• மின்மசி திரை – சோதனை வடிவம் வெளியீடு

    by  • September 29, 2005 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    e-ink kit

    மின்புத்தகங்கள் (eBooks), மின்மசி (eInks), நெகிழ்திரைகள்(Flexible Displays) போன்ற நுட்பங்களில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியைப் பற்றி தொடர்ந்து இந்த வலைப்பதிவில் எழுதிவருகிறேன். இதற்கு முன் என்டெர்ரா (nTera) நிறுவனத்தின் நானோநுட்பத் திரையைப் பற்றியும் சோனியின் மின்புத்தகத்தைப் பற்றியும் எழுதியிருந்தேன். மின்புத்தகத்தின் அடிப்படையில் உள்ள மின்மசி பற்றியும் அதன் இயற்பியல் அடிப்படையான மின்துளைபரவல் (electrophoresis) பற்றியும் சிட்டிஸன் நிறுவனத்தின் வளையும் மின்கடிகாரம் பற்றியும் ஏற்கனவே எழுதியிருந்தேன்.

    இப்பொழுது ஈ-இங்க் நிறுவனம் இந்தத் தொழில்நுட்பத்தை யாரும் சோதித்துப் பார்க்க இதைக் கொண்டு கருவிகள் தயாரிக்க வசதியாக அடிப்படை சோதனைக்கருவிகள் கொண்ட தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் தேவையான திரை, லினக்ஸ் இயக்குதளம் பொதிந்த சில்லு, MMC card reader, எல்லாம் அடக்கம். என்னுடைய பழைய பதிவுகளில் இதன் நுட்பத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். சுருக்கமாக, இந்தத் திரையில் ஒருமுறை தகவல் எழுதினால், எந்தவிதமான சக்தித் தேவையும் இன்றி இது நிலைத்திருக்கும். மறுமுறை மீண்டும் அழித்து எழுதலாம். (கிட்டத்தட்ட ஒரு காகிதத்தில் பென்சிலால் எழுதுவதைப்போல).

    படித்த உடனேயே ஜொள்ளு விட்டுக்கொண்டு என் மேலாளரிடம் ஒன்று வாங்கச் சொன்னேன். இரண்டு காரணங்களைக் காட்டி மறுக்கிறார். 1. இதில் நான் விளையாடிப்பார்ப்பதைத் தவிர இப்போதைக்கு எங்களுக்கு உருப்படியான பயன் ஏதுமில்லை. நான் பல்கலைக்கழகத்தில் அன்றாடம் நடக்கும் செமினார்கள் பற்றிய தகவலை இதில் எழுதி எங்கள் தகவல் பலகையில் (பூட்டப்பட்ட கண்ணாடிக் கதவுக்குள்ளேதான்) வைக்கலாம் என்று சொன்னேன்; ஒத்துக்கொள்ளவில்லை. 2. இப்போதைக்கு எனக்கிருக்கும் வேலைகளே அதிகம் என்பதால் நான் இதில் நேரம் செலவிடக்கூடாது.

    ம்ம்ம்… சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று ஒதுங்க மனது வரமாட்டேனென்கிறது. வீட்டு மேலாளரிடம் பணம் கேட்டால் சாப்பாடு போய்விடும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *