நாத்திகத்தின் கையில் அறிவியல் – பிரேம்-ரமேஷை முன்வைத்து
by வெங்கட் • May 26, 2005 • இலக்கியம் • 17 Comments
பிரேம்-ரமேஷின் இந்தக் ‘கடவுளைக் கொல்பவர்கள’் கட்டுரையில் அறிவியலைக் குறித்த தவறான புரிதல்கள் விரவிக்கிடக்கின்றன. இது பிரேம்-ரமேஷிற்கு மாத்திரமான தவறான புரிதல் (அல்லது பொய்ப்பிரச்சாரம்) என்று சொல்ல வரவில்லை. நம்மிடையே அறிவியலைக் குறித்த அக்கறை அவ்வளவுதான் இருக்கிறது.
(கடவுளைக் கொல்பவர்கள் கட்டுரைப் பற்றி என் விமர்சனத்தின் முந்தைய பகுதி )
“இன்றைய அறிவியல் கடவுள் மறுப்பில் தொடங்கியது. உலகின், பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த விதிகளைக் கண்டறிய தெய்வீக விளக்கங்கள் பயன்படாது என்று கண்டவர்கள் மேற்குலக அறிவியலின் தொடக்கத்தைச் செய்தார்கள். வேதங்களும் சமய நூல்களும் மறைத்தவற்றைத் தேடி இவர்கள் வேறு திசையில் நடந்தார்கள். அரிஸ்டாட்டில் தொடங்கி ஐன்ஸ்டைன் வரை மறைக்கப்பட்ட தெய்வீக சந்தேகங்களைப் பிளந்து பார்க்கத் தொடங்கியவர்களே”
கட்டுரையின் நோக்கத்திற்காகத் திரித்துச் சொல்லப்படும் இவற்றில் சற்றும் உண்மை கிடையாது. இதைப் படிப்பவர்களுக்கு அரிஸ்ட்டாட்டிலும் ஐன்ஸ்டைனும் தங்கள் ஆராய்ச்சியின் துவங்கங்களாக சமய நூல்களைக் கொண்டார்கள் என்ற மாயபிம்பம் உருவாகும். ஏதோ ஆராய்ச்சி செய்யும்பொழுது அரிஸ்டாட்டிலின் இடக்கரத்தில் பைபிள் இருந்ததாகத் தோற்றமளிக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஐன்ஸ்டைன் பிளந்து பார்த்தது தெய்வீக சந்தேகங்களையல்ல, அது அன்றளவின்பாற்பட்ட அறிவியல் புரிதல்களையே.
அறிவியலின் தொடக்கம் கடவுள் மறுப்பில் கிடையாது; அது கடவுளிலும் கிடையாது. அறிவியலின் ஒரே நோக்கம் மெய்காணல். இதற்கு ஆத்திகமும் நாத்திகமும் எந்த வகையிலும் துணைக்கு வராது. அறிவியலின் தொடக்கம் அறிவியல்தான். அவர்களை வழிநடத்துவது சந்தேகங்கள். சொல்லப்பட்ட எந்த ஒரு வாக்கியத்தையும் அவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். மறுப்பு அவர்களின் பிறவிக்குணம். பூமி தட்டை என்று சொன்னால், முதலில் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அது தட்டையாக இல்லாமலிருக்க என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்று பட்டியலிடுகிறார்கள். தாங்கள் பட்டியலிடும் அதே காரணங்களை அவர்கள் மறுதலித்து, சோதித்துப் பின்னர் தெளிவு பெற்றே ஏற்றுக்கொள்கிறார்கள். தொடர்ச்சியான இந்த நிலையில் பூமியின் உண்மை வடிவம் வெளிப்படுகிறது. அதையும் பல்வேறு காரணிகளின் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு திரமான கோட்பாட்டை முன்மொழிகிறார்கள். இதுதான் அறிவியல் வழி. இதில் கடவுள் மறுப்பு எங்கிருந்து வருகிறது?
அறிவியலில் பயன்படுத்தப்படும் ‘மறுப்பு’ (refuting) என்ற ஒற்றைச் சொல் நாத்திகர்களின் பிரச்சாரத்திற்குத் துணைப்போகிறது. “அவ்வளோ பெரிய சயின்டிஸ்ட் அவரே சாமி கும்புடுறார்” என்று ஆத்திகர்கள் பரப்புவது எவ்வளவு தவறோ அதே அளவுக்கு “அறிவியல் நாத்திகத்தை உறுதி செய்கிறது” என்பதும் நாத்திகர்களின் சுயநலப் பொய்ப்பிரச்சாரம். அறிவியல் அதன் வழியில் உண்மைகளைக் கண்டறிந்துகொண்டே போகிறது. ஆத்திகர்களும் நாத்திகர்களும் அறிவியலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். இதில் ஒருவருக்கொருவர் சற்றும் குறைந்தவரல்லர்.
தொடர்ந்து அதே பத்தியில் கலிலியோவின், டார்வினின் கண்டுபிடிப்புகள் வைதீக நம்பிக்கைகளைக் கேள்விக்குறியாக்கியதைக் கூறும் பிரேம்-ரமேஷ் அறிவியலுடன் மறுமலர்ச்சி சிந்தனையாளர்களையும் கலைஞர்களையும் சேர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இவர்கள் எல்லோருமாக “..இறையிருப்பைக் கேள்விக்குள்ளாக்கியபடி மர்மங்களை உடைத்து வேறு மர்மங்களை உருவாக்கினார்கள்… கொல்லப்பட்ட, தண்டிக்கப்பட்ட தெய்வங்களை மீட்டு மீண்டும் தெய்வீகப் போர்க்களங்களைக் கட்டியெழுப்பினார்கள் இவர்கள்” என்று சொல்கிறார்கள் பிரேம்-ரமேஷ். இந்த இடத்தில் அறிவியலாளர்கள் ஏதோ மர்மங்களை உருவாக்குவதைப் போன்ற தவறான எண்ணம் விதைக்கப்படுகிறது. உண்மையில் அறிவியலாளர்கள் புனைகதையாளர்கள், ஓவியர்களைப்போலத் தங்களை இப்படியெல்லாம் பறைசாற்றிக் கொள்வதில்லை. அவர்களுக்கு மர்மம் எதுவும் கிடையாது சந்தேகங்கள்தான் இருக்கின்றன. அந்தச் சந்தேகங்களைக்கூட அவர்கள் உருவாக்க வேண்டியதில்லை; அவை அவர்களுக்குக் கிடைக்கும் விடைகளுடன் இலவச இணைப்புகளாக வருகின்றன.
உருவாக்குதல், அழித்தொழித்தல், மர்மங்கள் இவையெல்லாம் கலைஞனின் இறுமாந்த நிலையில் தோன்றும் அதீத உணர்வுகள். உண்மையான அறிவியலாளர்கள் இப்படியெல்லாம் ஒருபொழுதும் குன்றேறி நின்றுக் கூவுவதில்லை. உண்மையைக் கண்டறிந்துவிட்டதாகப், படைத்துவிட்டதாக அவர்கள் ஒருபோதும் மார்தட்டிக்கொள்வதில்லை. அவர்கள் உலகத்தில் ஒன்றுதான் நிரந்தரம் – அது சந்தேகம். அவ்வப்பொழுது வரும் தெளிவுகள் அவர்களின் நெடும்பயணத்தில் கிடைக்கும் சிறு நிழல்கள். அவர்கள் பயணம் தீராத நெடும்பயணம் என்ற தெளிவு அவர்களுக்கு எப்பொழுதும் உண்டு. ஒற்றை ஓவியத்தைத் தீற்றிவிட்டு, புனைவை எழுதிவிட்டு எய்தும் இறுமாப்பு அறிவியல் உலகிற்கு அந்நியமானது. புதுராகம் படைத்ததாலே நானும் இறைவனே – ரீதியான மார்தட்டல்களுக்கு அறிவியலில் இடமில்லை.
“சாத்தானின் பெருவலிமை வேர்களுக்குத் தேவைப்பட்டது. அதே சமயம் கடவுளும் சாத்தானும் தமது ரகசிய நிலவறையில் மது அருந்தியபடி சதுரங்கம் விளையாடிக் கொண்டிருப்பதை சாவித்துவாரத்தின் வழியே கண்டு மிரண்டுபோனார்கள். இவர்களின் அடுத்த முயற்சி புதிய தெய்வங்களை உருவாக்குவதில் முடிந்தது. ‘இறைமறுப்பு’ இவ்வகையாக காலனிய வரலாற்றைத் தொடங்கி வைத்ததுடன் புதிய வகை அழிவின் வலைப்பின்னலையும் உருவாக்கித் தந்தது. நவீன அறிவியலும், நவீன கொடுங்கோன்மையும் இவ்வாறாக இறைமறுப்பில் தொடங்கி மனித மறுப்பில் முடிந்தன”
இது அறிவியல் மீது சற்றும் உண்மையில்லாத குற்றச்சாட்டு. அறிவியலுக்கும் இறைமறுப்புக்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பதைக் கண்டோம். நவீன அறிவியலை நவீன கொடுங்கோன்மையுடன் சேர்த்துவைப்பது மாபெரும் ஜல்லியடி. அறிவியல் குறித்த குறைந்தபட்ச தெளிவுள்ளவர்கள் யாரும் இப்படி ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டுகளை வைக்கமாட்டார்கள். நவீன, தொல் அறிவியல் எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து ஒரே ஒரு இலக்குதான் உண்டு; அது மெய்காணல். உண்மையை அறியும் முயற்சி தவிர வேறெந்த விஷயங்களும் அறிவியலாக மாட்டா. அறிவியலின் முடிபுகள் காலம் காலமாக அரசியல் வன்முறைக்கும், பொருளாதாரச் சுரண்டல்களுக்கும் பயன்பட்டு வந்தாலும், அறிவியலின் நோக்கங்கள் மீது எந்தக் குற்றங்களையும் சுமத்த முடியாது. இந்த நூற்றாண்டின் மாபெரும் அவலங்களான ஹிரோஷிமா, நகசாகியைத்தான் எல்லோரும் முதலாகச் சுட்டுவார்கள். இது ஆதிக்கப் போராட்டத்திற்கு அறிவியலின் உண்மைகளைப் பயன்படுத்திக் கொண்ட அரசியல் அவலம். இவர்களது அற்புதத் திறன் குண்டை வெடித்துவிட்டு அதை நவீன அறிவியலின் தலையில் சுமத்தும் பொய்பிரச்சாரத்தையும் வெட்கமின்றி மேற்கொள்வது. “ஐன்ஸ்டைனே வருந்தினார்” போன்ற வாதங்கள் இங்கே எடுபடாது. அணுவைப் பிளப்பதால் சக்தி உருவாதலைக் கண்டு ஐன்ஸ்டைன் வருந்தவில்லை.
தன்னுடைய கண்டுபிடிப்புகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு எந்த அறிவியலாளனுக்கும் வருத்தம் தோன்றுவது இயற்கையே. அவர்களுக்கே உண்மையில்லை என்று தெரிந்தாலும் “ஏதோ ஒருவகையில் நானும் காரணமாகிவிட்டேனே” என்று சகமனிதனின் துக்கத்திற்கு வருந்துவதை இவர்கள் திறமையாகத் தங்கள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதைச் சொல்லும்பொழுது ஐன்ஸ்டைனுக்கே தெரியும்; தானில்லாவிட்டால் இன்னொரு விஞ்ஞானி இதைக் கண்டறிந்திருக்க முடியும்.
இந்த இடத்தில் அறிவியலுக்கு எதிராக அரசியலும் பிற விளம்பரத்துறைகளும் எப்படித் திறமையாகச் செயல்படுகின்றன என்று பார்க்கலாம். அரியலூர் இரயில் விபத்திற்குத் தான் முழுக்காரணமில்லாவிட்டாலும் தன் பதவியைத் துறந்த லால்பஹதூர் சாஸ்திரியை உத்தமர் என்று போற்றுவார்கள் (மன்னிக்கவும் தற்கால அரசியலில் எனக்கு உதாரணங்கள் கிடைக்கவில்லை). இதை அரசியல் நேர்மை என்று பாராட்டுவார்கள். மறுபுறத்தில் அதேபோல் தான் காரணமில்லை என்று தெரிந்தும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் புலம்பினால் அதையே ஒப்புதல் வாக்குமூலமாக மாற்றி அறிவியலின் மீது கோடரியைப் பாய்ச்சுவார்கள். காலம் காலமாக அறிவியலுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமை இது. இதே போல இன்றைய சிக்கல்களான உலகளாவிய சூடேற்றம், மாசுப்படுத்தல், உயிர்ப்பன்முகக் குறைவு, நவீன நோய்கள், நவீன போர்நுட்பங்கள் இப்படி எல்லாவற்றுக்கும் பழியைத் திறமையாக அறிவியலின்மீது போட்டுவிட்டு, அரசியல்வாதிகளும் வர்த்தகர்களும் தாங்கள் செய்யும் ஏமாற்றல்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். உலகைக் கட்டிக் காப்பதாகக் கூறும் கலைஞர்களோ புரிதல் சற்றுமின்றி அவர்களது வர்த்தகத்திற்கு இலவச விளம்பரங்களைச் செய்வதைத் தங்கள் பிறவிக்கடனாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரது ஒட்டுமொத்த பிழைப்பிற்கு அறிவியலைப் பலிகொடுக்க யாரும் தயங்கமாட்டார்கள்.
{பின்குறிப்பு : சமூகத்தில் அறிவியலைக் குறித்த பிரக்ஞையின்மைக்கு அறிவியலாளர்களும் ஒருவகையில் முக்கிய காரணம். அறிவுத்தேட்டம் கொண்ட ஒவ்வொருவருக்கும் அறிவுப்பரவலாக்கம் முக்கியமானதாக இருக்க வேண்டும். தம்மாலான அளவு சிறிய அளவில் கூட கற்றவர்களில் பலர் பிற்ருக்கு எடுத்துச் சொல்வதில்லை. இவர்களுக்கு நேரமில்லை என்பது ஒரு முக்கிய கூப்பாடாக இருக்கிறது. ஐன்ஸ்டைன், ஃபெய்ன்மான், லினஸ் பாவ்லிங், ப்ரான்ஸிஸ் கிரிக், ரிச்சர்ட் டாக்கின்ஸ், மாக்ஸ் டெல்ப்ரூக் என்று பல அதியுன்னத விஞ்ஞானிகளுக்கெல்லாம் இதற்கு நேரமிருந்திருக்கிறது என்பதை இவர்கள் மறந்துபோகிறார்கள். வர்த்தகமும், அரசியலும், கேளிக்கையும் நிறைந்த இந்த உலகில் அறிவியலின் குரல் ஒடுக்கப்பட்டே ஒலிக்கிறது).
உண்மையில், தங்கமணியின் பதிவுவழி சிலநாள் முன்னர் ரமேஷ்-பிரேமின் இந்தக் கட்டுரையைப் படித்தபோது எனக்கும் சில இடறல்கள் எழுந்தன. அறிவியல் ஏதோ செமிட்டிய மதங்களுடன் இணைந்து எழுந்து வந்ததென்பதுபோல் எழுதப்பட்டிருப்பது ஒரு இடறலாகவே பட்டது. பண்டைய ஆத்திகம் (மதங்களுக்கு முந்தைய என்று ஒரு கணக்கிருப்பின்) என்பதை எந்த அளவுகோல்கொண்டு அளப்பது என்பது ஒருபுறமிருக்க, பரிணாமவளர்ச்சி பற்றிக் கூறுகையில், ஆதியாகமத்தை மறுப்பதற்காகவே பரிணாமவளர்ச்சி டார்வினால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதுபோன்ற தொனி இருப்பதாகவும் பட்டது. டார்வினின் பரிணாமவளர்ச்சித் தத்துவம் creationismஐ அசைத்தது என்பது ஒரு குறிப்பிட்ட புவியியற்பரப்பில் நிகழ்ந்ததே தவிர, அதை (இறைநம்பிக்கை மீதான பரிணாமவளர்ச்சியின் தாக்கத்தை) உலகம் முழுவதும் இந்தரீதியில் பொதுமைப்படுத்துவது கடைசியில் அறிவியலையுமொரு வருங்கால மதம் மாதிரி ஆக்கும் விபரீதமான திசையில் சென்றுவிடக்கூடாதென்றுதான் தோன்றுகிறது. பிரஜாபதியின் முட்டை அப்போது என்ன ஆயிற்று என்று இந்தியாவில் கூக்குரல்கள் எழவில்லை, எழுந்த கூக்குரல்களும் நிலைபெற்றதாகத் தெரியவில்லை (மூன்றாமுலக நாடு என்கிறோம், பரிணாமவளர்ச்சியை எந்தத் தொந்தரவுகளுமில்லாமல் இயன்றளவு நேர்மையாகப் போதிக்கும் நமது வகுப்பறைகளைப் பார்க்கையில், உலகத்தின் பிற mental third worldsஐ நினைத்துப் பெருமூச்சுதான் விடமுடிகிறது) எத்துறையில் தோன்றியதென்று வரையறுக்கமுடியாத பட்சம்/பிரதிபட்சம் (thesis/antithesis) போன்ற வரையறுக்கச் சிக்கலான, பெரும்பாலும் அறிவியலுக்குப் பொருந்தக்கூடிய கருத்தாக்கங்களை மீமெய்யியலுக்கும், பின்பு அங்கிருந்து செல்லும் ஒருவழிப்பாதையாக மதத்துக்கும் பொருத்தமுயல்கையில் கரையும் எல்லைகளில் அதிக நஷ்டம் நிகழ்வது அறிவியலுக்கே. கட்டுரையின் பெரும்பாலான பகுதிகளுடன் ஒப்புதலிருப்பினும், நீங்கள் குறிப்பிடுவதுபோல அறிவியல் குறித்த பகுதிகள் என்று அக்கட்டுரையில் பார்க்கையில் பட்டது ஏதோ ஒரு romanticized புரிதல் என்பதுபோல் மட்டுமே.
சந்தேகங்களுக்கு விடை காணவே ஆரய்ச்சிகள் செய்வது உண்மை.ஆ னால் அதே சம யம் நீங்கள் சொல்வது போல அறிவியலாளர்கள் அவ்வளவு பற்றில்லாதவர்கள் அல்லர். அறிவியல் கண்டுபிடிப்புக்கள் தவறாக உபயோகப்படும் போது வருந்துவது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு புதிதாக ஒன்றிற்கு விடை காணும் போதும் மகிழ்ச்சி வருவதும் உண்மை. ஆதிகாலத்தில் அறிவியலாளர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு விடை காண மட்டும் உழைத்திருக்கலாம். ஆனால் இப்போது சிறிதளவேனும் கூப்பாடு போடவும், தங்களுக்கு மேலும் பணமும் புகழும் வர முற்றிலும் தெளிவு வருவதற்கு முன்னேயேபேட்டி கொடுப்பதும் பேசுவதும் சாதாரணமாகி விட்டது என்பதையும் வருத்தத்தோடு ஒப்புக்கொள்ளவேண்டும். Ob/ob gene பற்றி முழுதும் தெரியும் முன்னே அதை அம்ஜென்னுக்கு விற்று தொலைகாட்சியில் பேட்டியும் செய்தியும் வந்ததும், அதே போல ஒரு பிரன்ஸு நாட்டவருடன் போட்டி போட்டு டேவிட் ராக்கவெல்லர் செய்ததும் பழைய செய்தி. அதுவும் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு முன்னால் வரும் கட்டுபாடுகளும், அதில் ஊடகங்கள் செய்யும் தகிடுதத்தங்களும் ஏராளம். இது நான் அமெரிக்க தொலைகாட்சி (ABC, NBC) ஒன்றில் என்னுடைய மேலாளருடன் பேசியபோது கண்ட உண்மை மற்றபடி நீங்கள் சொல்வதைப்போல அறிவியலாருக்கு மர்மங்கள் உருவாக்க விருப்பமும் நேரமும் இல்லை என்பதையும், அவர்களின் பயணம் முடிவில்லாத நெடும் பயணம் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
மதத்தரகர்கள் மக்கள் மெய்மறந்து ஒருவித அறியாமையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களாகவும், அறிவியலாளர்கள் அறிவு என்னும் தெளிவு வர வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது முக்கிய வேற்றுமை. அறிவியல் மக்களை சென்று அடையாமல் இருப்பதற்கு அறிவியலாளர் மேல் மட்டுமே குற்றம் சாட்டமுடியாது. அதற்கு ஒரு கவர்ந்திழுக்கும் சக்தி இல்லாமல் இருப்பதும் கூட காரணமாகும்.
//அறிவியலின் தொடக்கம் கடவுள் மறுப்பில் கிடையாது; அது கடவுளிலும் கிடையாது. அறிவியலின் ஒரே நோக்கம் மெய்காணல். இதற்கு ஆத்திகமும் நாத்திகமும் எந்த வகையிலும் துணைக்கு வராது.//
//
அறிவியல் அதன் வழியில் உண்மைகளைக் கண்டறிந்துகொண்டே போகிறது. ஆத்திகர்களும் நாத்திகர்களும் அறிவியலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். //
்ந்நெத்தியடி!
விஞ்ஞானிகளை ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவது எப்படித் தவறோ, அதுபோல ஒட்டுமொத்தமாக ஆதரிப்பதும் தவறு. அணுவைப் பிளந்தது வரை விஞ்ஞானி…அதை அணுகுண்டாக்கியது அரசியல்வாதியென்றால் அது சரியான வாதமாகப்படவில்லை.
நல்ல குறிக்கோளுடன் அணுவைப் பிளந்தது ஒரு விஞ்ஞானியென்றால்…அதிலிருந்து அணுகுண்டு வரை எடுத்துச்சென்றதும் இன்னொரு விஞ்ஞானிதான்.
மதங்களும் அறிவியலும் பல விடயங்களில் எதிரானவை. புதிதாக எதேனும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதே மதத்துக்கு நல்லது. கண்டறிவதே அறிவியல். கையிலிருப்பதை விடாமல் இறுக்கப் பற்றிக்கொண்டிருப்பதே மதம். தாம் சொன்னதயே மறு ஆய்வுக்கு உட்படுத்துவது அறிவியல். உலகம் தட்டையானது என்று சொன்னதும், அதை மாற்றியதும் அறிவியல்தான்.
மதமும் அறிவியலும் வெவ்வேறு குறிக்கோள்களைக் கொண்டவை. வெவ்வேறானவை.
[1] மாண்டி – உங்கள் கருத்துக்கு நன்றி. நான் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். பி-ர வின் இந்தக் கட்டுரைத் தொடரில் எல்லாமே மிக முக்கியமானவை. இந்தக் கட்டுரையிலும் பல மிகச் சரியான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அஞ்ஞானம் என்று ஒரு நிலை இருப்ப்தையே அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை. அதேபோல அறிவியலைப் பற்றி வண்டிவண்டியாகச் ஜல்லி அடித்திருக்கிறார்கள்.
செத்த பாம்பை அடிப்பதுபோல் எல்லோரும் ஜெயகாந்தனைப் போட்டுத் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள் (இலவச விளம்பரத்திற்கு நன்றிகள் வேற்று எதிர்தரப்பிலிருந்து வருகின்றன). ஆனால் கருத்தியல் ரீதியான விஷயங்களுக்கு நம் மக்கள் வரமாட்டார்கள்.
பரிணாம போதனை குறித்து 'வளர்ந்த' மற்றும் நம் நாடுகளுக்கிடையே இருக்கும் நீங்கள் சொல்லியிருக்கும் வித்தியாசம் மிகச் சரியானது. ஆனால் எனக்கென்னமோ இதில் அமெரிக்கா மாத்திரம் பிற நாடுகளிலிருந்து தனித்து நிற்பதைப் போலத்தெரிகிறது. இங்கே கனடாவில் அப்படியெல்லாம் சிலுவையைப் பாடப்புத்தகத்தில் சுமத்துவதில்லை. இதைப்போலவே மத்தியா ஐரோப்பிய, ஸாகாண்டிநேவிய, நாடுகளிலும் பிரிட்டனிலும் கூட அமெரிக்க அளவுக்கு வைதீக பஜனை பாடப்புத்தகங்களில் நுழைவதில்லை என்றே தோன்றுகிறது.
வாதங்களில் பங்குகொள்ளவில்லையென்றாலும் நிறையப் பேர் வாசிக்கிறார்கள்; அறிகிறார்கள். ஆகவே தொடர்ந்து எழுதுங்கள்.
[2]பத்மா – தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அவ்வப்பொழுது கிடைக்கும் இடைவெளியில் கொஞ்சம் எழுத முடிகிறது.
//ஆதிகாலத்தில் அறிவியலாளர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு விடை காண மட்டும் உழைத்திருக்கலாம். ஆனால் இப்போது சிறிதளவேனும் கூப்பாடு போடவும், தங்களுக்கு மேலும் பணமும் புகழும் வர முற்றிலும் தெளிவு வருவதற்கு முன்னேயேபேட்டி கொடுப்பதும் பேசுவதும் சாதாரணமாகி விட்டது என்பதையும் வருத்தத்தோடு ஒப்புக்கொள்ளவேண்டும்.//
பத்மா, இது முதன் முதலில் மீக்கடத்திகள், குளிர்ப்பிணைவு போன்ற துறையினரால் ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது உயிர்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் கொடிகட்டிப்பறக்கிறது. இன்றளவும், அடிப்படை இயற்பியல், கணிதம் போன்ற துறைகளில் இப்படி பரபரப்பு கிடையாது (குவாண்டம் இயற்பியல் கொடிகட்டிப்பறந்த காலத்திலும் கிடையாது). உயிர்நுட்பத்தில்தான் நேச்சரில் பதிப்பிப்பதைவிட நியூயார்க் டைம்ஸில், வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் பதிப்பிப்பது உயர்வாகக் கருதப்படுகிறது.
பொதுவில் இது என்ன சதவீதம் என்று பாருங்கள் 1% கூட இருக்காது. (அரசியல், வர்த்தக, பொழுதுபோக்கு, கலை, விளம்பரக் கூச்சலுடன் ஒப்பிடவும்). மறுபுறத்தில் நம் வாழ்வை மாற்றியமைப்பதில் அறிவியலுக்கு இருக்கும் திறமையையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
>>>
செத்த பாம்பை அடிப்பதுபோல் எல்லோரும் ஜெயகாந்தனைப் போட்டுத் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள்
—————
வெங்கட்
This is a good series.
நீங்கள் விடாமல் தொடர்ந்து எழுதுங்கள்.
வார இறுதியில் நான் தொடர்வினை புரிகிறேன்.
படித்தாலும் உடனே எழுதமுடியாத நேர நெருக்கடி
அருள்
[2]
//அறிவியல் மக்களை சென்று அடையாமல் இருப்பதற்கு அறிவியலாளர் மேல் மட்டுமே குற்றம் சாட்டமுடியாது. அதற்கு ஒரு கவர்ந்திழுக்கும் சக்தி இல்லாமல் இருப்பதும் கூட காரணமாகும்.//
அப்படியொன்றும் அடிப்படை தகுதி எதற்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கவுண்டமணி-செந்தில் மற்றவர்களை விட என்ன காமெடி பண்ணிவிட்டார்கள். ஆனால் அவர்களைத் திரையில் காட்டியவுடனேயே சிரிக்கவேண்டும் என்று மக்களைப் பக்குவப்படுத்தியது யார். அதேபோல 99% சதவீத கதாநாயகர்கள் எப்படி வளர்த்தெடுக்கப்படுகிறார்கள்.
அறிவியலைச் சொல்லுவது அப்படியொன்றும் பாவமான செயலல்ல. இதில் யாரையும் மன/மத மாற்றம்போல் அறிவியல் மாற்றத்திற்குத் தள்ளும் முயற்சியல்ல. ஆனால், கொஞ்சமாவது அறிவியல் படித்தவர்கள் எத்தனைபேர் இதைப்பற்றி நினைக்கிறார்கள். இங்கே என்னுடைய துறைத்தலைவர் இதன் முக்கியத்துவத்தை அடிக்கடி வலியுறுத்துவார். இதனால்தான் மொழி தெரியாவிட்டாலும், நான் வழங்கும் நிகழ்ச்சியின் தரம் தெரியாவிட்டாலும் அவர் என் வானொலி/தொலைக்காட்சி அறிவியல் நிகழ்ச்சிகளைப் பற்றி வருகைதருபவர்களிடம் பெருமையாகச் சொல்வார். ஒருவகையில் இதன் முக்கியத்துவம் நான் டொராண்டோ பல்கலைக்கு வந்தவுடன் எனக்கு இன்னும் தெளிவாக ஆரம்பித்திருக்கிற்து.
[8] அருள், நன்றி. நான் உங்களிடமிருந்து இதைப்பற்றி நிறைய எதிர்பார்க்கிறேன். பல சமயங்களில் அருகிலிருந்து பேச நீங்கள் இல்லையே என்று ஆதங்கமாக இருக்கிறது.
வெங்கட்
தங்களின் மறு மொழிக்கு நன்றி. நீங்கள் சொல்வதை புரிந்து கொள்கிறேன். ஆதார துறைகளில் ஆய்வுகவாளர்கள் செய்திகளை பரப்புவதில்லை. உயிரியல் மருத்துவம் போன்ற ஆய்வுகளில் பரப்புக்காக செய்திகள் தருவது 1% என்றாலும் மிகவும் தவறு. நேரம் கிடைக்கும் பொழுது எழுத வேண்டும். உதாரணமாக ஆஸ்பிரின் புற்றுநோய் செல்களை மேலும் பெருக வைக்கும் ஒருவித புரதத்தின் ஆதார ஜீனை கட்டுப்படுத்த வல்லது என்று எங்கள் துறையின் ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவித்தது. அது பற்றி பேசும் போது திடீரென வந்த பரபரப்பில் பலரும் நாளைக்கு ஒரு ஆஸ்பிரின் சாப்பிடுவது நல்லது என்று விளம்பரங்கள் பல வந்து இப்போது பலபேர் வயிற்றின் இரத்தபோக்கு காரணமாக மருத்துவமைக்கு வருகிறார்கள்.இதேபோல பல எடையை குறைக்கும் ஹார்மோன்கள், ஸ்டார்சை உறிஞ்சுவதை தடுக்கும் மருந்துகள்.. இவை ஆபத்தில் முடியும். இங்கே அறிவியலாளர்களுக்கு கடமை உண்டு. ஸ்டெம் செல் ஆராய்ச்சி என்ன என்பதை தெரிந்து கொள்ளாமலே அரசியல்வாதிகளால் அது ஒரு negative ஆக சொல்லப்பட்டு பலராலும் பார்க்க படுகிறது. க்ளோனிங் பற்றி எழுதும் ஊடகங்கள் கூட அது என்னவோ கடைக்கு சென்று காப்பி வாங்கிவருவது போல எழுதுகிறார்கள். அவ்வளவு எளிதல்ல அது. ஒரு ஆராய்ச்சி முடிவு வருவதற்கு கிட்டதட்ட 1-2 வருடங்கள் ஆகும்.
கவர்ச்சி என்று நான் சொன்னது பாமரர்களை இழுக்க வல்ல தன்மை.கவுண்டமணியும் செந்திலும் நல்ல படதயாரிப்பாளர்களால், திரைப்படம் என்ற ஊடகத்தின் மூலமாக அறிமுகம் அல்லாது, பத்திரிக்கைகளில் நகச்சுவை எழுத நினைத்திருந்தால் இத்தனை வெற்றி பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே. இந்தியாவில் நடிகையரின் மாதவிலக்கு நாட்கள் கூட தெரிந்த பலருக்கு அறிவியலில் சிறந்தவர்களைப்பற்றியோ, அல்லது அறிவியலின் சிறந்த கழகங்கள் பற்றியோ தெரியாது. ராஜீவ் காந்தி வருத்தப்பட்டு சொன்ன உண்மை இது. இதை எப்படி மாற்றுவது என்றும் பேசும் போது, காங்கிரஸ் மந்திரி ஒருவர் பின்னாளில் ஜனாதிபதி ஆனவர் சொன்னார்” whats the use, we cant even get a single vote” மற்றபடி அறிவியல் கருத்துக்கள ஒரு ஜனரஞ்சக ஊடகத்தில் எழுத வேண்டுமானால் அது சுஜாதா போல பிரபலமாக இருக்க வேண்டும். அவர்கூட சில சமயம் சிலவற்றை விளையாட்டாய் சொல்லும் போது முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது என்று நினைக்கிறேன்.மேலும் பலருக்கும் ஒரளவிற்கு தெரிந்த விடயங்களை பேசும் போது அதில் ஆர்வம் அதிகரிக்கிறது. ஆனால் அறிவியல் போன்ற நுணுக்கமான செய்திகளை தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் வேண்டும். discovery,odyssey Smithsonian என்று பலதரப்பட்ட குழந்தைகளுக்கான அறிவியல் சஞ்சிகைகள் இங்கே வருவதைப்போல இந்தியாவில் இல்லை. இந்தியாவிலிருந்து வருகின்ற ஜந்தர்மந்தர் என்ற அறிவியல் பத்திரிக்கை 10,000க்கு மேல் விற்பது இல்லை என்றும் அதுவும் பள்ளி ஆசிரியர்களுக்கு அனுப்புவதால் மட்டுமே விற்பதாகவும் படித்தேன். இப்போது சுட்டி விகடன், கோகுலம் போன்றவற்றில் அறிவியல் செய்திகளை சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
//அறிவியலின் ஒரே நோக்கம் மெய்காணல்.//
இதை நான் முழுவதுமாக ஒப்புக் கொள்ளும் அதே நேரத்தில் எனக்கு சில வரையரைகள் (அதுவும் உங்களின் புரிதலின் பேரில் தேவையாயிருக்கிறது.
கடவுள் என்றால் என்ன?
ஏனெனில் //அறிவியலின் தொடக்கம் கடவுள் மறுப்பில் கிடையாது; அது கடவுளிலும் கிடையாது.// இந்த வரிகளை உங்களது பார்வையில் நான் பார்கக வேண்டுமானால் நீங்கள் கடவுள் என்று எதை நினைக்கிறீர்கள் எனப் புரிந்து கொள்வது அவசியம் ஆகிறது எனக்கு.
உயிர்மையில் , நீங்கள் காட்டிய வரியொடு நிற்கவில்லை, ஒரு படி மேலே போய்
//வேதங்களும் , சமய நூல்களும் மறைத்தவற்றை
……………….கேள்விக்குரியாகியது//
இதைத்தான் சொல்கிறார்கள் என்று எனக்குப் படுகிறது.
எடுத்துக்காட்டாக, புத்தர்,ஜீஸஸ் போன்றவர்களை நேரடியாக மறுக்கவில்லை. ஆனால் , புத்த மதம், கிருஷ்த்துவ மதம் போன்றவற்றை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஏனெனில் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று:
புத்தர் நிச்சயமாக புத்த மதக் கருத்துக்கள் பலவற்றில் இருந்து முற்றிலும் மாறாகவே இருந்திருப்பார். அதுபோலவே ஏசுவும்.
ஏனெனில் இதுவெல்லாம் ஒரு மனிதனின் குணங்களில் இருந்து அமைப்பாக மாறும்பொழுது உருவான ஒரு பிறழ்வு.
இதைத்தான் நாமும் அடிக்கடி
"கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் " எனப் புரிந்திருக்கிறோம்.
//வர்த்தகமும், அரசியலும், கேளிக்கையும் நிறைந்த இந்த உலகில் அறிவியலின் குரல் ஒடுக்கப்பட்டே ஒலிக்கிறது//
இந்த வரிகள் எனக்குப் புரியவில்லை. ஏனெனில் நான் பார்க்கும் முன்னேறிய நாடுகள் எல்லாம், அறிவியல் என்ற பாதையில் அவர்கள் எடுத்து வைத்த அளவைப் பொருத்தே அவர்களது முன்னேற்றமும் இருக்கிறபடியால்!!!!
//அறிவுத்தேட்டம் கொண்ட ஒவ்வொருவருக்கும் அறிவுப்பரவலாக்கம் முக்கியமானதாக இருக்க வேண்டும். தம்மாலான அளவு சிறிய அளவில் கூட கற்றவர்களில் பலர் பிற்ருக்கு எடுத்துச் சொல்வதில்லை. //
இதையும் என்னால் வேறு பார்வையில்தான் பார்க்க முடிகிறது.
கற்றல் என்பதன் வரையறை இங்கு மிகத் தேவையாய் இருக்கிறது.
நீங்கள் சொல்லும் //ஐன்ஸ்டைன், ஃபெய்ன்மான், லினஸ் பாவ்லிங், ப்ரான்ஸிஸ் கிரிக், ரிச்சர்ட் டாக்கின்ஸ், மாக்ஸ் டெல்ப்ரூக்// அவர்கள் எல்லோரும் கற்கும் பொழுது கற்பவன், கற்கப்படுவது என்ற வித்யாசம் கூட தெரியாத அளவிற்குக் கற்றவர்கள்.
அதாவது, சமீபத்திய "பிஸிக்ஸ் டுடே" பெய்ன்மான் எப்படி வகுப்பறைக்குள் நுழைவார் என்பதை எழுதியிருக்கிறது.
லினஸ் பாவ்லிங் ஓரு இணையில்லா மனிதர் (நொபல் பரிசில் கூட) — முதலில் இதுதான் இதனது வடிவம் என்று சொல்லிவிட்டுதான் ஆய்வுகளையே ஆரம்பிப்பாராம்—எங்கோ படித்ததாக நினைவு.
இவர்களுடன் , ஒப்பிட்டு!!!!!!!!
இன்னும் சொல்லப்போனால் இன்றளவும் நன்கு முழுமையாகக் கற்றவர்கள் பிறருக்குப் புரியும்படி சொல்வதில் தயங்குவதே இல்லை
( இதிலும், சாய்பாபா, ஜயேந்திரர் போன்ற பகவான்களைக் கண்டுபிடிப்பது நமது சாமர்த்தியம்).
என்னைப் பொறுத்தவரை அறிவியல் ஒரு மெய்காணல் என்றால், அதனுடன் என்னைத் தொடர்பு படுத்தும்பொழுது நான் கடவுள் தன்மையைக் காண்பது என்பது அந்த மெய்காணலின் விளைவு. அப்படி ஒரு விளைவு ஏற்படும்பொழுது, கடை விரித்தேன் கொள்வாரில்லையே என்ற ஆதங்கத்துடன் , ஒரு புத்தரைப் போல, ஒரு ரம்ணரைப் போல, ஒரு யேசு போல, அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒரு ஐய்ன்ஸ்டைனாகவோ, பாலிங்காகவோ, ……………………பரிணமிப்பார்கள்.
எனவேதான்
//அறிவியலின் தொடக்கம் கடவுள் மறுப்பில் கிடையாது; அது கடவுளிலும் கிடையாது. //
இந்த வரியில் நீங்கள் கடவுள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் எனக் கேட்டேன்
இப்படி ஒரு வருட இடைவெளி விடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
(உங்கள் தளத் தேடல் நல்லா வேலை செய்யுது)இந்தக் கட்டுரை சில முடிவுகளைச் சொல்வதால் எனக்கு இதில் ஏற்பில்லை. மத்தபடி உங்கள் பதிவு சுவாரசியாமாக உள்ளது. எழுத இருந்தால் எழுதுகிறேன்.
http://www.domesticatedonion.net/blog/?item=246“>இதையொட்டி சட்டுன்னு வந்த கேள்வி,
அறிவியல் மறுக்கிறதா? அல்லது அறிவியலுக்கு தெரியாதா?
அறிவியலுக்கு விடை தெரியவில்லை என்றாவது அதற்கு தெரியுமா அல்லது, அல்லது "இல்லை" என்று விடை தருகிறதா?
தெரியாததனால் இல்லை என்று சொல்லிவிடமுடியுமா என்ன?
இரண்டுக்கும் உலக அளவு வித்தியாசம் உள்ளதல்லவா?
// இந்தக் கட்டுரை// என்று சொன்னது பிரேம் ரமேஷ் கட்டுரையை.
தங்கமணி, சாரா, கார்த்திக் – நன்றி. வீட்டில் அமெரிக்காவிலிருந்து நீண்ட வாரயிறுதிக்கா வந்த நண்பர் குடும்பம் இருக்கிறது. எனவே நாளை பதிலிட முயற்சிக்கிறேன்.
ஒரே ஒரு விஷயம், நான் பயன்படுத்தியிருக்கும் வரையறைகள் (கடவுள், இறையுணர்வு, சமயம்) இதெல்லாம் பொதுவில் எப்படி அவை வரையறுக்கப்படுகின்றனவோ அப்படித்தான். இருந்தாலும் என் வரையறைகளை விரைவில் எழுதுகிறேன். என்னிடம் இப்படி நீங்கள் துருவித்துருவி கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது.
சாரா – என் பதிவின் மீதான சந்தேகங்கள் இருக்கட்டும். (அவைகளுக்கு நான் விரைவில் பதில்தருகிறேன்). உங்களுக்கு பிரேம்-ரமேஷ் கட்டுரை குறித்து விமர்சனம்/கருத்துக்களே இல்லையா?