மருத்துவ விநியோகத்தில் புரட்சி – நபோ பார்மசூடிகல்ஸ்
by வெங்கட் • July 15, 2005 • அறிவியல்/நுட்பம் • 7 Comments
பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் தொடர்ச்சியாக வளர்ந்துவரும் நாடுகளின் மருத்துவத் தேவையைப் புறக்கணித்து வரும் நிலையில் புதிய நிறுவனமான நபோ பார்மசூடிகல்ஸின் விற்பனை உத்தி வியப்பூட்டுகிறது; மகிழ்ச்சியளிக்கிறது.
நபோ க்ரோஃபெலெமெர் ( Crofelemer) என்ற புதிய மருந்தைச் சந்தைப்படுத்துகிறது . இது வயிற்றுப்போக்கை நிறுத்தவதற்கானது. இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்ட விதம் அதைச் சந்தைப்படுத்தும் முறை எல்லாமே வித்தியாசமானவை. க்ரோஃபெலெமெர் மருந்தைக் கண்டுபிடித்தவர்கள் ஷாமன் பார்மா (Shaman Pharma) என்ற நிறுவனம். 1989-ல் துவக்கப்பட்ட ஷாமன் தொன்னூறுகளில் மிகப்பரபரப்பாக முன்னேறி வந்தது. வழமையான மருந்து ஆராய்ச்சி முறைகளிலிருந்து இவர்கள் முறை மாறுபட்டது. உயிர்ச்சுரங்க முறை (Biomining) -யில் இலக்கில்லாமல் அமேசான் காட்டுப்பகுதியில் பூர்வ குடிகள் பயன்படுத்தும் மூலிகைகளிலிருந்து நவீன மருந்துகளைப் பிரித்தெடுப்பது. தென்னமெரிக்கப் பூர்வ குடியினர் க்ரோடன் லெச்லெரி (Croton Lechleri) என்ற மரத்தின் சாற்றை வயிற்றுப்போக்கிற்கு மருந்தாகக் காலம் காலமாகப் பாவித்துவருகிறார்கள். இதை ஆராய்ந்த ஷாமன் பார்மசூடிகல்ஸ் என்ற நிறுவனம் இதிலிருந்து க்ரோஃபெலெமர் என்ற மருந்தைத் தயாரித்தது. ஆனால் விரைவில் பன்னாட்டு இராட்சத நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல், அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இடுக்கிப் பிடிகளைத் தாங்க முடியாமல் வியாபார ரீதியாகத் தோற்றுப் போனது. இந்த மருந்தின் உரிமையைப் பின்னர் நபோ பார்மசூடிகல்ஸ் பெற்றிருக்கிறது. (ஷாமன் நிறுவனத்தினைச் சேர்ந்தவர்களே புதுத்தொழில் முதலீட்டாளர்களிடம் மீண்டும் பணம் பெற்று நபோ என்ற பெயரில் புது அவதாரம் எடுத்திருக்கிறார்கள் என்று சொல்வதுதான் பொருத்தம்).
வழமையாக ஒரு புதிய (சக்தி வாய்ந்த) மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் இது முதலில் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில்தான் அறிமுகப்படுத்தப்படும். இங்கெல்லாம் ஒரு புது மருந்தையோ, அல்லது புது சிகிச்சை முறையையோ அறிமுகப்படுத்துவது மிக மிகச் சிக்கலான விஷயம். உதாரணமாக அமெரிக்காவில் ஒரு புதிய மருந்தை அறிமுகப்படுத்துவதற்கு ஐந்து முதல் பத்து வருடங்களை வரைப் பிடிக்கும். தொடர்ச்சியான ஆய்வகத் தரக்கட்டுப்பாடு, களப்பரிசோதனைகள், மறுபரிசீலனைகள் என்று இது மிக மிகச் சிக்கலான விஷயம். இதைத் தாக்குப் பிடிக்கும் திறன் ஃபைஸர், மெர்க், போன்ற இராட்சத நிறுவனங்களுக்குத்தான் சாத்தியம். பெரும்பாலான நேரங்களில் சிறு நிறுவனங்களின் கண்டுபிடிப்பை ஒரு கட்ட களப்பரிசோதனைக்குப் பிறகு இந்த நிறுவனங்கள் கையகப்படுத்தி விடுகின்றன. பின்னர் தங்களுடைய சந்தைத்துறை பலத்தால் தரக்கட்டுப்பாடுகளைச் சமாளித்து விற்பனைக்குக் கொண்டுவருகின்றன. சில சமயங்களில் இப்படி ஒரு புது மாத்திரையை அறிமுகப்படுத்த பல நூறு மில்லியன் டாலர்கள் கணக்கில் கூடச் செலவாவதுண்டு. சொல்லத் தேவையில்லை, சிறு நிறுவனங்கள், தொடக்க கட்ட நிறுவனங்கள் போன்றவற்றுக்கு இது சாத்தியமாவதில்லை. இதே காரணத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பல மருந்துகள் விற்பனைக்கு வராமல் தேங்கிக் கிடக்கின்றன. (நபோவின் – பாட்டனாரான ஷாமன் பார்மா இன்னொரு களப்பரிசோதனை தேவை என்று FDA வால் வற்புறுத்தப்பட்ட பொழுது ஒட்டகத்தின் முதுகில் விழுந்த கடைசித் துரும்பைத் தாங்கமுடியாமல் நொறுங்கிப்போனது).
இத்தனை செலவு செய்து, கஷ்டப்பட்டு சந்தைப் படுத்தப்படும்பொழுது நிறுவனங்கள் அவை போட்ட முதலை எடுத்தாக வேண்டிய கட்டாயமிருக்கிறது. மேலும் சில வருடங்களில் அந்த மருந்துக்கான காப்புரிமையும் காலாவதியாகிவிடும். இந்தக் குறுகிய நாட்களில் பணம் சம்பாதிக்க மருந்தின் விலையை தயாரிப்புச் செலவைக் காட்டிலும் பலநூறு மடங்குகளுக்குக் கூட்ட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் ஏழை நாடுகளுக்கு இது கைக்கெட்டாமல் போய்விடுகிறது. இதனால் மருத்துவத் துறையின் பல கண்டுபிடிப்புகள் மருத்துவத் தேவை அதிகமிருக்கும் ஏழை நாடுகளைச் சென்று சேர்வதேயில்லை. வளர்ந்த நாடுகளில் மருத்துவத் தேவை குறைவு, எனவே மருந்துகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இது விலையை இன்னும் உயர்த்திவிடுகிறது.
* * *
க்ரொஃபெலெமெர் வேலை செய்யும் விதம் அலாதியானது. வழமையான வயிற்றுப் போக்கு மருந்துகள் இரத்த ஓட்டத்துடன் கலந்து குடலின் நீரைப் பிரிக்கின்றன. மாறாக நபோ வின் புதிய மருந்து குடலில் அதிக நீர் சென்றடையாமல் தடுத்து நிறுத்துகிறது. அதாவது இதன் செயல்பாடு குடலில் மாத்திரமே, உடம்பு முழுவதும் பரவுவதில்லை. இந்த மாறுபட்ட செயல்பாடு திறமையாக வயிற்றுப்போக்கைத் திறமையாகக்கட்டுப்படுத்துகிறது. மேலும் வழமையான மருந்துகள் குடலுக்குள் திரவமும், திடப்பொருள்களும் செல்வதைக் குறைக்கின்றன. இதன் விளைவாக மலச்சிக்கல், பசியின்மை போன்ற பக்க விளைவுகள் வருகின்றன். புதிய மருந்தில் பக்கவிளைவுகள் குறைவு. குறிப்பாக இந்த முறை நோய்தடுப்புத்திறன் வளர்சியுறாத சிறு குழந்தைகளுக்கு மிகத் திறமையாக வேலைசெய்கிறது. மேலும் எயிட்ஸ் போன்ற நோய்களால் தடுப்புத்திறன் குறைந்துபோனவர்களுக்கும் இது மிக நன்றாக வேலைசெய்கிறது. இவர்களுக்குக் குடலில் நீர் தங்கிப் போகும்பொழுது அத்துடன் கூடவே நோய்க்கிருமிகளும் தேங்கிப் போய் தடுப்புத்திறனற்ற நேரத்தில் சிக்கலை அதிகரிக்கிறது.
வயிறுப்போக்கு வளரும்/ஏழை நாடுகளில் மிக முக்கியமான வியாதி. பெரும்பாலான ஏழை நாடுகளில் வயிற்றுப்போக்கு பரவும்பொழுது கட்டுக்கடங்காத தொற்றுநோயாக மாறிப்போகிறது. கூடவே இயற்க்கைச் சீற்றங்களுக்குப் பிறகு தேங்கிப்போகும் நீர்நிலைகள், மாசுபட்ட குடிநீர் போன்றவை வயிற்றுப்போக்கை அதிவிரைவாகப் பரப்புகின்றன. இந்த நிலையில் க்ரொஃபெலெமரின் கண்டுபிடிப்பு, அத்துடன் கூட அதைச் சந்தைப்படுத்தும் உத்தி போன்றவை மிக மிக நம்பிக்கைத் தருபவையாக இருக்கின்றன.
* * *
நபோ புதுமையான வர்த்தக உத்தியை அறிவித்திருக்கிறது. இந்த மருந்து பணக்கார நாடுகளில் கிடைக்காது. மாறாக வளரும் நாடுகளில் உள்ளூர் மருத்துவ நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படவிருக்கிறது. இப்படிச் செய்வதன் மூலம் பணக்கார நாடுகளில் தரக்கட்டுப்பாடு, களப்பரிசோதனை போன்ற சிக்கல்களையும் பெரும் முதலீட்டையும் தவிர்க்கப்படுகிறது. கூடவே மருந்துத் தேவை அதிகமிருப்பதால் வளரும் நாடுகளில் உற்பத்தியும் அதிகமாக்க வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் பெரும் சந்தைக்கு நேரடியாகச் செல்வதால் மருந்தின் தயாரிப்பு, சந்தைப்படுத்தல் செலவுகளைக் குறைத்து விலையைக் குறைக்க முடிகிறது.
பின்னர் ஒரு நாளில் அமெரிக்கச் சந்தைக்கு வருவோம் என்று சொல்லும் நபோவிற்கு இப்பொழுதைக்கு அமெரிக்கா பற்றி கவலை கிடையாது. கண்டுபிடிப்பை உடனடியாகச் சந்தைப்படுத்தி, சிக்கல்களைத் தவிர்த்து ஓரளவுக்கு வெற்றியடைந்த பிறகு அந்த முதலை வைத்துக் கொண்டு அமெரிக்காவின் சந்தையை அடைய முடியும் என்று நபோ நம்புகிறது.
தொடரும்….
வெங்கட்,
மருந்து குறித்த விவரங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன, ஆனால் மற்றபடி புரியவில்லை. இங்கே விற்கக் காசில்லாததால் அங்கே சென்று விற்கிறார்கள். அங்கே காசு பண்ணியதும் திரும்ப இங்கே வருகிறேன் என்கிறார்கள். இதில் புரட்சி எங்கே வருகிறது? காசு பண்ணியதும் இவர்களும் ஒரு மெர்க் தானே?
[1]ஸ்ரீகாந்த் – புரட்சி இருக்கிறது. பெரும்பாலான நவீன மருந்துகள் வளரும் நாடுகளைச் சென்று அடைவதேயில்லை. உதாரணமாக, வயிற்றில் அமில அதிகரிப்பைக் கட்டுப்படுத்த பல வகைகள் இருக்கின்றன.
1. Antacid – Tums, Gelusil type – netutralize excess acid with Mg. Temporary relief, no long term cure.
2. H2 Receptor Blocker – Ranitidine family drugs. Reduce acidity by blocking histamine receptors. Slow and long acting relief, no long term cure.
3. Proton Pump Inhibitors – Nexium, Pantoloc – knock out acid producing cells
For a long time we were not getting efficient H2 recptor blockers or PPI drugs in india. For example AstraZeneca still does not market its popular and efficient Nexium in India.
இந்த முறையில் இது மாறிப்போய் முதல்தர கண்டுபிடிப்புகள் உடனடியாக வளரும் நாடுகளைச் சேரும். வேறு வழியில் சொல்லப் போனால் மேட்டிமை வியாபாரமாக இருக்கும் அதிநுட்ப மருந்துவம் சந்தை வியாபாரமாக மாறவிருக்கிறது. (Elitist business practices turn to commodity business) இதுதான் புரட்சி.
I understand. However, this seems to be a turn necessitated more by expediency and cashflow crunch rather than anything else. Meaning, once the need for expediency is gone, business will dial back to its elitist nature.
Also, what about quality control? Admittedly, FDA's process is stringent beyond probably necessary, but are the QC processes associated with this new deployment/marketing adequate?
I guess whenever medicine is involved, there will be bad side effects…
[3]
Srikanth – hold on until I put the second part.
My blog update is not reflected in thamizmanam and the star rating is also not working. Once I fix this, I will put the second part, which answers to your question.
But, I guess the problem is with thamizmanam rather than my blog. I see a very poor update rate in thamizmanam.
For some strange reasons – as I updated the last comment, I saw the stars shining.
And I checked that it works in thamizmanam feeds as well. So the second part will be up soon.
வெங்கட்
மூன்றாம் உலகில் மருந்துகளை வெளியிடுவதனை பாராட்டத்தான் வேண்டும். ஆனால் தண்ணீர் மூலம் பரவும் நோய்களில் பல இந்தியா போன்ற நடுகளில் பூச்சிகளின் (Tenia soleum, Ascaris Lambricoides) போன்றவற்றால் வருவதால் அதற்கான பூச்சி கொல்லி கட்டாயம் தேவை. அதுவண்றி மக்கள் வெராக்சான் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும் போது நீங்கள் குறிப்பிட்டது போல தண்ணீர் அளவு குறைக்க பட்டு நின்றாலும் மலச்சிக்கல் பேண்ர பிரச்சினைகள் வருகின்றன. அமெரிக்காவில் எகோலி யாலும் சல்மொனெல்லாவும் வரும் வயிற்று போக்கு அதிகம். உங்களின் அடுத்த பகுதி இன்னமும் சில மருந்தின்சக்தி, பக்க விளைவுகள், மற்றும் தன்மையை பற்றிய செய்திகளை தரும் என எதிர்பார்க்கிறேன்.இங்கே IBS மூலம் வரும் வயிற்றுபோக்கு என்றால் இமோடியம் உப்யோகிப்பது கூட நீங்கள் சொன்னது போல. முயற்சி வரவேற்க கூடியது தான். இதனால் விலையும் குறைவாக இருக்கும்.ஆனால் எல்ல தடை விதிக்க பட்ட மருந்துகளையும் இன்னமும் இந்திய சந்தையில் வாங்கி அதை இங்கே எடுத்துக்கொண்டு வந்து அப்யோகிக்கும் போது பலவித பக்க விளைவுகள் வருகிறது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். இதற்கு சம்பந்தம் இல்லை என்றாலும் மக்களின் கவனத்திற்காக.
வெங்கட்,
மிக நல்ல பதிவு… ஒரே ஒரு சந்தேகம்…
ஐரோப்பிய அல்லது அமெரிக்க சந்தைகளில் மிகக்கடுமையான தரக்கட்டுப்பாடுகள் இருப்பது நல்லது தானே..வளரும் நாடுகளில் அந்த அளவு தரக்கட்டுப்பாடு இல்லாதது நபோ போன்ற நிறுவனங்களுக்கு தர விஷயத்தில் மேம்போக்காக இருக்க வழி செய்யாதா?