• மத்தியஅரசின் குறுவட்டு கற்பிக்கும் பாடங்கள் – பொருளாதாரம்

    by  • April 21, 2005 • பொது • 8 Comments

    1. பொருளாதாரம்

    {கடந்த சில தினங்களாக மத்திய அரசினால் வெளியிடப்பட்ட குறுவட்டை நான் முழுமையாகப் பார்க்க மேற்க்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. இந்தக் குறுவட்டில் என்னென்ன இருக்கின்றன, இவற்றில் எவை வர்த்தகக் கருவிகள், எவை திறமூலத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்ற முழுமையான விபரங்கள் எனக்குத் தெரிந்தால் உதவியாக இருக்கும். நாராயணனையும் பத்ரியையும் (நானறிந்த வகையில் இந்தக் குறுவட்டு பெற்றவர்கள்) தொடர்பு கொண்டேன். இன்னும் கிடைக்கவில்லை. யாராவது இந்தக் குறுவட்டின் உள்ளடக்கத்தை என்னுடைய வழங்கியில் போட்டால் (அல்லது அவர்களாக ஒரு இடத்தில் போட்டுவைத்துவிட்டு என்னிடம் முகவரி கொடுத்தால்) நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.}

    வர்த்தக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும் பொதிகளுக்கு அரசு பொருளாதார இழப்பைச் சரிகட்டியிருக்கும் என நினைக்கிறேன். முப்பது லட்சம் பொதிகள் வெளியிடப்பட்டிருப்பதாக பினான்ஷியல் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது. பொன்விழி தமிழ் எழுத்துணரியின் விலை மாத்திரம் 5,000 ரூபாய்கள் என்று பத்ரி எழுதியிருந்தார். அதை அரசு 99% கழிவுவிலையில் பெற்றிருந்தாலும், பொன்விழிக்கு மாத்திரம் பதினைந்து கோடி ரூபாய்கள் செலவாகியிருக்கும். இதைப் போலவே பால்ஸ் அகராதி, இன்னும் உதிரி எழுத்துருக்களும் தனியாரிடமிருந்து பெறப்பட்டிருக்கின்றன.

    என்னுடைய மிக, மிக எளிமையான கணக்குப்படி எழுத்துணரிக்கு ஐம்பது ரூபாய், அகராதிக்குப் பத்து ரூபாய், ஒரு எழுத்துருக்கு பத்து காசுகள் என்று கொண்டு (தோராயமாக 150 எழுத்துருக்கள்) – பதினைந்து ரூபாய் இப்படியாகக் கணக்குப் போட்டால் ஒரு குறுவட்டைத் தயாரிக்க எழுபத்தைந்து – நூறு ரூபாய்கள் பிடித்திருக்கும். முப்பது லட்சம் குறுவட்டுகளுக்கு முன்னூறு கோடி. இதிலும் பத்து சதவீத விலையில் அமைச்சகம் காரியத்தை முடித்துவிட்டது என்று கொண்டால் முப்பது கோடி. இதைத் தவிர, அறிவிப்பு, வெளியீட்டு விழா, இத்யாதிகளுக்கான செலவுகள்.

    என்னைப் பொருத்தவரை இந்தப் பொதியில் இதுவரை தமிழர்களுக்கு இலவசமாகக் கிடைக்காத சமாச்சாரம் ஒளிவழி எழுத்துணரிதான். (அதுவும் நேற்று முன்தினம் மாறிவிட்டது). இந்தப் பொதியின் முக்கிய விஷயங்கள் எல்லாவற்றையும் ஒரு தனி மனிதனால் ஆறுமாத முயற்சியில் திரட்டி (ஓப்பன் ஆபீஸ், ·பயர்·பாக்ஸ், தரவிறக்கம் செய்து உதிரி எழுத்துருக்களைப் பொறுக்கிப் போட ஒரு நாள் போதும். பின்னர் கோலோன் வலையகராதி, அல்லது இத்யாதி அகராதிகளைத் திரட்டி அதற்கு எளிதான இடைமுகத்தைச் செய்ய மீதம் ஐந்து மாதங்களைச் செலவழிக்கலாம்). இதைத்தான் தமிழா தொகுப்பில் நண்பர் முகுந்தும் குழுவினரும் செய்திருக்கிறார்கள். இதைத்தான் நான் தனிப்பட்ட முறையில் செய்து என்னுடைய கைக்காசைப் போட்டு கிட்டத்தட்ட இதுவரை ஐநூறு அறுநூறு சிடிக்களை இலவசமாக விநியோகித்திருக்கிறேன். என் தளத்தில் போட்டு இறக்கிக் கொள்ளும் வசதியும் செய்திருக்கிறேன். (என்னுடைய பொதியில் எழுத்துரு மாற்றிகள், முழு மதுரைத் திட்டத் தொகுப்பு, குழந்தைகளுக்கானவை, இவற்றுடன் கூட இன்னும் தமிழ்ப்படுத்தப்படாத இலவ எம்பி3 இயக்கி, ஒலித்திருத்தும் நிரலிகள் என்று பலவும் உண்டு).

    சி-டாக்கில் இந்தப் பொதியைச் செய்துமுடிக்க எத்தனைபேர் கொண்டு குழு அமைக்கப்பட்டது. அவர்களுக்கான ஆறுமாத சம்பளம், இத்யாதி செலவுகளும் உண்டு. முகுந்தோ, நானோ விளையாட்டாகச் செய்யும் இதற்குத்தான் மத்திய அரசு மார்தட்டிக் கொண்டிருக்கிறது.

    * * *

    இனி அடுத்த கட்டத்தைப் பார்ப்போம். தமிழணங்கிற்கு மாத்திரம் ஆபரணம் சூட்டி மகிழ்ந்தால் பிற இந்தியர்கள் சும்மா விடுவார்களா? சுந்தரத் தெலுகிற்குச் சுண்ணாம்பு அடிக்க வேண்டும், தேவபாஷை சமஸ்கிருதத்திற்குச் சந்தனம் பூச வேண்டும், பொங்கியெழப்போகும் பெங்காலிகளுக்கும் பொதி தயாரிக்க வேண்டும். தமிழுக்கு மாத்திரம் முப்பது கோடி என்றால் ஒரு ரூபாய் நோட்டிலிருக்கும் பிற மொழிகளுக்கும் டெண்டர் பெருகியோட வேண்டுமல்லவா?

    இதற்கெல்லாம் சராசரி இந்தியனின் வரிப்பணம் எவ்வளவு செலவாகும்?

    * * *

    உண்மையில் இந்த சி-டாக் பொதியிலேயே மிகவும் சிக்கலானவை எவை? ஓப்பன் ஆபிஸ் மற்றும் ·பயர்·பாக்ஸ். ஒரு பொன்விழியை ஏழாயிரத்திற்கும் ஐயாயிரத்திற்கும் விற்க முடிகிறதென்றால் சிக்கலான அலுவல் செயலி, பாதுகாப்புச் சிறப்புள்ள உலாவி இவற்றைத் தயாரிக்க என்ன செலவாக வேண்டும்? எனக்குத் தெரிந்த வகையில் இந்தியாவில் மைக்ரோஸாப்ட் ஆபீஸ் பொதியில் மாணவர் உரிமை 7,000 ரூபாய்கள். இதில் மைக்ரோஸாப்ட் 90% இந்திய அரசுக்குத் தள்ளுபடி தருவதாகக் கொண்டாலும் (இந்த அளவுத் தள்ளுபடியை மைக்ரோஸாப்ட்டிடமிருந்து கனவிலும் எதிர்பார்க்க முடியாது). ஒரு பொதிக்கு 700 ரூபாய், முப்பது லட்சம் பொதிகள் என்றால் இந்திய அரசு இதற்காக எவ்வளவு செலவிட்டிருக்கும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். நாளை இதையே தெலுகிலும் தேவநாகரியிலும் மைக்ரோஸாப்ட்டுடன் செய்ய எவ்வளவு செலவாகும்? பின்னர் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து மைக்ரோஸாப்ட் புதிய பொதியை விற்கும் பொழுது இதே செலவைச் சிந்தித்துப் பாருங்கள். (வேறு வழியில்லை வாங்கித்தான் ஆகவேண்டும், இரண்டு வருடம் கழித்து நீங்கள் எக்ஸெல் கோப்பைத் திறக்க வேண்டாமா? அப்பொழுது நீங்கள் வாங்கிய வடிவத்தில் இருக்கும் பாதுகாப்பு ஓட்டைகள் உங்களை அடுத்த வடிவம் வாங்கப் பணிக்கும்).

    இதன் பொருளாதார உச்சம் ஒருக்காலத்திலும் ஒரு அலுவல் பொதியை இலவசமாகக் கொடுப்பதை இந்திய அரசுக்குச் சாத்தியமில்லாமல் செய்திருக்கும். மத்திய அரசின் இந்த வெளியீடு திறமூலத்தில் மாத்திரமே சாத்தியம்.

    இதுதான் திறமூலத்தின் உன்னதம். 700 ரூபாய் X முப்பது லடசம் பொதிகளுக்கானதில் நூற்றில் ஒரு பகுதியை இந்திய அரசு திற மூலத்தில் செலவிட்டால் அதனால் இந்தியாவிற்கான பயன்களை எதிர்பாருங்கள். ஏற்கனவே இலவசமாகக் கிடைக்கும் ஒப்பன் ஆபீஸை இந்தியாவில் அனைத்து மொழிகளும் உள்ளூர்மயமாக்கலாம். அதையும் தாண்டி அதை முழுவதும் இந்தியாவிற்கானதாக மாற்றி கொள்ளலாம்.

    எல்லாவற்றுக்கும் மேலாக நாம் யாரோ செய்த கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கமாட்டோம், நமக்கான கருவிகளை நாமே உருவாக்கிக் கொண்டிருப்போம். இதைப் பொருளாதராகக் கணக்குப் போட எனக்குத் திராணியில்லை.

    * * *

    இந்த முப்பது லட்சம் சிடிக்கள் நேரத்தில் ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கும் தெரிய வேண்டிய அடிப்படைப் பொருளாதாரப் பாடம் இது.

    (அடுத்த பாடம் மென்கலன் பொதியாக்கம்)

    8 Responses to மத்தியஅரசின் குறுவட்டு கற்பிக்கும் பாடங்கள் – பொருளாதாரம்

    1. M K Saravanan
      April 21, 2005 at 9:52 am

      The content of the CD can be downloaded from http://www.ildc.in/

      Contents:

      Tamil Bhartiya OO
      Tamil Fonts
      Tamil Dictionary
      Nursery Rhymes
      Tamil OCR
      Tamil Text Editor
      Tamil Email
      Tamil Browser

      – mks –

    2. April 21, 2005 at 12:29 pm

      Venkat, try using wget or similar tools rather than downloading through browser. You can easily get the OCR and fonts I guess. The dictionary is 70+ megs and is very good. I'll put that up in my webspace and will give you the link.

    3. April 21, 2005 at 1:10 pm

      [1] சரவணன், அந்தத் தளத்தில் பெயர் கடவுச் சொல் கேட்கிறது. பதிய முடியவில்லை.

      உங்கள் இன்றைய மின்னஞ்சல்கள் கிடைத்தன. மிக்க மகிழ்ச்சி. விரைவில் எழுதுகிறேன்.

    4. April 21, 2005 at 1:11 pm

      [2] யக்ஞா, எப்படிப் பதிவு செய்துகொள்வது? உங்கள் இடத்தில் முடிந்தால் போடுங்கள்.

    5. Yagna
      April 22, 2005 at 3:04 am

      [4] Here is the dictionary: http://web.ics.purdue.edu/~ykalyana/Pals.zip…
      and here is the PonVizhi OCR http://web.ics.purdue.edu/~ykalyana/PonVizhi.zip…
      I also downloaded the fonts. Let me know [email preferably, as I have some problems in accesssing ur blog] if you want to try that as well.
      You dont need to register in the site actually. Whatever menu you are going to try, get the name of the html page its pointing to. And that file is located here:
      http://www.ildc.in/GIST/htm/ <filename.htm>
      Thats it and also let me know if you are done downloading.

    6. April 22, 2005 at 8:10 am

      வெங்கட்: C-DAC தளத்தில் ஃபயர்ஃபாக்ஸ் மூலம் பதிவு செய்துகொள்ள முடியாது:-) அதற்கு இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் தேவை. நான் பலமுறை ஃபயர்ஃபாக்ஸ் ஊடாகப் பதிவு செய்ய முயற்சி செய்து, நொந்துபோய், திடீரெனத் தோன்றியதால் IEஐப் பயன்படுத்தினேன். இந்த லட்சணத்தில் இவர்கள் தமிழ்ப்படுத்திய ஃபயர்ஃபாக்ஸைக் கொடுத்திருக்கிறார்கள்!

      மற்றபடி நாளை சற்று பொறுமையாக உங்களது தளத்துக்கு சிலவற்றை ஏற்றிவைக்கிறேன்.

      இதை நாம் செய்யும்போது சில விதிகளை மீறலாம். பிறர் இலவசமாக இந்த மென்பொருள்களை விநியோகிக்க முடியுமா, முடியாதா என்பதற்கு சரியான பதில்கள் இல்லை.

      மேலும் நான் இன்று கேட்டறிந்த வகையில் பொன்விழி மென்பொருளுக்காக மத்திய அரசு LearnFun Systems நிறுவனத்துக்கு ரூ. 3 லட்சம்தான் கொடுத்துள்ளதாம். அதற்குப் பதிலாக மத்திய அரசு எத்தனை நகல்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் போலிருக்கிறது.

      இனி பொன்விழி மென்பொருள் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும். அதில் மிகவும் அதிகமான முறையில் ஏதேனும் சேர்த்தாலொழிய யாரும் அதை விலைகொடுத்து வாங்க மாட்டார்கள்.

      மத்திய அரசு கொடுத்த இந்த விலை மிகக் குறைவு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

      அதே சமயம் சற்றும் உபயோகமில்லாத சில எழுத்து வடிவங்களுக்கு – உதாரணம் சென்னை கவிகள் டாம் டாப் எழுத்து வடிவங்கள் – எத்தனை பணம் தரப்பட்டது என்று தெரியவில்லை. என்னைக் கேட்டால் அந்த எழுத்து வடிவங்களே வேண்டாம் என்று விட்டிருப்பேன்.

      இதுபற்றி தோண்டித் துருவி இன்னமும் சில தகவல்கள் சேகரிக்கிறேன்.

    7. April 22, 2005 at 12:29 pm

      [6] பத்ரி – கடவுச் சொல் பதிவு மண்ணாங்கட்டியெல்லாம் தேவையில்லை. சிடாக்கின் பாதுகாப்புத் தொழில்நுட்பம் அப்படியிருக்கிறது. ஒட்டுமொத்தமா எல்லாவற்றையும் இறக்கிக் கொண்டிருக்கிறேன். இணைப்பு மிகமிக மோசம்.

      இன்றைய என்னுடைய பதிவைப் பாருங்கள். இந்த முழு சிடி விவகாரத்தையும் பற்றி இப்பொழுது என்னால் ஓரள்வுக்கு ஊகிக்க முடிகிறது.

    8. April 22, 2005 at 12:32 pm

      [6] >இதை நாம் செய்யும்போது சில விதிகளை மீறலாம். பிறர் இலவசமாக இந்த மென்பொருள்களை விநியோகிக்க முடியுமா, முடியாதா என்பதற்கு சரியான பதில்கள் இல்லை.

      எனக்கு அப்படித் தோன்றவில்லை. கடவுச் சொல் இல்லாமல் வெறும் உலாவியிலிருந்து இறக்கிக் கொள்ளும் வசதியிருப்பதால் இதைப் பகிர்வதில் எந்த விதியையும் மீறுவதாகத் தெரியவில்லை.

      மேலும் பதிப்புரிமை கேவலமாக எழுதப்பட்டிருக்கிறது. இதில் நகலெடுக்கக் கூடாது என்று எங்கும் போடவில்லை.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *