தேவகாந்தனின் ‘கதாகாலம்’ வெளியீட்டு விழா
by வெங்கட் • April 19, 2005 • இலக்கியம் • 3 Comments
டொராண்டோ ஸ்கார்புரோ சிவிக் செண்டரில் 17 ஏப்ரில் 2005 அன்று மாலை தேவகாந்தனின் ‘கதாகாலம்’ நூல் வெளியீட்டு விழா நடந்தது. மிகச் சமீபத்தில் கனடாவிற்குப் புலம்பெயர்ந்திருக்கும் எழுத்தாளர் தேவகாந்தன் இதற்கு முன் சென்னையில் வசித்திருந்தார். மகாபாரதத்தின் மறுவாசிப்பு என்று துணைத்தலைப்பிடப்பட்ட இந்த நூல் காலம் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது.
நூல் வெளியீட்டு விழா இரண்டு அமைவுகளாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முதல் அமர்வில் சம்பிரதாயமான முறையில் நூல் வெளியிடப்பட்டது. இந்த அமர்விற்கு கவிஞர் கந்தவனம் தலைமை தாங்க, திரு செல்லைய்யா அவர்கள் நூலை வெளியிட்டார். இந்த அமர்வில் கந்தவனம் நூலைப்பற்றிய எளிய அறிமுகத்தைத் தர, செல்லைய்யா நூலின் பின்புலத்தைப் பற்றி குறிப்பிட்டுப் பேசினார்.
இரண்டாம் ஒழுங்கில் கதா காலம் விமர்சிக்கப்பட்டது. மகாலிங்கம், வரன், தேன்மொழி, தான்யா, சிவதாசன் என ஐவர் நூலை வெவ்வேறு கோணங்களிலிருந்து விமர்சித்தனர். முதலில் பேசிய மகாலிங்கம் கதாகாலம் தேவகாந்தன் மறுவாசிப்பில் மகாகவி பாரதியார், எஸ். ராமகிருஷ்ணன் இவர்களைத் தொடர்ந்த பெரும் பாரம்பரியத்தில் வருவதாகக் குறிப்பிட்டார். இந்த நெடும் பாரம்பரியத்தில் தனக்குரிய தனி இடத்தை இந்நூலின் மூலம் தேவகாந்தன் உறுதிப்படுத்தியிருப்பதாகச் சொன்னர். முதுசூதன் என்பவனின் விவரணையில் சொல்லப்பட்டிருக்கும் கதாகாலம் நவீன இலக்கியவாதிகளைத் திருப்திப்படுத்தும் அளவிற்கு ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்பதாக மாத்திரமே மகாபாரதத்தை அறியும் நீதிநெறியாளர்களைத் திருப்திப்படுத்தாது என்பது மகாலிங்கத்தின் கருத்து. நூலின் மொழிநடையைப் பற்றி மகாலிங்கம் வெகுவாக விமர்சித்தார். மிதம்பல், கபாடம், உலுக்கம், அட்டி என சமகாலப் பயன்பாட்டில் இல்லாத இந்த வார்த்தைகள் வாசகனை அந்நியப்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை வெளியிட்டார். நூலில் சூத்திரன் என்ற பதம் கையாளப்பட்டிருக்கும் விதம் குறித்த அதிருப்தியையும் மகாலிங்கம் அழுத்தமாக முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய வரன் நூல் வெளியீட்டு முதலமர்வில் மறுவாசிப்பு என்ற பதம் retold என்ற வகையில் பயன்படுத்தப்பட்டதையும் உண்மையில் தேவகாந்தனின் இந்த நாவல் rereading என்றே கவனிக்கப்பட வேண்டும் என்று சொன்னார். தொன்று தொட்டு இன்றுவரை நாட்டார் வழக்கிலும் எழுத்திலக்கியத்திலும் மகாபாரதம் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வந்திருந்தாலும், அந்தந்தக் கால விழுமியங்களுக்கேற்ப கதைசொல்லிகளின் பார்வை மாறுபட்டுக் கொண்டிருந்தாலும், அடிப்படையில் நிலைத்துப் போனது பிராமணீய வழக்கே என்பது வரனின் பார்வை. பல்வேறு பார்வைகளுக்கிடையே இதுமாத்திரமே நிலைத்துப்போக அரசு மற்றும் அமைப்பு ரீதீயான ஆதரவு பிராமணீயப் பார்வைக்கு மாத்திரமே இருந்ததே இதன் காரணம் என்றார். நெறிப்பட்டுப் போன இந்தப் பார்வையிலிருந்து விலகும்பொழுது அது நிராகரிக்கப்படுவது அல்லது கதைசொல்லி மாற்றியெழுத வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவது வரலாறு என்றும் அதற்கு உதாரணமாக ராஜாஜியின் வியாசர் விருந்தில் அஸ்வத்தாமா குறித்த பகுதிகள் திருத்தி எழுதப்பட்டதையும் சுட்டினார். அந்த வகையில் இப்பொழுது மறுமுறை சொல்லப்பட்டிருக்கும் தேவகாந்தனின் வடிவமும் பிராமணீயப் பார்வையிலேயே அமைந்திருக்கிறது என்பது வரனின் கருத்து.
அடுத்ததாகப் பேசிய தேன்மொழி, மகாபாரதத்தின் கதையைப் பின்னின்று இயக்குபவர்கள் நான்கு பெண்களே; அவர்கள் சத்தியவதி, காந்தாரி, குந்தி மற்றும் பாஞ்சாலி. பல வடிவங்களிலும் இந்த ஆதாரப் பெண்பாத்திரங்கள் பெரிதாகச் சொல்லப்படுவதில்லை என்றும் தேவகாந்தனின் மறுவாசிப்பில் அவர்கள் முதன்மைப்படுத்தப் பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்த தான்யா முன்னிலைப்படுத்தப்பட்ட பொழுதும் இந்த வடிவமும் ஆண்களால் கட்டமைக்கபப்ட்ட பெண்ணிய மதிப்பீடுகளையே முன்னிருத்துவதாகச் சொன்னார். உடற்கூறு சார்ந்த ஆண்வழிப் பெண்ணிய கருத்துருவாக்கமே இதில் மேலோங்கி நிற்கிறது என்பது தான்யாவின் பார்வை.
இறுதியாகப் பேசிய சிவதாசன் நூலின் குறைகளாகத் தான் கருதுபவற்றை முதலில் முன்வைத்தார். சிக்கலான மொழிநடை, குறிப்பாக நூலின் துவக்கத்தில், தீவிர இலக்கிய வாசகர்கள் தவிர்த்த வேறெவரையும் விலக்கும் என்றும் மிக நீளமான வசனக் கோர்வைகள் நாவலின் வாசிப்பைப் பாதிப்பதாகவும் குறிப்பிட்டார். தன்னுடைய முந்தைய மகாபாரத வாசிப்புகளின் பின்புலத்திலிருந்தே தனக்கு இந்த நூலை அணுகமுடிவதாகச் சொன்ன சிவதாசன், பாத்திரப்படைப்பில் ஐராவதி கார்வே யுகாந்தாவில் தொட்ட பெண்ணிய உச்சங்களை தேவகாந்தன் எட்டமுடியவில்லை என்று குறிப்பிட்டார். பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக மகாபாரதம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கக் காரணங்களை விளக்கிய சிவதாசன், எம்மின் சமகாலப் போர் வாழ்வில் மகாபாரத்தை மறுவாசிப்புச் செய்யவேண்டியது முக்கியமே என்று குறிப்பிட்டார். நீண்ட பாரம்பரிய நோக்குடைய தேவகாந்தன் சமகாலத்துப் போர்வாழ்வைப் பற்றி விரிவாக எழுதவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் முன்வைத்தார்.
* * *
நான் இன்னும் இந்த நூலைப் படிக்கவில்லை. தற்சமயம் அலுவலில் இருக்கும் வேலைப்பளுவினால் எதுவும் சாத்தியமாவதில்லை. வாசித்துவிட்டு என் கருத்துக்களைச் சொல்வதாக தேவகாந்தனிடம் சொல்லியிருக்கிறேன். முடிந்தால் அவற்றை இங்கும் எழுதுகிறேன்.
{கதாகாலம் – மகாபாரதத்தின் மறுவாசிப்பு, தேவகாந்தன், காலம் வெளியீடு, டொராண்டோ, விலை இலங்கை – 200 இலங்கை ரூபாய்கள், இந்தியா – 150 இந்திய ரூபாய்கள், கனடா – 14.99 கனேடிய டாலர்கள். இலங்கையில் கிடைக்குமிடம் – பூபாலசிங்கம் புக் டிப்போ, கொழும்பு 13}
வெங்கட், நிகழ்ச்சிச்சுருக்கத்துக்கு நன்றி.
வெங்கட்: இது தமிழகத்தில் கடைகளில் கிடைக்கிறதா? யார்மூலம் விநியோகிக்கப்படுகிறது என்று கேட்டறிந்து சொல்லமுடியுமா?
[2] பத்ரி – காலம் பதிப்பாசிரியரிடம் கேட்கிறேன்.