மருந்து களப்பரிசோதனை: இந்தியச் சந்தையும் மோசடிகளும்
by வெங்கட் • December 19, 2005 • பொது • 0 Comments
Wired தளத்தில் இன்றைக்கு வெளியாகியிருக்கும் செய்தி மிக முக்கியமானது. சமீபத்திய இந்தியப் பொருளாதாரப் பெருவளர்ச்சியின் மிக முக்கியமான கோரமுகத்தை அடையாளம் காட்டுகிறது இந்தக் கட்டுரை. பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் புது மருந்துகளின் களப்பரிசோதனைக்கு இந்தியர்களை பலிகடாவாக்குகின்றன. மேற்கத்திய நாடுகளில் புது மருந்துகளைச் சோதனை செய்வதில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. என் ஆய்வகம் இருக்கும் அதே தெருவில் பல சிறு நிறுவனங்கள் இந்த மருந்துக் களப்பரிசோதனைகளில் பெயர் பெற்றவை. டொராண்டோ மாநகரம் உலகிலேயே மிக அதிக அளவு இனக் கலப்பு கொண்டது. எனவே ஒரே மருந்தை பல்வேறு இனக்குழுக்கள் (சீனர்கள், வெள்ளைக்காரர்கள், தெற்காசியர், ஆப்பிரிக்கர், லத்தினமெரிக்கர்கள்,…) என்று மிக விரைவாக சோதனை செய்து முடிக்க டொராண்டோ மிகவும் வசதியான நகரம். ஆனால் இங்கே மருந்துப் பரிசோதனைகளில் இருக்கும் சிக்கல்கள் மிக நன்றாக விளம்பரப்படுத்துவதால் சோதனைக்கு ஆளில்லாமல் தவிப்பதைப் பார்க்கமுடிகிறது. (-20 செல்சியஸ் குளிரில் தெருவில் படுத்துக்கொண்டிருக்கும் வீடற்றவர் கூட மருந்துச் சோதனைக்குத் தன்னை உட்படுத்தி பணம் சம்பாதிக்கத் தயங்குவதைப் பார்க்க முடிகிறது. மருந்துச் சோதனைக்கு அழைக்குமுன் அவருக்கு அதன் எல்லா பாதகங்களையும் தெளிவுபடுத்த வேண்டியது இந்த நிறுவனங்களின் கடமை. சில சமயம் தலையில் பொடுகு தீர்க்கும் ஷாம்பு சோதனைக்கு ஆறு மாதத்திற்கு மாதம் $30 வரை ஈட்டுத்தொகை கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.
மாறாக இந்தியாவில் மிக அதிக ஆபத்துள்ள மருந்துகளைக் கூட ஏமாற்றித் தலையில் கட்டி சோதனைகள் நடப்பதாகத் தெரிகிறது (ஏற்கனவே பத்மாவும் இதைப் பற்றி எழுதியிருந்தார்). இப்பொழுது, இந்த அபத்த வியாபாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று வயர்ட் சொல்லுகிறது. கடந்த ஆறுமாதத்தில் இது மிக வேகமாக வளர்வதாகச் சொல்லுகிறார்கள். இந்த நிலையிலேயே அரசாங்கம் விழித்துக் கொண்டு இதற்கான முறைமைகளை வகுக்க வேண்டியது மிக முக்கியம். இல்லாவிட்டால் இதில் பணம் கண்டு கொழுத்துப் போனவர்கள் எல்லா வகையில் சட்டத்தையும் அரசையும் விலைக்கு வாங்கி தங்கள் ஏமாற்று வித்தைகளைப் பெருக்குவார்கள். இதுபோன்ற விஷயங்களில் ஒளிவுமறைவின்றி இருத்தல் மிகவும் முக்கியம். அரசாங்கம் விரைவில் அதற்குச் சட்டபூர்வ நடைவரைகளை (protocol) வகுப்பது அவசியம்.