• நாஸாவின் அடுத்த திட்டங்கள்

    by  • September 20, 2005 • அறிவியல்/நுட்பம் • 3 Comments

    Nasa future mission

    டிஸ்கவரி விண்ணோடத்தின் கடந்த பயண முடிவில் தன்னுடைய விண்ணோட முயற்சிகளைக் காலவரையறையின்றி ஒத்திப் போடுவதாக அறிவித்திருந்த நாஸா நேற்று தன்னுடைய வருங்காலத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. அடுத்த பத்து வருடங்களுக்குள் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஏவுகலங்கள் மூலம் தன்னுடைய விண்ணாய்வாளர்களை நிலவில் இறக்கி ஆராய்ச்சிகள் நடத்துவது என்றும் அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வாக்கில் மனிதர்களை செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்புவது என்றும் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

    மிக விரிவாக முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டங்களில் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. சில கேள்விக்குரியவையாக இருக்கிறன. பொதுவில் நுட்பம் சம்பந்தப்பட்ட தகவல்கள் நல்லனவாகவும் திட்டமிடல், பொருளாதாரம் குறித்தவை கேள்விக்குரியவையாகவும் இருக்கின்றன. புதிதாக வடிவமைக்கப்படும் கனந்தூக்கி ஏவு முறை (Heavy-lift Launching) என்பது புதுமையானதும், முன்னோக்கிய சிந்தனையாகவும் இருக்கிறது. கூடவே இதில் மீத்தேன் அடிப்படியிலான எரிபொருள்கள் பயன்படுத்துவதும் நல்ல முயற்சி (இது நீண்ட எதிர்காலத்தை மனதில் கொண்டது என்று நாஸா சொல்கிறது; செவ்வாயின் மண்டலத்தில் மீத்தேன் நிறைய இருப்பதால் இதை எரிபொருளாகப் பயன்படுத்துவது சிக்கனமானதாக இருக்கும்). அப்போலோ முயற்சிகளின் மீது கட்டப்படும் இந்த புதிய ராக்கெட்டுகள் அதைவிட மிகக் கனமானதாகவும், அதிக ஆய்வாளர்களைத் தாங்கிச் செல்வனவாகவும் இருக்கும்.

    மறுபுறத்தில் நீண்ட திட்டம் என்பது கேள்விக்குறியதாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் இரண்டு ஜனாதிபதிகள் அமெரிக்காவில் வந்து போவார்கள். அவர்கள் இருவரும் இந்தத் திட்டத்தை முழுமனதுடன் ஆதரிக்காவிடில் இது மறைந்து போகும். கூடவே $104 பில்லியன் என்பது மிகப் பெரிய தொகை. அமெரிக்காவின் பொருளாதாரம் இப்பொழுது அவ்வளவு உன்னதமான நிலையில் இல்லை. சமீபத்திய குடியரசுக்கட்சி ஆட்சியில் வரிகளைத் தவிர்த்து வருகிறார்கள். கூடவே 9/11, கத்ரினா, இவான் என்று திட்டமிடாத செலவினங்களும் அதிகமாக இருக்கின்றன. இந்த நிலையில் 105 பில்லியன் என்பது வெறும் கனவாக முடியும் அபாயம் நிறையவே இருக்கிறது. கூடவே, சமீப காலங்களில் அமெரிக்காவில் விண்ணாராய்ச்சிக்குப் பொதுமக்கள் ஆதரவு குறைந்து வருகிறது. இந்த நிலையில் திட்டமிடலுக்கு மக்களிடமிருந்து அவ்வளவாக வரவேற்பு இருக்காது என்று தோன்றுகிறது (வருத்தத்திற்குரிய விடயம்). கூடவே பனிப்போர் காலங்களில் இந்த விண்ணாராய்ச்சிக்கு இலக்கு, உத்வேகம் என்று இருந்தன. கென்னடியின் கனவுகள் அமெரிக்கர்களை உசுப்பிவிட்டன. இப்பொழுது அவையெல்லாம் இல்லாத நிலையில் மக்கள் இதைக் கேட்டுத் துள்ளிக் குதிக்கப்போவதில்லை.

    இவையெல்லாம் கட்டாயம் நடக்க வேண்டும். இன்றைய நிலையில் இதுபோன்ற கனவுத்திட்டங்களுக்கு நாஸாவைத் தவிர வேறு யாராலும் முடியாது. ஆனால் முகத்தில் அறையும் உண்மை இது காணல் நீராகப் போய்விடுமோ என்று அச்சத்தைத் தருகிறது.

    பின் குறிப்பு: நாஸாவின் தளத்திற்குப் போய் அங்கே அவர்கள் திட்டமிட்டு உருவாக்கியிருக்கும் சலனப்படங்களைக் கட்டாயம் பார்க்க உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

    3 Responses to நாஸாவின் அடுத்த திட்டங்கள்

    1. neo
      September 21, 2005 at 4:06 am

      வெங்கட் அவர்களே,

      இந்தப் பதிவுக்கு நன்றி! அவசியம் நாஸா தளத்துக்குச் சென்று அந்தப் படங்களைப் பார்க்கிறேன். நாஸாவின் வெற்றிகள் அமெரிக்காவுக்கு மட்டுமன்றி எதிர்கால மனித சமுதாயத்துக்கே புதிய நம்பிக்கைகள் தரும் விசயம்.

      Technology பற்றி உங்களிடம் பேசலாம் என்பதால் பின்வரும் வேண்டுகோள். இப்போது Google Earth World viewer-ம்,நாஸாவின் வோர்ல்ட் விண்ட்-ம் உலக உருண்டையை நம் வீட்டுக்குள்ளேயே கொண்டு வரும் மென்பொருள் கடவுள்களாகி விட்டன!

      கூகிள் எர்த்- மூலம் ஒரு அமெச்சூர் ஆய்வாளர், இத்தாலியில் ஒரு பண்டைக்கால 'ரோமன் வில்லா'-வை கண்டுபிடித்திருக்கிறார்.

      சென்ற பத்தாண்டுகளில் செயற்கைக்கோள மூலமாக சில பல அரிய பண்டைய நகரங்கள் குறித்து கண்டறியப்ப்பட்டிருக்கிறது.

      உ-ம்:

      1. கம்போடியாவின் அங்கோர்வாட்டுக்கு அருகே அடர் காடுகளில் புதையுண்டு கிடந்த பண்டைய நகரம்

      2. 'பெரு'வின் Lake Titicaca -வின் அடியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால நகரம்.

      இதுபோல நம்முடைய குமரிக்கண்டம் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமா? என்று அறிய ஆவல் :)

      குமரிக்குத் தற்கே கடலடியில் தெரிகிற Topographical anamolies பற்றி ஆய்வாளர்கள் கண்டுணர்ந்துள்ளனரா? என்று தெரியவில்லை.

      இது குறித்து என் எண்ணத்தை இங்கே இட்டிருக்கிறேன்.

      இது குறித்து தமிழின் தொன்மை குறித்த ஆர்வலர்கள் மேலதிக விவரங்க்ள் தருவார்களா என்று அறிய விருப்பம்

    2. September 21, 2005 at 1:22 pm

      நியோ – உங்கள் வருகைக்கு நன்றி! கூகிள் எர்த் மூலம் கண்டறியப்பட்ட அந்த ரோமன் கட்டிடத்தைப் பற்றி தொழில்நுட்ப ரீதியான கட்டுரைகள் எதுவும் எனக்குச் சிக்கவில்லை. (எல்லாம் ஒரு வரி அரை வரி வலைப்பதிவுகள்தாம்).

      தொல் தமிழ் நாகரீகம், நிலப்பரப்பு போன்றவற்றில் என்னுடைய அறிவு மிகவும் குறைவுதான். மேலதிக விபரங்களை யாராவது விஷயம் அறிந்தவர்கள் தந்தால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்.

    3. neo
      September 23, 2005 at 5:55 pm

      வெங்கட் அவர்களே!

      உங்கள் பதிலுரைக்கு நன்றி! :)

      ஆயினும், என்னைப் போன்ற பாமரர்களுக்கு – இது போன்ற Marine geology / Ocean archaelogy போன்ற சமாச்சாரங்கள் தெரியாததால் (சுஜாதாவா இருந்தா இந்நேரம் ஒரு expert opinion குடுத்துருப்பாரு!)யாரிடம் இதைப் போய் கேட்பதென்று தெரியாமல் இங்கே வந்து உங்களைக் கடித்துக் கொண்டிருக்கிறேன்!! :)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *