற்றிய 'எதிர்பார்ப்பு' என்று சரியான வகையில் புரிந்துகொண்டதற்கு நன்றி. ஏற்கனவே பல அறிவியல் விஷயங்களை எழுதி வேர் ஊன்றிவிட்ட பிறகு, நீங்கள் ஆமோதிப்பது போல் பின்னூட்டம் அளிப்பது, (தவறான) பதிவிற்கான அங்கீகாரமாக தெரிந்ததால் எழுதினேன். 'மோகனுடைய ஆர்வத்தைச் சிதைத்துவிடக்கூடாது என்ற கவனமும் கூட.' என்று சொல்வதில் ஒப்புதல் உண்டு. அதில் நான் கவனமாக இருக்கவில்லை என்பது உண்மைதான். அதே நேரம் அவர் சற்று பொறுமையுடன், சற்றே கூடுதல் உழைப்பை செலுத்தியிருந்தால் தவறுகளை தவிர்த்திருக்கலாம். அதனால் இந்த அசிரத்தை கண்டிக்க படவேண்டியதாகவும் தெரிகிறது, என்றாலும் ஒருவேளை மென்மையான முறையில் சொல்லியிருக்கலாமோ என்றும் பிறகு தோன்றியது. உடனடி எதிர்வினையாக எழுதியிராவிட்டால் கடுமையை தவிர்த்திருக்கலாம்.

    4. ரோஸாவசந்த்
      December 23, 2005 at 5:48 am

      உங்களின் கட்டுரை மீதான விமர்சனம் மிக எளிதானது. ஒரு வெகுதளத்தில் எழுதும் போது, கறாரான வகையில் எல்லாவற்றையும் கையாண்டிருக்க வேண்டும் என்று நான் நினைப்பது கிடையாது. எளிமைபடுத்துவதையும், வழக்கமான அணுகுமுறையிலிருந்து மாறி (ஒரு புரிதலுடன்) வாசிப்பவர்களை மனதில் வைத்து எழுதுவதிலும் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. உடன்பாடு மட்டுமே உண்டு. ஆகையால் நீங்கள் குறிப்பிட்டது போன்ற விமரசனம் எனக்கு இல்லை, இருந்தாலும் அது பெரிய விஷயமும் அல்ல.

    5. ரோஸாவசந்த்
      December 23, 2005 at 5:49 am

      என் விமர்சனத்தை சில வரிகளில் என் பதிவில் தந்துள்ளேன். குவாண்டம் கணிப்பை பற்றி ஒரு துணுக்கு உண்டு. 'குவாண்டம் கணிப்பில் மொத்தம் மூன்றே மூன்று பெயர்கள் மட்டுமே உண்டு. அது ஆலிஸ், பாப் மற்றும் ஷார் (alice, bob and shor)' என்று. குவாண்டம் கணிப்பின் முக்கியத்துவத்திற்கான அடிப்படை வாதம் அது அளிக்க கூடிய exponential (தமிழில் என்ன?) சாத்தியம். அதற்கான ஒரே (முழு அளவிலான) ஆதாரமாக தெரிவது ஷாரின் தீர்வுமுறை. இந்த விஷயங்கள் குறித்து நீங்கள் ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை என்பதே முக்கிய விமர்சனம். இதற்கு முக்கிய காரணமான entanglement போன்றவைகளை விளக்குவதில் பிரச்சனை இருக்கலாம். குண்ட்ஸாகவாவது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது போல சில விமர்சனங்கள் உண்டு. இவை பெரிய விஷயமில்லை, ஆனால் குறிப்பிடவேண்டும் என்று தோன்றியது. நன்றி.

    6. December 26, 2005 at 2:06 am

      edited and gave reference in my post,

      http://imohandoss.blogspot.com/2005/12/blog-post_20.html…

    7. vadivelan
      December 30, 2005 at 4:50 am

      very good Fight with science knowledge

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *