• மும்பை – பேய்மழையும் பெருவளர்ச்சியும்

    by  • July 30, 2005 • பொது • 12 Comments

    sensex_rain

    மும்பையில் பேய் மழை அடித்து ஓய்ந்திருக்கிறது. தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. வேலையிலிருந்து வீடு திரும்புபவர்கள் பள்ளி விட்டு வரும்சிறுவர்கள் இருபது மணி நேரம் வரை மழையில் சிக்கி முகமறியாதவர்களின் உதவியில் உயிர்பிழைத்திருக்கிறார்கள். வழக்கமான அனுதாபங்கள் எல்லாவற்றையும் ஒருபுறம் இருத்திவிட்டு கொஞ்சம் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள இதை துணைக்கழைப்போம்.

    மும்பை இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமாகக் காட்டப்படுகிறது. மும்பை பங்கு சந்தையின் சென்ஸெக்ஸ் ஏற்ற இறக்கங்கள் இந்தியாவின் பொருளாதார நிலையைப் பிரதிபலிப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த வார பேய் மழையில் மும்பையில் 800 பேர் செத்திருக்கிறார்கள். ஒரே நாளில் 94 செ.மீ-க்கும் அதிகமாகப் பெய்த மழையில் சாவைத் தவிர மும்பையின் பாடல்பெற்ற சேரிகளில் இழப்புகள், காயங்கள், ஊனங்கள் மிக அதிகம்.

    இத்தனைக்கும் இடையில் மும்பை சென்ஸெக்ஸ் அதே நாளில் 52 புள்ளிகளுக்கு மேலாக உயர்ந்திருக்கிறது. பினான்ஸியல் எக்ஸ்ப்ரஸ் இதை மும்பைக்கார்களின் வீரத்திற்கு உதாரணமாகக் காட்டுகிறது. பால், காய்கறி கிடைக்காத பொழுதும் பங்கு சந்தை உயர்ந்திருப்பதை மும்பையின் தாங்கு திறனுக்கு உதாரணமாகக் காட்டுகிறது. சத்தியமாக மும்பையின் சேரிகளில் பிணங்களுக்குக் காவல்கிடந்தவர்களுக்கு ரிலையன்ஸின் சாதனை அறிவிப்பு எந்த மகிழ்ச்சியையும் கொடுத்திருக்காது. அதேபோல் மும்பையின் பங்கு சந்தையில் இருந்த வியாபாரிகளுக்கு சேரிப்பிணங்கள் ஒரு பொருட்டாகவே இல்லை என்றும் தெரியவருகிறது.

    பத்திரிக்கைகளில் செய்திகளைப் பார்த்தால் சாவுக்குக் கவலைப்படும் ஒவ்வொரு செய்திக்கும் எண்ணிக்கையில் சமமாக பன்னாட்டு நிறுவனங்களின் புழக்கடை அலுவலங்களின் நிலைமை பற்றியும் வந்திருக்கின்றன. எல்லா செய்திகளிலும் பொருளாதாரம் பற்றி ஒரு வரியாவது வருகிறது. நகரத்தின் சக மனிதர்கள் இறந்து கிடக்கும்பொழுது சரிக்குச் சரியாகப் பொருளாதாரம் பேச இவர்களுக்கு எப்படித்தான் மனமொப்புகிறதோ தெரியவில்லை. சிலரிடம் சொன்னால், “ஆமாம் ஸார், பேக் ஆபீஸ் ஒழுங்கா நடந்து வருமானம் வந்தாதான சேரியை எல்லாம் முன்னேத்த முடியும்” ரீதியில் பதில் கிடைக்கலாம். எனக்கென்னமோ இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததைப் போலத்தான் தெரிகின்றன. ஆண்டாண்டுகாலமாக சேரிக்காரர்கள் இவர்களை வளர்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்களோ சேரியைப் பற்றிக் கவலைப்பட்டதைப் போலத் தெரியவில்லை. பேக் ஆபீஸ் வருமானத்தில் ஒரு சதவீதம்கூட குடிசைகளுக்குப் போகாது என்பது சர்வநிச்சயம்.

    இன்னும் சொல்லப்போனால், மும்பையின் இந்தப் பெருமழை பாதிப்புக்கு முக்கிய காரணமே சேரிகள் என்றுதான் சிலர் சொல்கிறார்கள். அதாவது கண்ட கண்ட இடங்களில் முறையில்லாமல் குடிசைகளைக் கிளம்பவிட்டது தவறு. வெள்ளம் வரும்பொழுது வடிகால்கள் இல்லாமல் அடைத்தது இவர்கள்தான் என்று குற்றம் சாட்டுகிறார்கள். – விழித்துக் கொள்ளுங்கள் இதற்குத்தான் ஒன்றிணைந்த, ஒழுங்கமைந்த முன்னேற்றம் அவசியம். மும்பையின் சேரிகள் எண்ணிக்கை வளர்வது அங்கேயிருக்கும் பணக்காரர்களின் வளர்ச்சிக்கு நேர்விகிதத்தில்தான் இருக்கிறது. எனவே வாய்க்கால்களை அடைத்துவிட்டதாகச் சேரிகளைச் சுட்டுவதற்கு முன், அந்தச் சேரிகள் யாருடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முளைக்கின்றன என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தல் அவசியம். சேரி மக்கள்தான் மும்பையில் பால், காய்கறி, டப்பாவில் மதிய உணவு என்று மும்பையின் இரத்த ஓட்டமாக இருக்கிறார்கள். மும்பையின் வளர்ச்சியில் இந்த சேரிகளின் முறையான பங்கு அடையாளம் காணப்பட்டு வருமானத்தில், நகர சேவையில் அவர்களுக்கு முறையான பங்கைத் தராதவரையில் இப்படித்தான் இருக்கும்.

    வழக்கமாகவே மும்பையில் ஏழ்மையும் செல்வமும் ஒன்றுக்கருகில் ஒன்று, ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் வாழ்கின்றன என்று சொல்வார்கள். ஆனால் 800 உயிர்களின் இழப்புக்குப் பிறகும் மும்பை பங்கு சந்தையின் ஏற்றம் குறையாததைப் பார்க்கும் பொழுது இதன் அதீதம் சுடுகிறது. என்னால் சத்தியாமாகச் சொல்லமுடியும்; உலகின் வேறு எந்த நகரத்திலும் இப்படி நடக்காது. பத்து பேர் பூகம்பத்தில் செத்தால் டோக்கியோ மீண்டுவர மூன்று நாட்களாவது பிடிக்கும்.

    எனக்கென்னமோ இது மும்பைக்கார்கள் பெருமையாக மார் தட்டிக்கொள்ளும் நிகழ்வாகத் தோன்றவில்லை. படிக்கையில் எரிச்சல்தான் வருகிறது.

    இதற்குப் பெயர் வளர்ச்சியல்ல; வீக்கம். இது நாளாவட்டத்தில் மும்பையின், இந்தியாவின் உயிரைக் குடிக்கும். இது விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்.

    12 Responses to மும்பை – பேய்மழையும் பெருவளர்ச்சியும்

    1. Valavan
      July 30, 2005 at 9:14 am

      Venkat, I agree with you… This is my article on Mumbai ra(u)ins

    2. July 30, 2005 at 10:03 am

      //Venkat, I agree with you… This is my article on Mumbai ra(u)ins//

      மிஸ்டர் வளவனார், உங்கள் சுட்டி வேலை செய்யலை. இந்த ப்ளாகிலே அய்ப்பர் லிங்க்கு கொடுக்க வேண்டும் என்றால், அப்படியே தட்டச்சு செய்யுங்கள். வெட்டி ஒட்டி படிக்கலாம். எச்ட்டிஎம்மெல் ஜிகிடி வேலை எல்லாம் இங்கே வேலைக்காவாது. அது ஓனருக்கு மட்டுமே தெரிந்த பிரம்மரகசியம்

    3. July 30, 2005 at 10:05 am

      வெங்கட்,

      நீங்க சொல்வதை ஒத்துக் கொள்கிறேன். மும்பை மக்கள் கொஞ்சம் இன்சென்ஸிட்டிவ் என்று தான் நினைக்கிறேன். ( அவங்க சென்சிடிவாக பார்க்கும் நல்ல விஷயங்களும் இருக்கு) ஆனால், FE கொஞ்சம் கோணல் பார்வை பார்த்திருக்கிறது. மும்பை குண்டு வெடிப்புக்கு அடுத்த நாள், வெடித்த அதே சில இடங்களில், பல அலுவலகங்கள் வேலை செய்தன. "ஆமா, குண்டு வெடிச்சுடுச்சி? அது என்ன இப்ப ? என்கிற மனோபாவம் வந்ததுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இப்படியே இருந்தால், ஒரு நாள் மும்பை அழிஞ்சு போயிடும்னு சொல்றது கொஞ்சம் மிகை. சேரினால தான், தண்ணி தேங்கிடுச்சுன்னு சில அறிவுஜீவிகள் சொல்றது ரொம்ப ஓவர். ஒரு பக்கம் நாரிமன் பாயிண்ட். அடுத்த பக்கம் தாராவி. இருந்தாத்தான் அதும் பேர் மும்பை. அப்படி இல்லாம, ரெண்டு பக்கமும் நாரிமன் பாய்ண்ட் இருந்தால், அதும் பேர் மும்பை இல்லை, ஷாங்காய். அதுவுமில்லாம, மும்பையின் சேரிப் பகுதிங்கறது ஒதுக்குப்புறமான விஷயம் இல்லை. அது ஒரு வகையான குடியிருப்பு. மும்பை மாதிரியான நெரிசலான நகரத்துலே அப்படித்தான் இருக்கும். இந்த மழையை இப்ப சமாளிக்க முடிஞ்சது ( எட்டுநூறு பேரை காவு கொடுத்து ), ஆனால், இது போல எப்பவுமே சமாளிக்க முடியுமாங்கறது கேள்வி?

    4. Valavan
      July 30, 2005 at 10:20 am

      http://i-thoda.blogspot.com/2005/07/blog-post_29.html…
      இந்தாருங்கள்.
      நான் இன்னும் FE-ஐ படிக்கவில்லை, படித்துவிட்டு பதிலுகிறேன்.

    5. July 30, 2005 at 1:48 pm

      மும்பையில் ஏற்பட்ட வதந்தீயால் [பாலம் உடைந்து ஆறு உள்ளே வருகிறது என்று] 17 பேர்கள் இறந்திருக்கிறார்கள். இதில் 10 பேர் குழந்தைகள். பினாசியல் எக்ஸ்பிரஸூம், எகனாமிக் டைம்ஸூம் என்ன காரணங்கள் வேண்டுமானால் சொல்லல்லாம். ஆனால், தாராவி இல்லாமல் மும்பையினால் உயிர் வாழ முடியாது. தாராவி பற்றிய ஒரு விவரணப்படத்தினைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் தெரிந்துக் கொண்டது, மும்பை இந்தியாவின் பொருளாதார தலைநகராக இருக்க வேண்டுமெனில் தாராவி இருத்தல் அவசியம். தாராவி இல்லாமல் போனால், மும்பையில் வேலை ஒடாது. துணி வெளுக்காது. குப்பைகள் கூட்டப்படாது. மொத்தத்தில் மும்பை நாறிவிடும்.

      இந்த அறிவுஜீவி மிகை சொல்லல் இன்றைக்கு அல்ல, ரொம்ப நாட்களாய் இருக்கிறது. அவர்கள் சும்மா இதைச் சொல்லி கொள்வார்கள். ஆனாலும், அவர்களாலும் தாராவி இல்லாமல் இருக்க முடியாது.

      உங்களுக்கு தெரியுமா. மும்பையின் புறநகரிலுள்ள எல்லா வயல்வெளிகளும், அடுக்குமாடி வீடுகளாகிவிட்டன. சமீபத்தில் DLF என்கிற நிறுவனம், மும்பையிலிருக்கும் ஒரு டெக்ஸ்டெல் மில்லின் இடத்தினை 730 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். எதற்காக மும்பையிலுள்ள இடத்தினை வாங்க வேண்டும். பேராசை. வாங்கி மல்டிப்ளக்ஸ் கட்டி சும்மா மாநகராட்சியை ஏமாற்ற கொஞ்சம் புல்வெளியும், குரோட்டன்ஸூம் வளர்த்து கீரீன் பீல்டு என்று கணக்குக் காட்டி, 300ரூபாய் டிக்கெட்டில் படம் காட்டுவார்கள். மும்பை தன் உயரத்தினைவிட அதிகமாக வளர்ந்துவிட்டது. சென்றமுறை மும்பை போயிருந்தபோது வலைப்பதிவாளர் சுதாகரினை (மங்கை) சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர் சொன்ன காரணங்கள் மிக பொருத்தமாக இருக்கிறது.

      மும்பையின் அழிவுக்கு ஏழைகள் காரணமல்ல, மிதமிஞ்சிய பணமும், பேராசையும் தான் காரணம். கொஞ்சம் மும்பை பதிப்பு டைம்ஸ் ஆப் இந்தியா எடுத்துப் பாருங்கள். மூன்று பக்கம் செய்திகள் போட்டுவிட்டு, மற்ற எல்லாப் பக்கங்களிலும் கிசுகிசுவும், பார்ட்டிகளும், டிஸ்கோதேகளும், பேஷன் நிலவரங்களும்தான். பேஜ் 3 தாண்டி, மற்ற எல்லாப் பக்கங்களுமே பேஜ் 3 தான்.

      யார் யாரை குறைசொல்வது?

    6. bb
      July 30, 2005 at 1:56 pm

      Venkat, is the bulk of trading in BSE done by Mumbaikars? I am not sure. Isn't BOLT fully electronic? If anything, bulk of trading in Nasdaq/Dow is not done by NewYorkers.

    7. July 30, 2005 at 4:52 pm

      //என்னால் சத்தியாமாகச் சொல்லமுடியும்; உலகின் வேறு எந்த நகரத்திலும் இப்படி நடக்காது.// உண்மை. இப்படியொரு நிகழ்வு இனிமேலும் வராமல் தடுக்க நடவடிக்கை எடுப்பார்களென்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை. உயிர்களுக்கு மதிப்பு அவ்வளவுதான்! :(

    8. July 30, 2005 at 10:36 pm

      [2] இன்னா கோயிஞ்சாமி – கீழ link – ன்னு போட்டு ஒரு பொத்தான் இருக்குதான. அத அமுக்கினா சுலுவா லிங்க் போடலாம்தான. இதவுட வேற யாரு சொலபமா வச்சிருக்காங்கன்னு சொல்லு நயினா?

    9. July 30, 2005 at 10:41 pm

      [3] கோவிந்து – மும்பைல சென்ஸிட்டிவா இருக்கறது சிவசேனா வெவகாரம்தான்னு தோணுது. யாராவது புள்ளையாரு கடல்ல போடக்கூடாதுன்னு சொல்லிபாருங்க, மும்பைல நாலு நாளைக்கு ஸ்டாக் மார்க்கெட் தெறக்கவே தெறக்காது.

    10. July 30, 2005 at 10:42 pm

      [4] வளவன் கூடுதல் தகவல்கள், படங்களூக்கு நன்றி. நீங்க மும்பையிலா இருக்கிங்க?

    11. July 30, 2005 at 10:47 pm

      [5] நாராயண் – மாநகரங்களுக்கு அவசரகால திட்டங்கள் வேண்டும். கழிவு நீர் வாய்க்கால்கள், தீயணைப்பு வசதி, அவசரகால தகவல் வசதி எல்லாம் தேவை. இதெல்லாம்பற்றி திட்டமிடாமல் மல்டிப்ளக்ஸ் மாத்திரம் கட்டிக்கொண்டிருந்தால் அரோகராதான். யார் இதெல்லாம் கண்டுகொள்ளப்போகிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இதைப்பற்றி பேச்சு வரும் அப்புறம் வருடாந்திர பிலிம்பேர் அவார்ட் விழா வந்ததும் மறந்துவிடும்.

    12. July 30, 2005 at 10:54 pm

      [6] bb – I believe mumbaikars have the biggest say in Sensex. It may not be entirely run by mumbai – but mostly controlled by mumbai.

      If Financial Express can take pride flaunting mumbaikar's resilience, I guess, a little beating for this shameless indifference is not out of place.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *